இந்தியாவின் கடனை இலங்கை உடனடியாக எப்படி அடைத்தது? பின்னணியில் சீனா?


07/02/2021 இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இலங்கையுடன் இந்தியாவும் - ஜப்பானும் முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை சமீபத்தில் இலங்கை அரசு தன்னிச்சையாக இரத்து செய்தது. தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதாகவும், இப்பணி இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்தது.

இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஒப்பந்தங்கள், உறுதிமொழிகளை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து வாங்கிய ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சார்க் கரன்சி பரிமாற்றம் ஒப்பந்தப்படி இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து இலங்கை மத்திய வங்கி ரூ. 3 ஆயிரம் கோடி கடன் வாங்கியது. மூன்று மாதத்தில் கடனை திரும்ப செலுத்த நிபந்தனை வழங்கப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் இருமுறை காலக்கெடு நீடிக்கப்பட்டது. இதற்கிடையே ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசு டுவிட்டரில் கூறும்போது, இந்தியாவிடம் இருந்து வாங்கிய கடன் தொகையை உரிய காலத்தில் அந்நாட்டு ரிசர்வ் வங்கியிடம் செலுத்தப்பட்டுவிட்டது.

இந்த தொகையை முன் கூட்டியே செலுத்தும்படி இந்தியாவிடம் இருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இரு நாட்டு கூட்டு முயற்சிகள் எதிர் காலத்திலும் தொடரும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ டிசில்வா கூறும்போது, கடன் திருப்பி செலுத்தும் அளவுக்கு இலங்கையில் போதிய பணம் இல்லை. சர்வதேச நாணய நிதியம் பணம் கொடுத்தால் தான் சாத்தியமாகும் என்றார்.

இதனால் கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி செய்து பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலை இலங்கை மறுத்துள்ளது.    நன்றி  

No comments: