தமிழரின் அவலங்கண்ட 'அகதிப் படகு'


இயற்றியவர்:- பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்



 





ஒருநாளா இருநாளா ஒப்பரிய ஐந்தாண்டு

   உல்லாசப் படகாகப் பலகடல்கள் சுற்றிவந்தேன்

வருகின்ற பயணிகளோ எனைத்தேடி நின்றார்கள்

   வனப்புமிகும் என்னழகு ஈர்த்ததிலே வியப்பேது?

திருமணமும் ஆகாத திடமான வாலிபர்கள்

   தேன்நிலவைக் கழிக்கவரும் மானின் விழி மங்கையர்கள்!

பருவத்து எழில்கொஞ்சும் உருவங்கள் அப்பாடா!

   பார்த்ததிலே இன்பத்தின் எல்லையெலாங் கண்டேனே! 


'நன்னன்'எனும் பெயர்கொண்டான் நாணயத்தை மறந்தறியான் 

   நாளெல்லாம் மறவாது என்சுத்தம் பேணிடுவான்

வன்னப்பூத் தேர்ந்தெடுத்து வகையாகச் சோடிப்பான்

   வடிவழகன் வாசனைக்கு ஏதேதோ பூசிடுவான்

மின்வேக மாயென்னை வெகுகவன மாயோட்டி

   வேடிக்கை யாயவனோ விளையாட்டுக் காட்டிடுவான்

என்னினிய பயணிகளை என்றுமவன் மகிழ்விப்பான்

   இன்முகத்து மாலுமியின் பொன்மனமும் நானறிவேன்


இரவுபகல் பாராது எங்கெல்லாம் சுற்றிடுவான் 

   என்காது கேட்டதெல்லாம் இன்சொற்கள் சல்லாபம்!

பரவசத்தாற் கிறங்கிநின்றேன்! பாசமொடு மாலுமியும்

   பக்குவமாய்ப் பணிசெய்ய நடுக்கடலில் மகிழ்ந்திருந்தேன்!

நிரைநிரையாய் நடந்தவற்றை நினைவுகூரக் கண்ணயர்ந்தேன்  

   நிம்மதியும் நிறைமனமும் நிமிடத்தில் போனதம்மா!

இரைச்சலொடு இடிபோலத் துவக்குவெடிச் சத்தமெனை

   என்றுமிலா அச்சத்துடன் எழுப்பியதே! பதற்றமுற்றேன்.


பக்கமாக வந்தபெரும் படகொன்றைக் கண்டவுடன்

   பணிவாக நந்தனவன் வெள்ளைக்கொடி காட்டவேறு

திக்கிருந்து வந்ததோட்டா சென்றவனைக் கொன்றதம்மா!

   திகைப்புடனே திரும்புமுன்னர் சிப்பாய்கள் என்மேலே

கொக்கிபோட்டு ஏறிவேறு திசைநோக்கிக் கொண்டுசென்றார்

   கொஞ்சுமெழில் விஞ்சுமொரு கரையில்நங் கூரமிட்டார்

அக்கணம்நான் பட்டதுயர் அப்பாடா கொஞ்சமில்லை!

   அந்தக்கரை சிறீலங்காக் காலிமுகாம் எனவறிந்தேன்

 

உல்லாசப் படகான என்னுடனே வந்தோரின்

   உடைமைகளை முகாமிலுள்ள படைவீரர் பறித்துதெடுத்தார்!

எல்லையிலா இன்பந்தரும் நினைப்பினிலே வாழ்ந்தவென்றன்

   இந்தநிலை மாறுமென்று என்றேனும் நினைக்கவில்லை!

சல்லடையிட்  டேதேடித் தமிழ்பேசும் இளைஞர்களைக்

   கொல்லாமற் கொல்வதற்கு வெள்ளைவானிற் கொண்டுவந்தார்

மெல்லமெல்லச் சாகடிக்கும் மிருகச்செயல் கண்டுநொந்தேன்!

   மேற்கொண்டு  கன்னியரின் கண்ணீர்க்கதை யார்க்குரைப்பேன்!


குடித்துவிட்டே அவர்களிட்ட கொடுமையெலாம் கண்டழுதேன்

   இடித்திடித்து வசைபாடி எத்தனையோ கேள்விகேட்டுப்

பிடித்தவர்கள் சேலைபற்றி இழுத்துரிவர்! கண்ணீரைத் 

   துடைக்குமுன்னர் வார்குழலை வலிந்திழுத்துக் குலைத்துடலை 

அடித்திடுவர்! நொந்தமேனி துடித்திடவே பலர்கூடிக்

   கெடுத்தகதை எத்தனையோ நினைத்துநெஞ்சு வெடித்ததையா!

படித்தபுத்த நீதியெலாம் விடுத்துநின்ற வெறிக்கும்பல்

   பாபச்செயல் அத்தனையும் பண்ணக்கண்டு மயக்கமுற்றேன்!.


அல்லும்பகல் நோட்டமிட்டுத் தேடிவரும் தமிழர்களை

   அன்பான எட்டப்பர் அடையாளம் காட்டிநிற்கப்

பொல்லாஇன வெறிப்படையும் கைதுசெய்து  முகாமதிலே

   'புலன்விசாரணை' எனக்கூறிப் புதுப்புது விதமாகக்

கொல்லாத விதமாக கொடியவதை செய்தபின்னர்

   குற்றுயிராய்ப் புதைகுழியில் போனவிடந் தெரிந்திடாது

மெல்லமூடி விட்டவர்கள் விருந்துவைத்து மகிழ்ந்திட்டார்!

   மெதுவாக விம்மியெம்மோர் கதைத்ததெல்லாம் செவிமடுத்தேன்.


நாள்கள்பல சென்றபின்னோர் நண்பகலில் யாரோவொரு

   நாட்டாண்மைச் சிங்களவன் 'கலுபண்டா' எனும்பெயரோன்

தாள்களாகப் பலலட்சம் முகாமின்தலை வனுக்களித்துத்

   தனதூருக்(கு) என்னைக்'கரை ஓர'மாகக் கொண்டுசென்று

வாழ்ந்துய்ய வழிதேடி வெளிநாடு செலவிரும்பும்

   வன்முறையாற் பாதிக்கப் பெற்றலைந்த தமிழர்களை

ஆழ்கடலுக் கப்பாலே அவுஸ்திரேலியா நாட்டிற்கு

   அகதிகளாய் அனுப்பிவைக்கப் படகாகத் தேர்ந்தெடுத்தான்!


அகதிகளாய் அவுஸ்திரேலியாவிற் கனுப்பிடுவேன் என்றுசொல்லி

   அரசாங்க ஊழியரின் கண்களிலே மண்தூவி

பகடைக்காய் எனத்தமிழர் உயிருக்கு விலைபேசி

   ஆளுக்கு ஐந்துலட்சம் ரகசியமாய் வசூலித்து

மிகநல்ல வனாய்நடித்து அவுஸ்திரேலியா அனுப்பிவைக்க

   வேண்டியதிட் டங்களையும் விரைவாகச் செய்திருந்தான்!

சகநண்பர் கூடியொரு படகோட்டும் மாலுமியைச்

   சந்தித்துக் காலிமுகக் கடற்கரைக்கு அழைத்துவந்தான்!


ஐந்தாண்டாய் 'உல்லாசப் படகு'என்ற மிடுக்கோடு

   ஆழிபல ஆசையொடு பவனிவந்த என்பெயரைச்

சிந்தைநோக அகதிப்பட கென்றவனும் மாற்றிவிட்டான்

   தினம்மதுர சங்கீதம்! சிற்றின்ப நடனங்கள்! 

விந்தையாக விருந்துவைக்கும் 'இளசுகளின்' ஒய்யாரம்!

   வேடிக்கை யாய்ப்பேசும் நன்னனவன் விகடங்கள்!

அந்தநாள் நினைவுவர அழுதழுது நாள்கழித்தேன்

    ஆசையெலாம் அழிந்தொழிய இலவுகாத்த கிளியானேன்.!.


அகதிப்பட கோட்டியென 'அமரசிங்கி' பதவியேற்றான்

   அதிரடிப் படைவளர்த்த இனவெறிச் சிப்பாயவன்

சுகவாழ்வு தெலைந்ததெனச் சோர்வுற்று நிற்கையிலே

   தூரத்திற் பெரியதொரு பேருந்தைக் கண்ணுற்றேன்

மிகக்களைத்த நிலையினிலே 'கலுபண்டா' வழிகாட்ட

   மெள்ளமெள்ள  பலரென்னை நாடிவரக் கண்டுநின்றேன்!

'அகப்பட்டு விட்டோமினி அவன்விட்ட வழி'யென்ற 

   ஆதங்கத் துடன்விட்டோர் பெருமூச்சும் கேட்டதம்மா!.


வந்தகும்பல் தமிழரென ஒருவாறு ஊகித்தேன்

   மந்தைகளைப் பலிக்கெடுத்துப் போவதுபோல் நிரையாக

நொந்துநின்ற நாநூறு பேர்களையும் எண்ணியெண்ணி

   நொடியிலே என்மேலே ஏற்றிவிட்டான் 'அமரசிங்கி' 

விந்தையாக 'அமரசிங்கி' 'அப்பியமு' எனக்கூவி 

   விசைதன்னை அழுத்தியதும் படகும்பாய்ந்  தோடியதே!  

சந்ததமும் தனித்துவத்தைக் காத்திடுவேன் என்றிருக்கத்

   தமிழர்களின் நிலைபோல விலைபேசி அழித்தானே!



ஏற்றறியாப் பாரமதை எந்தனுடல் மிகநோக

   ஏற்றிக்கொண்டு ஆழ்கடலை எதிர்நோக்கிச் சென்றதுவே! 

காற்றும்மிக வேகமாகச் சாதகமாய் வீசியதே1

    'கந்தவேளே கதிநீயே' எனக்கதறு வோர்களையும்  

'ஆற்றிடாது அறவட்டி கொடுத்தெடுத்த  பலலட்சம்

   அவுஸ்திரேலியா சேர்த்திடுமோ' எனப்புலம்பு வோர்களயும்

தேற்றிடுவோர் இன்றியழு வோர்களையும் பார்த்தநான்

   தினந்தமிழர் இழந்ததெல்லாம் நினைந்துமனம் நொந்திழைத்தேன்


தாலிதனை இழந்;ததுயர் தாங்கிடாத தாய்மாரைக் 

   காதலரைப் பறிகொடுத்த கட்டழகுக் கன்னியரைப்

பாலியலுக் குட்படுத்திப் பசிதீர்த்தோர் கதைகளையும் 

   வாலைப்பரு வத்தோராய் வதைபட்ட வாலிபர்கள்

காலிமுக முகாமிருந்து மீண்டுவந்தோர் கதைகளையும்

   களைத்தொளித்து வெளிநாடே தஞ்சமென்றோர்  கதைகளையும்

போலிக்கட வுச்சீட்டில் பயணிப்போர் சொலக்கேட்டேன்!

   பொங்கிவரும் அவர்கண்ணீர் துடைக்கவழி கண்டறியேன்!


சோகக்கதை தினஞ்சொல்லித் துன்பப்பட் டோரெல்லாம்

   சொந்தபந்தம் துணைசெய்யத் துணிந்துவெளி நாடுசெல 

ஏமாற்றிப் பணம்பறிக்கும் 'தரகர்களை' நாடிநின்று

   சாவைத்த விர்ப்பதற்குத் தமதுபொருள் விற்றதுடன்

தேவைக்குப் பலலட்சம் ரூபாய்கள் சேர்த்தந்தப்

   பாவியிடம் கையளிக்கப் பலநாள்க ழித்தபின்னர்

'காலிமுகக் கலுபண்டா கரைசேர்ப்பான்' எனச்சொல்லிக் 

   கடைசியிலென் மீதேற்றி விட்டகதை நானறிந்தேன்.


வாரமிரண் டாகியதே வழிமாறி நடுக்கடலில்

  வலுவான அலைகளொடு போட்டியிட்டுச் சென்றேனே!

தூரவழிப் பாதையொன்றால் தொடர்;ந்திட்டோம் பயணத்தை!

   தூக்கமில்லை! சீரான உணவுமில்லை! எனவாடிச்

சேருவமோ அவுஸ்திரேலியா எனச்சித்தங் கலங்கியெமைப்

   பாராது ஆழியிலே பாய்ந்திருவர் மாய்ந்தபெருந்

தீராத்துயர்  வாட்டிநிற்கச் செயலற்று நீர்சொரிந்தேன்!

   தினமவர்கள் அதிகாலை கனவினில்வந் தழுகின்றார்


பலநாளாய்ப பாலின்றிப் பச்சைக்கு ழந்தையொன்று  

   பரிதாப மாய்க்கதறித் தாய்மடியில் மயங்கியதைச் 

சிலநிமிடங் கூடவவள் பொறுக்காது குழந்தைதனைச் 

   சேர்த்தணைத்து இறுதிமுத்தம் ஏக்கமொடு கொடுத்துவிட்டு 

'சலசலக்கும் ஆழ்கடல்தான் சாந்திதரும்'எனச்சொல்லித்

   'தன்கணவன் அழைக்கின்றான் சந்திப்போம்' எனக்கதறிப்

பலமெல்லாங் கூட்டியவள் பாய்ந்தந்தோ உயிர்மாய்த்தாள்

   பார்த்தவரின் கண்களெலாம் செவ்விரத்தஞ் சிந்தினவே! 


வந்தவர்கள் மூச்செல்லாம் ஏக்கப்பெரு மூச்சாக

   வரங்கேட்டுத்  தங்கள்குல தெய்வங்களை வணங்கிநிற்க

விந்தையெனத் தூரமதில் தரையின்கரை தெரியுதென்றான்

   வேதனையை மறந்துசில நிமிடங்கள் கண்ணயர்ந்தோம்!

அந்தநேரம் பார்த்தங்கே றோந்துசுற்றும் விசைப்படகு 

   ஆகாயம் நோக்கியந்தோ அடுக்கடுக்காய்ச் சுட்டதுவே!. 

மந்தபுத்திக் காரனான அமரசிங்க தன்துவக்கால் 

   மாறிமாறி அப்படகைக் குறிவைத்துச் சுட்டுநிற்க... 


தற்பாது காப்பாகச் சுடப்பட்ட தோட்டாவோ

   தப்பாதெம் மாலுமியைச் சாகடித்து விட்துவே

சொற்பமாக இருந்துவந்த நம்பிக்கையும் தொலைந்ததென்று

   சோகமாக இருந்தவேளை சூழ்ந்திட்ட இராணுவமோ

சற்றுமெதிர் பாராவிதம் எமைத்தமது படகேற்றிச்

   சாதுரிய மாகவொரு கரைதனிலே இறக்கிப்பின்

குற்றஞ்செய் தோர்போலத் துப்பாக்கி முனையிலெமைக் 

   கொண்டுசென்று 'கிறிஸ்மஸ்'சுத் தீவிலடைத் தனரம்மா!


தோட்டாக்கள் துளைத்திட்ட துவாரம்வழிக் கடல்நீரும்

   துரிதமாகச் சீறிவந்து என்னுடலை நிறைத்ததுவே!

வாட்டசாட்ட மாயிருந்து வலம்வந்த என்னுடலும்

   வலுவிழந்து நிலைதளர்ந்து நிறைபாரந் தாங்காது

ஆட்டமெலாம் இழந்தந்தோ ஆழ்கடலில் அமைதிபெற

   அடிக்கடலை நோக்கியுடல் சரிந்தவண்ணம் சென்றுபின்னர்

கேட்போர்கள் எவருமின்றிக் கேட்டுவந்த கதைவருத்த

   கிஞ்சித்தும் அமைதியிலா நிலையுற்று மூழ்கிநின்றேன்!

 

உல்லாசப் படகாக உலகமெலாம் சுற்றிவந்தேன்!

   உயிர்மதியா இனவெறியர் கொடுஞ்செயல்கள் நானறிந்தேன்!

கல்மனமும் கசிந்;துருகும் கதைகேட்டு நானழுதேன்!

    ''கலுபண்டா' போன்றோரின் கைபடாது நானின்று

செல்லாக்கா செனவென்றன் சிறப்பெல்லாம் இழந்துவிட்டேன்

   செந்தமிழர் இனவழிப்புத் தொடர்ந்திடா நிலையடைந்து

அல்லும்பகல் தமிழ்வெல்லத் தினங்கனாவுங் காண்கின்றேன்! 

     அகதிப்பட கெனநானும் அடிக்கடலில் துயில்கின்றேன்! 

No comments: