மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா
அவல் கடலை சுண்டல் உவந்தளிக்கும் ராத்திரி
ஆடல் பாடல் எல்லாம் நிறைந்திருக்கும் ராத்திரி
ஆணவமும் ஒடுங்கி அடங்கி விடும் ராத்திரி
அதுவே நம்வாழ்வில் அமைந்த நவ ராத்திரி
மாடி மனை குடிசையெலாம் கொண்டாடும் ராத்திரி
மாகோவில் பணி மனைகள் மகிழ்ந்தேத்தும் ராத்திரி
விரதமொடு விழாவிணைந்து விரவி நிற்கும் ராத்திரி
விதம் விதமாய் கொலுவைக்கும் மேலான ராத்திரி
புத்துணர்வை உவந்தளிக்கும் பக்தி நிறை ராத்திரி
புலவரெலாம் வியந்தேத்தும் புலமை நிறை ராத்திரி
கற்றிடுவார் கல்விதனை தொடங்கி நிற்கும் ராத்திரி
கற்கண்டு பழம்படைத்து களிப் பளிக்கும் ராத்திரி
கலை பயில்வார் கைவினைஞர் கரமிணைக்கும் ராத்திரி
கவின் கலைகள் பயனாகும் கருத்துநிறை ராத்திரி
கன்னியரை மங்கையரை கனஞ் செய்யும் ராத்திரி
கல்வி செல்வம் வீரமதை ஈந்தளிக்கும் ராத்திரி
No comments:
Post a Comment