அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 37 – சேவைப்பலகை/தாசரி தப்பட்டை மற்றும் ஃபக்கீர் தப்பு – சரவண பிரபு ராமமூர்த்தி .


சேவைப்பலகை/தாசரி தப்பட்டை: சேவைப்பலகை ராஜகம்பள நாயக்கர்களின் சேவையாட்டத்தில் இசைக்கப்படும் இசைக்கருவி. அரை மரக்கால் அளவுள்ள மர வளையத்தில் ஆட்டுக்குட்டித் தோல் போர்த்தி கட்டப்படுவது சேவைப்பலகை. சேவைப்பலகை இசைக்கருவியைச் செய்ய தேவைப்படும் தோலை தாங்கள் வளர்க்கும் ஆட்டை வெட்டி எடுக்கும் வழக்கம் ராஜகம்பள நாயக்கர்களிடம் உள்ளது. தாசரி தப்பட்டை சேவைப்பலகையை விட சற்றுத் தட்டையானது. சேவைப்பலகையை விட அதிக சுற்றளவு உள்ளது. செய்முறை ஒன்று தான். தாசரி இனத்தவர் பயன்படுத்துவதால் இது தாசரி தப்பட்டை என்று அழைக்கப்படுகிறது.

 சேவையாட்டம் கோயில் சார்ந்த சூழலில் விழா நாட்களில் ராஜகம்பள நாயக்கர் இன மக்களால்


ஆடப்படுகிறது. ஜக்கம்மாள், முத்தாலம்மன், மாலாக்கோவில் ஆகிய கோவில்களில் மட்டுமே ஆடுவர். ராஜகம்பள நாயக்கர்களின் சில உட்பிரிவுகள் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகிறார்கள்.  ஆட்டத்தை ஆடுவோர் வண்ணமயமான நீண்ட அங்கி, தலைப்பாகை ஆகியவற்றை அணிந்து கையில் சேமக்கலம், சேவைப்பலகை எனப்படும் தப்பட்டை ஆகியவற்றை இசைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். அரிதாக சீங்குழல் எனப்படும் புல்லாங்குழலும் இசைக்கப்படும். குழுவில் கோமாளி ஒருவரும் இருப்பார். கோமாளி தான் குழுவை முன்னின்று கட்டுப்படுத்துபவர் மற்றும் குழுவின் தலைவராக இருப்பார். இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் தேவதுந்துமி இசைக்கப்படும் பிறகு கோமாளி பாட ஆரம்பித்தவுடன் நிறுத்தப்படும். பாடல்கள் தெலுங்கிலும் தமிழிலும் திருமாலை போற்றுவதாகவும் ராமாயண கதையாகவும் உள்ளது. விடிய விடிய பல மணி நேரம் நிகழ்த்தப்படும். 

 ராஜகம்பளத்து நாயக்கர்கள் மட்டுமல்லாமல் வேறு சில இனக்குழுக்களும் சேவையாட்டம் ஆடுகிறார்கள். அவ்வகையில் கொல்லிமலைப் பகுதிகளில் வாழும் மலையாளி பழங்குடியினர் பொங்கல்


விழாவையொட்டி தப்பு இசைத்து சேர்வை ஆட்டம் ஆடுகிறார்கள். சேவாட்டம் என்று அழைக்கிறார்கள். 6 முதல் 18 பேர் வரை இதில் பங்கு கொள்கிறார்கள். தை மாதம் போகி அன்று தொடங்கி கரிநாள் வரை நடைபெறுகிறது. போகியன்று சேவையாட்டம் ஆடுவோர் குழுவாக புறப்பட்டுத் தங்கள் இன மக்கள் வசிக்கும் ஊர்களுக்குத் தங்களது கோவில் மாட்டுடன் செல்கிறார்கள். இந்த மாட்டை இராமகாளை என்று அழைக்கிறார்கள். இது வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஆட்டக்காரர்களும் வண்ணமயமான பாரம்பரிய உடையணிந்து ஆடுவர். உடன் பெரிய நகரா இசைக்கருவியையும் எடுத்துச் செல்கிறார்கள். இந்த சேவை ஆட்டத்தில் கரிய ராமன் என்னும் தங்களது கடவுளை வாழ்த்திப் பாடுகிறார்கள். வட்டமாக ஆடிக்கொண்டு கையில் சிறிய தப்புடன் பாடுகிறார்கள். உடன் பெரிய நகராவும் இசைக்கப்படும். ஊர் மக்கள் இவர்களுக்கு வெற்றிலை, பழம், அரிசி, பணம் ஆகியவற்றை அளிக்கிறார்கள். காளைக்கு கால்களைக் கழுவி வணங்குகிறார்கள். ஆட்டத்தின் முடிவில் இவர்கள் பெற்ற அரிசி மற்றும் பணத்தை கோவிலுக்கு ஒரு பகுதியும் மீதியைத் தங்களுக்குள்ளும் பிரித்துக் கொள்கிறார்கள். இவ்வாட்டம் ஆடுவோர் ஒரு சிலரே பழைய தப்பு இசைக் கருவி வைத்துள்ளனர். மற்றவர்கள் நெகிழியில் செய்த நவீன தப்பு இசைக் கருவிகள் வைத்துள்ளனர். விரைவில் இந்த பாரம்பரிய தப்பு காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

 தமிழகத்தில் வாழும் தாதர்/தாசர் சமூக மக்கள் சேமக்கலம், சங்கு, தாசரி தப்பட்டை ஆகிய கருவிகளை இசைத்து அழகு தமிழில் தெய்வங்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். பாடல்களை பாடி பிறகு நிறுத்தி சேமக்கலமும்,சங்கினையும், தாசரி தப்பட்டையையும் குறிப்பிட்ட கதியில் இசைத்து நிறுத்தி மீண்டும் பாடத் தொடங்குகிறார்கள். இவர்கள் சங்கை இசைக்கும் முறை மிகவும் வித்தியாசமானது. ஒரு தாதர் கூட்டத்தில் 10 பேர் இருந்தால் 8 பேர் சேமக்கலம்/சங்கும், ஒருவர் சேமக்கலம்/தாசரி


தப்பட்டையும், ஒருவர் வளவுபூரி ஆகிய கருவிகளை வைத்து இசைக்கிறார்கள். தாதர்கள் பெரும்பாலும் வைணவர்களாக உள்ளனர். திருமலை, அழகர் கோவில், காரமடை, திருவரங்கம் ஆகிய கோவில் தெய்வங்களைப் போற்றிப் பாடுகிறார்கள். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பல தாதர் குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பாடல்களில் பல அரிய வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடக்கின்றன. புதுச்சேரி மக்களே அதிகம் அறியாத பழைமையான வீராம்பட்டினம் செங்கேணியம்மன் கோவிலையும் வங்கக் கடலின் சிறப்பையும் சேலத்தில் வாழும் தாதர்கள் பாடுகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. சைவ தாதர்களும் உள்ளார்கள். கால்நடையாக சேலத்தில் இருந்து பழனி செல்லும் 400 ஆண்டு பழைமையான இடைப்பாடி

பருவதராஜகுலம், வன்னியகுல சத்திரியர் காவடிகளில் தாதர்களும் உடன் செல்கிறார்கள். காவடி பூசையில் சேமக்கலம், சங்கு, தாசரி தப்பட்டை, துத்திரி ஆகியவற்றை இசைக்கிறார்கள். இப்பகுதி காவடிகள் இந்த இசைக்கருவிகள் இல்லாமல் பயணிப்பது இல்லை.  காரமடை அரங்கநாதர் மற்றும் கரூர் தான்தோன்றிமலை பெருமாள் கோவில்களுக்கென்று பாத்தியபட்ட தாதர்கள் உள்ளனர். 


காணொளி: 

ராஜகம்பள நாயக்கர் சேவையாட்டம்:

https://www.youtube.com/watch?v=WbawSBfHKS0 https://www.youtube.com/watch?v=CEuE79JVa8U https://www.youtube.com/watch?v=19WY2RXrLe0 https://www.youtube.com/watch?v=iUJhK9ZPa4I

இடைப்பாடி தாசர்கள்:

https://www.youtube.com/watch?v=RDkpRlPMUFc 

https://www.youtube.com/watch?v=yoK2VtOu8hU

 https://www.youtube.com/watch?v=_RB7YDGtzh0


கொல்லிமலை  சேவையாட்டம்: 
https://www.youtube.com/watch?v=_n_lQdm1F_M 
https://www.youtube.com/watch?v=itev-Y1arsY 
https://www.youtube.com/watch?v=_82KITZ7dVM 
https://www.youtube.com/watch?v=Bh2qkDlaq6s

ஃபக்கீர் தப்பு:  சைவ/வைணவ மத தாசரிகள் தப்பட்டை இசைத்து சிவன்/திருமால் பாடல்களைப் பாடுவது போன்று இசுலாமிய மதத்தில் இப்பணியை செய்பவர்கள் ஃபக்கீர்கள். இவர்கள் தப்பு போன்ற


சிறிய பறையை இசைத்து அல்லாவை புகழ்ந்து பாடுவார்கள். இது 'தாயிரா’ என்றும் “தப்ஸ்” என்றும்  அல்லது “தஹரா” என்றும் அழைக்கப்படும். இந்த தப்பு மரம் அல்லது உலோக வளையத்தில் ஆட்டுத்தோல் போர்த்தி செய்யப்பட்டது. பெரும்பாலும் தற்காலத்தில் நெகிழி பறைக்கு ஃபக்கீர்கள் மாறிவிட்டார்கள். அரிதாக ஒரு சில ஃபக்கீர்கள் தான் தோல் தப்பு வைத்துள்ளார்கள். இலங்கை வாழ் ஃபக்கீர்கள் இன்றும் தோல் பறையைத் தான் வைத்துள்ளார்கள். இலங்கையில் பாவாக்கள் என்றும் தமிழகத்தில் பக்கீர்கள் அல்லது பக்கீர்ஷா என்றும் அழைக்கப்படுவார்கள். 

ஃபக்கீர்கள் தமிழகத்தில் உள்ள தர்காக்களை ஒட்டி வாழ்ந்து வந்தவர்கள். இலங்கையில் குறிப்பாக கதிர்காமத்தில் இவர்கள் உள்ளனர். ஃபக்கீர் என்ற பாரசீக சொல்லிற்கு தமிழில் ‘இரப்பவர்’ அல்லது ‘இரவலர்’ என்பது பொருள். ஃபக்கீர்கள் வீடு வீடாகச் சென்று பாடல்கள் பாடி யாசிப்பவர்களாக இருக்கின்றனர். இசுலாமிய பாணர்கள் எனலாம் இவர்களை. ஃபக்கீர்கள் பாடுவதை முதன்மைத் தொழிலாகவும், மந்திரிப்பதை துணைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இசுலாமிய திருமணங்களிலும் இவர்கள் பாடுவார்கள்

  ஃபக்கீர்கள் பாடும் பாடல்கள் தனிப்பாடல்களாகவும், நெடும் பாடல்களாகவும் அமைகின்றன. தனிப்பாடல்கள் கேட்பவர்களுக்கு நேரடியாக நீதி சொல்பவனாகவும், இசுலாமிய கடமைகளை நினைவூட்டும் வகையிலும் அமைந்துள்ளன. நெடும் பாடல்கள் இஸ்லாமியச் சமய வரலாற்றில் ஏதேனும் ஒரு கதை நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு விளக்கும் கதைப் பாடல்களாக அமைந்துள்ளன.

ஃபக்கீர் பாடல்களில் தனிப்பாடல்கள் போற்றிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், நீதிப்பாடல்கள், சித்தர் பாடல்கள் என்ற நான்கு வகையான நிலைகளை உடையதாக அமைந்துள்ளன. தத்துவப் பாடல்கள் இஸ்லாம் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய கருத்துக்களைக் கூறுவதாகவும், சமயக் கடமைகளை மக்களுக்கு நினைவூட்டுவனாகவும் அமைகின்றன. சித்தர்கள் எழுதிய தத்துவம் சார்ந்த கருத்துக்களை மையமாகக் கொண்ட பாடல்களையும் ஃபக்கீர்கள் பாடுகின்றனர். அவற்றுள் இசுலாமியச் சித்தரான குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய பாடல்களையும், பதிணெண் சித்தர்களில் ஒருவராகிய இடைக்காட்டூர் சித்தர் எழுதிய பாடல்களையும் இவர்கள் விரும்பிப் பாடுகின்றனர். ஃபக்கீர்கள் திரைப்படப் பாடல்களின் மெட்டில் இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை அடியொற்றியதான தத்துவப் பாடல்களையும் பாடுகின்றனர்.

ஃபக்கீர்கள் கதையுடன் கூடிய பாடல்களைத் தனிப்பாடல், பாடல் -உரை-விளக்கம், வினாவிடை பாடல் என பல விதமான முறைகளில் பாடுகின்றனர். தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அம்மானைப் பாடல்களைப் போன்று ‘வினாவிடை’ போக்கில் அமைந்து ‘நூறுமசாலா’ என்ற பாடல் வகையினையும் பாடுகின்றனர். இதில் முதற் பகுதி ‘பாடல் உரை விளக்கம்’ என்ற அமைப்பிலும், பிற்பகுதியே ‘வினா விடை’ போக்கிலும் அமைந்து காணப்படுகின்றது.

 தமிழிசை பேரறிஞர் நா.மம்மது அவர்கள் கூறுகையில் – ”தமிழகத்தில் ஃபக்கீர்கள் பொட்டல்புதூர், நாகூர், ஏர்வாடி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் செறிவாக வாழ்கிறார்கள். இசுலாமிய தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்றனர். சுமார் 50 ஆண்டுகள் முன்பு இவர்கள் ஆடலுடன் கூடிய பாடல்களைப் பாடி வந்தனர். தற்பொழுது ஆடல் வழக்கொழிந்து விட்டது. தர்காக்களில் விழா நாட்களில் விடிய விடிய இவர்கள் பாடுவது வழக்கமாக இருந்தது. தற்பொழுது சில மணி நேரம் மட்டுமே பாடுகிறார்கள். இவர்களுக்கென்று தனி பாடல் பாணி இருந்தது. இன்று அந்த மரபுகள் ஒழிந்து சினிமா பாணி கலப்பு எற்பட்டுள்ளது. இவர்களின் பழைய பாடல்கள், கதைப்பாடல்கள் ஆகியவை ஆவணப்படுத்தப் படாமல் பெரும்பாலும் அழிந்து விட்டன. இருப்பதை ஆவணம் செய்ய முயற்சிகள் தேவை. இவர்கள் வேறு சில வித்தைக் கலைகளையும் நிகழ்த்தி வந்தனர். அதுவும் இப்பொழுது வழக்கில் இல்லை.”

எஞ்சி இருக்கும் பாடல்களும் ஃபக்கீர்கள் தமிழுக்குச் சேர்த்த வளங்களும் கண்டிப்பாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இல்லயென்றால் சுவடே இல்லாமல் ஒரு வரலாறு காணாமல் போய்விடும்.

காணொளி: 

https://www.youtube.com/watch?v=HY4hP3wta6k 

https://www.youtube.com/watch?v=zaqYIFJDO0U 

https://www.youtube.com/watch?v=39EQub5vsMM 

https://www.youtube.com/watch?v=yEPR8SjyJhw 

https://www.youtube.com/watch?v=98zTtsKH9lo 

https://www.youtube.com/watch?v=TfGtPZk8Ujw  

-சரவண பிரபு ராமமூர்த்தி 

நன்றி:

1. திரு நெல்லை மணிகண்டன் அவர்கள், தேவராட்ட ஆசிரியர், சமின் கோடாங்கிபட்டி 

2. பாணர் இனவரைவியல்,  திரு பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம் 

3. இஸ்லாமிய ஃபக்கீர்கள், வ. ரஹமத்துல்லா No comments: