பங்கயச் செல்விக்குப் பாமாலை சூட்டிய 'தங்கத் தாத்தா' - கட்டுரை 2

 


----  பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.





















இரு வாரங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ் முரசு வார மின் இதழிலே, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் நாமகள் மீது யாத்தருளிய நாமகள் புகழ்மாலை என்னும் புத்தகத்தில் இருந்து புலவர் முதற் பரிசும் பொற்கிழியும் பெறுவதற்குக் காரணமாக இருந்த  ;செந்தமிழ்ச் செல்வி வழிபாடு' என்னும் தலைப்பில் இருந்து தொகுத்தளித்த கட்டுரையைப் படித்திருப்பீர்கள். நாமகள் புகழ்மாலையிலே இருந்து மேலும் புலவரின் புலமை நலத்தை நேயர்களுடன் பகிர்வதற்கு இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது. ஆங்கிலம் முதலாய வேற்று மொழிகளிலே மேலதிக ஆர்வங்கொண்டமையால் ஏற்பட்ட விழைவாகிய இருளானதுஇ பலரிடம் தமிழ்மொழியையும் தமிழ்ப் புலமையையும் மறைத்து மறக்கச் செய்ததென்றும்இ செந்தமிழ்ச் செல்வியின்   பல்லாயிரம் ஒளி;கதிர்களையுடைய புகழ் என்னும் சூரியன் செந்நாவிலே உதித்ததனால் புறமொழிகளாம் நட்சத்திரங்கள் ஒளியிழந்தன என்றும்இ தமிழ்ப்புலவர்களும்இ  கலைமாச் செல்வர்களும் விழித்தெழுந்து தமிழ்ப் பாக்கடலிலே திரண்ட அமுதுண்ணத் திரள்கின்றனர் என்றும் தன்மனக்கண்ணிலே கண்டதாகக் கவிநயத்துடன் புலவர் பாடி நாமகளைத் துயில் எழுப்புகிறார்...

பன்னிய புறமொழி விழைவெனுங் கங்குல்

   பைப்பய விடிந்தது படரொளி பரப்பி

மன்னிய நின்புகழ் ஆயிரஞ் சுடர்க்கை

   வானவன் நாவெனு மலைமுக டுதித்தான்

துன்னிய புறமொழித் தாரகைச் சூழல்

   சுடரொளி அவிந்தன குவிந்தனர் தொண்டர்

என்னித யத்துறை முத்தமிழ்க் கடலே

   இன்னமுதே பள்ளி எழுந்தரு ளாயே!

என்று புதிய கற்பனை யுக்தியைக் கையாண்டு திருப்பள்ளி எழுச்சி பாடித் துயிலெழுப்பிய புலவர் தமிழ்ச்செல்வியை  முத்தமிழ்க் கடலாகவும் அமுதாகவும் உருவகித்துப் பாடிய சிறப்பு நோக்குதற்பாலது.

துயிலினின்றும் எழுப்புதலைப் புறத்திணை இலக்கியம் 'துயிலெடைநிலை' என்று கூறுகின்றது. வெண்டாமரைப் பூவிலும்இ வித்துவம் மலரும் புலவோரின் நாவிலும் வீற்றிருக்கும் நாமகளைஇ நல்லருள் பாலித்து அருளும்;வண்ணம் அவளைத் துயிலினின்றும் எழுப்பப் பாடுவது திருப்பள்ளி எழுச்சி என்பது. இதன் தத்துவப் பொருள் திரோதான சுத்தி என்பதாகும்.

யாழினுங் குழலினும்இ பாலினுந் தேனினும், காணினும் கேட்பினும், கருதினும் இனிக்கும் அருந்தமிழ்ச் செல்வியைப் பாவாலே துயில் எழுப்பிய புலவர், காலைக் குயிலைக் கூவி அவளை அழைக்கச் செய்கிறார்!

மூவாத சுவையமுதை முச்சங் கத்து

   முளைத்தெழுந்த கற்பகத்தை முடிசேர் மன்னர்

பாவாலே எழுதவித்த பாவை யளைப்

    பாண்டிவளம் பதியரசு பயில்கின் றாளைக்;

காவலருந் தென்பொதிய மலைமேற் றோங்குங்

    கலையாருஞ் சுடர்மதியைக் கனியைத் தேனைக்

கோவாத மணிமுத்தை எனையும் ஆண்ட 

    குலக்கொடியைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

என்றும்,

ஆதிநடு முடிவுமிலா(து) அமர்ந்த வாற்றால்

   ஆருயிர்கட்(கு) உயிராகி அருளு மாற்றால்

ஓதுபணி மொழிதன்பால் உடைய வாற்றால்

    ஊழிபல உலப்பனுமா(று) உறாத வாற்றாற்

பாதிமதி ஏறுசடைப் பரனே யென்று

    பாவலர்கள் நிதந்துதிக்கும் பனுவ லாளை

கோதுபதி யாதெனையும் தடுத்தாட் கொண்ட

குலக்கொடியைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

செல்விக்கும் சிலேடையாக முதல் வரும் மூன்று வரிகளிலே பொதிந்திருக்கும் ஆழ்ந்த பொருளைப் பார்ப்போம். 
'ஆதி - நடு - முடிவு இல்லாத' என்ற பதத்தை இறைவனுக்காகக் கொண்டால்,  ஏழுலகையும்  படைத்தருளிய சிவபெருமான் தொடக்கமும் நடுவும் முடிவும் இன்றிச் சிவசோதிப் பிழம்பாகத் திருமாலுக்கும் பிரமனுக்கும் காட்சி அளித்ததைக் குறிக்கும். அநாதியாக உள்ள மாயை காரியப்பட்டபொழுது, அதன் கூறாகிய சுத்த மாயையினின்றும்      தோன்றிய தமிழன்னைக்குத் தொடக்கம் நடு முடிவு தெரியாது இருக்கும் நிலை நாமகளுக்கும் பொருந்தும்.
 
'ஆருயிர்கட்கு உயிராகி அருள்தல்' என்ற பதத்தைச் சிலேடையாக இறைவனுக்கும் நாமகளுக்குங் கொண்டால், கேவல நிலையிலே முழுமையாக ஆணவமலப் பிணிப்பாற் கட்டுண்டு அறிவு மறைக்கப்பெற்று இருந்த உயிருக்குஇ ஒன்றாய் வேறாய் உடனாய் இருந்து ஐந்தொழில் புரிந்து அருள்செய்யும் திறம் இறைவனுக்கும்இ உலகிற் பிறந்தோருக்கு அறியாமை நீங்கும்வண்ணம் அறிவுயிர்ப்பைக் கொடுக்குந் திறம் நாமகளுக்கும் பொருந்தும்.  

'ஓது பணி மொழி தன்பால் உடையவாற்றால்' என்ற உவமை அணியானது, புலவர்கள் பலரால் அன்புடனே பாடப்பெற்றவற்றைத் தனது உடைமையாக்கி இருத்தல் நாமகளுக்கும், உமையம்மையைத் தனது இடப் பாகத்தே உடைமையாகக் கொண்டதினால் இறைவனுக்கும் பொருந்தும் என்று கொள்க.

'ஊழிபல உலப்பனுமா றுறாத வாற்றால்';  என்று புலவர் சூட்டிய பதத்தில், உவமை அணி எப்படித்  தமிழ்ச்செல்விக்கும் இறைவனுக்கும் பொருள் கொள்ளும் என்பதைப் பார்ப்போம். படைப்பின் தொடக்கத்திலே, தமிழானது சுத்த மாயையினின்றும் தோன்றிஇ பின் மறையாகவும் கலையாகவும் மந்திரமாகவும் விரிந்து, உலகம் நிலைத்திருக்கும் வரை நிலைத்திருந்து, பின்னர் ஊழிப் பேரொடுக்கத்தலே சுத்த மாயையிலே ஒடுங்கினாலும் அழியாது நிறகும் எனத்  தமிழ்மொழிக்கும்இ சகலதையும் தன்னுள்ளே அடக்கியிருந்து தான் எந்த ஒரு அசித்துப் பொருளுடனோ சித்துப் பொருளுடனோ சாராது (பிறிதொன்றிலும் சாராது) நின்று, அந்தப் பொருள்கள் எல்லாவற்றையும் இயக்குவிப்பதுடன்,  ஊழிகாலம் வரை தன்னியல்பு மாறாது அழிவில்லாது நிற்பவன் என இறைவனுக்கும் பொருள் கொள்வதால் விளங்குவது இந்த உவமை அணி.;   

 'விழிக்கின்ற விழிக்குள்ளே விளக்கா னாளை

   மென்கரும்பைச் செழும்பாகை விளரி யாளைப்

பழிக்கின்ற மொழியாளைப் பலதே யத்துப்

    பாடைமட மங்கையர்கள் பதஞ்சே விக்க

அளிக்கின்ற அருளாளை அறிவா னாளை

    ஆசுமுதல் நாற்கவியின் பொருளை அள்ளிக்

கொழிக்கின்ற  சிவக்கொழுந்தை எனையும் ஆண்ட

     குலக்கொடியைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

பத்துப் பாக்களாலே பூங்குயிலைக் கூவிச்சென்று, திருப்பள்ளி எழுந்த தமிழ்ச் செல்வியை அழைக் விழைகிறார் புலவர். தினமும் தான் தியானமிருக்கும் வேளை நாமகள் தன் திருமுகத்தைத் தனக்குக் காட்டியருளுமாறு, மனமுருகி ஆசைப்பட்டு அற்புதமாகத் தமிழ்கொண்டு  வேண்டுகிறார். 

காதரிக்கப் பேசுபுற மொழிபோ லாது

    கல்லினையும் உருக்குமொழி கனிந்த வாயும்

பாதரித்த பணைத்தோளும் படிக மாலை

    பனுவலியாழ் பரிக்குமொரு கரங்கள் நான்கும்

கோதரித்தென் தலைமிசையே குலவச் சூட்டுங்

    கோதனதத் தாள்களுமாயக் கூடி அன்பர்

ஆதரித்துப் போற்றவருள் தெய்வக் கோலம்

    ஆசையுற்றேன் இனிக்காட்டி அருளு வாயே!

இயற்கைக்குப் புறம்பான ஒலிக் கூட்டங்களை உடைய ஆங்கிலம் -  இலத்தீன் - சிங்களம் போன்ற மொழிகளை உச்சரிக்கும்பொழுது, காதுகளைத் துளைத்துத் துன்பம் கொடுக்கின்றன என்பதை உணர்ந்த புலவர் 'காதரிக்கப் பேசு புற மொழி போலாது....' என்றும், எங்கள் தமிழின் ஓசை இயற்கைக்கு அமைந்த மென்மையான ஒலிக்கூட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் பேசும்பொழுது இனிமை பயப்புவது என்றும், கல்லினையும் உருக்கும் தன்மையுடையது என்பதனால் கேட்போரின் மனதை உருக்கி மெய்சிலிர்க்க வைக்கும் என்றும்; மேலும் நாமகளைத் தன் மனத்திலே  அலங்காரஞ் செய்து பார்க்கிறார்.

குழல்திருத்தி அல்முடித்துத் திலதம் தீட்டிக் 

    கோவிரண்டு மையெழுதிக் குழைகள் பூட்டி

வளையலிட்டுக் கச்சணிந்து வடங்கள் மாட்டி 

    மாசுதவிர் மேகலையை மருங்கிற் கூட்டிப்

பழையதமிழச் சிலம்பணிந்து  பட்டு டுத்திப்

    பார்வையெட்டால் மலரயனார் பார்க்கப் பார்க்க    

அழகொழுக அமுதொழுகுந் தெய்வக் கோலம்

   ஆசையுற்றேன் இனிக்காட்டி அருளு வாயே!

எட்டுக் கண்களாலும் நான்முகன் பார்த்துப் பார்த்த அருட் கோலத்தின் அழகை, தனது அகக் கண்களுக்கு ஒருமுறை காட்டி அருள்வாயோ என்று தமிழ் பாடிக் கேட்கிறார்.  

ஓயாமல் எவர்கட்கும் ஒண்பொரு ளளிக்கின்

உயர்குறளோ ரைந்துதருவாய்

   ஒருநால்வர் திருவாயி னுதவுமறை சிவஞான

          உறுபோகம் உதவுமமுதாய்

மாயாத இருதேவர் மணிகள்திரு மணிகளாய்

      மாமூலன் அருள்மந்திரம்

   வற்றாத பால்பொழிந் தருள்காம தேனுவாய்

           வண்டமிழ்ப் புலவர்சுரராய்

வேயாத மாடமலி கூடலம் பதியரசு

      மேவுமத் தாணியாக

   விண்ணுலக மண்ணுலக மாகவர சாள்கின்ற

           வெண்டா மரைச்செல்வியே

தேயாத கல்வியுஞ் செல்வமுந் தந்துனது 

       திருவடிக் காளாக்குவாய்

  தென்பொதிய மலையிலுறை கும்பமுனி மடியில்வளர் 

;          செந்தமிழ்க் குலதெய்வமே!

படிப்பவர் எல்லோருக்கும் அறம்பொருள் முதலிய நாற்பொருளாகிய நூற் பயனை நிறைவாகத் தந்தருளும் உயர்வு மிக்க குறளை ஐந்து தருக்களுக்கும் ஒப்பிடுகின்றார் புலவர்.  சிறப்பு வாய்ந்த ஐந்து தருக்களும் அரிசந்தனம் - கற்பகதரு  சந்தானம் - பாரிசாதம் - மந்தாரம் என்பனவாம். வெண்டாமரைச் செல்வியைப் பார்த்துப் புலவர் 'ஐந்து தருக்களுக்கும் நிகரான திருக்குறளும் - அமுதத்திற்கு நிகரான நால்வர் அருளிய தேவார திருவாசகங்களும் - சிந்தாமணிகளாக விளங்கும் திருத்தக்கதேவரும் அருண்மொழித் தேவரும் அருளிய நூல்களும் - மூலநாயனாரின் திருமந்திரமும் - தேவர்களைப் போன்று பூவுலகத்திலுள்ள புலவர்களும் அமைந்திருக்க வெண்டாமரைச் செல்விக்கு விண்ணுலகம் மண்ணுலகிலேயே அமைந்ததனால் இங்கிருந்தே அரசாட்சி செய்கின்றாயே!. குறையாத செல்வமும் நிறைவான செல்வமுந்; தந்து ஆட்கொண்டருள்வாயே என்று  செந்தமிழ்ச் செல்வியை விழித்துப் புலவர்; கேட்கிறார்.
வீணையை இரு திருக்கைகள் தாங்கி நிற்பஇ வேத முடிவாய் விளங்கி, விந்து நாதம் என்னும் சுத்த மாயையின் மீதிருப்பவளான செந்தமிழ்ச் செல்வியைஇ வாரமணிக் கோவை கொண்டு வள்ளுவன் முப்பால் குடித்துஇ சிந்தாமணி புனைந்துஇ சேரன் சிலம்பணிந்து, தனது நாவினின்று வரமருளும் நாமகளை அபயமிட்டு அழைக்கிறார் தங்கத் தாத்தா!

சங்கரன் திருத்தாள் போற்றித்  தவமுனி இரந்து வேண்ட
அங்கவன் அருளால் தோன்றும் அருந்தமிழ் மாதே ஓலம்!
வெங்கொடு மலத்தால் தோன்றும் வீங்கிருள் விடிய உள்ளத்
தங்கம லத்தின் மேவு மணிமணி விளக்கே ஓலம்! 

ஒருமுறை காசியிலே அமைந்திருந்த சங்கத்திலே, வடமொழிப் புலவர்களுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக அகத்திய முனிவர் சிவபெருமானை நினைந்து வேண்ட, இறைவனும் திருக்கோவிலின் ஒரு பக்கமருந்து நறுமணம் கமழச் செய்தான். இதனால் ஈர்க்;கப்பெற்ற அகத்தியமுனிவர் மணம் வந்தவழி  செல்லும் பொழுது, அந்த வாசைன மேலும் மேலும் கூடக்கண்டு அந்த இடத்தை அடைந்த முனிவருக்குப் பல ஏடுகள் கிடைத்தன. தனது தவ ஆற்றலாலே அவை இனிமையானவை என்று உணர்ந்து 'தமிழ் தமிழ்'என்று மகிழ்ச்சிகொண்டு கூவினார். இறைவனும் தோன்றிஇ அந்தத் தமிழ் மொழியை அகத்தியருக்கு ஓதி உரைத்தார்.  பின்னர் அகத்தியர் தென்திசை சென்று சங்கம் அமைத்துத் தமிழ் ஆராய்ந்து வளர்த்தார் என்ற வரலாற்றுச் செய்தியை  முதல் இரு அடிகளாலும்இ நெஞ்சக் கமலத்திலே வீற்றிருந்து ஆணவமல இருளை நீக்கும் மாமணி விளக்கென கடைசி இரு அடிகளாலும் அறியத்தந்து பத்துப் பாடல்களைப் பாடி ஓலமிட்டு நாமகளை அழைக்கிறார். 
தொடர்ந்து காமம்இ வெகுளிஇ மயக்கம் முதலிய குற்றங்களைத் தன்னிடமிருந்து நாமகளின் அறக் கருணையினாலே அறவே நீக்கி, மெய்பொருள் விளக்கிஇ அறிவு விளக்கம் தந்தருளவேண்டும் எனக் குறையிருந்து முறையிடுகிறார். ஏமமாகிய நல்லறிவு என்னுந்; தூண்டா மணிவிளக்கைத் தன் இதயத் தாமரையிலே ஏற்றி, பூரண சந்திரன் உருகி வழிந்தால் போன்ற அழகிய தெய்வக் கோலத்துடன் இங்கு வந்து வசித்திடல் வேண்டும். பாக்களாலே அடியவர்கள் பாடிப் பரவ அருள் தரவேண்டும் பசுந் தமிழ்த் தாயே என மனமுருகி முறையிடுகிறார். ('மாமதி உருகி வழிதல்' இல்பொருள் உவமையாகும்) 

காமமும் வெகுளி மயக்கமும் நெஞ்சக்
   கறைகளுங் கருணையாற் போக்கி
ஏமமா கியநல் லறிவெனுந் தூண்டா
    மணிவிளக் கென்னுளே ஏற்றி
மாமதி யுருகி வழிந்தன தெய்வ
   வடிவுடன் வதிந்திடல் வேண்டும்
பாமலர் சிந்தி அடியவர் வணங்கப்
   பயனருள் பசுந்தமிழ்த் தாயே!


தேவாதி தேவனான சிவபெருமானின் செவிகளுக்கு என்றும் தித்திக்கும் தௌ;ளமுதாக இருப்பவளும், இளமைகுன்றா முருகப் பெருமானின் பன்னிரு திருச்செவிகளுள்லிருந்து முழைத்தெழுந்த செழுங்கரும்புபோல் இனிப்பவளும், திருமாலுக்குப் மலர்களாலே அர்ச்சித்தபின் அளித்த திருப்பாவை போன்றவளும், புலவர்கள் தினந்தினம் அள்ளி அள்ளி மாந்தும் நவநீதத்தை  எந்த நேரமும் நினைந்து நல்ல நிலையடைந்த திறம் கூற விழைந்த புலவர் பத்துப் பாடல்களால் பாடி மகிழ்கிறார் 


தோவாதி தேவனிரு செவிகட் கென்றுந்
    தித்திக்குந் தௌ;ளமுதைச் செவ்வேற் பெம்மான்
மூவாத பன்னிரண்டு செவிக ளுள்ளே
     முளைத்தெழுந்த செழுங்கரும்பை முகுந்த னுக்குப்
பூவாலே சூடிப்பின் கொடுத்தாள் சொன்ன
     பூம்பாவைப் பொற்பணியைப் புலவர் தங்கள்
நாவாலே அள்ளியுண்ணு  நவநீ தத்தை
     நாமகளை நினைந்தடியேன் உய்ந்த வாறே!

சிறிது காலம் தமக்குப் பெரும் புலமையைக் கொடுத்து வரகவி ஆக்கியமையை மறந்துஇ உலகியல் வயப்பட்டுச் சிற்றறிவு கொண்டோரைப் பாடியகுற்றத்தைப் பொறுத்தருளுமாறு மன்றாடிப் பத்துப் பாடல்களால் தனது மனக் குமுறல்களை வெளிப்படுத்துகிறார். புலவரின் உளத்தெழுந்த பாடல்கள் யாவும் திருமுறையை நினைவுபடுத்துவன. அத்துணை புலமைச் சிறப்பு வாய்ந்தவை.
கம்பருக்குக் கிடைத்ததோ காளிதேவியின் அருள்! காளிதாசருக்குக் கிடைத்ததோ புவனேசுவரி அம்மனின் கருணை! தங்கத் தாத்தா பெற்றது தண்டமிழ்ச் செல்வி நாமகளின் கடாட்சம்!
பாடுகிறார்...
சேயழா திருக்கப் பானினைந் தூட்டுஞ்
    சிறப்புடை அன்னையே போலத்
தூயநூற் பொருண்மேல் அவாவுறா வெனக்குந்
    தொடர்பினால் அன்னவை அருளித்
தீயவென் உளத்து மேவிநா விடமாய்ச்
    செந்தமிழ்ப் பாவருள் செய்யும் 
ஆய்கலைப் பாவாய்! முத்தமிழ்ச் செல்வீ
    அரும்பிழை பொறுத்தருள் வாயே!

மாசிலா மதிபோன் மலர்ந்திடு முகமும்
    வஞ்சனேன் வல்லிருள் வாட்டும் 
தேசுலாம் விழியும் பாததா மரையுந்
    சிறியனேன் சிந்தையிற் காட்டி
ஆசையாய் ஆண்டு பிணிமிடி நீக்கி
    அருந்தமிழ்ப் புலமையுந் தந்த
வாசமா மலர்வாழ் முத்தமிழ்ச் செல்வீ
    வன்பிழை பொறுத்தருள் வாயே!

இறைவி மன்னுயிர்கள்மேலே செலுத்துகின்ற கைமாறு காணாக் கழிவிரக்கத்தை நினைந்து - தன்னுள்ளம் புகுந்திருந்து  தமிழ் ஊற்றாய்க் கவிபொழிவி;த்த கலைமகளை - உளம் மகிழ்ந்திருந்து  நாவினின்று உரைக்கும் ஒளிவிரி அருங்கலை மதியை - வளமலி செஞ்சொன் முத்தமிழ்ச் செல்வியை - நினைந்து பத்துப் பாடல்களாலே தான் பிழையேதும் இயற்றியிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறார். 

முருகோடித் திசைகமழும் முகிலோடு குழலும்
     முயலோடும் முழுமதிபோல் முகமலரும் விழியம்
குருகோடும் மடநடையும் கொம்போடும் இடையும்
    கோங்கோடும் இளமுலையும் குறித்தடியேன் நினைத்தால்
அருகோடி இருகரத்தால் அணைத்தென்னைத் தூக்கி
    அன்போடு அமுதுதவி அடியன்உளத்(து) உறங்கும்
திருகோடப் பிணியோடத் தீவினை ஓடச்
     செய்யதமிழ்ப் பெருமாட்டி திருவருள்செய் குதியே!

மஞ்சஞ்சு குழலுமிரு வாளஞ்சு விழியு
     மதியஞ்சு நுதலுமிரு வரையஞ்சு முலையும்
பஞ்சஞ்சு திருவடியும் பளிங்கஞ்சு வடிவும்
    பாம்பஞ்சு சுடர்க்காந்தள் பணிந்தைஞ்சு கரமும்
நெஞ்சஞ்சத் தீயபிணி நேர்ந்தஞ்சு காலை
     நினைத்தவுடன் ஓடிவந்து நீயணைத்துத் துக்கி
அஞ்செஞ்சொல் அஞ்சலென அருளியகம் மகிழ
    அரியதமிழ்ப் பெருமாட்டி திருவருள்செய் குதியே!

தேனேறும் வெள்ளைமலர்த் தவிசில், திருப்புவனம் முழுதருளும் நான்முகனொடு அமர்ந்திருக்கும் செய்யதமிழ்ப் பிராட்டியிடம் மண்டியிட்டு மன்னித்தருள வேண்டிய புலவர் - அவளின் திருக்கடைக்கண்ணொளியைக் கண்டவுடன் வாழா இருப்பாரா?. அவளின் திருவிழிகளின் அழகைப் பத்துப் பாடல்களால் வருணிக்கும் கற்பனை அழகே தனி! 
செவ்விய இசையும், தீஞ்சுவை அமுதும் செந்தமிழ் முன்னே தோற்று ஒதுங்குவதைப் பார்த்த விண்ணோர்இ கலைமகளின் எண்ணெண் கலைகளை விரும்பியதைக் கண்டு பெருமாட்டியின் இரு விழிகள் வழங்கும் எண்ணையும் எழுத்தையும் கற்ற பின், நாளும் ஒவ்வொன்றாகப் பிற கலைகளைச் சுவைத்து அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து, புலவர்கள் பொற்பாதம் நல்கும் முத்திப்பேற்றை நினைந்து உய்ய விழைவரன்றோ?. இதை நயம்படக் கூறுகிறார் புலவர்.

பண்ணும் அமுதும் ஒதுங்குஞ் சுவைமொழிப் பாரதிதன்
விண்ணும் விரும்பிடும் எண்ணெண் கலைத்திரு மேனியிலே
நண்ணும் புலவர் விருந்தாய் அருந்தி எந்நாளும் உய்ய
எண்ணும் எழுத்தும் கொழித்தே இலங்கும் இருவிழியே!

கிண்ணம் போன்ற வெண்டாமரை ஒத்த வதனத்திலே, எள்ளுப்பூப் போன்ற நாசி விரிய, கள்ளக் குமுதம் போன்றிருக்கும் இருவிழிகளும் மலர, அதிலிலுந்த கருணை என்னும் மது சுரந்தெழந்து புகழ்மணம் பரப்பி, கடைக்கண்ணால் தூய கவிதைகளை அள்ளிச் சொரிந்து ஆட்கொள்ளும் என்று கற்பனயில் மிதந்த புலவரின் செந்நா கவி பொழிந்தது.

வள்ளக் கமலத்தி லேஎள்ளுப் பூக்க மருவியிரு
கள்ளக் குமுத மிருசார் மலர்ந்து கருணைமதுத்
துள்ளிக் குதிக்க விசைமணம் வீசிநற் தூயகவி
அள்ளிச் சொரிந்து கடைக்கணித்தே என்னை ஆண்டிடுமே!

கடைக்கண் அருள்வேண்டிய புலவர்இதன்னைவாட்டும்வறுமையிலிருந்தும்,
வருத்தும் பிறவித் துன்பத்திலிருந்தும், தன்னைக் காப்பாற்றும் வண்ணம் அடைக்கலப் பத்து என்னும் அருள்சுரக்கும் பதிகத்தைப் பாடினார்.

மோதிக் கலக்கும் வறுமையும் நோயும் முடித்து உனது
சோதிக் கமலத் துணைமலர் சூட்டித் துணை அருள்வாய்
வாதித்த புத்தனை ஆக்கியேர் ஊமையைப் போக்கி வைத்த
ஆதித் தமிழ்த் தெய்வமே அடியேனுன் அடைக்கலமே!

கச்சங் கடக்குங் கதிர்முலை யாய்கவ லைக்கடலாம்
இச்சங் கடத்துக்(கு) எதுசெய் குவேன்எனை ஆண்டருள்வாய்
முச்சங்க மேவி முழுதுல காண்டு முதுபுலவர்
அச்சங் கடத்துந் தமிழ்த்தெய்வ மேயுன் னடைக்கலமே! 

என்று தண்டமிழ் வாணியிடம் அடைக்லம் புகப் புலவர் விழைகிறார்.

No comments: