எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 14 வாசிப்பு பயிற்சி தந்த ஊடகக் கற்கைநெறி ! விஷமும் விசமத்தனமும் கக்கிய ஊடகங்கள் தந்த பாடம் !! விதியால் திரும்பிய எழுத்துலக வாழ்க்கை !!! முருகபூபதி


கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  1974  ஆம் ஆண்டு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிற்காக இரவு பகலாக வேலை செய்துகொண்டிருந்தோம். 

முதல் தடவையாக  இம்மாநாட்டு மண்டபத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லிம் எழுத்தாளர்கள் ஒன்றுகூடினோம். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், தலைமைக்குழு உறுப்பினர்கள் சோமகாந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, இளங்கீரன்,  எச்.எம். பி. மொகிதீன் நீர்வைபொன்னையன்,  மல்லிகை ஜீவா, முருகையன், தேசிய சபை உறுப்பினர்கள் நுஃமான், மௌனகுரு, சாந்தன், மு.கனகராஜன், திக்குவல்லை கமால், செ. யோகநாதன்,  அந்தனிஜீவா,  ஆகியோருடனெல்லாம்


இக்காலப்பகுதியில் பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 

நண்பர் மல்லிகை ஜீவாதான் என்னையும்  இச்சங்கத்துடன் இணைத்துவிட்டவர்.  இந்த மாநாட்டையும் குழப்புவதற்கு சிலர் சதி செய்தனர். எனினும் மாநாடு திட்டமிட்டவாறு நடந்தது.   ஒருவர்  மண்டபத்திலிருந்த பேராளர்கள், பிரதிநிதிகளிடம்  ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார். 

அந்தப்பிரசுரத்தில் அக்னி என்ற புதுக்கவிதை இதழ் வெளிவரவிருக்கும் செய்தி இடம்பெற்றிருந்தது. அதனை விநியோகித்தவர்தான் கவிஞர் ஈழவாணன். அவருடைய இயற்பெயர் தர்மராஜா. எம்.டீ. குணசேனா ஸ்தாபனத்தின் வெளியீடுகளான தினபதி, சிந்தாமணி, ராதா, தந்தி, சுந்தரி முதலான இதழ்களில் ஒப்புநோக்காளராக பணியாற்றியவர். ஶ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கம் அச்சமயம் பதவியிலிருந்தது.  

ஒரு செய்தி ஏற்படுத்திய விவகாரத்தினால்,  குணசேனா நிறுவனத்தின் பத்திரிகைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன.  அதனால், பலர் வேலை இழந்தனர். அவர்களில் ஈழவாணனும் ஒருவர்.  தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம்  பத்திரிகை உலக ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவர்.  அவர் தினகரன், சுதந்திரன், வீரகேசரி பத்திரிகைகளிலும் முன்னர் பணியாற்றியவர். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் தனது இலங்கைப்பயணம் பற்றிய தொடரில் இவர் பற்றி எழுதியிருக்கிறார். 

எனினும் அவருக்கு முற்போக்கு எழுத்தாளர்களுடன் என்றைக்கும் சுமுகமான உறவு இருந்ததில்லை.


தமிழரசுக்கட்சியினருடனும் பிணங்கியவர். பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் முன்னின்றவர். ஒரு தடவை, குன்றக்குடி அடிகளார் இலங்கை வந்தசமயத்தில் அவருக்கு அருந்தத் தரப்பட்ட பாலில் விஷம் கலந்திருந்தது என்றும் செய்தி வெளியிட்டவர். 

பிறிதொரு சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் மறைவின்போது, சுதந்திர சதுக்கத்தில் நடந்த இறுதி  நிகழ்வுகளை ஏனைய பத்திரிகைகளை முந்திக்கொண்டு வெளியிடவேண்டும் என்ற உள்நோக்கத்துடன், குறிப்பிட்ட சிதையின் படத்தை பகல் வேளையில் எடுத்து, அதற்கு சிவப்பு சாயத்தை பூசி, தீச் சுவாலை விட்டு எரிவதுபோன்ற தோற்றத்திற்கு மாற்றி பத்திரிகையில் வெளியிட்டு சாதனை புரியப்பார்த்தவர். 

ஆனால்,  ஏரிக்கரை பத்திரிகைகள், வீரகேசரி முதலனாவை அந்த நாடகத்தை அம்பலப்படுத்திவிட்டன. குன்றக்குடி அடிகளாருக்கு தினபதி, சிந்தாமணி எழுதியிருந்ததுபோன்று பாலில் விஷம் கலக்கப்படவேயில்லை என்பதை வீரகேசரியும் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு,   சிவநாயகம் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளின் நாடகத்தை அம்பலப்படுத்தியிருந்தது. குன்றக்குடி அடிகளாரும் மனம்நொந்து  கொழும்பை விட்டுப்புறப்பட்டார்.  

பின்னாளில், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானபோது,  அச்செய்தியை  தினபதி  வலப்புறம் ஒரு காரின் படத்தையும் இடப்புறம் ஒரு வீட்டின் படத்தையும் அச்சிட்டு, தமிழ் ஈழம் கேட்ட அமிர் இலங்கை அரசு வழங்கும்  காரும் வீடும் பெறுவாரா..? என்று வெளியிட்டது. எஸ்.டி. சிவநாயகத்தின் இத்தகைய இயல்புகளினால் வெறுப்புற்ற சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசனும் அவரை அவரது பெயருக்கு வேறு பெயர் சூட்டி  தமது பத்திரிகையில் எள்ளிநகையாடினார்.  

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் இது போன்ற தகவல்களை நான் பதிவுசெய்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன. சமகாலத்தில்  மக்களை கிளர்ச்சியூட்டுவதற்காக,  பரபரப்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் பார்க்கின்றோம்.   தலைப்பினைப்பார்த்து திகைத்து


தொடர்ந்து வாசித்தால், தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படும்.  இணைய இதழ்கள்  இதுவிடயத்தில் பொறுப்பற்று செயல்படுவதை காணமுடிகிறது. ஊடகங்களில் செய்தியை செய்தியாக (News) வெளியிடாமல்,  எழுதுபவரின் பார்வையாக ( Views )  பலரும்  பதிவுசெய்கின்றார்கள். 

எஸ்.டி. சிவநாயகம்  பொது மேடைகளை தவிர்ப்பவர்.  பின்னாளில் அவர் சத்திய சாயிபாபா அறக்கட்டளை கொழும்பு சாயி இல்லம் முதலான ஆன்மீகப்பணிகளில் தனது நேரத்தை செலவிட்டார்.  அவர் எம்.டீ. குணசேனா நிறுவனத்தின்   தமிழ்  ஊடகங்களிற்கு பொறுப்பான உயர் பதவியிலும் இருந்தார். பின்னாளில் நான் வீரகேசரியில் முழுநேர ஊழியராக இணைந்தபோது,  அதன் வாரவெளியீட்டில்  வாரம்தோறும் இலக்கியப்பலகணி என்ற பத்தி எழுத்துக்களை எழுதினேன். சிவநாயகம்,  சிந்தாமணியில் இலக்கிய பீடம் என்ற பெயரில் பத்தி எழுத்துக்களையும்,  தினகரன் வார மஞ்சரியில் தற்போது கனடாவில்  தமிழர் தகவல் இதழை வெளியிடும் எஸ். திருச்செல்வம் அறுவடை என்ற பத்தியும் எழுதினார்.  

எனது இலக்கியப்பலகணி பத்தியை நான் எழுதுவதற்காக வீரகேசரி வாரவெளியீட்டு ஆசிரியர் சூட்டிய பெயர்தான் ரஸஞானி. இந்த புனைபெயரும் எனது இயற்பெயருடன் நிலைத்துவிட்டது. எமது கொழும்பு மாநாட்டில் நான் சந்தித்த கவிஞர் ஈழவாணனின்  அக்னி  புதுக்கவிதை இதழை அச்சிடுவதற்கு எங்கள் ஊர் சாந்தி அச்சகத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.   

அதற்குமுன்னர் அவரது   அக்கினிப்பூக்கள் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு அரங்கு அக்காலப்பகுதியில்  கொள்ளுப்பிட்டி காலிவீதியில் அமைந்திருந்த தேயிலை பிரசார மண்டபத்தில் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தலைமையில் நடந்தபோது, பேராசிரியர்கள் கைலாசபதி,


சிவத்தம்பி, எச். எம்.பி. மொகிதீன் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கும்  சென்றிருந்தேன்.  

அக்காலப்பகுதியில் அந்த மண்டபத்தில் அடிக்கடி இலக்கிய கூட்டங்கள், நூல் வெளியீடுகள் நடக்கும். எழுத்தாளர் சொக்கனின் கடல் கதைத் தொகுதி அமைச்சர் டீ. பி. இலங்கரத்னா எழுதிய அம்பயஹலுவோ சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான (   சரோஜினி அருணாசலம் மொழிபெயர்ப்பு ) ஆகியனவற்றின்  வெளியீட்டு அரங்குகளும் மூத்த எழுத்தாளர் அமரர் அ.ந. கந்தசாமி நினைவரங்கும் அங்கு நடந்துள்ளன. மூத்த பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம் அமைப்பாளராக விளங்கிய கொழும்பு கலை, இலக்கிய, பத்திரிகை நண்பர்கள் அமைப்பின் நிகழ்ச்சிகளும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வுகளும் இங்கு நடந்தன. 

இம்மண்டபத்தில்  சுவையான  தேநீரும் பரிமாறுவார்கள்.  புத்தக வெளியீடுகளும் நடந்தமையால், ஒரு கூட்டத்தில் பேசிய கவிஞர் இ.முருகையன் அதனை  “ புத்தக பிரசார மண்டபம்  “ எனவும் அழைப்போம் என்றார்.  கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபை  மண்டபம்,  கூட்டுறவுச்சங்க மண்டபம்,  பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம், கதிரேசன் மண்டபம்  வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் , இராமகிருஷ்ண மிஷன் சிறிய – பெரிய மண்டபங்கள்,  பிரதான வீதியில் அமைந்த சபாநாயகர் பாக்கீர் மாக்காரின் முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி  மண்டபம்  ஆகியவற்றில்தான் எமது சங்கத்தினது நிகழ்ச்சிகளும் இதர தமிழ் நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டங்கள்  கொழும்பு பாமன் கடையில்


அமைந்திருந்த லண்டன் பி. பி.சி, இலங்கை வானொலி புகழ் ‘ சுந்தா ‘ சுந்தரலிங்கம்,  மற்றும் எழுத்தாளர்  சோமகாந்தன், இலக்கிய அன்பர்கள் எம். ஏ. கிஸார்,  ரங்கநாதன், ஆசிரியர்கள் சிவராசா, மாணிக்கவாசகர் ஆகியோரின் இல்லங்களிலும் நடைபெறும். 

சுந்தாவின் இல்லத்தில் ஒரு பகுதியில் பேராசிரியர்கள்  மௌனகுரு – சித்திரலேகா தம்பதியரும் மற்றும் ஒரு பகுதியில் கவிஞர்கள் முருகையன் – சிவானந்தன் சகோதரர்களும் தங்கியிருந்தனர். அதனால் எமது செயற்குழுக்கூட்டங்கள் இந்த இல்லத்தில் அடிக்கடி நடப்பதற்கான வாய்ப்பு வந்தது.  முருகையன்தான் மாநாட்டு மலர் புதுமை இலக்கியத்திற்கும் தொகுப்பாசிரியராக இருந்தார்.  இக்கூட்டங்களுக்கெல்லாம் சென்று இலக்கிய செய்திகளை எழுதி மல்லிகைக்கும்  அனுப்புவேன்.  ஒருதடவை சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தில் நடந்த பூரணி காலாண்டிதழின் விமர்சன அரங்கிற்கும் சென்று நான் எழுதிய இலக்கிய மடல் பூரணியில் வெளியானது.  

இங்குதான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்திருந்த எச்.எம். பி. மொகிதீனை முதல் முதலில் சந்தித்தேன். அவர் 1971  ஏப்ரில் கிளர்ச்சி காலத்தில் கொரியாவின் கிம் – இல்சுங்கின் புரட்சிகர நூல்களை தமிழில் மொழிபெயர்த்த குற்றத்திற்காக ஶ்ரீமாவின் அரசினால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.  


வீரகேசரியில் சமூகம், அரசியல் சார்ந்த செய்திகளையும் இலக்கிய இதழ்களில் கலை, இலக்கியம் தொடர்பான செய்திகளையும் எழுதி எழுதி பயிற்சி பெற்றமையினால், எனக்கு News இற்கும் Views வித்தியாசம் தெரிந்தது.  ஒரு சமயம் எங்கள் ஊரில் நடந்த பாரதி விழாவுக்கு எச். எம்.பி. மொகிதீன் , இலக்கிய நண்பர் எம். ஶ்ரீபதி,  இலக்கியவாதியும் சட்டத்தரணியுமான சகுந்தலா சிவசுப்பிரமணியம் ஆகியோரை அழைத்திருந்தேன். நாமெல்லோரும் முற்போக்கு இலக்கிய முகாமைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தமையால், அக்காலப்பகுதியில் சுதந்திரன் இதழில், அதன் ஆசிரியர் கோவை மகேசனும்  எமக்கு எதிராக விஷம் கக்கிவந்தார்.  

உண்மைக்குப்புறம்பான விசமச்செய்திகளையும் வெளியிட்டார். எச். எம்.பி. மொகிதீன் எங்கள் பாரதிவிழாவில்  பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருந்து  மேற்கோள் காண்பித்து உரையாற்றியபோது,   “….பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான். ‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப் பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர, நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய், ‘என்ன கொடுமையிது’ வென்று பார்த்திருந்தார்.  ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள். 

விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப்


புரத்தினிலே சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?.... “ என்ற வரிகளையும் குறிப்பிட்டார். இதனை யாரோ சதிகாரர்கள் திரித்து சுதந்திரன் மகேசனிடம் கூறியிருக்கிறார்கள்.  

“ தமிழர்களை மொகிதீன் நாய்கள் என்று விளித்துப்பேசிவிட்டார்  “  என்று சுதந்திரனில் செய்தி வருகிறது. ஊடகதர்மம்  அன்றும் இன்றும் இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது.  இவ்வாறு கிண்டி களியெடுத்து  சுவைத்து மகிழும் ஊடகங்களை பார்த்தும்  வளர்ந்திருந்தமையால், எந்தவொரு ஊடகம் சார்ந்த கருத்தரங்கிற்கோ, பயிலரங்கிற்கோ,  செல்லாமல்,  வாசித்து வாசித்தே  என்னை வளர்த்துக்கொண்டேன்.  

எங்கள் ஊரில் மாநகர சபை நூலகம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் அப்போது அமைந்திருந்தது.  மும்மொழிப்பத்திரிகைகளும் தமிழக கல்கி, ஆனந்த விகடன், கலைமகள் முதலான இதழ்களும் அங்கு வரும்.  தமிழக இதழ்களிலும்  வீரகேசரி, தினகரனிலும் பல தொடர்கதைகளை இங்குதான் படித்தேன். இந்த நூலகத்திலிருந்துதான் அறிஞர் மு. வரதராசனின்  நெஞ்சில் ஒரு முள், பெற்றமனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு, அல்லி, அகல் விளக்கு, முதலான நாவல்கள் அனைத்தையும் படித்து முடித்தேன். 

எனது தங்கை ஜெயந்திக்கும், மச்சாள் தேவசேனாவுக்கும் படிக்க எடுத்துவந்துகொடுத்தேன். எனது


தங்கை மு.வ. வின் அபிமான வாசகியாகி, அவருக்கு கடிதமும் எழுதினாள். அவரும் பதில் எழுதினார். இன்றுவரையில் அந்தக்கடிதத்தை எனது தங்கை பொக்கிஷமாக காத்துவருகிறாள். தற்போது எங்கள் ஊரில் அறநெறிப்பாடசாலையில் சுமார் முந்நூறு குழந்தைகளின் அதிபராகவும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு பயிற்சி தரும் ஆசிரியையாகவும் பணியாற்றுகிறாள்.  மச்சாள் தேவசேனா,  தேவி என்ற  புனைபெயரில் மல்லிகை, பூரணி, புதுயுகம் ஆகிய இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதினார். 

இவர் 1975 இல் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த பின்னர் அய்ரோப்பிய நாடுகளில் நடந்த இலக்கிய சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டார். மல்லிகை  ஆண்டுமலர் வெளிவரும்போது, அதில் மல்லிகை ஓராண்டு மதிப்பாய்வு என்ற தலைப்பில், அதற்கு முதல் வருடம்  வெளியான அனைத்து மல்லிகை இதழ்கள் பற்றிய ஆய்வுகளை பதிவுசெய்தார். கொழும்பு காலிமுகத்தில் வீதியை அகற்றும் பணியில்                                ( Territorial Civil Engineering Organization ) தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை தற்காலிகமானதுதான் என்பது  தெரிந்தும்,  வேறு வேலைகளுக்கு முயற்சி செய்யாமல், நேரம்கிடைக்கும்போதெல்லாம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளிலும், மல்லிகை ஜீவா கொழும்பு வரும் வேளைகளில், அவருடன் சுற்றுவதிலும் நேரத்தை செலவிட்டேன். 

போதிய வருமானம் கிட்டாமல் , நிறைய அனுபவங்களைத்தான் சம்பாதிக்கமுடிந்தது. காலி வீதி அகற்றும் பணி ஒரு வருடகாலத்தில் முடிந்தது.  அமைச்சர்களின் வாகனங்கள் அதில் முதல் தடவையாக பயணித்து, அந்த வீதியின் வெள்ளோட்டம் நிகழ்ந்தது. வாகனங்கள், கோயில் தேர், ரதங்களுக்கு மாத்திரம்தான் வெள்ளோட்டம் என்பதில்லையே..! அத்துடன் அங்கிருந்து அனைவரும் விடைபெற்றோம்.  

சுதந்திர சதுக்கத்தில் ஒரு வீதியை அமைக்கும் பணி வந்தது. அதனையும் குறுகிய காலத்தில் முடித்தோம். ஒரு நாள் எமது மேலதிகாரிகள் வந்து,  “  இனி எப்போது எங்கே இதுபோன்ற வீதி நிர்மாணப்பணிகள் வருமோ தெரியாது. வந்தால் தகவல் தெரிவிக்கின்றோம் “   என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்கள். 

அந்தத் தொழிலாளர்கள் என்னுடன் மிகவும் சிநேகபூர்வமாக சகோதர வாஞ்சையுடன் பழகியவர்கள்.  சில சமயங்களில் பஸ் பயணத்திற்கு பணம் தட்டுப்பாடாக இருந்தால் நாம் பரஸ்பரம் கடனாகவும் பரிமாறிக்கொள்வோம். அந்த தமிழ் – சிங்கள தொழிலாளர்களிடமிருந்து விடைபெறும்போது கண்ணீரையும் பரிமாறிக்கொண்டோம்.  

இப்போதும் இலங்கை செல்லும்போது, நாம் அன்று மழையில் நனைந்தும் வெய்யிலில் காய்ந்தும் அமைத்த காலிமுக வீதியை கடக்கும்வேளையில்  பழைய நினைவுகள் மனதில் காட்சிகளாக சஞ்சரிக்கும்.  பெருமூச்சும் உதிரும். அந்தத் திடலில் வருடாந்தம் நடக்கும்  சுதந்திர தினக்கொண்டாட்டம் மற்றும் எதிரணியினரின் ஆர்ப்பாட்டக் கூட்டங்களை தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து காணொளி ஊடாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். 

எமது தொழிலாளர்களால்  அமைக்கப்பட்ட  அகலமான   காலி வீதியின் அடியில் உறங்கும்  கருங்கற்களில்  அவர்கள் சிந்திய வியர்வையும்  இரத்தமும்  மூச்சுக்காற்றும்  இரண்டறக் கலந்திருக்கிறது.    வாகனங்கள் அவற்றின் மீது விரைந்துகொண்டிருக்கின்றன. ஒருநாள் சேர் ஏர்ணஸ்ட் டீ. சில்வா வீதியில் அமைந்த சோவியத்தூதரகத்தின் தகவல் பிரிவு அமைந்த  மாடி இல்லத்தில் அங்கு பணியாற்றிய எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனை பார்க்கச்சென்றேன். அங்குதான் எழுத்தாளர் லத்தீஃப், மு. கனகராஜன்,  இராஜகுலேந்திரன்,  பெரி. சண்முகநாதன், ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரும் பணியாற்றினர். 

சிங்கள கலை, இலக்கியவாதி சுமித்ரா ராகுபத்தவும் இங்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.  அந்தச்சகோதரி என்னை M.P  என்றுதான் பெயர் சூட்டி அழைத்தார். எனது MURUGA POOPATHY என்ற பெயரை அவர்  சுருக்கியிருந்தார்.  அவர் சில சிங்கள திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் வசனம் எழுதியிருப்பவர்.  வீடமைப்பு  நிர்மாணத்தறை அமைச்சில்  பிரதி ஆணையாளராகவும் பணியாற்றியவர்.  பின்னாளில் அவுஸ்திரேலியா வந்து படித்து கலாநிதிப்பட்டமும் பெற்றார்.  குறிப்பிட்ட சோவியத் தகவல் பிரிவு ( நவஸ்தி) அமைந்த அந்த இல்லம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது.  

அதன் உரிமையாளர் லலிதா ராஜபக்ஷவின் வீடு இடப்பக்கத்திலும்,  வலது பக்கத்தில் யாழ்ப்பாணம் எம்.பி.யாகவிருந்த தமிழரசுக்கட்சியைச்சேர்ந்த  ஸி. எக்ஸ். மார்டினின் இல்லமும் இருந்தது.  இவ்வாறு தலைநகரில் தமிழரும் சிங்களவரும் அருகருகே வாழ்ந்த ஒரு காலம் முன்பிருந்தது. 

மார்ட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய நாவல் திரைப்படமானபோது அதன் இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் படத்தின் இறுதிக்காட்சிகளை சோவியத்தவல் பிரிவு அமைந்த இந்த இல்லத்தில்தான் படமாக்கினார்.  லலிதா ராஜபக்ஷவும் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தவர். அவரது இல்லத்திலும் சில சிங்களப்படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் மிக்க அவ்விடத்துடனான உறவு 1986 ஆம் ஆண்டு இறுதிவரையில்  எனக்கு நீடித்திருந்தது.  1974 இல்  காலிமுகத்திடலில் வேலை இழந்தவுடன் பிரேம்ஜி ஞானசுந்தரனிடம்தான் முதலில் சென்றேன். அவரது மனைவி கமலியும் இங்கு தட்டச்சாளராக பணியிலிருந்தார்.  

எனது முகத்திலிருந்த சோர்வைக்கண்டதும் பிரேம்ஜி  விசாரித்தார். வேலை இழந்த தகவலைச்  சொன்னேன்.  எனது  தோளை  அணைத்துக்கொண்டு  வெளியே அழைத்துவந்தார்.   “ நாளை முதல் இங்கே வாரும். உமக்கு ஒரு தொழில் காத்திருக்கிறது. 

 “ என்றார்.  “ என்ன வேலை..?  “   “ எமது சங்கம் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை மீளவும் இயங்கவைக்கப்போகிறது. அதற்கு ஒரு முழுநேர ஊழியர் தேவை.  நூல்களை பதிப்பிக்கவிருக்கின்றோம்.  உம்மால் நாம் வெளியிடும் நூல்களை ஒப்புநோக்கி செம்மைப்படுத்தவும் முடியும்.  வாரும். வந்து இணைந்துகொள்ளும்  “ என்றார். எந்த நேரத்தில் அவர் எனக்கு அவ்வாறு சொன்னாரோ…..?  அன்றிலிருந்து என்னுடன் விதி வேறுவிதமாக விளையாடத் தொடங்கியது. விதியை நம்புங்கள். அது உங்கள் வாழ்வில்  நன்றாக விளையடும்.  வாழ்க்கையை திசை திருப்பும். எழுச்சியும் தரும் வீழ்ச்சியும் தரும்.   ( தொடரும் )  



No comments: