கடந்த 2019 ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் வேலூர் காட்பாடியில் நின்றேன். அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீதியோரத்தில் காணப்பட்ட சுவரொட்டியைப்பார்த்து அதிசயித்தேன்.வழக்கமாக தமிழகமெங்கும் அரசியல் தலைவர்களினது படங்களும் நாளைய முதல்வர் கனவில் வாழும் நட்சத்திர நடிகர்களின் படங்களும்தான் சுவர்களை அலங்கரிக்கும். ஆனால், நான் அன்று பார்த்த சுவரொட்டி காதலர் தினத்தை கடுமையாக கண்டித்துவிமர்சனம்செய்திருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் (T.N.T.J) என்ற இயக்கத்தின் பெயரில் அதன் தொலைபேசி தொடர்பிலக்கத்துடன் அந்தச்சுவரொட்டியின் வாசகங்கள் தமிழகத்தின் சில அரசியல் தலைவர்களின் பேச்சையே உயர்த்தி மதிப்பிடும் அளவுக்கு தாழ்ந்திருந்தது! " நாக்கை வெட்டுவோம் - நாக்கை அறுப்போம் " என்றெல்லாம் வீராவேச வசனம் பேசும் தலைவர்களை கண்ட தமிழகம் அல்லவா..? வாய்பேசாத சுவரொட்டிகள் காதலர் தினம் பற்றி என்ன சொல்கின்றன…? என்பதை இந்தப்பதிவில் இணைந்துள்ள சுவரொட்டியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். சரி, வாசகர் முற்றத்திற்கும் இந்த காதலர் தினத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
விடயத்திற்கு வருகின்றேன். 1998 ஆம் ஆண்டும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதியும் காதலர் தினம் வந்தது. காதலர்கள் சந்தித்து மலரும் முத்தமும் பரிமாறிக்கொள்வதற்கு தயாராகியிருந்த வேளையில் தமிழ்நாடு கோயம்புத்தூரில் நடந்த தொடர்குண்டுவெடிப்புகள் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா..? அன்றைய தினம் கோயம்புத்தூரைச்சேர்ந்த பதினெட்டே வயது நிரம்பிய இளவட்டம் தனது நண்பர்களுடன் காதலர் தின வேடிக்கையை கண்டுகளிக்கச்சென்று, குண்டுவெடி ஓசைகேட்டு, தலைதெறிக்க ஓடிவந்தது. நண்பர்களிடம் காதலர் தின அனுபவங்களை கேட்கவோ, சொல்லவோ சென்றிருக்கும் அந்த 18 வயது காளை, ஆளைவிட்டால் போதும், காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று உயிர் தப்பிவந்தது.
அவ்வாறு வந்தவரின் வாசிப்பு அனுபவம் பற்றியதுதான் இந்தப்பதிவு. இங்கே நான் அவரது இளமைக்கால காதல் அனுபவங்களை பதிவுசெய்வேன் என்று எதிர்பார்க்கவேண்டாம். நானும் அவரிடம் அதுபற்றிக் கேட்கவில்லை. அந்தரங்கம் புனிதமானது அல்லவா..? இந்தப்பதிவில் வரும் கோயம்புத்தூரைச்சேர்ந்த சுதன் பாலன் எனக்கு மெல்பன் வாசகர் வட்டத்தில் அறிமுகமானவர். நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுபவர்கள். அவ்வாறு பல இலக்கிய நண்பர்களை எனக்கு நெருக்கமாக்கியது மெல்பன் வாசகர் வட்டம்.
அதற்காக அதனை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த தமிழக நண்பர் திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும், தங்கு தடையின்றி மாதந்தோறும் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளை, கொரொனோ காலத்திற்கு முன்பும் பின்பும் சீராக ஒருங்கிணைத்துவரும் இலக்கிய ஆர்வலர் திருமதி சாந்தி சிவக்குமாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். வாசகர் சுதன் பாலன் பிறந்திருக்கும் கோயம்புத்தூர் பல துறைகளில் மிகவும் பிரபல்யமானது. பல கலை, இலக்கிய ஆளுமைகளின் பிறப்பிடம்.
அத்துடன் அங்கு 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பினாலும் உலகின் கவனத்தை அதிர்ச்சியோடு ஈர்த்தது. சுதன்பாலன் அன்றைய தினம் தாம் வெளியே சென்று வீடு திரும்பிய கதையை 22 வருடங்களின் பின்னர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார். அன்று காதலர் தினம் அல்லவா..? ஆனல், அன்றைய தினம் அவர் காதல் உணர்வுகளோடு சிரித்தவாறு உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடியிருக்கவே மாட்டார் என்பதை மாத்திரம் உறுதியாகச்சொல்ல முடியும். அன்றைய தினம் ப.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி கோயம்புத்தூரில் உக்கடம் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு வரவிருந்தார்.
ஆனால், அவர் வரவில்லை. அந்தக்கூட்டம் நடக்கவிருந்த இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலிருந்து வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் கோயம்புத்தூரில் வெவ்வேறு இடங்களிலும் தொடர்ந்து வெடித்தது. குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அந்த சம்பவத்தை விபரித்த சுதன் பாலன், அது நிகழ்ந்து சுமார் நான்கு ஆண்டுகளில் திரைகடல் ஓடி திரவியம் தேடுவதற்காக கடல் கடந்தார். முதலில் இந்தோனேசியா, பின்னர் சிங்கப்பூர் என்று அலைந்துழன்றுவிட்டு, கடந்த 2008 ஆம் ஆண்டு கடல் சூழந்த கண்டமாம் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.
கோயம்புத்தூரில் ஆலைகளுக்கும் இயந்திரங்களின் தொடர் ஓசை கேட்கும் தொழிற்சாலைகளுக்கும் குறைவில்லை. அந்த ஓசைகளைக் கேட்டு வளர்ந்திருக்கும் சுதனிடத்தில் இலக்கிய ஓசை அவர் வீட்டிலிருந்த இரும்புப்பெட்டியிலிருந்துதான் கேட்டிருக்கிறது. அது பற்றி இவ்வாறு சொன்னார்: எனது தொழில் இயந்திரங்களிடம் பழகுதல் - இயக்குதல் என்றும் கூறலாம்.
எனது வீட்டைச் சுற்றி இரும்பு மற்றும் உலோகங்கள் உருக்கி வார்க்கும் ஆலைகளும் , இயந்திர பட்டறைகளும் இருந்தன. நான் நடக்கும் தெருவெல்லாம் தொழிற்சாலைகளும் இருந்ததனால் எனக்கு என்னெவோ இயந்திரங்களிடம் எப்பொழுதும் காதல்.
எனது வாசிப்பு அனுபவம் எங்கள் வீட்டு இரும்பு பெட்டியில் இருந்து தொடங்கியது. அதில்தான் இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், விக்கிரமாதிதன் கதைகள் ஆகிய புத்தகங்கள் இருக்கும். வீட்டுக்கு ஒரே பிள்ளையான எனக்கு பள்ளி விடுமுறைகளில் விக்கிரமாதித்தன்தான் எனக்கு பேச்சுத்துனை.
எட்டாம் வகுப்பு முதல் பள்ளி வகுப்பறைகளில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன். பள்ளி விடுமுறைகளில் நானும் என் நண்பனும் பழைய புத்தகக் கடையில் எடைக்கு வாங்கிய ராஜேஷ் குமாரின் நாவல்களை படிப்போம். கல்லூரிப் படித்து முடித்து வேலைக்கு போன பிறகு அதிகம் வாசிக்கவில்லை.
இடையில் சில ஆங்கில நாவல்கள் படித்தேன். அதில் ஜெப்ரி ஆர்ச்சரின் As the Crow Flies மிகவும் பிடிக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு மெல்பனில் என்னை வாசிக்கத் தூண்டியது இங்கிருக்கும் நண்பர் ராஜாவின் வீட்டில் இருந்த புத்தகங்கள் தான். கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
அதனை ராஜாவின் வீட்டில் கண்ட போது வாசிக்கும் ஆர்வம் வந்தது. “ இவ்வாறு சுதன் பாலன் சொல்லிக்கொண்டு வந்தபோது, பல எழுத்தாளர்கள், வாசகர்கள் இந்த பொன்னியின் செல்வனை கடந்து வந்திருப்பதை பற்றி, அதனை இதுவரையில் படிக்காதிருக்கும் நான், எனது மனைவியிடம் சொன்னபோது, “ கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்காத நீங்கள் எல்லாம் எழுத்தாளரா..? “ என்று போட்டாலே ஒரு போடு! “ ஆமாம், அதனால்தான் நான் எழுத்தாளனாக இருக்கிறேன் “ என்று திருப்பி ஒரு போடு போட்டேன்.
சுந்தரராமசாமி தனது ஜேஜே. சில குறிப்புகள் நாவலில் ஓரிடத்தில் குறிப்பிடுவார்: “ உங்கள் சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா..? “ இது சுராவின் வழக்கமான அங்கதம்தான். எது எப்படியோ, தமிழ் சரித்திரக்கதைகளை வாசிக்கும் வாசகர்கள் இன்றளவும் பெருகியிருக்கிறார்கள். சரித்திரக்கதைகளை திரைப்படமாக்கும் ஆர்வமும் மணிரத்தினம் முதல் பலருக்கு அதிகரித்திருக்கிறது.
எமது இலங்கையில் பொன்னியின் செல்வனை படமாக்குவதற்கு மணிரத்தினம் ஐஸ்வர்யா ராயுடன் வரவிருந்தார். கொரோனா அதனையும் தடுத்துவிட்டது! சுதன் பாலன், தொடர்ந்தும் கணினியில் பல சரித்திர கதைகளை பதிவிரக்கம் செய்து படித்துவரும் தீவிர வாசகர்.
கல்கியின் பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவு, சிவகாமியின்சபதம் மற்றும் சாண்டில்யனின் கடல் புறா, நா.பார்த்தசாரதியின் நாவல்கள் என தொடர்ந்து சரித்திர கதைகளாக படித்து கொண்டிருந்த வேளையில்தான் மெல்பன் வாசகர் வட்டத்தில் இணைந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவரும் வாசகர் வட்டம் தற்போது இந்த கொரோனா காலத்தில் இணையவழி சந்திப்புகளின் ஊடாக வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துவருகிறது. சுதன் பாலன் மேலும் சொல்கிறார்: “ எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் திருமதி.
சாந்தி சிவக்குமார் ஆகியோரின் முயற்சியால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வாசகர் வட்டம் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தது. வாசகர் வட்டம் எனது வாசிப்பின் எல்லைகளை மாற்றி அமைத்தது என்றும் சொல்லலாம். படைப்புகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த நான், படைப்பாளிகளையும் ரசிக்கத் தொடங்கியது மெல்பன் வாசகர் வட்டத்தில் இணைந்த பிறகு தான்.
இடையில் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி மற்றும் காவல் கோட்டம் படித்தேன். மிகவும் பிடித்தது. இப்போது பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் படித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே மெல்பனில் எனது மாமனார் குறைந்தது ஐநூறு புத்தகங்களாவது தமது சேமிப்பில் வைத்திருக்கிறார். அதில் கொஞ்சமாவது படிக்க வேண்டும் என்பது ஆசை.
வாசிப்பு அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் நல்ல அனுபவம்தான். சுதன்பாலனுடன் உரையாடியபோது எனக்கு ஒரு விடயம் தெளிவானது. நாம் எவ்வளவு எழுதிக்குவித்தோம் என்பதை விட எத்தனை வாசகர்களை உருவாக்கினோம் என்பதுதான் மிகவும் முக்கியம். வாசகர்கள் இல்லையேல் எழுத்தாளர்களும் இல்லை ! எழுத்தாளர்கள் இல்லையேல் வாசகர்களும் இல்லை ! ---0— letchumananm@gmail.com
No comments:
Post a Comment