தேவதாசியர் - தேவதாசியர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .


இன்று தமிழரிடையே பிரபலமாக இருக்கும் பரத நாட்டிய கலை. முன்னோடியாக இருந்து அதை ஆடியவர்கள் தேவதாசி என்ற பெண்களே. இவர்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தை பெற்றிருந்தனர். இவர்களுக்கு கோயில்களின் வீதியிலேயே வீடுகள் அமைக்கப்பட்டு மானியமும் வழங்கப்பட்டது. வரி விலக்கப்பட்ட விளை நிலங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய பெண்கள் இசை நடனம் போன்ற கலைகளில் சிறந்த பயிற்சி பெற்றது மட்டும் அல்லாது கல்வி அறிவிலும் சிறந்து விளங்கினர். இவர்களே அன்று கல்வி அறிவை பெற்ற பெண்கள்.

மறுபுறத்திலே குடும்பப் பெண்கள் என்போர் கல்வி அறிவோ, கலைகளிலோ பரிச்சயம் அற்றவராகவே இருந்தனர். அத்தகைய அறிவை பெறுவது இல்லாளுக்கு அழகல்ல என கருதப்பட்டது. தேவதாசி என்பவள், தேவன் – இறைவன், தாசி – அடிமை. இவளோ இறைவனுக்கே அடிமையானவள். தேவதாசி சமூகத்தில் வயதான ஒருவர் இறைவனுக்காக அவளது கழுத்தில் தாலியை கட்டுவார். இவை யாவும் கோயிலில் இறை சன்னிதியில் நடைபெறும். அன்றிலிருந்து அவள் இறைவனின் மனைவியாகிறாள். கடவுளை தனது கணவனாக வரித்துக்கொண்டதால், இவள் என்றுமே விதவை ஆவதில்லை. அவள் நித்திய சுமங்கலி. இவள் நித்திய சுமங்கலியாக திகழ்வதால், இவள் கையால் தாலிக்கு மணி கோர்ப்பதை அன்றைய சமூகம் அதிஷ்டம் எனக் கருதியது. திருமண ஊர்வலத்தில் இவளை முன்னே செல்லும்படி செய்தனர். மொத்தத்திலே இவள் சமூகத்தில் மிக உயர் அந்தஸ்தில் வைத்து மதிக்கப்பட்டாள். இவள் இறந்தால் இறைவனுக்கு அணியப்படும் ஆடையை எடுத்துச் சென்று அவளது உடலில் போர்த்துவார்கள். அவளது இறந்த உடலை எரியூட்ட கோயில் அடுப்பிலிருந்தே கொள்ளி எடுத்துச் செல்லப்படும். இது இறைவனே அவளுக்கு கொள்ளி வைப்பதாக கொள்ளப்படுகிறது. அவளது உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது கோயில் வாசலிலே சில நிமிடங்கள் வைக்கப்படும். இது அவளது நாயகனான இறைவனிடம் இருந்து விடைபெறுவதாக கொள்ளப்பட்டது. அன்று இறைவனுக்கு துக்க நாளாக அனுட்டிக்கப்பட்டு கோயிலில் பூஜை நடைபெறாது.

தமிழக கோயில்கள் சமயத்தை வளர்க்கும் நிறுவனங்களாக மட்டும் இருக்கவில்லை. மக்களின் பொருளாதார சமூக இயக்கங்களிலும் பங்கு கொள்ளும் நிறுவனமாக கோயில் விளங்கியது என்கிறார் தென்இந்திய வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி. அரசாங்க வரிகளை கோயில்களே வசூலித்தன. கோயில்கள் வங்கி போல அமைந்து, மக்களுக்கு கடனும் கொடுத்தது வட்டியும் பெற்றது. பணம் உள்ளவரிடம் பணத்தை பெற்று வட்டியும் கொடுத்தது. இவ்வாறு பெரும் செல்வ சிறப்புடன் விளங்கிய கோயில்கள் தேவதாசியர்க்கு மானியம் கொடுத்து சிறப்புற பராமரித்ததில் வியப்பில்லை.

இறைவனையே தனது கணவனாக கொண்டு என்றுமே பூவும், பொட்டும், தாலியும் அணிந்து இப்பெண்கள் நடைமுறையில் அரசன், ஆலய தர்மகர்த்தா, நிலபிரபுக்கள், மந்திரிப் பிரதானிகள் என்போருக்கே தம்மை அர்ப்பணித்தனர். இந்த பின்னணியிலேயே 63 நாயன்மாரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் பரவையார் என்ற தேவதாசி பெண்ணில் கொண்ட காதலை அவளுக்கு எடுத்துச் சொல்ல எல்லாம் வல்ல இறைவனின் துணையை நாடினார் போலும்.

கோயிலை மையமாக கொண்ட கிராமிய அமைப்பு அன்னியர் ஆட்சியின் விளைவாக தகர்க்கப்பட்டது. ஆலயங்களின் நிலம் அரசமயமாக்கப்பட்டது. அதனால் கோயில்கள் வருவாயை இழந்தன. மேற்கத்திய கல்வியை கற்றோர் கிறிஸ்தவ மத பாதிப்பால் கோயில்களிலே ஆடுவது பக்தியை மாசுபடுத்தும் செயல், அதனால் கோயில்களிலே ஆடல் நிறுத்தப்படவேண்டும் எனவும், கோயிலின் புனித தன்மைக்கு மாசு கற்பிக்கிறது எனவும் பிரசாரம் செய்தனர்.

இந்திய ஜாதி அடிப்படையிலான சமுதாயத்தில் தாசி பெண்ணை ஆசை நாயகியாக வைத்திருப்பது சமூகத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது. ஒரு தாசியை ஆசை நாயகியாக வைத்திருப்பது சமூகத்தில் ஒரு அந்தஸ்தாகவே கருதப்பட்டது. கலை, கல்வி அறிவு அற்ற மனைவி வீட்டை பராமரிக்க, லலிதகலை, கல்வி கேள்வியில் சிறந்து விளங்கும் தேவதாசிகள் உறவு அவர்களின் ஆத்ம திருப்திக்காகவே என ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தேவதாசி மூலம் இவர்களுக்கு பிறந்த குழந்தைகட்கு இவர்கள் அதிகார பூர்வ தந்தையாகமாட்டார்கள். சட்டபூர்வமாக அந்த குழந்தைக்கு இவர்கள் பொறுப்பல்ல. அத்துடன் இவர்கள் வாரிசு என்ற அந்தஸ்தும் அந்த குழந்தைக்கு கிடையாது. இதனால் இந்த குழந்தைகள் தாயின் பெயரிலேயே சட்டபூர்வமாக பதிவு பெறுவார்கள். தேவதாசிக்கோ எல்லாம்வல்ல இறைவனே கணவன். அதனால் அந்த பொறுப்பை பரம்பொருளிடம் விட்டுவிடுவார்கள் போலும் இந்த தந்தைகள்.

இப்படியான சமூக அமைப்பு இருந்தது பலநூறு ஆண்டுகட்கு முன்பல்ல. இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும் இந்த வழக்கு இருந்து வந்துள்ளது. இன்று எமக்கு தெரிந்த பிரபலங்களும் இந்த பின்னணியில் பிறந்தவர்களே. இங்கு நான் அவர்கள் பெயரை குறிப்பிடுவது, எங்கள் பலரின் அன்புக்கும் மதிப்புக்கும் உட்பட்டவர்களை இழிவு படுத்தும் எண்ணத்தில் அல்ல. இந்த சமூக பின்னணியை எடுத்துக் கூறுவதற்காகவே. தமது குரலால் யாவரின் மதிப்பை பெற்ற எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, அவரின் முழுப்பெயர் மதுரை சுந்தரவடிவு சுப்புலக்ஷ்மி. அதேபோன்றே பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் முழுப் பெயர் மட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி. அபினய சரஸ்வதி என யாவராலும் போற்றப்பட்ட பாலசரஸ்வதி அம்மையார் மத்திய அரசில் நிதி அமைச்சராக இருந்த சண்முகம் செட்டியாரின் ஆசை நாயகியே.

இந்த சமூக அமைப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு அதற்கு நிவாரணம் தேட துடித்தார் ஒரு அம்மையார், டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி. இவர் பல ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக பல சமூக நல திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்தியவர். அதில் ஒன்றாக தாசி ஒழிப்பு திட்டத்தை முன்வைத்தார். இவரது விடா முயற்சியால் இந்திய பாராளுமன்றத்திலே பெண் ஒருத்தி தேவதாசி என கோயிலில் தாலி கட்டுவதும் அதன் அடியாக அவள் ஆசை நாயகியாக இருப்பதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது. இன்று இந்த சமுதாய அமைப்பு ஒரு வரலாற்று கதையாகிவிட்டது.

பல நூறு ஆண்டுகளாக இவர்களால் வளர்க்கப்பட்ட ஆடற்கலை வடிவமே தமிழகத்தின் ஆடல் வடிவம் என உலகளாவ போற்றப்படும் பரதநாட்டியம். இவர்கள் ஆடும்பொழுது இந்த ஆடல் சதிர், சின்னமேளம் என வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட கால விழிப்புணர்ச்சியால் தேசிய கலைகளை அறியவேண்டும் பயிலவேண்டும் என்ற உத்வேகமே தாசி சமூகம் அல்லாதோரையும் இதை கற்று ஆட தூண்டியது. தாம் ஆடுவது தாசியாட்டம், சதிர், சின்னமேளம் அல்ல என்பதற்காகவே அதே ஆடலை பெயர் மாற்றம் செய்தனர். அவ்வாறு அவர்கள் செய்து வரவேற்க வேண்டியதே. ஆனால் ஆடவந்த புது வர்க்கமோ அவர்கள் பாரம்பரிய ஆடலை சீரழித்தனர். அவர்கள் பரத்தையர் என்றெல்லாம் வேண்டாத பழியை சுமத்துவது வருந்தத்தக்கதே. அதற்கு மேலும் போய் அழியும் நிலையில் இருந்த ஆடலை தாம் பாதுகாத்ததாகவும் கதை கட்டி திரிகிறார்கள் இந்த உயரிகள்.

 

No comments: