“கொறோனா வாய்திறந்தால்….. கொட்டிடுமே கவிதை” -- கேட்டிடுவீர்!


…………………….. பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி 


 என்பெயரைக் கேட்டதுவும்  மரணபயம் கண்டீரோ?  


பழந்தமிழன் வாழ்க்கைமுறை  பழக்கவழக் கங்களையும் 

பலன்தருநற் பண்பட்ட விழுமியங்கள் பலதினையும் 

இழந்திடாது ஓம்பிடுவீர்! ஈடிணையி லாதவற்றை 

எந்நாட்டு மக்களெலாம் இதமாகப் பின்பற்றிப் 


பழக்கமதாய் நடைமுறையில் பகலிரவாய்ச்  

செயவைக்க பார்த்திருந்து மறுபடியும் பலநாட்டிற் புகுந்துள்ளேன்! 

மழமழவென் றேபெருகி மன்பதையை அழிக்கமுன்னர் 

மக்களேநீர் பழந்தமிழன் வாழ்வியலைக் கடைப்பிடிப்பீர்!    


இயற்கையை அழித்திட்டு எழிற்சுற்றம் பாழாக்கி   

இதமான காற்றினையே மாசுபடச் செய்திட்டு 

செயற்கையிலே வாழ்ந்திட்டு தேடியே’போர்’ ‘கொலைகொள்ளை’ 

செய்துவரும் மானிடரே செப்புவதைக் கேட்டிடுவீர்!..........  


பேய்போலப் புலப்படாத் தோற்றமுடன் உலகமெங்கும் 

பெருகிவிட்ட என்குலத்திற்(கு) இனியபெயர் தேர்ந்தெடுத்து 

‘நோயாகப் பெருமளவில் நொடியிற்பர வக்கண்டு  

நொந்துநல் லோரைதனில் “கொறோனா’ வெனப் பெயரிட்டார்   


ஊனக்கண் கொண்டென்னை ஒருவருமே கண்டிலரே! 

ஞானக்கண் கொண்டுசைவ ஞானியரும் என்றைக்கோ 

வானத்திற் சுற்றிவரும் வடிவங்கள் அறிந்தபோதே 

வகைவகையாய் வரவிருக்கும் ‘வைறஸ்’சையும் அறிந்தாரே! 


மனிதகுலம் இயற்கைதனை மண்ணாக்கி மகிழ்கிறதே! 

புனிதமிகு தென்றலுமே புழுதியுடன் வீசிடுதே! 

அநியாய மாயுயிர்கள் பலவழியால் இறக்கிறதே! 

இனிப்பொறுக்க முடியாது பழிவாங்க நான்வந்தேன்! 


அன்றுவாழ்ந்த தமிழர்தம் அறவாழ்க்கை நானறிவேன்! 

வென்றவர்கள் ஞானறிவால் மேலோங்கி இருந்தார்கள் 

அன்றென்போர் அவர்பக்கம் அணுகிடவோ அஞ்சிநின்றோம்! 

இன்றுலகின் அவலநிலை கண்டஞ்சாது வந்திட்டேன்!   


கண்டவுடன்; கைகுலுக்கி; இறுகணைத்தல் அன்றில்லை! 

கருணையொடு எட்டிநின்று கைகூப்ப நான்கண்டேன்! 

கொண்டவளை  யன்றிப்பிற மாதர்கொஞ்சக் காணவிலை 

குடும்பமென்றால் ஒருவனுக்கு ஒருத்தியென வாழக்கண்டேன்!  


மருந்தெனவே உணவுதனை உண்டுவந்த காலமது! 

மறந்திடாது கையலம்பி இறைதொழுது உண்டார்கள்! 

விருந்தினர்க்கும் செம்பினில்நீர் கொடுத்துக்கை அலம்பவைத்து 

விதம்விதமாய் அறுசுவையோ டமுதளிக்க நான்கண்டேன்.   

 

ருசியான குத்தரிசி குரக்கன்சம் பாதினையும் 

புரதமிகு தானியமும் இஞ்சிமஞ்சள் மிளகுசுக்கும் 

புசித்துவந்தார் நானறிவேன்! போற்றுகிறேன் அவர்களன்று 

பசித்திடமுன் உண்டிடாது பலன்கண்டார் மெச்சிநின்றேன்!   


கோலமிட்டு மஞ்சள்நீர் தெளிப்பதொடு கோமயத்தால் 

குடிசைநிலம் மெழுகுவதின் சிறப்பையெலாம் கண்டுவந்தேன்!   

காலணியை வெளிவிட்டுக் காலலம்பி வீட்டிற்குள்! 

காலடிவைத் துச்சுத்தம் காத்தவர்கள் தமிழரன்றோ?  


ஒருவருக்குத் தொற்றுநோய் உண்டென்று கண்டவுடன் 

ஓரறையில் தனிமைப் படுத்திவைத்துப் பராமரிப்பர்! 

திரைமறைவில் வேப்பமிலைக்; கொப்பதனைத் தொங்விட்டு 

தினம்மஞ்சள் நீர்தெளிப்பர் தீபதூபம் காட்டிடுவர்! 


முற்றமதில் வேம்பிருக்கும் மூலையிலோர் துளசிமாடம் 

பெற்றுநின்றார் போதுமான பிராணவாயு அப்பாடா! 

சுற்றுப்புறத் தூய்மையொடு இயற்கைவளம் பேணிவந்தார்! 

கற்றவற்றை நடைமுறையிற் செயற்படுத்திப் பயன்பெற்றார்.  

  

தொன்றுதொட்டுத் தமிழரோம்பி வந்தநல்ல பழக்கமெலாம் 

நன்றுநன்று உலகமக்காள் நாள்தோறும் கடைப்பிடிப்பீர்”  

என்றுநானும் நினைத்தவுடன் எங்குமதை உலகெங்கும் 

இன்றுகடைப்  பிடிக்கின்றார்  இனியதென்றுந் தொடரட்டும்!   


பாடசாலை தொழிற்சாலை பலவற்றை மூடவைத்தேன் 

பலரின்வாய் மூக்கிற்குக் ‘கடிவாளம்’ போட்டுவைத்தேன் 

கூடிப்பலர் பேசுவதும் கொஞ்சுவதும் கைகுலுக்கிக் 

கூத்தாடும் போக்கெல்லாம் தவிர்த்திடவே ஆணையிட்டேன்!  


காரசார மான’ரசம்’ காசினியில் மணக்கவைத்தேன் 

கசந்திடுமெம் மஞ்சளிலே தேநீரும் போடவைத்தேன்! 

ஆரவாரம் இல்லாது வீட்டிலிருந்து வேலைசெய்து 

அன்போடு குடும்பத்தைப் பார்த்திருக்க வழிசமைத்தேன்!    


‘கலகத்தைக் கடும்போரைக்’  கைவிட்டு ஒற்றுமையாய்க் 

காசினியிற் சமாதானம் நிலைக்கவழி சமைக்காது 

உலகத்து நாடெல்லாம் என்னையின்று ஒழிப்பதிலே 

ஒன்றுபட்டு  ஒற்றுமையாய் ஓலமிடக் காண்கின்றேன்!   


‘பாரதி’லே பலநாட்டிற்  பவனிவரும் உயிர்க்கொலியாய்   

‘பாரதி’ர்ந்து ஓலமிடப் பேரழிவு செய்கின்றேன்! 

‘பாரதி’யின் அருள்பெற்றுப் பாவெழுதும் பாவலனாம் 

‘பாரதி’யைக் கொண்டின்று பாவெழுதச் செய்துவிட்டேன்!   


உலகத்தில் மனிதரெலாம் ஒற்றுமையாய் அன்பென்னும் 

ஒருராகம் பாடிடாது ஒப்பரிய இயற்கையொடு 

பலவழியில் ஒன்றுபடாப் பாழ்நிலையைக் கண்டேனெனில் 

பலவைறஸ் கூட்டிவந்து பலியெடுப்பேன் யாக்கிரதை!

  ……………. இப்படிக்கு உயிர்க்கொல்லி “கொறோனா”  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

இவற்றை வெல்ல என்ன செய்வோம்??  

பிறைசூடி பாகத்தாள் பெய்தளித்த ஞானப்பால் 

குறையாது பருகித்தேன் தமிழில்மந் திரமாக 

மறைஞான சம்பந்தன்  அருளியதிரு முறைகளைநாம் 

முறையாக ஓதிவரக் கொறோனாவும் விலகிடுமே!   


மறுபிறவி பிறந்திடாதோர் முத்திநிலை அடைந்துய்யும் வகைதெரிவீர்! 

சிவத்தொண்டு சிவத்தியானம் இயற்றிவீர்! 

நெறிநின்று இருக்கும்வரை நீவிரிமைப் பொழுதெலாம் 

நெஞ்சிலுறை பரம்பொருளை நினைந்தேத்தி வாழ்ந்திடுவீர்! No comments: