விஜயதசமி நாளை
நவராத்திரி வழிபாட்டின் இறுதியான விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது. துர்க்கை, ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10-ம் நாளில் அவனை வெற்றி கொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி ஆகும்.
மகிஷன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மன், அவன் முன்பாக தோன்றினார். பிரம்மனிடம், “இறப்பில்லாத வாழ்வு அருளுங்கள்” என்று வேண்டினான் மகிஷன்.
பிறந்தவர்களுக்கு இறப்பு நிச்சயம் என்பதால் வேறு வரம் கேட்கும்படி கூறினார் பிரம்மன். உடனே மகிஷன், “எனக்கு பெண்ணால் மட்டுமே அழிவு வர வேண்டும்” என்று கேட்டான். அந்த வரத்தையே அருளி மறைந்தார் பிரம்மன்.
பராக்கிரமமும், அசுர பலமும் பெற்ற தனக்கு மென்மை குணம் படைத்த பெண்களால் எந்த ஆபத்தும் வராது என்பதால் மகிழ்ச்சியில் திளைத்தான் மகிஷன். அந்த மகிழ்ச்சி மற்றவர்களை துன்புறுத்தும் அளவுக்கு வளர்ந்தது. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரையும் ஆட்டிப் படைத்தான். அவனது தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.
விஷ்ணுவோ, “மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம். எனவே நீங்கள் பராசக்தியிடம் சென்று உங்கள் வேண்டுதலை முன்வையுங்கள்” என்று கூறினார்.
அதன்படியே அவர்கள் அனைவரும் சக்தியை நோக்கி வழிபாடு செய்தனர். இவர்கள் முன்பு தோன்றிய அன்னை, தேவர்களையும் முனிவர்களையும் காக்கும் பொருட்டு அசுரனுடன் போருக்கு தயாரானாள். சிவபெருமான் அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு தன்னுடைய சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும் வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்கு புறப்பட்டாள்.
போர்க்களம் புகுந்ததும் தன் முன்பாக நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி அவன் மனத்தை நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. தீமை எப்போதும் நல்லதை நாடாது. அது தீமையின் பக்கமே தீவிரமாக நிற்கும் என்பதை புரிந்து கொண்ட அன்னை, அசுரனுடன் கடுமையாக போரிட்டாள். 9 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போரில் அசுரனை எதுவும் செய்ய முடியவில்லை. 10-ம் நாளில் அசுரனை வதம் செய்தாள் அன்னை.
அந்தப் போரை தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் மேல் உலகில் இருந்து பொம்மை போல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்வை சொல்லும் வகையில்தான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று உள்ளது.
கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசுரனை அழித்து அன்னை வெற்றிபெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடுகின்றனர். இந்தியாவில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் அவற்றைத் தொடங்குவது நன்மை தரும். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் விஜயதசமியில் தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.
பொதுவாக கோயில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். 10-ம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரித்தானது.
நவராத்திரி நிறைவடைந்த நிலையில் இறுதி நாளான நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாவது நாள் என பொருட்படும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரித்தானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் தேவியை வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும். வட இந்தியாவில் இராவணனை இராமன் வதம் செய்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment