பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 21- பெண் தெய்வம் - சுந்தரதாஸ்

 


திரைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலம் முழுவதும் அதாவது சுமார் 25 ஆண்டுகளும் தங்குதடையின்றி படங்களை தயாரித்து சாதனை புரிந்தவர் சாண்டோ சின்னப்பதேவர் .அவ்வாறு அவர் எழுபதாம் ஆண்டு உருவாக்கிய படம் பெண்தெய்வம். அதுவரை காலமும் கதாநாயகியாகவே நடித்து வந்த பத்தினியை இந்தப் படத்தில் குடும்பத்தலைவியாக தாயாக குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் தேவர்.


குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்கும் உன்னத நிலையை அடைவதற்கும் பெற்றோரின் கவனமும் கண்டிப்பும் வழிகாட்டலும் அவசியம் இல்லை என்றால் அவர்களின் வாழ்வு குட்டிச்சுவராக்கி விடும் என்பதை உணர்த்தும் விதத்தில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. அப்துல் முத்தலிப் என்பவர் உருவாக்கிய கதைக்கு வசனங்களை எழுதியிருந்தார் ஆரூர்தாஸ்.




ஊரிலே அடியாளாக வலம் வரும் சுந்தரராஜன் தன் மகன் முத்துராமனையும் தன்னைப்போலவே பொறுப்பற்ற வனாக சிறுவயது முதல் வளர்க்கிறார். இவரின் நடவடிக்கை பிடிக்காது பத்மினி தன் மகளுடன் அவரை பிரிகிறார்.


செல்வந்தர் ஒருவருக்கு மகளை சுவீகாரம் கொடுக்கும் பத்மினி அவ் வீட்டிலேயே ஆயாவாக தங்கி மகளை வளர்க்கிறார். வளர்ந்துவிடட முத்துராமனும் லட்சுமியும் சந்தர்ப்பவசத்தால் சந்திக்கிறார்கள். இப்படி போகும் படத்தில் ஜெய்சங்கர் நாகேஷ் உதய சந்திரிகா தேங்காய் சீனிவாசன் ஆகியோரும் நடித்தனர்.படத்தில் வில்லனாக ராஜபாண்டியன் நடித்திருந்தார். உணர்ச்சிகரமான கதைக்கு பெண் தெய்வம் என்று பெயரிட்டு பத்மினியின் பண்பட்ட நடிப்பில் படத்தை தயாரித்த தேவர் இசைக்கு பி குமாரை பயன்படுத்தினார். தேவரின் ரசனைக்கேற்ப இசையமைத்திருந்தார் குமார்.



சுந்தரராஜன் லட்சுமி பத்மினி முத்துராமன் இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதையில் ஜெய்சங்கருக்கு வாய்ப்பு குறைவு முத்துராமனின் பாத்திரம் அவருக்கு பொருந்தியது தாய் வேடத்தில் பத்மினி நன்கு சோபித்தார்.


தேவரின் தம்பி திருமுகம் படத்தை இயக்கியதுடன் தொகுப்பாளராகவும் பணியாற்றி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தார்.


No comments: