எங்கள் சமயம் - தத்துவங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகிறது. தத்துவங்களை நேரடியாகச் சொன்னால் பலருக்கும் விளங்கமாட்டாது என்ற காரணத்தால் அவற்றை யாவரும் உள்ளத்தில் இருக்கும் வகையில் கதை வடிவத்தில் தந்து நிற்கிறது. எங்கள் சமயத்தில் பல புராணங்கள் இருக்கின்றன. புராணங்கள் தத்துவங்களை விளக்கும் கதை வடிவங்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். புராணக் கதைகள் பலவும் தெய்வீகம் சம்பந்தட்டே ஆக்கப்பட்டன.
ஆரம்பகாலத்தில் மக்கள் மனதில் நல்லொழுக்கத்தை , நல்ல சிந்தனையை ஏற்படுத்த பெரிதும் கைகொடுத்து நின்றன கதைகளேயாகும். கதைகள் என்பது பழைய காலந்தொட்டு பாரம்பரியச் சொத்தாகவே அமைந்து வருகிறது எனலாம். அந்தக்கதைகளில் இடம் பெறும் சம்பவங்கள் உண்மையையா பொய்யா என்று ஆராய்வது உகந்து அல்ல. ஏனென்றால் கதைகள் கற்பனையின் பெறுபேறு எனலாம். ஆனால் அந்தக் கற்பனைக்குள் பொதிந்திருக்கும் கருதான் எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்வினை எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஆணிவேராக அமைகிறது என்பதையும் கவனத்தில் இருத்தல் அவசியமாகும்.
புராணக்கதைகள் எங்களுக்குப் புகட்டும் பாடங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். புராணக்கதைகளில் தெய்வ அம்சங்களைப் புகுத்தியதற்கு முக்கிய காரணமே யாவரும் பயபக்தியுடன் நோக்குவார்கள் என்பதேயாகும். தெய்வம் என்றால்த்தான் யாவரும் சிரத்தையுடன் செயற்படுவார்கள் என்று எமது முன்னோர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை மனிதன் பூமியில் வாழும் வரை தொடர்ந்த படியேதான் இருக்கும்.
" நம்பினார்க் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் "
இது தெய்வத்தின்மீதான அசையாத நம்பிக்கை எனலாம். நம்பிக்கை என்பதே இங்கு மிகவும் முக்கியமாகும். இந்த அடிப்படையில்த்தான் எங்கள் சமயம் பலவிதமான விரதங்களைக் காட்டி நிற்கிறது.
விரதம் என்றால் என்ன ? பசித்திருப்பது. தனித்திருப்பது , விழித்திருப்பது என்றும் சொல்லப்படுகிறது. அதே வேளை மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஒரே நோக்கோடு இருப்பது என்றும் சொல்லப்படுகிறது. இரண்டுமே வாழ்வில் நன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் இரண்டுமே பொருந்தும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
விரதங்கள் என்று பார்க்கும் பொழுது எங்கள் சமயமானது நாளுக்கான விரதம் . வாரத்துக்கான விரதம் , மாதத்துக்கான விரதம் என்று வருடம் முழுவதுக்குமே விரதங்கள் பல அமையுமாறு வழி வகுத்து விட்டிருக்கிறது. வருடம் முழுவதும் தெய்வீக சிந்தனையுடன் மனத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை எனலாம்.
இன்பமும் ,துன்பமும் ,கலந்ததுதான் இந்த உலக வாழ்க்கையாகும். நம்முடைய முன்வினைப் பயன்களே இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது என்பதுதான் சமயத்தின் நிலையாகும். இப்படியான வினைகளிலிருந்து விடுபட்டு இன்பங்களைப் பெருக்கிக்கொள்ள அமைந்த வழிதான் விரதங்கள் எனலாம்.
இறைவனை எப்பொழுதுமே சிந்தையில் நிறுத்திக் கொள்ளுவது என்பது ஞானிகளுக்கு எளிதானதாகும். இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இது அவ்வளவு எளிதன்று. எனவேதான் ஒரு குறிப்பிட்ட நாட்களை நிர்ணயித்துக் காட்டிய பாதைதான் விரதங்களாக வந்து அமைந்திருக்கின்றன என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
சிவனைக் குறிக்க கார்த்திகைச் சோமவார விரதம் , கார்த்திகை உமா மகேஸ்வர விரதம் , மார்கழி திருவாதிரை விரதம் , தைமாத சூல விரதம், மாசிமாத மகா சிவராத்திரி விரதம் , பங்குனி உத்தரத் திருக்கல்யாண விரதம் , வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம் , ஐப்பசி மாத கேதார கெளரி விரதம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது.
சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் இருக்கும் பொழுது தரிசனம் செய்வதற்கு பிருங்கு முனிவர் அங்கு வருகிறார். வந்தவர் சிவனை மட்டுமே வலம்வந்து வணங்கி நிற்கிறார்.பிருங்கு முனிவர் சிவனைமட்டுமே வணங்கியது எதற்காக என்று பார்வதி சிவனிடம் வினவுகிறார். உலகத்தின் இயக்கத்தையே உணர்ந்த சிவன் பார்வதியின் உள்ளக்கிடக்கையினை அவரின் வினாவினால் உணந்து கொண்டார். அன்பும் சிவமும் இரண்டல்ல ஒன்றேதான் என்பது போல - " சிவனும் சக்தியும் இரண்டல்ல ஒன்றேதான் " என்று எண்ணினார். இறைவன் நினைப்பு பார்வதிதேவியிடம் பதிந்தது. பார்வதி தேவியார் இறைவனைக் குறித்து இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்தார். பார்வதியின் விரதத்தைக் கண்ணுற்ற சிவன் அவர்முன் தோன்றி " உனக்கு வேண்டியதைக் கேள் " என்றார். " இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்த, உலகின் முதல்வனான நீங்கள் உங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும் " என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் தன்னுடம்பில் பாதியை அன்னை பார்வதிக்கு கொடுத்து " சிவனும் சக்தியும் ஒன்றே " என்னும் நிலையினை ஆக்கினார்.
இங்கே கேதார கெளரி விரதம் பற்றிய நிலை கதைவடிவில் புராணமாய் வழங்கி வருகிறது. இங்கே சிறந்ததோர் வாழ்வியல் தத்துவம் வெளிப்பட்டு நிற்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம்.
மனித வாழ்வில் இல்லற வாழ்க்கை என்பது அன்பின் அடிப்படையில் அமைதல் மிக மிக அவசியமாகும். அன்பு என்பதுதான் இல்லறத்தின் ஆணி வேராகும்.அன்பு மலரும் இல்லறம்தான் நல்லறமாக மலரமுடியும். பெண்கள் என்பவர்கள் சக்தியின் வடிவமாவர். ஆணுக்கு வாழ்க்கையில் அருந்துணையே பெண்தான். இதனால்த்தான் வள்ளுவம் " வாழ்க்கைத்துணை " என்னும் தேடற்கரிய பெயரினைச் சூட்டியது எனலாம். வாழ்க்கையின் துணையான பெண்தான் இல்லறத்தின் உயிர்நாடியாகிறாள். அந்தப் பெண்மைக்கு முக்கியத்துவம் நல்குவதுதான் " கேதார கெளரி விரதம் " ஆகும்.
சுமங்கலியாய் வாழ்வதையே இல்லறத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் பெருமையாய் பெருவரமாய் எண்ணுகிறார்கள். அந்தப் பெருவரத்தை அவர்களுக்குப் பெற்றுத்தரும் விரதமாக " கேதார கெளரி விரதம் " அமைவதுதான் வாழ்வியலின் மிகச்சிறந்த நிலை எனலாம்.
ஜோதிடவியல் வழியில் சூரியனும் சந்திரனும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். இரண்டுமே மனித வாழ்வியலோடு இணைந்தே நிற்கின்றன.
சூரியனை தந்தைக் கிரகமென்றும் சந்திரனை தாய்க்கிரகமென்றும் , சூரியனுக்கு உரிய தேவதையாக பரமேஸ்வரனையும் சந்திரனுக்குரிய தேவதையாக கெளரியையும் காட்டும் நிலை ஜோதிடத்தில் இருக்கிறது.
கேதார கெளரி விரதம் இடம்பெறும் காலத்தில் சூரியன் தனது வலிமையை இழந்து காணப்படுகிறது. அவ்வேளை சந்திரன் இணையும் நிலையில் அதாவது அமைவாசையில் நல்லதொரு சங்கமம் நிகழ்கிறது. தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் இணையும் காலம் கேதார கெளைரி விரதம் பூர்த்தியாகும் நாளாக அமைவதும் " ஆணான சிவனும் பெண்ணான பார்வதியும் " இணைவதும் மிகவும் பொருத்தமாய் அமைகிறது என்று ஜோதிட நிலை காட்டுகிறது.
எந்த நிலையில் பார்த்தாலும் ஆணும் பெண்ணும் இணையும் அற்புத நிகழ்வு கேதார கெளரி விரதத்தின் வாழ்வியல் முறை என்றே எடுத்துக் கொள்ளலாம்.
இல்லறத்தின் உயிர்நாடியே இந்த இணைப்பு அல்லவா ? அந்த இணைப்பை நல்கிடும் " கேதார கெளரி விரதம் " நல்லதோர் வாழ்வியல் தத்துவமாக மலர்ந்து நிற்கிறது மனங்கொள்ளத்தக்கதாகும்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
No comments:
Post a Comment