இலங்கைச் செய்திகள்

அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நவராத்திரி விழா

20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 8 பேர் 20இற்கு ஆதரவு

20ஐ எதிர்த்து சிவப்பு நிற பட்டியுடன் எதிரணியினர்

தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள்

விக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து


அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நவராத்திரி விழா

நன்றி தினகரன் 




20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

- ஆதரவு: 156 பேர்; எதிர்ப்பு: 65பேர்
- எதிரணி எம்.பிகள் 08 பேர் ஆதரவு

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்  மூன்றில் இரண்டு (3/2) பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் (2ஆம் வாசிப்பிலும், 3ஆம் வாசிப்பிலும்) வழங்கப்பட்டன.

ஆளும்கட்சி பொதுஜன பெரமுனவுடன் அதன் ஆதரவு கட்சிகளான ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

எதிரணியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட 8  பேர் ஆதரவாக வாக்களித்தார்கள்.

20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு என்பன வாக்களித்திருந்தன.

வாக்கெடுப்பின் போது  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, கடந்த இருதினங்களாக காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை இடம்பெற்ற 20 ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம், நீதி அமைச்சர் அலி சப்ரி ஆரம்பித்து வைத்தார்.

எதிரணி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்.பி விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.

இரவு 7.30 மணிக்கு விவாதம் நிறைவடைந்த நிலையில் குழுநிலையில் திருத்தங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. 

இதன்போது ஆளும் தரப்பு சார்பில் சுமார் 50 திருத்தங்களும் எதிரணி சார்பில் சுமார் 57 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுத்தலைவர் அநுர குமார திஸாநாயக்க இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

அதற்கமைய 2/3 பெரும்பான்மை வாக்குகளால் 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

(பாராளுமன்றத்திலிருந்து ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்ரமணியம்)

நன்றி தினகரன் 





முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 8 பேர் 20இற்கு ஆதரவு

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 8 பேர் 20இற்கு ஆதரவு-20th Amendment 8 Opposition MPs Voted in Favour

- இரட்டை பிரஜாவுரிமைக்கு முஷாரப் ஆதரவாக வாக்களிப்பு

20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிகளும் தேசிய  முஸ்லிம் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் இவ்வாறு ஆதரவாக வாக்களித்தார்கள்.

20ஆவது திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (22) இரவு இடம்பெற்றது.

நன்றி தினகரன் 




20ஐ எதிர்த்து சிவப்பு நிற பட்டியுடன் எதிரணியினர்

20ஆவது திருத்தச்சட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் அனைவரும் கையில் 20ஐ எதிர்ப்போம் என்கிற அடையாளமிடப்பட்ட சிவப்பு நிறப்பட்டி ஒன்றை கட்டியபடி சபைக்கு நேற்று வருகைதந்தனர்.

அத்துடன் பாராளுமன்றத்திற்கு வருகைதரும்முன் எதிரணியினர் வாகனப் பேரணியொன்றை பாராளுமன்ற வளாகத்தில் நடத்தினர். இதுவும் 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக செயற்பாடாகவே நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். 20 க்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரணி வாகன பேரணி

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்றத்தை நோக்கி வாகன எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தினர்.எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்திய இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 




தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள்

ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்த சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இதன்போது மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இரா.சாணக்கியனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள ஊடகப்பிரிவு,

வடக்கு, கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புறக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பான விடயங்களும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம் மற்றும் சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவற்றைச் செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 




விக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

Saturday, October 24, 2020 - 6:00am


தொலைபேசியூடாக தெரிவித்தார்

81 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இதன்போது இருவரும் பொதுவான விடயங்களையிட்டுப் பேசிக்கொண்டபோதிலும், அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. “பொதுமக்கள் தொடர்பாடலில் இலங்கையில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள்” என விக்கினேஸ்வரன் இதன்போது பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.  நன்றி தினகரன் 







No comments: