மழைக்காற்று - ( தொடர்கதை ) அங்கம் 58 முருகபூபதி

 உதயசங்கரின் நாடியை பரிவோடு தடவியவாறு,    “  அப்படி என்னடா கனவு கண்டாய்…? சொல்லு  “   எனக்கேட்டாள் அபிதா.   “  உள்ளே வாங்களேன்.  சொல்றேன்… “   இவன் என்ன புதிர்போடுகிறான். 


அபிதா, மனதிற்குள் யோசித்துக்கொண்டு அவனை கைபிடித்து அழைத்தவாறு வீட்டினுள்ளே வந்தாள்.  “ சரி…. நீ… கண்ட கனவைச்சொல்லு. 

அதுக்கு முதல் ஏதும் சாப்பிடுறியா…? என்னவேணும்..?  .”   அவன் குளிர்சாதனப்பெட்டியை காண்பித்து,  “  ஐஸ்கிறீம் “ “என்றான். “ இல்லை… இல்லை… வேணாம். இந்த கொரோனா காலத்தில் ஐஸ்கிறீம்


வேணாம்.  கேக் இருக்கு, தாரன். சூடா ரீ போட்டுத்தாரன். 

உட்காரு.  “  அவனை அமரவைத்துவிட்டு, ஒரு தட்டத்தில் கேக்கை வெட்டி எடுத்துவந்து அவனுக்கும் நீட்டிவிட்டு,  தானும் ஒரு பாதியை எடுத்துக்கொண்டு அவன் முன்னால் அமர்ந்தாள் அபிதா.    “ கேக் நல்ல ருசி அன்ரி.  நீங்கள் செய்ததா…?  “  அபிதா தலையாட்டினாள்.  “  உங்கட ரீவி ஷோ அன்றைக்கு பார்த்தேன் அன்ரி.  நல்லா இருந்தது.  

அடுத்த முறை அங்கே போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போறீங்களா…? ”     “  அதற்கென்னடா… அந்த சீலன் அங்கிளிடம் சொல்றேன்.  அந்த நிகழ்ச்சி சனிக்கிழமைதான் வரும்.  இங்கேயிருந்து காலையிலேயே போகவேணுமேடா… நீ நேரத்துடன் வெளிக்கிட்டு வருவாயா..?  “ “ ஏன் அன்ரி…? இப்போது இந்த வீட்டில் நீங்கள் மாத்திரம்தானே இருக்கிறீங்க…? நான் முதல்நாள் வெள்ளிக்கிழமை இரவுக்கே வந்து உங்களுடன் நிற்கிறன். இங்கேயிருந்தே போகலாம்தானே…? நேரம் மிச்சம்.  “   “ எதுக்கும் ஜீவிகா அன்ரி வரட்டும், அவவிடமும் உன்ர அம்மாவிடமும் சொல்லிவிட்டு,  அதுக்குப்பிறகு முடிவெடுப்போம். சரியா… இரு , உனக்கு ரீ எடுத்துக்கொண்டுவாரன்.

  “ அபிதா எழுந்தாள்.   உதயசங்கரும் அவளை பின்தொடர்ந்து வந்தான். அவள் பின்னால் நின்றுகொண்டு, “    அன்ரி நான் என்ன கனவு கண்டேன் தெரியுமா…..?  நீங்கள்  பேக்கெல்லாம் தூக்கிக்கொண்டு இந்த வீட்டிலிருந்து வெளியே போறீங்க… நான் கத்திக்கொண்டு பின்னால் ஓடி வாரன்.   ‘அன்ரி போகவேணாம்… போகவேணாம்…’  என்று கத்துறன்.  நீங்கள் திரும்பியும் பார்க்காமல் வேகமாக போறீங்க… நான் உரத்து கத்துறேன்.  

பிறகு அழத்தொடங்கிட்டன்.  திடுக்கிட்டுப்பார்த்தால், அம்மா என்னை தட்டி எழுப்பி கேட்டா…  ‘ ஒன்றும் இல்லை  ‘என்றேன்.  பிறகு அம்மா என்னை பத்ரூம் கூட்டிப்போய், முகம் கழுவச்செய்து,


துடைத்து நெற்றியில் விபூதி பூசிவிட்டு,  பாலும் கரைச்சு சூடாக்கி தந்திட்டு என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு தலையை தடவி தூங்க வைத்தாங்க.  

அன்ரி… நீங்க இந்த வீட்டை விட்டுப்போகாதீங்க… பிளீஸ்….   “   உதயசங்கரின்  விழியோரங்கள் கசிந்தன.  அபிதா அவனை வாரி அணைத்துக்கொண்டு விம்மினாள்.  இது என்ன புது சொந்தம்.  இவனுக்கு என்மீது இப்படி பட்சம் எவ்வாறு வந்தது…?    அவன் அபிதாவை அணைத்துக்கொண்டு,  “ அன்ரி இந்த கனவு பற்றி அம்மாவிடம் சொல்லவேணாம்.  நீங்கள் அன்றைக்கு அம்மாவுடன் இந்த வீட்டைப்பற்றியும், வீடு வாங்க யார் யாரோ எல்லாம் வாராங்க என்றெல்லாம் சொன்னீங்கதானே… அதுதான் நான் யோசித்துக்கொண்டிருந்தன்.  நீங்க நல்ல அன்ரி.  

போகவேணாம்.  “   அபிதா அவனை விடுவித்துக்கொண்டு,  அவனுக்கும் தனக்கும் சேர்த்து தேநீர் தயாரித்தாள். “  நான் எப்படியடா போகாமல் இருக்கமுடியும். இது யாருடையதோ வீடு.  நான் இங்கே வேலைக்கு வந்தனான். வேலை முடிந்தால் போகவேண்டியதுதானே…  “ “ நீங்கள் எங்கட வீட்டுக்கு வாங்க அன்ரி. நான் அம்மாட்ட சொல்றன். 

அப்பா சவூதியிலிருந்து அடுத்தமுறை போன்பண்ணும்போது சொல்றன். உங்களைப்பற்றி அப்பாவிடம்


சொல்லியிருக்கிறன் அன்ரி. நீங்க எழுதித்தந்துதான் நான் பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கினதையும் சொல்லியிருக்கிறன்.  வரும்போது உங்களுக்கும் பிரசண்ட்ஸ் வாங்கி வரச்சொல்லியிருக்கிறன் அன்ரி… உங்களுக்கு என்ன வேணும். 

 “   “  நீதான் வேணும்… “   “ என்னை எப்படி தரமுடியும் அன்ரி.  நான் பிரசண்ட்  இல்லையே… “    “  இப்போது நீதானடா எனக்கு பெரிய பிரசண்ட்.  பார்ப்போம்.  இந்த கொரோனா காலத்தில் அந்த ஆட்கள் எப்படித்தான் இந்த வீட்டை விற்கப்போறாங்களோ தெரியவில்லை.  வீட்டை துப்பரவாக்கி, துப்பராவாக்கி காலும் கையும் உளைவுதான் எடுக்கிறது.  

 “  அபிதா சலித்துக்கொண்டு தேநீர் அருந்தினாள்.  “  அன்ரி… நான் இன்னும் கொஞ்சம் சீனி போட்டுக்கொள்ளவா… ?  “ அவன் எழுந்தான். அவன் மிகவும் உரிமையுடன் தன்னுடன் ஒட்டிக்கொண்டிருப்பதை அபிதா ஜீரணித்துக்கொள்ள முயன்றாள். 

 யார் யாரை எங்கே சந்திப்போம்…?  எங்கே விட்டுப்பிரிவோம்..?  என்பது தெரியாத வாழ்க்கையின் கோலம் விதியின் தூரிகையால்  வரையப்படுகிறதா..? உதயசங்கர் தனது தேநீர் கப்பில் சீனியை


கலந்துகொண்டு மீண்டும் வந்து அபிதாவின் முன்னால் அமர்ந்தான். அபிதா தனது கப்பை உதட்டருகே வைத்துக்கொண்டு அவனையே பார்த்தாள்.  

தனது குழந்தை இப்போது இருந்திருந்தால்  இவனுடைய வயதில் இருப்பாளா…?   “ தம்பி உதயா… நீ எந்த வருஷம் பிறந்தாய்…?  “ “ இரண்டாயிரத்து ஒன்பது அன்ரி.  மே மாதம் பத்தாம் திகதி.  “ “  அப்படியா…?  நீ ஏன் உன்ர பேர்த்டேயை என்னிட்ட சொல்ல இல்லை.  ஏதும் வாங்கித்தந்திருப்பேனே..? சரி… உனக்கு என்ன வேணும்… சொல்லு.. அடுத்த தடவை கடைத்தெருவுக்கு போகும்போது என்னோடு வா.. நான் அம்மாவிடம் சொல்றன். சொல்லு… உனக்கு என்ன வேணும்…? “     “ ஒன்றும் வேணாம். நீங்கள் இங்கேயிருந்து போகவேணாம்.   நீங்கதான் வேணும்.  

 “   அவனது அந்தப்பதிலால் அபிதா சற்று அதிர்ந்தாள்.  இவனுக்கு என்ன நேர்ந்தது….?   எனது குழந்தை பிறந்து பத்தொன்பது  மாதம் கடந்தபோது பிறந்திருக்கிறான்.  அபிதா பலவாறும் யோசித்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். யோசிக்க யோசிக்க மனக்குழப்பம்தான் கூடியது.  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத யோசனை.   

 “ அன்ரி… ரீ.வி. போடவா…  “   “ போடு… பக்கத்தில்தான் ரிமோட் இருக்கிறது.”   அபிதா எழுந்து அவன் தேநீர் அருந்திவிட்டு வைத்த கப்பை எடுத்தாள். அவன் விரைந்து அருகில் வந்து,  “  தாங்க அன்ரி, நானே கழுவிவைக்கிறன்.  உங்கட கப்பையும் தாங்க… நீங்க ரெஸ்ட் எடுங்க… காலும் கையும் நோகுது என்றீங்க.. நான் கழுவிவைச்சிட்டு ரீவி பார்க்கிறன். மற்றது அன்ரி, நான் சொன்ன கனவை அம்மாவிடம் சொல்லவேணாம். பிறகு என்னை இங்கே வருவதற்கு விடமாட்டாங்க.  

“   என்றான்.  “ ஏனடா அப்படி சொல்கிறாய்… ?  “   “ முந்தியும் ஒரு கனவு கண்டேன்.  என்னோடு படிக்கிற  சுரேஷ்… அவனைப்பத்திய கனவு.  அதைச்சொன்னாப்பிறகு அம்மா என்னை அவனுடன் விளையாடவும்  விடுவதில்லை. 

“    “ அப்படி என்ன கனவடா..?  “   “ மறந்துபோச்சி. அன்ரி… ஊரெல்லாம் அடிக்கடி ஊரடங்கு போடுறாங்க… ஸ்கூலும் ஒழுங்கா நடக்கிறதில்லை.  சவூதியிலிருக்கும்  அப்பாவும் பிளேன் ஓடவில்லை எண்டு வரமுடியாமல் இருக்கிறார்.  எல்லோரும் இந்த கொரோனா பத்தித்தான் பேசுறாங்க…  இவ்வளவு இருக்கும்போது, இந்த வீட்டை விற்பாங்களா…?  யாரும் வந்து வாங்குவாங்கலா..?  அன்ரி… நான் நினைக்கிறன்… நீங்கதான் இந்த வீட்டை வாங்கப்போறீங்க… உங்களுக்குத்தான் இந்த வீடு கிடைக்கப்போகுது… இருந்து பாருங்களேன்..  என்ன நடக்குது என்டு.

  “  உதயசங்கரின் பேச்சைக்கேட்டதும் அபிதா வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள்.   “  உன்னுடைய வாயில் சீனிதான் போடவேண்டும்.  சும்மா போடா… நீ கண்டறியாத கனவை கண்டுபோட்டு என்னென்னமோ பேசுகிறாய்.  என்னிடம் சொல்வதையெல்லாம் அந்த ஜீவிகா அன்ரியிடமோ, உன்ர அம்மாவிடமோ சொல்லிவிடாதை. 

பிறகு அவுங்களும் சிரிக்கப்போறாங்க… சரியா…?  “  அவன் வந்ததுமுதல்  தன்னையறியாமல் தனக்குள் ஏதோ மாற்றங்கள் உருவாகும் உணர்வில் அபிதா சற்று நிலை குலைந்தாள். முதலில் கனவு அது இது என்றான்.  இப்போது, நான்தான் இந்த வீட்டை வாங்கப்போகிறேன் என்கிறான்.  

இவன் என்ன தேவ தூதுவனா… திடீர் திடீரென்று அசரீரிபோன்று குரல் தருகிறான். எனது குழந்தையின் மறுபிறவியோ..?  எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை வருகிறதா..?  எனது குழந்தை பெண். இவன் ஆண்.  எனது குழந்தை இறந்தவேளையில் இவன் தனது தாயில் கருவாகியிருப்பானா..? நான் ஏன்  முன்பின் தெரியாத இந்த நிகும்பலையூருக்கு திடுதிப்பென வந்தேன்.  

என்றைக்குமே செய்திராத வீட்டுப்பணிப்பெண் வேலையை எவ்வாறு தேர்ந்தெடுத்தேன்…? இவன் எந்த நேரத்தில் அன்று கற்பகம் ரீச்சரைத்தேடிக்கொண்டு பேச்சுப்போட்டிக்கு உதவி கேட்டு வந்தான்..? ஏன் கற்பகம் ரீச்சர் அந்த நேரம் வீட்டில் இல்லை…?நான் ஏன் இவனுக்கு எழுதிக்கொடுத்தேன்…? எப்படி இவன் அந்தப்போட்டியில் பரிசு வாங்கினான்..? இப்போது வந்து பூர்வஜன்ம தொடர்புபோன்று வந்து ஒட்டிக்கொண்டு,  போகாதே… போகாதே… என்கிறானே… இவன் யார்…?  நான் யார்…?  அபிதாவுக்கு தலைவிறைக்குமாப்போன்ற உணர்வு வந்தது.  

நெஞ்சைப்பிடித்துக்கொண்டு, குளியலறைக்குச்சென்று கதவை சாத்திக்கொண்டாள். உதயசங்கர் ரீவியை இயக்கிவிட்டு முன்னால் அமர்ந்துகொண்டான். சிறுவருக்கான கார்ட்டுன் படம் ஓடிக்கொண்டிருந்தது.   அபிதா, குளியலறை சுவரைப்பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். எனக்கு என்ன நேர்ந்தது.  எதற்காக வீண் கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறேன்..? சுவரில் சாய்ந்துகொண்டு, கண்களை மூடி,  சுவாசத்தை  அடுத்தடுத்து உள்ளிழுத்து வெளியே விட்டு தன்னை ஆசுவசப்படுத்திக்கொண்டாள். 

யாருடனாவது பேசவேண்டும்போலத்  தோன்றியது. வந்திருக்கும் தமயந்தியின் மகன் உதயசங்கருடன் பேசுவதற்கு இனம்புரியாத தயக்கம் கலந்த பயமும்வந்தது. அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்  யாரோ சொல்லிக்கொடுத்து வந்து சொல்வதுபோலத் தெரிகிறது. 

அவன் பார்க்கும் பார்வையில் இழையோடியிருக்கும் தீட்சண்யத்தின் தீவிரம்  நெஞ்சை ஊடுறுவி இரசவாதம் புரிகிறதா..? அபிதா, தண்ணீர் குழாயைத் திறந்து, முகத்தை  அழுத்தி அழுத்தி கழுவினாள்.  கண்ணடியை பார்த்து இமைகளை தடவினாள். கண்ணில் படர்ந்த செம்மையை தவிர்க்க சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டாள்.  

விழித்துப்பார்த்தாள். செம்மை குறையவில்லை.  மீண்டும் முகத்தை கழுவிவிட்டு துடைத்துக்கொண்டு வந்தாள். உதயசங்கர் உரத்து சிரித்துக்கொண்டிருந்தான். தொலைக்காட்சியில் அவன் லயித்திருந்தான்.  எலியும் பூனையும் நடத்தும் நாடகத்தை ரசித்து சிரித்தான்.  சமையலறை மேசையிலிருந்த அபிதாவின் கைத்தொலைபேசி சிணுங்கியது. உதய சங்கர் திரும்பி,    “ அன்ரி கோல்  “  என்றான்.  “ வாரன் தம்பி… நான் எடுக்கிறன். நீ… ரீவியை பார்.  “ மறுமுனையில் மஞ்சுளா.    தங்கள் பிரதேசத்திலும்  ஊரடங்கு போட்டுவிட்டதாகவும்,  திட்டமிட்டவாறு வரமுடியவில்லை என்றும்  மஞ்சுளா சொன்னாள்.  “ அம்மா எப்படி இருக்கிறாங்க..?  “  அபிதா கேட்டாள்.  “ உங்களையும் எங்களோடு வந்து இருக்கட்டுமாம்.  

அந்த வீடு விற்றுவிட்டால், நீங்கள்  எங்கே போகப்போறீங்க அபிதா…?  அவள் ஜீவிகாவும் கொழும்போடு போய்விடுவாள்.  நீங்கள் வாங்க… வந்து எங்களோடு இருங்க… அம்மாவுக்கும் துணையாக இருக்கும்.   “  “ அதெல்லாம் பிறகு பார்க்கலாம்.  சுபாவின் கலியாணமா.. உம்முடைய கலியாணமா முதலில் நடக்கும்…?”     “ சுபாவுக்குத்தான்.  அவவின்ர அம்மாவுக்கும் சுகமில்லை. இப்போது நாடு இருக்கும் நிலையில் எல்லாம் சிம்பிலாகத்தான் நடக்கும்போலத் தெரியுது அபிதா.

 “   “  நான் வேலை செய்த பேங்கில் எனக்கு ஒரு பிரியாவிடை  பார்ட்டி ஏற்பாடு செய்திட்டு, பிறகு திகதியை மாற்றிவிட்டாங்க.  நாடு இருக்கும் இலட்சணத்தில் இப்போது அது ஒன்றுதான் குறை.  என்ன ரீவி சத்தம் கேட்குது, என்ன படம் பார்க்கிறீங்க….?  “   “ இல்லை… இல்லை படம் இல்லை. எங்கட தமயந்தியின் மகன் வந்திருக்கிறான். கார்டுன் பார்க்கிறான்.  “     “ ஓகே அபிதா, ஜீவிகா, தமயந்தியையும் நான் கேட்டதாகச்சொல்லுங்க… சரியா… வைக்கிறன். “   மஞ்சுளா தொடர்பை துண்டித்தாள். “ தம்பி சமைக்கப்போறன்.  

என்ன விருப்பம்..? “   என்று உதயசங்கரை நேருக்கு நேர் பார்க்காமலே அபிதா கேட்டாள்.  “ அன்ரி… எனக்கு தேங்காய்ப்பூ வெங்காயம் போட்டு செய்யும் ரொட்டி விருப்பம்.  முன்பொருக்கா செய்து தந்தீங்க.  அது செய்யுங்க அன்ரி. தொட்டுச்சாப்பிடுவதற்கு சம்பலும் விருப்பம் . “   அபிதா சடாரென அவனைத்திரும்பிப்பார்த்தாள். அவன் தொடர்ந்து ரீவியில் கண் பதித்திருந்தான். அபிதாவின் கணவன் பார்த்திபனுக்கும் அவள் செய்யும் தேங்காய்ப்பூ,  வெங்காயம் கலந்த  ரொட்டியும் தேங்காய்ப்பூ சம்பலும் மிகவும் பிடிக்கும். ( தொடரும் )  




No comments: