பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 9 - தேடிவந்த மாப்பிள்ளை- சுந்தரதாஸ்

.

வீர பாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் கர்ணன் போன்ற வரலாற்று படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கிய பெருமைக்குரியவர் பிஆர் பந்துலு. சிவாஜி நடித்த படங்களையே தயாரித்த இவர் பின்னால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எம்ஜிஆரை போட்டு படங்களை உருவாக்கி வெற்றி கண்டார். அந்த வரிசையில் எம்ஜிஆர் நடிப்பில் பந்துலு தயாரித்து டைரக்ட் செய்த இறுதிப் படம்தான் தேடிவந்த மாப்பிள்ளை.

எம்ஜிஆர் நடிப்பில் இவர் உருவாக்கிய முதல் படமான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக முதல் தடவையாக ஜெயலலிதாவை அறிமுகப்படுத்திய பந்துலு இந்த படத்திலும் அவர்கள் இருவரையும் ஜோடியாக நடிக்க வைத்தார். இவர்களுடன் பந்துலுவின் மனைவி எம் வி ராஜம்மா அசோகன் சுந்தரராஜன் ஜோதிலட்சுமி சோ ஆகியோரும் நடித்தனர். படத்தின் கதை எம்ஜிஆருக்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே படம் முழுவதும் உற்சாகத்துடனேயே எம்ஜிஆர் காட்சியளித்தார்.

தன் தந்தையை கொலை செய்து சொத்துக்களை அபகரித்தவனை பழிதீர்க்கப் புறப்படும் கதாநாயகன், அவனுக்கு உதவும் நண்பன், எதிரியின் மகளையே காதலிக்க வேண்டிய நிலைமை, இடையில் வில்லனுடைய சதித்திட்டங்கள் என்று அமைந்த கதையை ரசிக்கும்படியாக எம் ஜி ஆர் நடிப்பில் டைரக்ட் செய்திருந்தார் பந்துலு.






படம் முழுவதும் இளமை பொங்க துள்ளலுடன் எம்ஜிஆர் நடித்து தன் ரசிகர்களை பரவசப்படுத்தினார் . அதேபோல் சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பி இருந்தார் ஜஸ்டினுடன் அவர் போடும் சண்டைக் காட்சியில் ரசிகர்களின் கரகோஷம் காதைப் பிளந்தது. படத்தின் பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதியிருந்தார்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் இனித்தன வெற்றி மீது வெற்றி வந்து, மாணிக்க தேரில் மரகத கலசம் பாடல்கள் பிரபலமடைந்தன  வசனங்களை ஆர் கே சண்முகம் எழுதியிருந்தார் . தாயாக வரும் எம் வி ராஜம்மா மட்டுமே உருக்கமாக நடித்திருந்தார், மற்ற எல்லோருமே வில்லன் அசோகன் உட்பட ஜாலியாகவே காணப்பட்டார்கள். ஜெயலலிதா ஜோதிலட்சுமி இருவரும் தங்கள் பங்கை நிறைவேற்றினார்கள் சோ படத்தை கலகலப்பாக்கினார், சிறந்த பொழுதுபோக்கு படமாகும்




No comments: