'கொணர்க வருக': -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-



லகை நேசிக்கும் ஒப்பற்ற மாமுனி விசுவாமித்திரர்,
தன்னிகரற்ற தலைவனாம் தசரதனைத் தேடி அயோத்தி வருகிறார்.
புதிய பிரம்மனும், புதிய உலகமும்,
புதிய உயிர்களும், புதிய தேவரும்,
படைப்பேன் என்று முன்பு எழுந்த பரமயோகி அவர்.
மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறமைத்து தேவரொடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனாத்
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான். (கம்ப. பால: 317)
🎆 🎆 🎆
வந்த மாமுனியை வணங்கி வாழ்த்தி,
அடிகளின் அடிகளில்  அர்ச்சனை செய்து,
யான் வலம் செய்து வணங்க எளிவந்த இச்செயல்,
என் குலம் செய்த தவம் எனக் கூறி மகிழ்கிறான் தசரதன்.
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என்
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான்
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும்.  (கம்ப. பால: 320)
🎆 🎆 🎆
தசரதனின் இன்சொற்கள் இதயத்திற்கு இதம் தர,
மாமுனி மகிழ்ச்சி கொள்கிறார்.
அவர்தம் திருவாயிலிருந்து தசரதனைப் பெருமைப்படுத்தும்,
பெரு வார்த்தைகள் பிறக்கின்றன.
முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஓர் இடையூறு விளையின்,
சிவனின் கயிலையங்கிரியும்,
திருமாலின் பாற்கடலும்,
பிரமனின் சத்தியலோகமும்,
இந்திரனின் கற்பகநாடும்,
அழகிய நின் அயோத்தியும் அன்றி,
அடைக்கலமாய் அமைவது வேறெது? என வினவி,
சிவன், திருமால், பிரமன், இந்திரன் வரிசையில்,
தயரதனையும் அமர்த்தி பெருமைப்படுத்துகிறான் முனிவன்.
என் அனைய முனிவரரும் இமையவரும் 
இடையூறு ஒன்று உடையரானால்,
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், 
பாற்கடலும், பதும பீடத்து
அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும், 
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ? 
இகல் கடந்த புலவு வேலோய்! (கம்ப. பால: 324)
🎆 🎆 🎆
முனிவனது பாராட்டுரை தொடருகிறது.
நாடிழந்த இந்திரன் நின் தனிக்குடைக்கீழ் ஒதுங்கி,
தன் குறை உரைத்து நிற்க.
அவனை வருத்திய சம்பரனை வதைத்து,
அன்று  நீ அளித்த அரசை அன்றோ
இன்று இந்திரன் ஆண்டு நிற்கிறான்?
என்கிறான் முனிவன்.
தமக்குத் தஞ்சமாய் உரைத்த நால்வரில் ஒருவனான இந்திரன்,
நின்னைச் சரண்புகுந்தே இன்று நேர் நிற்கிறான் என உரைத்து.
தசரதன் பெருமையை மேலும் உயர்த்துகிறான்.
'இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து,
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி,
குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடு தொலைத்து, நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?- அரச!' என்றான்.
(கம்ப. பால: 322)
🎆 🎆 🎆
கோமுனியின் உரைகேட்டுக் குளிர்கிறான் தசரதன்.
அவன் உள்ளத்துள் பேருவகைக் கடல் பெருகுகிறது.
முகம் பார்த்துரைக்கும் புகழ் வார்த்தைகள் நாணம் தர,
அவற்றைத் தவிர்க்க நினைந்து,
கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி,
அரசாண்ட பயனை அடியேன் எய்தினேன்.
அடிகள் இங்கு வந்த காரணம் யாது.
யான் செய்வதென்? இனிதருளுக என்று,
அரசன் முன் மொழிய,
முனிவன் பின் மொழிகிறான்.
உரை செய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய  அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென், மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று,
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே
(கம்ப. பால: 323)
🎆 🎆 🎆
வேள்வி காக்க வீரனைத் தா! 
தசரதனின் உளம் நடுங்க உரைக்கிறான் முனிவன்.
கடும் தவத்தோரை காமமும், வெகுளியும் மயக்குமாறு போல,
வனத்துள் யான் இயற்றும் தவவேள்விக்கு இடையூறு செய்யும்,
மாரீசன், சுபாகு எனும் அரக்கரை விலக்கி,
போர் முகத்தில் நின்று காக்க ஒரு புதல்வனைத் தா! என்ற,
முனிவனின் வேண்டுதல்,
உயிரை இரந்து கேட்கும் கொடிய கூற்றின் கூற்றாய்,
இதயம் துளைக்க ஏங்கி நிற்கிறான் தசரதன்.
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறா, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
'செரு முகத்துக் காத்தி' என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின் , உளையச் சொன்னான்.
(கம்ப. பால: 324)
🎆 🎆 🎆
இப்பாடலில் நமக்கு இரு ஐயங்கள் எழுகின்றன.
வேள்வி காக்கப்  புதல்வர் நால்வருள்,
கரியவனாம் ஒருவனைத் தா என்று வேண்டுகிறான் விசுவாமித்திரன்.
தசரதர் புதல்வருள் நால்வருள் இருவர் கருமையர்.
இராமனும், பரதனுமே அவ்விருவராம்.
கரிய புதல்வன் ஒருவனைத் தா என்ற,
முனிவரின் வேண்டுதல் கேட்டு,
அவன் இராமனைத்தான் வேண்டுவதாய் வருந்துகிறான் தசரதன்.
இது தொடரும் பாடல்கள் சொல்லும் செய்தி.
கரிய புதல்வர் இருவர் இருக்க,
கரிய செம்மல் ஒருவனைத்தா என்ற முனிவனது கோரிக்கை.
இராமனைத் தான் குறிப்பதாய் தசரதன் பொருள் கொண்டதேன்?
இஃது எழும் முதல் ஐயம்.
🎆 🎆 🎆
நம் உயிர் பறிக்கும் யமனுக்குத் தர்மராஜா என்றும் பெயர்.
எவர் மீதும் விருப்பு வெறுப்பின்றி அவரவர்க்கு வகுத்த ஆயுள் முடிய,
அவர்தம் உயிர் பறித்துச் செல்வது அவன் வேலை.
நீதி நெறி நின்று இச்செயலை அவன் செய்தலால்,
யமனுக்குத் தர்மராஜா எனும் காரணப் பெயர் உண்டாயிற்று.
உயிர் பறிப்பது யமதர்மனின் உயர் கடமை.
அக் கடமையைச் செய்யும் யமனை,
வரம் கேட்ட விசுவாமித்திரனுக்கு  உவமையாக்கையில்,
'கொடுங்கூற்று' என உரைக்கிறான் கம்பன்.
கடமையைச் செய்யும் கூற்றுவன் கொடுங் கூற்றுவன் ஆவானா?
இஃது இரண்டாவது வினா.
வினாக்களுக்கு விடை காண விழைகிறோம்.
🎆 🎆 🎆
தமிழில் ஒரு என்ற சொல்லுக்கு,
ஒன்று என்ற அர்த்தத்தோடு ஒப்பற்ற எனும் அர்த்தமும் உளது.
முனிவன் கரிய செம்மல் ஒருவனைத்தா என்று கேட்க,
அவன் கோரிக்கையில் வந்த ஒருவனை என்ற சொல்,
ஒப்பற்றவனை என்று உரைப்பதாய் உணர்கிறான் தசரதன்.
புதல்வர் நால்வருள் அவதார மகிமையால்,
ஒப்பற்றவனாய் விளங்குபவன் இராமனே.
அவனையே ஒப்பற்றவன் எனத் தசரதன் உணர்ந்திருந்ததால்,
முனிவன் உரைத்த ஒருவனை எனும் சொல்,
இராமனையே குறிப்பதாய் அவன் முடிவு செய்கிறான்.
இஃது முதல் வினாவுக்காம் விடை.
🎆 🎆 🎆
யமன் எவருக்காகவும் தன் கடமையினின்றும் தவறாதவன்.
ஓர் உயிரை எடுப்பதாய் அவன் முடிவு செய்து விட்டால்,
அதனை எவராலும் தடுக்க முடியாதாம்.
இஃது அனைவரும் அறிந்த செய்தி.
உறுதியாய் உயிர் எடுக்க வரும் இயமன்,
அவ்வுயிர்க்குரியவனிடம் இரவலன் போல,
உயிரை இரந்து கேட்டு நிற்பின் அது விளையாட்டன்றோ!
வருந்தி நிற்கும் ஒருவனிடம் தான் வலிந்து கொள்ளப்போகும் ஒன்றை,
இரந்து கேட்பதாய் நடித்து நிற்பது கொடுமையன்றோ!
வந்த விசுவாமித்திரன் இராமனை வலிந்து பெறப்போகிறான்.
இஃது தொடரும் காட்சி உரைக்கும் செய்தி.
வலிந்து பெறப் போகும் இராமனை,
இரந்து கேட்டு நிற்கும் விசுவாமித்திரனின் செயல்,
முன் சொன்ன யமனின் செயலாய்ப்பட,
கடமையைக் கொடூரமாய் இயற்றும் அவனை,
உயிர் இரக்கும் கூற்றோடு ஒப்பிட்டு உரைக்கிறான் கம்பன்.
உயிரை இரந்து நிற்கும் யமனின் செயல் கொடுமையை அவன் மீது ஏற்றி,
கொடுங்கூற்றென உரைத்தனன் கம்பன் என்க.
இதுவே இரண்டாம் வினாவுக்காம் விடை.
🎆 🎆 🎆
விசுவாமித்திரனின் வரம் கேட்டு வருந்திய தசரதன்.
எறிவேல் பாய்ந்த பெரும் புண்ணில்,
எரி நுழைந்தாற் போல் துடிக்கிறான்.
கண்ணில்லாத ஒருவன் அதனைப் பெற்று,
பின்னர் இழந்தாற் போல்,
தயரதனின் துயரம் அமைந்தது என்கிறார் கம்பர்.
எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையின் கனல் நுழைந்தா லெனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட,
'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான் கடுந் துயரம் கால வேலான்.
(கம்ப. பால: 325)
🎆 🎆 🎆
கம்பனின் கைச்சரக்காய் அமைந்த இக்கவி பற்றி,
எனது அழியா அழகு எனும் நூலில்,
உண்மையும் உவமையும் எனும் தலைப்பில்,
கட்டுரை வரைந்துள்ளேன்.
அறிய விழைவார் அதனைக் காண்க!
🎆 🎆 🎆
எல்லையில்லா வருத்தமுற்ற தசரதன்,
பின் ஒருவாறு துயரம் நீங்கி இராமன் இளம் பிராயத்தன்,
அதுவுமன்றிப் படைத்தேர்ச்சி அற்றவன்.
ஆதலால் நின் பணிக்கு அவன் உதவான்.
எந்தனுக்கோ அக்குறைகள் இலவாம்.
நின் வேள்விக்கு இடையூறாய்,
சிவனும், பிரம்மனும், இந்திரனும் வரினும்,
இடைநின்று யான் காப்பன் என்கிறான்.
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந்தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கி,
'படையூற்றம் இலன், சிறியன் இவன், பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும்'
இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென், பெரு வேள்விக்கு எழுக! என்றான்.
(கம்ப. பால: 326)
சிவன், பிரம்மன், இந்திரன் ஆகியோர் இயற்றும் இடையூறுக்கு,
இடையூறாய் இருப்பன் என தசரதன் உரைத்தமையில்,
ஒரு தலைவனுக்கு இருக்கலாகாத் தற்புகழ்ச்சிக் குற்றம் பதிகிறது.
மரபறிந்த கம்பன் இங்ஙனம் மாறுரைப்பானா?
ஆழ்ந்து சிந்திக்க, தசரதனின் செயலுக்காம் தக்க விடை கிடைக்கிறது.
முனிவனைத் தன் விருப்பிற்கு உடன்பட வைக்க,
மிகையுரைத்து மயக்க நினைக்கிறான் தசரதன்.
முனிவனிடமிருந்து இராமனைக் காப்பதற்காய்,
மிகைபடத் தன் வீரம் உரைத்த தசரதனின் செயலில்,
தற்புகழ்ச்சியைத் தாண்டி, தந்தையின் பாசமே தலைதூக்கி நிற்கிறது.
உண்மை உணர நம் உள்ளத்தில் நிம்மதி.
🎆 🎆 🎆
இப்பாடலின் இறுதி அடியில் வரும்,
எழுக எனும் சொல்லிலும்,
தசரதனின் பாசத்தைத் தனித்துக் காட்டுகிறான் கம்பன்.
தொடர்ந்து விசுவாமித்திரன் அங்கிருந்தால்,
தன் கருத்துக்கு மாற்றுரைப்பான்.
இராமனைத் தரும்படி மீண்டும் கேட்பான்.
எனக் கருதும் தசரதன்,
அதற்கு இடம் கொடாதிருக்கக் கருதி,
தன் கருத்தை ஏற்று உடன் எழுக என்கிறான்.
விசுவாமித்திரனை அவ்விடம் விட்டு உடன் விலகச் செய்யும்,
தசரதனின் அவசரத்தை எழுக எனும் அச்சொல் எமக்குணர்த்துகிறது.
கம்பனின் உணர்வு சார் கைவண்ணம் கண்டு மகிழ்கிறோம் நாம்.
🎆 🎆 🎆
தசரதனின்  பதில் கேட்டு,
இறுதிக்காலம் இது எனவும், இல்லை எனவும் உரைத்து,
தேவர்கள் மயங்கும் வண்ணம்,
விசுவாமித்திரர் வெகுள்கிறார்.
அவர் கோபத்தால் புருவம் நெற்றி தொட,
அதற்கஞ்சி சூரியனும் மறைகிறான்.
நகைவர நயனம் சிவக்க முனிவன் கொண்ட கோபத்தால்,
திசையனைத்தும் இருண்டதாய் உரைக்கிறான் கம்பன்.
என்றனன், என்றலும், முனிவோடு  எழுந்தனன், மண் படைத்த முனி, 'இறுதிக் காலம்
அன்று' என, 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர், மேல் வெயில் கரந்தது, அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன, மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன, வந்தது நகையும், சிவந்தன கண், இருண்டன போய்த் திசைகள் எல்லாம். 
(கம்ப. பால: 327)
குல குருவாம் வசிட்டமுனிவர்,
விசுவாமித்திரன் வந்து வரம் கேட்ட நோக்கத்தை உணர்ந்து,
தசரதனை நெறி செய்கிறார்.
பொறுத்தருள்வாயாக என முனிவனிடம் வேண்டி, பின்னர்,
உனது மகனுக்கு அளவிலா நன்மை விளையப்போகும் இந் நன் நாளில்,
அதனை மறுத்தியோ? என வினவுகிறார்.
மழையால் பெருகும் வெள்ளம் போய்,
கடலில் சேருமாறு போல,
நின்மகனுக்கு அளவில்லாத வித்தைகள்,
வந்து சேரும் படியான நற்காலம் இன்று வந்தது என்றுரைத்து,
இராமனை விசுவாமித்திரனோடு அனுப்பச் சொல்கிறார்.
கறுத்த மாமுனி கருத்தை யுன்னிநீ
பொறுத்தி யென்றவற் புகன்று நின்மகற்கு
உறுத்த லாகலா வுறுதி யெய்துநாள்
மறுத்தி யோவெனா வசிட்டன் கூறினான்.
பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம் போய்
மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல்
ஐய நின்மகற் களவில் விஞ்சை வந்து
எய்து காலமின் றெதிர்ந்த தாமென்றான்.  (கம்ப. பால: 328, 329)
🎆 🎆 🎆
வசிட்டரின் வார்த்தைகள் கேட்டு,
தசரதன் சிறிது மனம் தேறுகிறான்.
ஆனாலும் அவன் மனத்துயரம் முழுதும் தொலைந்தபாடில்லை.
இனியும் இராமனின் செல்கை நிற்காதா என,
அவனது பாச மனம் விரும்புகிறது.
விசுவாமித்திர முனிவரை மறுத்தோ, இறைஞ்சியோ,
இனி ஒரு வார்த்தை தானும் பேச இயலாது என உணர்ந்த  தசரதன்.
குறிப்பால் ஒரு கோரிக்கையை விசுவாமித்திரன் முன் வைக்கிறான்.
வசிட்டன் வார்த்தைகளை ஏற்றாற் போல,
சேவகர்களை அழைத்து,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், என்கிறான்.
அரசனின் கட்டளையை ஏற்று இராமனிடம் செல்லும் சேவகர்கள்,
அவனிடம் அரசன் நின்னை, 'வருக என்றனன்' என்கின்றனர்.
இராமனும் வந்து அருகு சேர்கிறான்.
குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,
'வருக என்றனன்' என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான்.  (கம்ப. பால: 330)
🎆 🎆 🎆
தசரதன் ராமனைக் 'கொணர்க' என்கிறான்.
சேவகர்கள் இராமனை 'வருக' என்கின்றனர்.
கொணர்க, வருக எனும் இரு சொற்களும்,
இடம்பெயர்த்தலை உணர்த்துவன.
மற்றவரால் இடம் பெயர்த்தலை கொணர்தல் என்றும்,
தானாய் இடம்பெயர்தலை வருதல் என்றும் உரைத்தல் மரபு.
குழந்தைகளை மற்றவர்கள் கொணர்வார்கள்.
இளைஞர்கள் தாமாய் வருவார்கள்.
தசரதன் விசுவாமித்திர முனிக்கு முன்,
இராமனைக் கொணர்க! என உரைப்பதன் மூலம்,
இராமன் இன்னும் மற்றவர்களால் கொண்டுவரப்படவேண்டிய குழந்தையே!
என்பதை உணர்த்த முயல்கிறான். 
உணர்த்தி, இராமன் காடேகாமல் தடுக்க முயல்கிறான்.
அவனது பிள்ளைப்பாசத்தின் விளைவு அது.
ஆனால் இராமனோ தானாய் வரும் இளைஞனாகி விட்டான்.
அதனால் தான் சென்ற சேவகர்கள் அவனை வருக! என்கின்றனர்.
இராமனும் தானாய் வருகிறான். 
கம்பன் தசரதனதும் சேவகர்களதும் கூற்றுக்களாய்,
கொணர்க, வருக என இரு சொற்களை இட்டு.
தசரதனின் பாச மனதையும், 
இராமனைக் காடேகாமல் தடுக்க,
தசரதன் கையாளும் உத்தியையும் நமக்குணர்த்தி,
தனது கைவண்ணத்தைக் காட்டி வியக்க வைக்கிறான்.

நன்றி - உகரம் |இலக்கியக் களம்| கம்பவாரிதி. இலங்கை ஜெயராஜ் 


No comments: