வாழ்க்கை பற்றிய ஏராளமான விளக்கங்களையும், தத்துவ போதனைகளையும் கவிதை, மற்றும் திரைப்படப் பாடல்களையும் கடந்து வந்துகொண்டிருக்கின்றோம்.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்பதுதான் ஒவ்வொருவருக்கும் கிட்டிய புத்திக்கொள்முதல். எனக்கும் அப்படித்தான்!
மல்லிகை ஜீவா, 1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிட்ட மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழுடன், எனக்கு மிகவும் நெருக்கமானவரானார்.
அந்த இதழில் எமது இல்லத்தில் அக்காலப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த வளர்மதி நூலகம் பற்றி நானும் ஒரு சிறிய கட்டுரை எழுதியிருந்தேன். நீர்கொழும்பூர் முத்துலிங்கம், தருமலிங்கம், சிவம், செல்வரத்தினம், மு. பஷீர் ஆகியோரும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தனர்.
அதன் வெளியீட்டு அரங்கினை நடத்துவதற்காக நீர்கொழும்பு
இந்து இளைஞர் மன்றத்தின் கட்டிடத்தை வாடகைக்கு கேட்டேன். அதன் ஆட்சிமன்றத்தினர் சாக்குப்போக்குச்சொல்லி தருவதற்கு மறுத்துவிட்டனர்.
ஜீவா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். அவ்வேளையில் பதவியிலிருந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைந்த அரசில் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருந்தது.
இந்து இளைஞர் மன்றத்தின் ஆட்சிமன்றத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளர்கள்.
1965 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக்கட்சியுடன் அன்றைய அரசில் தமிழரசுக்கட்சியும் தமிழ்காங்கிரசும் இணைந்திருந்தபோது, இதே இந்து இளைஞர் மன்றம் அமைச்சர் மு. திருச்செல்வம், தந்தை எஸ். ஜே.வி. செல்வநாயகம், வி. தருமலிங்கம், ஈ.எம். வி. நாகநாதன் முதலானோரை கடற்கரை வீதியில் ஶ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து மேளதாளம் , குடை , கொடி ஆலவட்டங்கள், மாலை மரியாதைகளுடன் அழைத்துவந்து பாராட்டி விழாவெடுத்திருந்தது. நீர்கொழும்பு தொகுதியிலும் ஐ.தே.க. வேட்பாளர் குவின்டின் பெர்னாந்து அதிகப்படியான வாக்குகளினால் வெற்றியீட்டியிருந்தார்
அவ்வாறு இரண்டு வர்க்கமும் இணைந்து அந்த மண்டபத்தில் பெருவிழா எடுத்தவர்கள், எமது ஈழத்து இலக்கியவாதி மல்லிகை ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட மல்லிகை நீர்கொழும்பு பிரதேச இலக்கிய சிறப்பிதழை தங்கள் மண்டபத்தில் வெளியிடுவதற்கு அனுமதி தரவில்லை!
இது நடந்தது 1972 ஆம் ஆண்டில்.
இப்போது 2020 ஆம் ஆண்டு. இற்றைவரையில் அந்த தமிழ்த்தேசியவாதிகள், ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறாரகள் என்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம் !
அந்த மன்றம் அனுமதி தருவதற்கு மறுத்ததையடுத்து, எங்கள் பூர்வீக வீட்டில் அந்த நிகழ்ச்சியை நாம் நடத்தினோம். அதன் முகவரி : இலக்கம் 20, சூரியவீதி. நீர்கொழும்பு.
நீர்கொழும்பு பிரதேச இலக்கியவாதிகள் சிலருடன் நடந்த அச்சந்திப்பிற்கு ஜீவாவும் எழுத்தாளர் மு. கனகராஜனும் வருகை தந்தார்கள்.
நான் ஜீவாவுக்கு பெரிய மலர்மாலை அணிவித்து வரவேற்று உரையாற்றினேன். ஜீவா, அத்தகைய மரியாதையை விரும்பவில்லை என்பதை அவருடைய ஏற்புரை துலக்கமாக்கியது.
நானும் எனது தாய் மாமனார் மகன் முருகானந்தனும் 1963 இல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். ஸ்ரான்லிக் கல்லூரியில் ( இன்றைய யாழ். கனகரத்தினம் மத்திய கல்லூரி ) அனுமதிபெற்று, அங்கிருந்த ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்த காலத்தில், எமது ஆண்கள் விடுதியால் கல்லூரி பிரதான மண்டபத்தில் அவருக்காக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்கு, தூய வெள்ளை நிறத்தில் வேட்டியும் நேஷனலும் அணிந்து ஒரு துவிச்சக்கர வண்டியில் வந்து இறங்கி, நெற்றி நரம்பு புடைக்க தர்மாவேசத்துடன் பேசியவர்தான் டொமினிக்ஜீவா. அக்காலப்பகுதியில் அவர் மல்லிகையை ஆரம்பித்திருக்கவில்லை. எழுத்தாளர் – பேச்சாளர் என்ற அடையாளம்தான் இருந்தது.
அவர் அன்று தமது பேச்சில் ஆபிரகாம் லிங்கனைப்பற்றியும் சங்கானையில் நடந்த சாதிக்கலவரம் பற்றியும் பேசியதுதான் இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது.
அவரை மீண்டும், ஒன்பது ஆண்டுகளின் பின்னர் என்னையும் எழுத்தாளானாக அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தித்த அந்தத்தருணத்தை எவ்வாறு மறக்க இயலும்…?!
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், அரைக்காற்சட்டையுடன் அந்த மேடைக்குக்கீழே அமர்ந்து அவரது ஆக்ரோஷமான உரையை கேட்டிருந்த நான், அன்றையதினம் , அவர் போன்றே வெள்ளை வேட்டி அணிந்து அவருக்கு மலர்மாலை சூட்டி வரவேற்றுப்பேசியதை வாழ்வில் மற்றும் ஒரு திருப்பமாகவே பார்க்கின்றேன்.
எனது உரையில் கல்லூரி நினைவுகளைச் சொன்னதும், பரவசத்துடன் என்னையே பார்த்தார். அன்று தொடங்கிய இலக்கிய நட்புறவு இற்றை வரையில் நீடித்துத் தொடருகிறது.
அக்காலப்பகுதியில் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராசதுரை என்பவர், நீர்கொழும்பூர் பிரதான வீதியில் றோயல் சலூன் என்ற சிகையலங்கார நிலையம் நடத்திக்கொண்டிருந்தார்.
அவருடைய வீடு, அதற்குச்சமீபமாக கிறீன் வீதியில் அமைந்திருந்தது. ஒவ்வொரு மாதமும் மல்லிகை அச்சாகியதும், 300 இற்கும் மேற்பட்ட பிரதிகளை பொதிசெய்து கொழும்பு புறக்கோட்டை பழைய சோனகத்தெருவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் லொறிகளில் ஜீவா ஏற்றிவிட்டு, எனக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்புவார்.
அதில் தான் கொழும்பு வரும் திகதியும், மல்லிகை கொழும்புக்கு வந்திருக்கும் செய்தியும் தெரிவிக்கப்பட்டிருக்கும். நான் கொழும்பு சென்று அந்த அஞ்சலட்டையை காண்பித்து, பிரதிகளை பெற்று மல்லிகை விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு சேர்ப்பிப்பேன்.
ஜீவா, கொழும்பு வந்து சேர்ந்ததும், தங்கும் இடங்கள் மூன்று. அவை: மெலிபன் வீதியில் அமைந்திருந்த இலக்கிய ஆர்வலர் ஆ. குருசாமியின் வணிக வளாகக்கட்டிடம், தம்பையா அண்ணரின் --- குறுக்குத் தெருவில் அமைந்த ஓரியண்டல் சலூன், ஶ்ரீகதிரேசன் வீதியில் நண்பர்கள் செல்வம், இளவாலை மணியம் ஆகியோர் நடத்திய லீலா சலூன்.
1972 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடக்கத்தில் கொழும்பில் ஓரியண்டல் சலூனுக்கு அதன் உரிமையாளரும் பின்னாளில் மல்லிகை ஜீவாவின் சம்பந்தியானவருமான தம்பையா அண்ணரை பார்க்கச்சென்றிருந்தபோது, அவர் அருகிலிருந்த கோல்டன் கஃபேயிலிருந்து தேநீர் தருவித்து உபசரித்துவிட்டு, ஒரு கெஸட் ரேடியோவை இயக்கி, அமர்ந்து கேட்குமாறு சொன்னார்.
அந்தச் சலூனில் பணியாற்றுபவர்களும் சிகையலங்காரத்திற்கு வந்திருந்தவர்களும் அந்த வானொலியிலிருந்து வந்த குரலை செவிமடுத்தனர்.
யாரோ ஒருவர், எனது கனவுகள் ஆயிரம் சிறுகதையை சிலாகித்து, கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன்பிள்ளையின் செம்மீன் நாவலுடன் ஒப்பீடு செய்து பேசிக்கொண்டிருந்தார்.
செம்மீன் திரைப்படத்தையும் எனது பாடசாலை பருவத்தில் பார்த்துள்ளேன். அதன்பின்னர்தான் சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்பில் செம்மீன் நாவலையும் படித்தேன்.
அந்த வானொலியில் ஒலித்த குரல் எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.
“ அண்ணர்… யார் அவர்..? “ எனக்கேட்டேன்.
“ அவரது பெயர் ரத்னசபாபதி அய்யர். தபால் கந்தோரில் பணியாற்றுபவர். அவரும் இலக்கியவாதிதான். கதை, கட்டுரைகள் எழுதுபவர். ஜீவாவுக்கும் எமக்கும் நல்ல நண்பர். ஒருநாள் இங்கே வந்து, உங்கள் சிறுகதையை படித்துவிட்டு தாம் எழுதி, யாழ்ப்பாணத்திற்கு மல்லிகை காரியாலயத்திற்கு அனுப்பவிருந்த சிறிய வாசகர் கருத்துக்குறிப்பினை காண்பித்தார். எனக்கும் உங்கள் கதை பிடித்துக்கொண்டது. உடனே இந்த கெஸட்டை போட்டு, அய்யரை வாசிக்கச்சொல்லி பதிவுசெய்தேன். “ என்றார் தம்பையா அண்ணர்.
நான் என்றைக்குமே சந்தித்திருக்காத ஒருவர், எனது முதல் சிறுகதையை – அந்தக்கன்னி முயற்சியை படித்துவிட்டு பாராட்டி எழுதியும் பேசியும் இருக்கிறாரே..!
அதன்பிறகு ரத்னசபாபதி அய்யரை சில மாதங்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்.
மல்லிகை ஆண்டு மலர் 1972 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளிவந்தது. அதில் ரத்னசபாபதி அய்யர், தமது மனைவியின் பெயரையும் இணைத்து சுலோ அய்யர் என்ற பெயரில் அந்த வாசகர் கடிதத்தை எழுதியிருந்தார்.
அக்காலப்பகுதியில் எனக்கு அறிமுகமாகியிருந்த எழுத்தாளர்கள் மு. கனகராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரும் அக்கதையை படித்துவிட்டு என்னைச்சந்தித்தபோது பாராட்டினார்கள்.
கனகராஜன் அச்சமயம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழ் புதுயுகம் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார்.
தெளிவத்தை ஜோசப் கணக்காளராக மொடர்ன் கொன்ஃபக்ஷனரி வேர்க்ஸ் ( Star Brand Sweets ) நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
அவர்களிடமும் அந்த சுலோ அய்யரை விசாரித்தேன். நான் நீர்கொழும்பில் இருந்தமையால் அவரை எளிதில் சந்திக்கமுடியவில்லை.
ஒருநாள் வத்தளையிலிருந்த நண்பர் மு. கனகராஜன் என்னிடம் ஒரு
அழைப்பிதழ் பிரசுரத்தை தந்து, தான் வெளியூர் செல்வதாகவும், அந்த வார இறுதியில் கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெறவிருக்கும் பூரணி என்ற காலாண்டிதழ் வௌியீட்டு விழாவுக்கு செல்லுமாறும், அங்கே சென்றால், சிலசமயம் ஜீவாவும் வருவார், நீர் தேடிக்கொண்டிருக்கும் சுலோ அய்யரும் வருவார். அங்கே பார்க்கலாம் “ என்றார்.
நானும் மிகுந்த ஆவலுடன் காதலியைத் தேடி ஓடும் காதலன் போன்று கொழும்புக்குச்சென்றேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.
எனினும், அன்று நடந்த பூரணி இதழ் வெளியீட்டு அரங்கு எனது வாழ்வில் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்திவிட்டது.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நிகழ்ச்சி. பேசியவர்கள் பட்டியல்: எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம், வாமதேவன், என்.கே. மகாலிங்கம், மு. நேமிநாதன், சில்லையூர் செல்வராசன், மு. நித்தியானந்தன், கே. எஸ். சிவகுமாரன், மு. பொன்னம்பலம், தங்கவேல், கே.எஸ். பாலச்சந்திரன், க. சட்டநாதன், இரா. சிவச்சந்திரன் , ஈழத்து சிவானந்தன், இமையவன் ஜீவகாருண்யன். இவர்களுடன் இன்னும் பலர். ஜீவாவும் வருகை தந்திருந்தார்.
ஜீவாவைத்தவிர ஏனைய அனைவரையும் அன்றுதான் முதல் முதலில் சந்திக்கின்றேன். இவர்களில் சிலர் இன்றில்லை. அவர்களின் நினைவுகளை இன்றும் நெஞ்சில் சுமக்கின்றேன்.
பூரணி ஆசிரியர் குழுவில் சிலர் இணைந்திருந்தனர்.
பூரணி இதழை வாங்கிக்கொண்டு சிலருடன் பேசிவிட்டு, ஜீவாவுடன் திரும்பி, அவரது தங்குமிடத்தில் அவரை விட்டுவிட்டு இரவு ஊர்திரும்பிவிட்டேன்.
நான் தேடிச்சென்ற சுலோ அய்யரை காணமுடியாத ஏமாற்றம் பல நாட்கள் நீடித்தது.
அந்த வாரம் மீண்டும் நான் கொழும்பு சென்றிருந்தபோது, எதிர்பாராதவகையில் புறக்கோட்டை மெலிபன் வீதியில் மு. தளையசிங்கத்தைக்கண்டேன். நானாகவே அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். விவேகானந்தாவில் அவரது உரை சர்ச்சையை கிளப்பியிருந்தது. மு. நித்தியானந்தன் அவருக்கு தர்மாவேசத்துடன் எதிர்வினையாற்றினார்.
ஜீவா, தளையரை தனியாக அழைத்து ஒரு வகுப்பறையில் வைத்து தனது கோபத்தை காண்பித்தார். சற்று எட்டத்திலிருந்த எஸ். பொன்னுத்துரை அக்காட்சியைப்பார்த்து கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.
நான் ஏதும் புரியாமல் திரு திருவென விழித்தேன். அந்த அமளியிலும் தளையசிங்கம் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் அணிந்திருந்த கண்ணாடியூடாக அவருடை தீட்சண்யமான பார்வையை கூர்ந்து பார்த்தேன். எத்தகைய நெருக்கடியிலும் பதட்டப்படாத , கோபம்கொள்ளாத அவருடைய நிதானத்தைக் கண்டு வியந்தேன்.
மீண்டும் அவரை மறுநாள் எதிர்பாராமல் மெலிபன் வீதியில் கண்டதும், எனது அவதான அனுமானத்தை அவருடன் பகிர்ந்துகொண்டதும் எனது தோளைத்தட்டிச் சிரித்து, எனது ஊர்பற்றிக்கேட்டார்.
மெலிபன் வீதியில் பூரணியின் விளம்பரதாரர் ஒருவரைப்பார்த்துவிட்டுத் திரும்பிய அதன் ஆசிரியர் என்.கே. மகாலிங்கம், என்னை ஏற்கனவே கூட்டத்தில் சந்தித்து அறிமுகமாகியிருந்தமையால், மு. த. அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திவிட்டு, “ ஜூலை மாதம் முருகபூபதி எழுதியிருக்கும் கனவுகள் ஆயிரம் சிறந்த சிறுகதை. தொழிலாளர் – விவசாயிகள் – பாட்டாளிவர்க்கம் – சோஷலிஸ யதார்த்தப் பார்வையெல்லாம் பேசும் எங்கள் ஜீவாவின் மல்லிகையில், மேற்குக்கரையில் கடலோடு போராடும் மீனவ மக்களைப்பற்றிய கதை அது. அந்தப் பிரதேச மொழி வழக்கு எமது ஈழத்து இலக்கியத்திற்கு புதிய வரவு “ எனச்சொல்லிவிட்டு, “ முருகபூபதி , நீங்கள் எங்களது பூரணிக்கும் ஒரு சிறுகதை தரல்வேண்டும். எமது பூரணி காலாண்டிதழ். அதனால், நீங்கள் வசதிப்படும்போது எழுதி அனுப்பலாம் “ என்றார்.
அந்த வாரமே பூரணிக்கு அந்தப்பிறவிகள் என்ற எனது இரண்டாவது சிறுகதையை எழுதி தபாலில் அனுப்பினேன். அதனை முதலில் எனது கையெழுத்தில் படித்தவர் மு. கனகராஜன். இடம்: பொரளை கொட்டா வீதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம், புதுயுகம் ஆசிரிய பீடம்.
அந்தப்பிறவுகள் சிறுகதையை பொரளை தபால்கந்தோரில்தான் கடித உறையும் அஞ்சல் தலையும் வாங்கி தபாலில் அனுப்பினேன்.
அங்கு நடந்து செல்லும்போது, நண்பர் கனகராஜன், “ பூபதி… அதே நீர்கொழும்பு மீனவ மக்களின் பேச்சு வழக்கில் எங்கள் புதுயுகத்திற்கும் ஒரு சிறுகதை தாருங்கள் “ என்றார்.
“ ஆகட்டும் பார்க்கலாம் “ எனச்சொல்லிவிட்டு விடைபெற்றேன். சுலோ அய்யரை தேடும் படலமும் தொடர்ந்தது.
ஒரு சில மாதங்களுக்குப்பின்னர், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவிருந்த ராஜேஸ்வரி பவனில், பூரணி இரண்டாவது இதழைக் கண்டேன். முகப்பு அட்டையில் எனது பெயரும் சட்டநாதனின் பெயரும் இருந்தன. இருவரது சிறுகதைகளும் அவ்விதழில் வெளியாகியிருந்தன.
எனக்கு பேராச்சரியம். அந்தப்பிறவிகளையும் அந்தத் தரமான பூரணி இதழ் ஏற்றுக்கொண்டுவிட்டதே என்ற இன்ப அதிர்ச்சி.
எனினும் , அது வெளிவந்து சில வாரங்களில் என்னைத்தேடி ஒரு அதிர்ச்சிதரும் கடிதம் வந்திருந்தது. அது பற்றி அடுத்த அங்கத்தில் சொல்கின்றேன்.
நான் தேடியலைந்த சுலோ அய்யர் என்ற ரத்னசபாபதி அய்யர் மல்லிகை 1972 ஓகஸ்ட் இதழில் அப்படி என்னதான் எழுதியிருந்தார்! என்பதை பாருங்கள்:
“ கனவுகள் ஆயிரம் - என்ற சிறுகதை மிகவும் சிறந்தது. நீர்கொழும்பு மீனவ மக்களை வைத்து எத்தனையோ சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். ஆனால், கனவுகள் ஆயிரம் போல், நீர்கொழும்பு மீனவ மக்களின் பேச்சுத்தமிழை அவர்களின் எண்ணங்களை சிந்தனைகளை வாய்ப்பேச்சுக்களை எல்லாம் சிறப்பாக பேனாவினால், சிறைப்பிடித்து இருக்கிறார் முருகபூபதி. பிரபல நாவலான செம்மீனின் ஆரம்பத்தை இது ஒத்து இருக்கிறது என்று நினையாமல், கேரளத்தில் ஆலப்புழை கடற்கரை என்றால் என்ன, ஈழத்தில் நீர்கொழும்பு கடற்கரை என்றால் என்ன, மீனவ மக்களின் இயல்புகள் அனைத்தும் ஒன்றுதானே…! ஆகவே இது மீனவக்கதைக்கு அருமையான ஒரு ஆரம்பமே ! “
அன்று நான் ஓரியண்டல் சலூனிலிருந்து கேட்ட வசனங்கள் அவை. அவர் மேலும் ஏதோவெல்லாம் சொல்லியிருந்தார். எனினும் ஜீவா மல்லிகையின் பக்கங்களை கவனத்தில் கொண்டு சுருக்கமாக வெளியிட்டிருந்தார்.
பாடசாலை மாணவனின் பயிற்சிக்கொப்பியில் ஆசிரியர் எழுதும் நற்சான்றிதல் குறிப்பினை ஒத்ததாக சுலோ அய்யரின் வரிகள் எனக்கு ஊக்கமளித்தன.
அவர் தமது குடும்பத்தினருடன் கொட்டாஞ்சேனையில் சப்பாத்து வீதி முடியும் சந்தியில் ஒரு வீட்டில் குடியிருக்கிறார் என அறிந்துகொண்டு, தேடிச்சென்றேன். அந்த வீதியில்தான் இலக்கம் 35 இல் ‘ பூரணி ‘ என். கே. மகாலிங்கம் அவர்களும் குடும்பத்தினருடன் வசித்தார். அதுவே பூரணியின் அலுவலகமும் ஆகும்.
ஒருநாள் அவரைச்சென்று பார்த்துவிட்டு, சுலோ அய்யரைத் தேடிச்சென்றேன். மாலை மயங்கிவரும் வேளை.
ரத்னசபாபதி அய்யர் அன்றும் இல்லை. அவரது துணைவியார் சுலோசனாவிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி அவர்களுக்கு பிறந்த அழகிய பெண்குழந்தை என்னைப்பார்த்து சிரித்தது.
எனது கனவுகள் ஆயிரம் கதையின் நாயகியும் நாயகனும் நினைவில் சஞ்சரித்து, அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இதுபோன்ற ஒரு அழகிய குழந்தையை அவர்களுக்குத் தராமல் சோகரசத்துடன் அக்கதையை முடித்துவிட்டேனே என்று எனது மனதிற்குள் விம்மினேன்.
அன்றைய தினமும் நான்தேடிச்சென்ற ரத்னசபாபதி அய்யரை சந்திக்கமுடியாமல் திரும்பினாலும், என்னைப்பார்த்து பொக்குவாய் திறந்து சிரித்த அவருடைய மூத்த பெண் குழந்தையை நீண்ட பல வருடங்களின் பின்னர், திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளின் தாயாக திருமதி பானு ஶ்ரீகௌரி சங்கராக அவுஸ்திரேலியா மெல்பனில் கண்டதும் இன்ப அதிர்ச்சியடைந்தேன்.
கொழும்பில் மற்றும் ஒருநாள், எதிர்பாராதவகையில் நான் சில மாதங்களாகத் தேடி அலைந்த ரத்னசபாபதி அய்யரை, ஒரு சைவ ஹோட்டலில் சந்தித்தேன். நாம் ஒரே மேசையில் அமர்ந்து சிற்றுண்டி உண்ணும் வரையில் எமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது.
வெயிட்டர் வந்து, அவரைப்பார்த்து, “ என்ன அய்யா…? அம்மா ஊருக்குப்போய்விட்டார்களா..? “ எனக்கேட்டார்.
உடனே அவர், “ ஓமடா தம்பி… அவ பிள்ளையோடு ஊருக்குப்போயிருக்கிறா. அவ இருக்கும் வரையும் சுலோ… சுலோ… என்று எதற்கெடுத்தாலும் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது, ராஜேஸ்வரி, லக்ஷ்மி, வாணி, அம்பாள் என்று அலைகின்றேன் “ என்றார்.
அந்த வெயிட்டருக்கும் எனக்கும் சிரிப்பு வந்தது. அவர் சொன்ன பெயர்கள் அனைத்தும் கொழும்பில் இயங்கிவந்த சைவ ஹோட்டல்கள்.
அந்தப்பெயர்களை உச்சரிக்கமுன்னர் சொன்னாரே ஒரு பெயர் சுலோ…! அந்தப்பெயரில் கொழும்பில் எந்தவொரு சைவ ஹோட்டலும் இல்லை.
“ அய்யா… உங்கள் பெயர்…? “ எனக்கேட்டேன்.
அவர் வடையை சாப்பிட்டவாறு, “ ஏன்… கேட்கிறீர்…? என்ர பெயர் ரத்னசபாபதி. உம்முடைய பெயர்…. ? “
“ நான் முருகபூபதி “ என்றேன்.
வாயிலிருந்த வடையை எடுத்து இலையில் வைத்துவிட்டு, “ நீர்கொழும்பா…? “
“ ஓம்…. “
“ என்ன…!? அந்த கனவுகள் ஆயிரம் முருகபூபதியா…? “
இதற்குமேல் நான் என்னதான் எழுதுவது…?
அன்று 1972 ஆம் ஆண்டு முதல், என்னோடு சக இலக்கிய பயணியாக தொடர்ந்து வந்து, இம்மாதம் (2020 ) ஜூலை 13 ஆம் திகதி எனது பிறந்த தினத்தன்று மாலை அவரும் அவருடைய துணைவியாரும் லண்டனிலிருந்து தொலைபேசியுடாக வாழ்த்துக்கூறினார்கள்.
இந்தப்பாக்கியம் எனக்கு எவ்வாறு சித்திக்கிறது அன்பர்களே!?
ஒரு குடும்ப உறவினராக 48 வருட காலமாகப் பழகிவரும் ரத்னசபாபதி அய்யர் அவர்கள், எனது முதல் கதையை படித்துவிட்டுத் தந்த ஊக்கமாத்திரைதான் இன்றளவும் எனது இலக்கிய வாழ்வுக்கு உயிர்ச்சத்தாகவே நிறைந்துள்ளது.
அவருடனான இலக்கிய நேசம், இற்றை வரையில் உயிர்ப்புடன் நீடிக்கிறது. அவருடைய புதல்வி – நான் 1972 இல் குழந்தையாக பார்த்துச்சிரித்த பானு இன்று எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். அவருடைய கணவர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர்தான் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் !!
இனிச்சொல்லுங்கள்….
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே எமது வாழ்க்கை !
இந்தப்பதிவில் ரத்னசபாபதி அய்யரையும் அவருடைய மனைவி சுலோசனா, மகள் பானு, மருமகன ஶ்ரீகௌரி சங்கரையும் எமது இலக்கிய குடும்பத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
( தொடரும் )
No comments:
Post a Comment