16/07/2020. இன்று ஆடிப்பிறப்பு தினமாகும்.
ஈழத்தவரின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பு மிக முக்கியமானதொரு பண்டிகை. இந்தத் தினத்தை நினைத்தால் “தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தமானந்தம் தோழர்களே” பாடலும், “ஆடிக் கூழும்” நினைவில் மிதக்கும்.
இந்த நிலையில் ஒரு புதுமையானதொரு பகிர்வோடு வந்திருக்கிறோம். இந்தப் பகிர்வில் தாயார் அனுராதா பாக்யராஜா அவர்கள் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை” பாடலைப் பாட, கானா பிரபாவின் “ஆடிப்பிறப்பு நனவிடை தோய்தலையும்”, “ஆடிக்கூழ்” செய்முறையையும் மகள் சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களும் பகிர்கிறார்கள்.
கலாபூஷணம் திருமதி அனுராதா பாக்யராஜா அவர்கள் சிறுகதை, நாடகம், ஆன்மிகக் கட்டுரைகள் என்று இலக்கிய உலகில் தடம் பதித்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிக் கலைஞர், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினர் நடத்திய “இலங்கை நாட்டுப் பாடல்” போட்டியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில் முதலிடத்தில் வந்த பெருமைக்குரியவர்.
சங்கீதா தினேஷ் பாக்யராஜா இலங்கையின் தனியார் வானொலி யுகத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக, நாடக நடிகையாகத் தனக்கென அடுத்த தலைமுறை வானொலி ரசிகர் வட்டத்தைச் சம்பாதித்தவர்.
ஒரு நாளைக்குள் தீர்மானித்து அணுகிய போது தாயும், மகளுமாக எவ்வளவு அழகாக இந்த ஆடிப்பிறப்புப் பகிர்வைக் கொடுத்திருக்கிறார்கள் என்றுணர்து வியந்தேன், நீங்களும் அதை ரசியுங்கள்.
No comments:
Post a Comment