கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 22 “ தளிரொன்று எழுங்கால் சருகொன்று உதிர்ந்தே கழியும் ! “


தமிழ் ஆராய்ச்சி சார்ந்த எந்தவொரு மாநாடுகளுக்கு நான் பேசுவதற்கு சென்றாலும், மருத்துவத்தமிழ் முன்னோடி கிறீன் பற்றி உரையாற்றுவது எனது வழக்கம்.
அவ்வாறு நான் சென்ற ஒரு நாடுதான் மொரிஷியஸ் தீவு.  இது ஆபிரிக்கா கண்டத்துக்கு அருகில் இருக்கும் அழகிய தீவு.
பூகோளத்தில் இதற்குரிய இடம் சிறிதாக இருந்தாலும் கீர்த்திமிக்க நாடு.  இங்கும்  தமிழர்கள் வாழ்ந்தார்கள் தமிழும்  வாழ்ந்தது.
இந்தத்தீவுக்கும் செல்வதற்கு எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த நாட்டைப்பற்றி நீங்கள் மேலும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு இணையங்கள் தற்போது  உதவுகின்றன.
நான் பாப்புவா நியூகினியில் இருந்த காலப்பகுதியில், 1989 ஆம் ஆண்டு, மொரிஷியஸ் தீவிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
அப்பொழுது நான், பாப்புவா நியூகினியில் கணித பாடத்துறையில் தலைமைப்பொறுப்பிலிருந்தேன்.
அந்த அழைப்பினை ஏற்று ,  “ ஆம்… நான் வருகிறேன்  “ எனத்தெரிவித்துவிட்டு, ஒரு கட்டுரை எழுதுவதற்கும் தயாரானேன்.
எனது பணியிலிருந்து இரண்டு வாரகாலம் விடுமுறை பெற்றுக்கொண்டு, அங்கே சென்றேன்.
அங்கு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அங்கே நான் சந்தித்த ஒருவர், அந்த  மாநாட்டிற்குப்பொறுப்பாக 
இருந்தார்.
அவர் அச்சமயம் அந்த நாட்டின் கல்வி அமைச்சர். அவருடைய பெயர்  ஆறுமுகம் பரசுராமன்.
அங்கு சென்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் தங்குமிட வசதிகளுட்பட அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.
அந்த மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
அவரது அமைச்சின் அதிகாரிகள் பலருடனும் நான் கலந்துரையாடியபோது நான் அறிந்த விடயங்களால் நான் வேதனையுற்றேன்.
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், அந்தத் தீவிற்கு இந்தியாவிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட தமிழ் மக்களின் சந்ததியினர்தான் அங்கு வாழும் தமிழ் மக்கள். ஏன் இதனை இங்கே குறிப்பிடுகின்றேன் என்று நீங்கள் சிந்திக்கக்கூடும்.
இந்தியாவிலிருந்து சென்ற தமிழ்மக்கள், அங்கும் தமிழராகத்தானே வாழ்ந்திருப்பார்கள்! இதில் என்ன அதிசயம் இருக்கிறது..? என்று நீங்கள் எண்ணவும் கூடும்!
அவர்கள் தமிழ்பேசாத தமிழர்களாக வாழ்கிறார்கள்! இதுதான் அதிசயம்!
அங்கே அந்தத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து எடுத்துச்சென்ற சைவசமயம் வாழ்கிறது. ஆனால், அவர்களின் தாய்மொழி படிப்படியாக மறைந்துவிட்டது.
அவர்களின் பெயர் தமிழில்தான் இருக்கிறது.  அவர்களின் புழக்கத்திலிருக்கும்   நாணயத்தாள்களில்  தமிழ் வாழ்கிறது! ஆனால், அவர்களின் நாவில் தமிழ் இல்லை!
அந்தக்கொடுமையை நேரில் பார்த்து மனம் மிக வருந்தினேன்.
அந்த வேதனையிலிருந்து நான் விடுபடுவதற்காக, எனது தரிசனத்தை கவிதையாக வடித்தேன்.
இதுபற்றி தமிழ்நாடு அறிவியக்கப்பேரவையின் அமைப்பாளராக விளங்கிய பேராசிரியர்  முனைவர் சாலை இளந்திரையன்,  எனது அம்பி கவிதைகள் நூலில் எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு வளர் சைவ ஆலயம் பூசைகள்
    ஆசிபுரிதல் இன்பம் – எங்கள்
இன்பத் தமிழ்ப் பெயர் சொந்தப்பரம்பரை
     சொல்லி வளர்தல் இன்பம் – ஆயின்
 ஏய்த்துத் திரிவதென்னே ! – தமிழ்
  மன்பதை வாயை மறந்து தமிழ்
          மாயம் புரிவதென்னே…!
என்பது எனது கவிதை வரிகள்.
 இக்கவிதையை  படித்திருக்கும் சாலை இளந்திரையன்  இவ்வாறு   சொல்கிறார்: 
 “  மொரீஷியஸ் நாட்டிலுள்ள  75 ஆயிரம் தமிழர்கள், தமிழ்ப்பண்பாட்டில் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் தாய்மொழி தமிழைப் பேச முடியாதவர்களாகிப்
போனார்கள்,  என்பதை ஏக்கம் அளாவிய சொற்களில் இப்படி எடுத்துக்காட்டுகிறார் அம்பி.
ஆயினும் அங்கே நடைபெறும் தமிழ் மீட்பு முயற்சிகளையும் கவிஞர் மறந்துவிடவில்லை. அந்த முயற்சிகளின் விளைவு வெற்றியாக கனியவேண்டுமே என்னும் ஆர்வப்பெருக்கில் சில கேள்விகளை அடுக்குகிறார் அவர்:
ஓடித் திரிகிற பாலகர் நெஞ்சிலே
 ஒன்றித் தமிழ் வருமா..? – தினம்
பாடித்திரிகிற பாவையர் நாஇசை
பண்ணில் தமிழ் வருமா..? – பாடி
ஆடிக் களிக்கிற ஆடவர் வாயிலே
ஆர்த்துத் தமிழ் வருமா..? – அன்பில்
கூடிக் களிக்கிற சோடிகள் ஊடலில்
கொஞ்சித் தமிழ் வருமா..?
இவ்வாறு கவிஞர் அம்பி தனது ஏக்கத்துடன் அக்கவிதையை முடிக்கிறார். 
மொரீஷியஸ் நாட்டில் நான் நின்ற நாட்களில், அங்கே தமிழ்மொழியை மாணாக்கருக்கு கற்பிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்ததையும்  அவதானித்தேன்.
தமிழ்ப்பள்ளிகள் உயிர்ப்புடன் இருப்பதையும் தெரிந்துகொண்டேன்.  தமிழ்க்கல்விப்பணியில்  ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் சிலரையும் சந்தித்து கலந்துரையாடி, அங்குள்ள நிலைமைகளையும் அறிந்துகொள்ளத்தவறவில்லை.
அவர்களை நான் சந்திக்கச்சென்றபோது, இருமருங்கும் வரிசையாக நின்று என்னை வரவேற்றார்கள்.
தமிழ்மொழி கற்பிக்கும்  அந்த ஆசிரியர்களில்  சிலருடன்  நின்று படங்களும் எடுத்துக்கொண்டேன். அவர்கள் தமது ஆர்வத்தையும், தாம் எதிர்நோக்கும் சிரமங்களையும் கூறினார்கள். பன்நெடுங்காலமாக அங்கே அலட்சியப்படுத்தப்பட்ட தமிழ்மொழிக்கு புத்துயிர்ப்பு வழங்கி வளர்ப்பது பெரும் பணி. பெரும் சிரமம்.
எது எப்படி இருந்தாலும் தமது சைவசமயப்பணிகளை செவ்வனே பேணிவருகின்றனர்.
அங்கே ஆலயங்களில் கிரமமாக பூசைகள், சமய விழாக்கள் நடக்கின்றன.
இலக்கியத்தில் கவிதை மட்டுமல்ல, ஏனைய ஆக்க இலக்கியங்களும் மனதில்  தேங்கும் சுமைகளை இறக்கிவைக்கத்தக்க சுமைதாங்கிகள் அல்லவா..?
நான் கவிஞானகிவிட்டிருந்தமையால், அச்சுமைகளை இறக்கிவைப்பதற்கான ஊடகமாக கவிதையை பயன்படுத்தினேன்.
அக்கவிதைகள் சிலவற்றையும் எனது அம்பி கவிதைகள் நூலில் சேர்த்துள்ளேன். அவற்றையும் படித்திருக்கும் முனைவர் சாலை இளந்திரையன் தனது மதிப்பீட்டை மனந்திறந்து அணிந்துரையாக எழுதியிருந்தார்.
அத்துடன் கிறீனின் அடிச்சுவடு என்ற எனது நூலும் தம்மை பெரிதும் கவர்ந்தது எனவும் எழுதினார்.
அதனை அவரது எழுத்திலேயே இங்கே பதிவிடுகின்றேன்:
அம்பி கவிதைகள் என்னும் புத்தகத்துக்கு நான் அணிந்துரை வழங்கவேண்டுமென்று தோழர் எஸ்.பொ. கேட்டுக்கொண்டபோது, நான் சற்றே வியப்படைந்தேன்.                          “ அம்பியா..? கவிஞரா..? எந்த அம்பி..? “  என்னும் கேள்விகள் என் உள்ளத்தில் குமிழியிட்டு எழுந்தன. காரணம் அம்பி என்னும்             இ. அம்பிகைபாகன் அவர்களை ஒரு கவிஞராக நான் இதயத்தில் இருத்திக்கொண்டிருக்கவில்லை. அவருடைய                      “ அம்பிப்பாடல் “ என்னும் சிறுவர் இலக்கிய நறுமலரை நன்கு அறிந்தவன்தான். கவியரங்குகளில் அம்பி பங்கேற்கிறார் என்பதையும் அறிந்தவன்தான்.
தமிழ் உலகின் ஈடுஇணையற்ற இலக்கியத் திறனாய்வாளரான மாமனிதர் இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்களால்  “ ஈழத்துப்பேனா மன்னர்களுள்  “ ஒருவராக ஏற்றெடுத்துப் பாராட்டப்பட்ட அம்பியையும் அறிந்தவன்தான்.
ஆனாலும், 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற  நாலாவது உலகத்தமிழ் ( யாழ்ப்பாண ) மாநாட்டின்போது, என் கைக்குக்கிடைத்த கிறீனின் அடிச்சுவடு   என்னும் புத்தகம் அம்பியின் மற்றச்சாதனைகளையெல்லாம் பின்னுக்குத்தள்ளி விட்டு, என் நெஞ்சத்தில் நிமிர்ந்து எழுந்து நிற்கிறது.
இன்று அம்பி கவிதைகள் படிக்கக் கிடைத்தபின், நான் அவ்வாறு எண்ணியது சரியே என்பது வலுவாக உறுதிப்பட்டுள்ளது. “  தளிரொன்று எழுங்கால் சருகொன்று உதிர்ந்தே கழிவதுபோல், பழமை கழிந்து புதுமை மலர்ந்து இப்புவி வளரும் – எழுமின் விழிமின் என உள்ளச்சேவல் குரல் கொடுக்கப் பொழுது புலரும் – புதுநாள் மலரும், மரபு அதுவே !”  என்று நம்பிக்கை குரல் கொடுக்கிறார் இந்தக்கவிஞர்.
 “ஒன்று பழுத்தால் இரண்டு தளிர்க்கும் உறுதியை எண்ணாமல் நான், “ ஓகோ நித்தம் அநித்தியம் “ என்றே ஓலம் இடுவேனோ..?  “ என்று உறுதிக்குரல் கொடுக்கிறேன் நான். இந்த ஒற்றுமை வளையத்துக்குள் வந்துவிட்ட அம்பிக்கவிஞரை வேற்றாளாகக் கருதி நான் பாரட்டுச்சொற்களை அடுக்கலாமா..? கூடாது ! எனவே, மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் ஏனைய தமிழர்களுக்கும் அம்பி கவிதைகள் படிக்கக்கிடைத்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்  “
இவ்வாறு பேராசிரியர் முனைவர்  சாலை இளந்திரையன் எனது நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தார்.
இன்று உண்மை புலனாகிறது !
( தொடரும் )







No comments: