'பத்துத்தலை படும் பாடு' - பகுதி 1: -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-
🌻 🌻 🌻
ராமர் கோயில் - பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பு வந்து, இராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டலாமென, ஒரு படியாய் இந்தியா அமைதியடையத் தொடங்குகையில், புதிய பிரச்சினையொன்று அவதாரம் எடுத்திருக்கிறது.
இந்த முறை நேபாளத்திலிருந்து,
அந்நாட்டு பிரதமர், 'இந்தியாவிலிருப்பது அல்ல அயோத்தி, உண்மையில், நேபாளத்தில் இருப்பதுதான் அயோத்தி, இராமன் நம்மவன்' என்பதாகக் கருத்துக்கூற, அக்கருத்து இந்தியாவை அதிர வைத்திருக்கிறது.

இந்தியத் தலைவர்கள், அறிஞர்கள் பலரும் நேபாள பிரதமரின் கருத்தைக் கண்டித்த வண்ணம் இருக்கின்றனர். மூத்த தலைவர் ஒருவர், 'நேபாளப் பிரதமருக்கு மனநலம் சரியில்லை, அவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்' என்கிறார்.

இது எவ்வளவோ பரவாயில்லை, நம் நாட்டுக் கூத்துகளோடு ஒப்பிடும்போது.
அங்கே, நடையில் நின்றுயர் நாயகனான இராமன், எங்களவன், அவன் பிறந்த இடம் எங்களது என்று போட்டி.
இது வழமையே. 
சாதனை செய்த ஒருவனை, தங்களவனாகக் காட்டும் விருப்பு ஒவ்வொரு இனத்துக்கும் - ஒவ்வொரு தேசத்துக்கும் இருப்பது இயல்புதான். 
🌻 🌻 🌻 

ஆனால், இலங்கையில் நடப்பதோ, கதாநாயகனுக்கான போட்டி அல்ல, இது, வில்லனுக்கான போட்டி. கடும் போட்டி.
அதுவும் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து – தன் காம இச்சைக்காக – தன் குடும்பத்தை மட்டுமல்லாமல் தேசத்தையே அழித்த ஒரு வில்லனுக்கான போட்டி.
கீழ்மைக் குணம் உடைய ஒருவனை சாதாரணமாகக் குடும்ப அளவில் கூட – யாரும் உறவாக உரித்துக் கொண்டாட விரும்புவதில்லை. அப்படியான ஒருவனை நமக்குத் தெரியாதது போலவே நாம் நழுவி விடுவதே வழமை.

ஆனால், என்னே முரண்! 
அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து குல நாசம் செய்த ஒருவனை, எம்மவன்! எம்மவன்! என்று கொண்டாட இங்கோ எத்தனைபேர், எத்தனை இனத்தவர்.
அவர்கள் அனைவரும் படித்தவர்களாம்(?). அதுதான் கொடுமை!
அதுவும் தேர்தல் காலமாகிய இப்போது, வாழும், நாயகர்களை விடவும், மேடைகள் தோறும் இந்த வில்லன் பெயர்தான் அதிகளவில் உச்சரிக்கப்படுகின்றது.
வில்லனைச் சொந்தங் கொண்டாட வேண்டிய தேவை என்ன?  ஏன் அவன் இன்று மேடையெல்லாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான்?
🌻 🌻 🌻
ஒரு நாட்டிற்கான ஓர் இனத்தின் உரிமையைத் தீர்மானிப்பவை எவை? 
ஒன்று பெரும்பான்மையாக வாழும் நிலை. இந்தப் பெரும்பான்மைப் பலம் தேசத்தின் உரிமையில் முக்கிய தாக்கம் செலுத்துவது. இதற்கு உதாரணம் தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. நம் நாடே அதற்குத் தக்க எடுத்துக்காட்டு.
பெரும்பான்மைக்கு முன்னுரிமை... கல்வி, வேலைவாய்ப்பு என்று எல்லா இடங்களிலும் முகங் காட்டி, இன்று பெரும்பான்மை விரும்பினால்தான் அரசியல் தீர்வு என்ற அளவுக்கு அது வந்து விட்டிருக்கிறது. 

ஒரு நாட்டின் உரிமையைத் தீர்மானிக்கும் இரண்டாவது தன்மை வரலாற்றுத் தொன்மையாகும்.
இத்தொன்மைதான் முன்பு கூறப்பெற்ற பெரும்பான்மையை விடவும் அதிகம் முக்கியமானது. 
ஒரு நாட்டில் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றமைக்கான வரலாற்றுத் தொன்மையே ஒரு தேசத்தின் மிக மூத்தகுடி எனும் அங்கீகாரத்தை வழங்கி, அத்தேசத்துக்கு உரிமையாக்கும் மிக இன்றியமையாத விடயமாகும். 
பல நாடுகளில் இன்று வாழும் பெரும்பான்மை இனங்கள் அல்ல, அவ்வந் நாடுகளின் தொன்மைக் குடிகள். ஆனால், அத்தகைய நாடுகளில் இன்றைய பெரும்பான்மையினர், அத்தொன்மைக் குடிகளுக்குரிய உரிமையை உணர்ந்து பெயரளவிலேனும் அவற்றை வழங்கியே, தாம் தம் உரிமையைப் பின்னமைத்துக் கொண்டாடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியாவைக் காட்டலாம். அங்கு இன்று பெரும்பான்மையாக வாழ்பவர்கள் வெள்ளையரே எனினும், நாட்டின் பழங்குடி மக்களான 'அபோரிஜீன்ஸ்' தான் நாட்டுக்கு உரிமையானவர்கள் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஒத்துக் கொள்கின்றனர்.
எந்தவொரு பேச்சையும் ஆரம்பிக்கும் முன்பதாக, 'இந்நாட்டுக்கு உரித்தான மூதாதையர்களுக்கு வணக்கம்' என்று சொல்லித் தொடங்கும் நாகரிகம் அவுஸ்திரேலிய மக்களிடம் உண்டு.
🌻 🌻 🌻
இங்கேதான், இலங்கையில் பெரும்பான்மையினர்களாகிய சிங்களவர்கள் பெரிதும் வேறுபடுகின்றனர்.
அவர்கள் பெரும்பான்மையால் வந்த உரிமை கொண்டவர்கள். ஆனால், இலங்கையின் மூத்த குடிகள் அல்லர்.
இதனை, அவர்களது வரலாற்றைக் கட்டமைக்கின்ற 'மகாவம்சமே' எடுத்துக் கூறுகின்றது. 
விஜயனுடைய வருகையோடுதான் சிங்கள இனத்தின் வரலாறு தொடங்குகிறது என்பது நூல் தரும் செய்தி. 
'அந்த விஜயன் வந்தபோது இந்நாடு பாலைவனமாக இருந்தது, விஜயன்தான் காடு திருத்தி மேடாக்கினான்' என்றெல்லாம் இல்லை. அவன் வந்தபொழுதே இந்நாடு மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வளமான பூமியாக இருந்தது. 

யார் வளப்படுத்திய அந்த அவர்கள்?
ஆக, இந்த நாட்டின் மூத்த குடி தாம் அல்ல, தாம் வந்தேறியவர்கள் என்பதை இன்றைய பெரும்பான்மையினர் நன்கறிவார்கள். அதனைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நடுநிலைமையாளராகிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண அவர்கள் சென்ற வாரமும் கூறியிருந்தார்.
எனவே, அவர்களது இனத்தின் முதல் மனிதன் இந்நாட்டின் கரையில் வந்திறங்கியபோது, இங்கே வாழ்ந்த இத்தேசத்தின் ஆதி மனிதன் பேசிய மொழி யாது? அவனது இனம் யாது? - இந்தக் கேள்விகள்தாம் அவர்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன.

அடுத்து, பௌத்தமும், அசோகர் காலத்தில் இங்கு மகிந்த தேரரால் கொண்டுவரப்பட்டது என்பதையும், அவர்கள் மறுப்பதில்லை. ஆண்டுதோறும் அதை மறவாமல் கொண்டாடியும் வருகிறார்கள்.
இந்நிலையில் எழும் அடுத்த கேள்விகள் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஊட்டுகின்றன. 'மகிந்ததேரர் வரும்வரை இலங்கையில் வாழ்ந்து வந்த பழைய குடிகள் பின்பற்றிய சமயம் யாது?' என்பது முதல் கேள்வி.

'விஜயன் வந்தபொழுது, இந்நாட்டின் பல பாகங்களிலும் இருந்த வழிபாட்டுத் தலங்கள் எச்சமயத்திற்கு உரியன?' இது அடுத்த கேள்வி.
இத்தகைய கேள்விகளுக்கு, பதிலற்ற பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களுடைய கடைசித் தஞ்சமாகத்தான், 'இராவணன் சிங்களவன்' எனும் கோசத்தைக் கொள்ள முடியும்.

தமது இனத்தின் வரலாற்றை விஜயனிலிருந்து தொடங்குவதும், தமது சமயத்தின் வரலாற்றை மகிந்ததேரரிடம் இருந்து தொடங்குவதும் தமது தொன்மையைப் பறைசாற்ற வல்லன அல்ல என்பதைப் புரிந்து கொண்டு விட்டபின்னர், விஜயனை விட ஒரு மிகப்பழமையான 'வரலாற்றுப் புருஷன்' ஒருவன் அவர்களுக்கு மூதாதையாகத் தேவைப்பட்டான். 

அப்படி அவர்கள் தேடியபொழுது, இலங்கை பற்றிய தொன்மையான புராணங்களில் வரும் ஒருவனான இராவணன் அவர்கள் கண்ணுக்குத் தென்பட, அந்த இராவணனை – அவன் வில்லனே எனினும் 'தம் முன்னோன்'  என அவர்கள் இன்று மார்தட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இங்கு, பரிதாபத்திற்கு ஆளானவன் விஜயன்தான். 
இத்துணை காலமும் 'சிங்கள இனத்தின் பிதாமகன்' எனக் கொள்ளப்பட்டு வந்த முக்கியத்துவம் அவனிடமிருந்து வலிந்து பறிக்கப்பட்டு, சொந்த அடையாளங்கள் அழிக்கபட்ட இராவணனுக்கு அவன் சம்மதமின்றியே அணியப்படுகின்றது.

🌻 🌻 🌻
(தொடரும்)
நன்றி - உகரம் |இந்தவாரச் சிந்தனை (15.07.20) | பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் | www.uharam.com


No comments: