( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய தொடர் ஆய்வரங்கில், மெல்பனிலிருந்து காணொளியூடாக சமர்ப்பிக்கப்பட்ட உரை )
முருகபூபதி
நாம் வாழும் அவுஸ்திரேலியா பயண இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளதையும் நாம் கவனித்தல் வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து சென்றிருக்கும் இதயம்பேசுகிறது மணியன் ஆஸ்திரேலியப் பயணக்கதையை எழுதியவர். ஆனந்தவிகடனில் துணை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பல நாடுகளுக்கும் சென்றுவந்திருக்கும் அவர், இதயம்பேசுகிறது என்ற தலைப்பில்தான் அந்தத் தொடரை எழுதிவந்தார்.
அதனால் அவரை வாசகர்கள் இதயம்பேசுகிறது மணியன் என்றே அழைத்தனர். அவருடைய அந்த பயண இலக்கியத் தொடருக்கு வாசகரிடம் நல்ல வரவேற்பிருந்தமையால், பின்னாளில் அவர் ஆனந்தவிகடனிலிருந்து வெளியேறி இதயம் பேசுகிறது என்ற பெயரிலேயே வார இதழும் நடத்தியவர் என்பதை அறிவீர்கள்.
அவர் சிங்கப்பூர் மார்க்கமாக வந்து எழுதிய தொடர்தான் ஆஸ்திரேலிய – சிங்கப்பூர் பயண இலக்கியம்.
உங்களில் பலருக்கும் நன்கு தெரிந்தவர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமன். இவருடைய நாவல்கள், சிறுகதைகள் தற்போதும் இலக்கிய உலகில் பேசுபொருளாக விளங்குகின்றன. இவருடைய கதைகள் நாலுவேலி நிலம், மோகமுள் என்பன திரைப்படங்களாகியுள்ளன.
இவர் எழுதிய புகழ்பெற்ற அம்மா வந்தாள் நாவல், Appu’s Mother என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, குஷ்வந்த் சிங் ஆசிரியராக பணியாற்றிய Illustrated Weekly என்ற இதழிலும் வெளியானது.
இவர் தமது ஜப்பானிய பயணம் தொடர்பாக உதயசூரியன், சோவியத் பயணம் தொடர்பாக கருங்கடலும் கலைக்கடலும், தென்னிந்தியாவில் தற்போதும் பிரச்சினைக்குரியதாக விளங்கும் காவிரி நதி பற்றி சிட்டியுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி ஆகியனவற்றை பயண இலக்கிய வரிசையில் வரவாக்கியிருப்பவர்.
அவருடைய நூற்றாண்டு காலம் தற்போது தொடங்கியிருக்கிறது.
தி.ஜானகிராமன், அகில இந்திய வானொலியில் கல்விச்சேவையில்
பணியாற்றிய காலப்பகுதியில், அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்து, அடுத்தவீடு ஐம்பது மைல் என்ற நூலையும் வரவாக்கியவர்.
அவருக்கே இயல்பான அங்கதச்சுவையுடன், தான் அவதானித்த காட்சிகளை இந்த நூலில் சித்திரித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் இக்கண்டத்தில் செறிந்து வாழத்தலைப்பட்டபின்னர் 1999 ஆம் ஆண்டில் இங்கு ஒரு பயணியாக வந்து திரும்பிய மருத்துவரும் ஈழத்து எழுத்தாளரும் தற்போது ஞானம் இதழின் ஆசிரியராக விளங்குபவருமான தி. ஞானசேகரனும் அவுஸ்திரேலியா பயணக்கதை என்ற நூலை எழுதியுள்ளார். அச்சமயம் மெல்பன், சிட்னி மாநகரங்களை சுற்றிவந்துள்ள இவர் இங்கு சில எழுத்தாளர்களையும் சந்தித்து புரிதலும் பகிர்தலும் என்ற நூலையும் எழுதினார்
அதன்பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு
அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த தமிழக பிரபல எழுத்தாளர் ஜெயமோகனும் புல்வெளிதேசம் என்ற நூலை வரவாக்கியுள்ளார். அவர், தமது மெல்பன், கன்பரா , சிட்னி பயண அனுபவங்களை தமது வலைத்தளத்தில் முதலில் எழுதியபின்னர் நூலுருவாக்கினார்.
இவை தவிர, அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான கானா. பிரபா, இந்தியத் தொன்மங்களை நோக்கி என்ற வரிசையில் கம்போடியா, பாலித்தீவு பற்றிய பயண இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். தமது ஈழத்தாயகத்தின் நினைவுகளை நனவிடை தோய்ந்து ஒரு பயணியாக இரைமீட்டி, ‘அது எங்கட காலம் ‘ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
மெல்பனில் வதியும் எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நொயல் நடேசன் தனது எகிப்திய பயணக்கதையை நைல்நதிக்கரையில் என்ற பெயரில் வரவாக்கியுள்ளார்.
முருகபூபதியும் தமது தாயகப் பயணங்களில் பெற்ற அனுபவங்களையும், சோவியத் நாடு , கியூபா, கனடா, சிங்கப்பூர், மலேசியா , பிலிப்பைன்ஸ் மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் பெற்ற பயண அனுபவங்களையும் தொடராக எழுதியுள்ளார். அவை – வட்டத்துக்கு வெளியே – பயணியின் பார்வையில் முதலான தலைப்புகளில் இதழ்களிலும், இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ள.
1985 ஆம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்று திரும்பியிருக்கும் முருகபூபதி, வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதிய சமதர்மப்பூங்காவில் தொடர், அவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர் நூலுருப்பெற்றுள்ளது.
பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா, தமது இந்தியப்பயண அனுபவங்களை, ஓர் ஆஸ்திரேலிய ஈழத் தமிழரின் இந்தியப்பயணம் என்ற நூலாக வரவாக்கியுள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் மு. வரதராசனின் மாணவராக பயின்றிருக்கும் கலாநிதி ஆ. கந்தையா, இலங்கையில் களனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைதலைவராகவும்
பணியிலிருந்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியிருக்கும் இவர், கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் மேற்கொண்ட தமிழ்ப்பணியை விரிவாக பதிவுசெய்வதற்காக பயணித்து குறிப்புகளையும் படங்களையும் சேகரித்து இந்த நூலை எழுதினார். இந்நூலும் இங்குவரும் தமிழ்ப் பயணிகளுக்கு கைநூலாக விளங்குகின்றது.
இத்தகைய பயண இலக்கிய நூல்களும் - தொடர்களும், வெளிநாடுகளுக்கு செல்லவிரும்பும் தமிழ்மக்களுக்கு வழிகாட்டியாகவும் எதிர்காலத்தில் இந்தத் துறையில் எழுதவிருப்பவர்களுக்கு உசாத்துணையாகவும் விளங்குகின்றன.
புனைவுசாராத பத்தி எழுத்துக்கள்
ஒருகாலத்தில் நடைச்சித்திரம் என்றவகையான எழுத்துமுயற்சி பேசுபொருளாக இருந்தது.
தமிழ் உரைநடை காலத்துக்குக்காலம் உருமாறியிருக்கிறது.
இதுபற்றியும் நான் முன்னர் படித்த ஒரு குறிப்பினை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
‘நான் ஏறிய ரயில் வண்டி நடுராத்திரி மதுரை சேர்ந்தது’ என்ற சாதாரண விஷயத்தைச் சொல்லவந்த ஒரு வித்துவான், ‘நான் போந்த நீராவித் தொடர்வண்டி நள்ளிரவில் நான்மாடக் கூடலினை நண்ணிற்று’ என்று எழுதியிருந்தாராம் .
பாரதியார், வ. ரா, கல்கி கிருஷ்ணமூர்த்தி, இரசிகமணி டி. கே.சி என்ற சிதம்பரநாத முதலியார், புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், கி. ராஜநாராயணன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் உட்பட பலரது உரைநடை இலக்கியங்களை படித்திருப்பீர்கள்.
அந்த மரபின் தொடர்ச்சியாக முன்னர் இலக்கிய உலகில் கவனத்தைப்பெற்ற, நடைச்சித்திரங்கள் சமகாலத்தில் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் என்ற புதிய வடிவத்தை பெற்றுள்ளது.
கனடாவில் வதியும் அ. முத்துலிங்கம் இந்தத் துறையில் அடிக்கடி எழுதிவருபவர்.
அவுஸ்திரேலியாவிலும் நடேசன், ஆசி. கந்தராஜா, முருகபூபதி, மணியன் சங்கரன், தெய்வீகன், ஜே.கே. ஜெயக்குமாரன், கானா. பிரபா, சந்திரிக்கா சுப்பிரமணியன் உட்பட சிலர் இந்தத்துறையிலும் எழுதுகின்றனர்.
அத்தகைய எழுத்துக்களில் கதையிருக்கும், ஆனால், அதில் சிறுகதை வடிவம் இருக்காது. கட்டுரைத்தன்மைதான் மேலோங்கியிருக்கும். உண்மைச்சம்பவங்களின் நனவிடை தோய்தலாகவும் அமைந்திருக்கும்.
சிறுகதை, தொடர்கதை, கட்டுரை படித்து வளர்ந்திருக்கும் வாசகர்களுக்கு குறிப்பிட்ட புனைவு சாரா பத்தி எழுத்துக்கள் புதிய உலகத்திற்கான வாசலைத்திறந்துள்ளது.
விலங்கு மருத்துவர் எழுத்தாளர் நடேசன், தமது தொழில் சார் அனுபவங்களை வாழும் சுவடுகள் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார் .
எமது தமிழ் சமூகத்தில் தொழில்சார் அனுபவங்கள் இலக்கியப்பிரதிகளாக வெளிவருதல் அபூர்வம். அதற்கும் அவுஸ்திரேலிய புகலிட தேசம் முன்னுதாரணமாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கவிதை, சிறுகதை, நாவல் முதலான துறைகளில் ஈடுபடும் தமிழ்ப்படைப்பாளிகள் பெரும்பாலும் தாயக நினைவுகளையே கருப்பொருளாக்கி வருவதையும் அவதானிக்கமுடிகிறது. தாங்கள் வாழும் புகலிடச்சூழலை பகைப்புலமாக்கும் படைப்புகளைத் தருபவர்களும்கூட தாயக வாழ்வைச்சித்திரிப்பதை தவிர்க்கமுடியவில்லை.
இனிவரப்போகும் அவுஸ்திரேலியத்தமிழர்களான அடுத்த சந்ததியினரிடமிருந்து இலக்கியம் பிறந்தால், அங்கே முழுமையான புகலிடச்சூழலை தரிசிப்பதற்கு வாய்ப்புகள் கிட்டலாம். ஆனால், அந்தப்படைப்புகள் தமிழில் வெளிவருமா என்பது பெரும் ஐயப்பாடே.
நான் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் கலை, இலக்கியப்பிரக்ஞையை வளர்க்கவேண்டுமென்பதற்காக 1990 களில் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி கலைமகள் விழா,பாரதி விழா, முத்தமிழ்விழா முதலானவற்றை நடத்தினோம்.
1991 இல் நடத்தப்பட்ட முத்தமிழ்விழாவில் தமிழர் புகலிடநாடுகளில் வெளிவரும் இலக்கிய இதழ்கள் மற்றும் நூல்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. தமிழுக்கும் இலக்கியத்திற்கும் மகத்தான பணியாற்றி மறைந்தவர்களின் உருவப்படக்கண்காட்சியையும் அன்றைய விழாவில் ஒழுங்கு செய்திருந்தோம்.
பின்னர் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம் முத்தமிழ் விழாவை நடத்தத்தொடங்கியது.
பாடும்மீன் ஸ்ரீகந்தராஜாவின் முன்முயற்சியினால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவினை முன்னிட்டு சர்வதேச ரீதியாக கவிதை, சிறுகதைப்போட்டிகளும் நடத்தப்பட்டன.
இலக்கிய உலகில் நடத்தப்படும் போட்டிகளினால் நல்ல வரவு கிடைப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எழுத்தார்வமுள்ளவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்பதன்மூலம் புதிய படைப்பாளிகள் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமாவார்கள்.
ஈழத்தமிழ்ச்சங்கம் போட்டிகளை நடத்தி பரிசும் வழங்கியதுடன் தேர்வான கதைகளைத்தொகுத்து புலம்பெயர்ந்த பூக்கள் என்ற கதைத்தொகுப்பையும் வெளியிட்டது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் 2010 ஆம் ஆண்டில் தனது பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியபோது, அதில் இணைந்திருந்த மெல்பன் எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் முன்முயற்சியினால், அனைத்துலக சிறுகதை, கவிதைப்போட்டிகளும் நடத்தப்பட்டு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில்தான் அவுஸ்திரேலியப்படைப்பாளிகளின் ஆக்கங்கள் பலவற்றைக்கொண்ட பூமராங் என்ற சிறப்பு மலரும் வெளியானது. தற்போது இதே பெயரில் இச்சங்கத்தின் இணையத்தளம் இயங்கிவருகிறது.
இதே சங்கம், அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்து உயிர்ப்பு என்ற நூலையும் கவிதைகளைத் தொகுத்து வானவில் என்ற நூலையும் முன்னர் வெளியிட்டுள்ளது. இதே சங்கமும் மெல்பன், சிட்னி, குவின்ஸ்லாந்து, கன்பரா மாநிலங்களில் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சிகளையும் நூல்கள்,இதழ்களின் கண்காட்சிகளையும் நடத்தியிருக்கிறது.
இக்கண்காட்சிகள் இங்கு பிறந்திருக்கும் இளம்தலைமுறை தமிழ் மாணவர்களிடத்தில், தமிழ் இலக்கியத் தொன்மையின் சிறப்பையும் நவீன உலகில் தமிழ் இலக்கியம் செல்லும் திசை பற்றியும் கவனத்திலெடுக்கத்தூண்டுகின்றன.
1990 களில் மெல்பனில் இயங்கிய மெல்பன் கலை வட்டம் கலைஞர் மாவை நித்தியானந்தனின் ஊக்கத்தினால் இயங்கியது. இந்த அமைப்பும் நாடகங்களை மேடையேற்றியதுடன், சில இலக்கியச்சந்திப்புகளையும் ஒழுங்கு செய்திருக்கிறது. மெல்பன் கலைவட்டத்தின் செயற்பாடுகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது அது வெளியிட்ட பாப்பா பாரதி வீடியோ.
இங்குள்ள தமிழ்ச்சிறுவர் சிறுமியர்களை நன்கு பயிற்றுவித்து பாடல், ஆடல் உட்பட பல சிறுவர்நாடகங்களையும் வெளிப்புறப்படப்பிடிப்புடன் தயாரித்திருந்தனர். இந்த வீடியோ சர்வதேச தரத்திலிருந்தது. இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வரவேற்பைப்பெற்றது.
மாவை நித்தியானந்தன் சிறுவர் நாடகங்கள் எப்படி அமையவேண்டும் என்பதில் தெளிவான கருத்துக்கொண்டிருப்பவர். சில சிறுவர் நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டவர். இவரது முன்முயற்சியினால் உருவான பாரதி பள்ளி என்ற தமிழ்ப்பாடசாலை விக்ரோரியா மாநிலத்தில் சில பிரதேசங்களில் வளாகங்கள் அமைத்து தமிழ்க்கல்வியை போதிக்கின்றது.
இதில் கற்பவர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இந்த பாரதி பள்ளியில் படித்த மாணவர்கள் சிலர் தற்போது, இதே பாரதி பள்ளியில் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றிவரும் அதிசயமும் நடந்திருக்கிறது. இதே நிலைதான் ஏனைய மாநிலங்களிலும்.
மெல்பனில் இயங்கும் வள்ளுவர் அறக்கட்டளையினால் தமிழகத்தவரான திரு. நாகை சுகுமாறனின் அயராத முயற்சியினால், தமிழ்ப்பாடசாலைகள் இயங்குகின்றன. அத்துடன் விக்ரோரியா மாநிலத்தில் மற்றும் ஒரு பிரதேசத்தில் அவ்வை தமிழ்ப்பள்ளி என்ற பாடசாலையை தமிழகத்தவரான திருவளர்கள் செல்வபாண்டியன் , அறவேந்தன் ஆகியோரும் சில தமிழ் ஆர்வலர்களும் இணைந்து வாராந்தம் தமிழ்க்குழந்தைகளுக்கு தமிழ் கற்பித்துவருகின்றனர்.
அவுஸ்த்திரேலியாவில் தமிழ்மக்கள் வாழும் மாநிலங்கள் எங்கும் தமிழ்ப்பாடசாலைகள் இயங்குகின்றன.
இப்பாடசாலைகளிலும் இலக்கியம் வளர்க்கப்படுகிறது.
எவ்வாறு… என நீங்கள் கேட்கலாம்.
திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வையார் முதல் பாரதி, பாரதிதாசன் வரையில், அவர்களின் வாழ்வையும் அவர்கள் மேற்கொண்ட தமிழ் இலக்கியத் தொண்டையும் இம்மாணவர்களுக்கு கற்பிக்கின்ற அதே சமயம், அவர்கள் பற்றிய நாவன்மைப்போட்டிகளையும் மாணவர்கள் மத்தியில் நடத்தி பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வருகின்றனர்.
பாரதி பள்ளியும் வெள்ளிவிழாவை கண்டுவிட்டது.
அத்துடன் விக்ரோரியா தமிழ்ச்சங்கமும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இங்கே பல பிரதேசங்களில் தமிழ்ப்பாடசாலைகளை நடத்திவருகிறது.
இனிச்சொல்லுங்கள் – புகலிடத்தில், தமிழினி மெல்லச்சாகுமா….?
இலங்கை – இந்தியத் தமிழக மாணவர்கள் இங்கு தமிழ் கற்கும்போது உருவாகும் உச்சரிப்பு சிக்கல் பற்றியும் இங்கே சுட்டிக்காண்பிக்கவேண்டியுள்ளது.
தோடம்பழத்தை, இலங்கையரின் பிள்ளைகள் தோடம்பழம் எனவும், தமிழகத்தவரின் பிள்ளைகள் ஆரஞ்சுப்பழம் எனவும் அழைக்கின்றனர்.
தமிழகத்தவரின் குழந்தைகளின் நாவில் ஆப்பிளும், இலங்கையரின் குழந்தைகளின் நாவில் அப்பிளும் தவழுகின்றன.
இலங்கைத் தமிழரின் பேச்சுமொழி வழக்கில் பல சொற்பிரயோகங்களை இன்னமும் தமிழகத்தவர் புரிந்துகொள்ள முடியாதிருக்கும் நிலை தொடருகிறது.
ஈழத்து இலக்கியங்களில் பிரயோகிக்கப்படும் படலை, வடலி, பற்றை, பன்னாடை, காடையர் முதலான சொற்களுக்கு இங்கு வதியும் தமிழக வாசகர்கள் அர்த்தம் தெரியாதிருக்கின்றனர்.
அதே சமயம், புகலிடத்தில் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கும் இலங்கைக்கும் பல தமிழக சொற்பிரயோகங்கள் தமிழக இலக்கியங்கள் திரைப்படங்களின் வாயிலாக வந்து சேர்ந்துள்ளன.
டுபாக்கூரு, சாவுக்கிராக்கி, கலாய்த்தல்,
இதுபற்றியும், ஈழத்தினதும் தமிழகத்தினதும் மண்வாசனை கமழும் பிரதேச மொழிவழக்குகள் பற்றியும் கரிசல் இலக்கிய வாதி கி. ராஜநாராயணன் குறிப்பிடும் சொலவடைகள் பற்றியும் உங்களது மதுரைத்தமிழ்ச்சங்கம் பிரத்தியேகமானதோர் ஆய்வரங்கை எதிர்காலத்தில் நடத்துவது பற்றி ஆலோசிக்கலாம்.
( தொடரும் )
No comments:
Post a Comment