பசுமை நிறைந்த நினைவுகளில் ஆடி அமாவாசை விஜிராமச்சந்திரன் - மெல்பன்


ஆடி அமாவாசை இன்று.  மனதிலே அம்மாவின் நினைவுகள் சுனாமி போல எம்பிக் குதிக்கிறது.  எமது அம்மா இந்திரா கோபாலகிருஷ்ணன் இன்று  இல்லாத நினைவு கனமானது.  எங்களுக்கு ஆடி அமாவாசை மிகப் பெரிய நோன்பு.
எங்கள் வீட்டில் நான் உட்பட நான்கு பெண்கள். இந்த நோன்பு எங்களுக்கு மிகவும் விசேஷம்.  ஏனென்றால், பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைய வேண்டி, இறைவனை பிரார்த்தனை செய்யும் நோன்பு.
வருடத்தில் முதல் நோன்பு. இதைத் தொடர்ந்து வரிசையாக பண்டிகைகள்தான். ஆவணி அவிட்டம், வரலக்ஷ்மி நோன்பு, நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கோகுலாஷ்டமி என வாரம் ஒன்று வந்து கொண்டே இருக்கும்.
ஆடி  அமாவாசைக்கு எங்களுக்கு புதுத்துணி கிடைக்கும். சீருடைப் போல எல்லோருக்கும் ஒரே டிசைனில் சீட்டிப் பாவாடை தான்.
 ஆனாலும் நாங்கள் நால்வரும் மகிழ்வின் உச்சத்தில் இருப்போம்.  இன்று போல் எப்போது வேண்டுமானாலும் ஷாப்பிங் மால் போய் துணி மணிகள் வாங்கிய காலம் அல்ல அது. வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தான் புதுத்துணி. ஆடி துவங்கினால் நிறைய பாயசம் சாப்பிடலாம். சில அபூர்வ பட்சணங்களும் கிடைக்கும்.
அப்பாவிற்கு ரயில்வேயில் உத்தியோகம்.  ஒரு நாளைக்கு ஒரு வண்டி அல்லது இரண்டு  வண்டிகள் மட்டுமே நிற்கும் சிறிய ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீடு வருவார். என்ன நாள், கிழமை எதுவும் அவருக்குத் தெரியாது. உத்தியோகம் புருஷ லக்ஷணம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்பா இருந்தார். 
வீட்டிற்கு வந்தாலும் தொடர்ந்து இரவு பகலாக வேலை செய்த களைப்பில் தூங்குவார். அந்த நாட்களில் நாங்கள் எல்லாம் ரகசிய குரலில் தான் பேசிக்கொள்வோம். அம்மா தான் எல்லா குடும்பப் பொறுப்புகளும் சுமந்தாள். நடுத்தர வர்க்கம். சிறிய வாடகை வீடு. வேலைக்கு ஆள் கிடையாது. கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும்.  நான்கு குழந்தைகள். நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம் அம்மாவின் வேலை பளுவை.

ஆடி அமாவாசைக்கு ஒரு வாரம் முன்பே அம்மா
பரபரப்பாகிவிடுவாள். நிறைய ஏற்பாடுகள் செய்யவேண்டும். இந்த நோன்பிற்கான முக்கிய ஆயத்தம் எங்கள் ஒவ்வொருவருக்கும் அம்மா ஒரு ஜோடி பொம்மை செய்வது. பொம்மை என்றால் கண், காது,  மூக்கு வைத்து இல்லை. நல்ல களிமண் எடுத்து கோபுரம் போல உருவத்தில்  எட்டு பொம்மைகள் செய்வாள். அது ஒரு நாள் நன்றாக வெயிலில் உலரும். அடுத்த நாள் அதற்கு செம்மண்ணால் வண்ணம் பூசி அதன் மேல் சுண்ணாம்பினால் பொட்டு வைத்து அலங்காரம் செய்வாள்.
அடுத்தது நல்ல இலவம் பஞ்சை பக்குவமாக்கி அதில் மாலை செய்வாள். எவ்வளவு பூக்கள் இருந்தாலும் ஸ்வாமிக்கு அது தான் விசேஷம் என்பாள்.  முதல் நாள் கடைக்கு எங்களை அனுப்பி,  தேவையான பூ, பழம், வெற்றிலை மற்றும் காய்கறி வகைகளை வாங்கி வரச்சொல்வாள். நைவேத்தியத்திற்கு கொண்டைக் கடலையை ஊறவைப்பாள். வீடே களை கட்டி விடும். புதிய மாவிலை தோரணமும், செம்மண் இட்டு போடப்பட்ட படிக்கோலமும் வீட்டின் பண்டிகை உற்சாகத்தை பறை சாற்றிய படி இருக்க, படுக்கையிலிருந்து   அம்மா  எழுப்பாமலே,  நாங்கள் நால்வரும் குதூகலத்துடன் எழுந்து விடுவோம்.
அமாவாசையானாலும் தலை குளியல் செய்ய அந்த ஒரு நாள் மட்டும் சாஸ்திரத்தில் அனுமதி உண்டு. பதின்ம வயதிலும் அம்மா மனம் நிறைந்த ஆசீவாதங்களுடன் தலைக்கு எண்ணெய் வைத்து, சீயக்காய் தூள் போட்டு தலை கசக்கிய நாட்கள். இதில் பாட்டி வேறு உதவிக்கு. பாட்டி ஒவ்வொரு முறை குளியலின் போதும் "பொம்மனாட்டிக்கு மயிரழகும், மார்பழகும் சிறப்பு" என்று டயலாக் சொல்வார். கூச்சம் பிடுங்கித்தின்னும்.
இப்படியாக ஒவ்வொருவராக குளித்து முடித்து, புத்தாடை அணிந்து தயாரானதும் பூஜை ஆரம்பம். எங்கள் ஜோடி பொம்மைகளை ஒரு பட்டு விரித்த மணையின் மீது வைத்து அதன் பின்னால் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைத்திருப்பாள். எங்கள் மண்கணவர்,  கண்ணாடியில் நிழலாகவும் முன்னே நிஜமாகவும் கம்பீரமாக வீற்றிருக்கும். அம்மா விளக்கேற்றி நிறைய ஸ்லோகங்கள் சொல்வாள். எங்கள் நால்வரையும் மணை போட்டு அமரச் செய்து எங்கள் கைகளில் மஞ்சள், குங்குமம், அட்சதை என வரிசையாக கொடுத்து முறைப்படி பூஜை செய்விப்பாள்.
 இந்த நோன்பிற்கு ஒரு கதை வேறு உண்டு. " தரும சிந்தனையுள்ள, உத்தமமான ஒரு வைதீக பிராமணன் இருந்தார். அவருக்கு  ஏழு கன்னிகைகள். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க அந்தத்  தந்தை மிகவும் அல்லலுற்றார். இந்த நோன்பை அந்த கன்னியர்கள் செய்து நல்ல கணவனை அடைந்தார்கள் என்பது போல அக்கதை  வரும். அம்மா அதை மனப்பாடமாக சொல்லுவாள். அவள் சிறு பெண்ணாக இருக்கும் போதிலிருந்து கேட்ட கதை. எனவே சரளமாக சொல்லுவாள். பின்னர் ஆரத்தி எடுத்து நைவேதியத்துடன் முடிப்பாள்.
இனி வருவதுதான் குழந்தைகளான எங்களுக்கு அதிஇன்பத்தை தரும் நிகழ்வு. அம்மா எங்கள் ஒவ்வொருவருக்காக, சுண்ணாம்பும் மஞ்சள் தூளும் சேர்த்து குழைத்த ஒரு செம்மண் கலவையை காலில் பாதத்தை சுற்றி அழகாக வரைவாள். அடுத்து கையில் நோன்பு கயிறு கட்டுவாள். அந்த புத்தாடையும், காலில் உள்ள நலங்கும், கையில் நோம்புக் கயிறும், பை பின்னல் போட்டு பூ முடிந்த குழலும் எங்களை தேவதைகளாக எண்ண வைத்த தருணம் அது.  
எட்டாம் வகுப்பு படிக்கும் வரை பள்ளிக்கு இந்த அலங்காரத்தில் போனதுண்டு. பின்னர் கொஞ்சம் நாணத்தினால் அலங்காரங்களை களைந்து விட்டு செல்வதாக மாற்றிக்கொண்டோம். ஆமவடை, இரண்டு பொரியல், சித்ரான்னம், பாயசம் என ஜோரான சாப்பாடு. இப்படியாக எங்கள் ஆடி அமாவாசை நோன்பு இனிதே நிறைவடையும்.     
நான் திருமணமாகி எனக்கு மகள் பிறந்து அவளுக்கு விபரம் புரியும் போது அவளுக்கும் இந்த பூஜை செய்வித்தேன். சுமார் இருபது  ஆண்டு காலமாக எங்கள் குடும்பத்தில் மிக விசேஷமானதாக எண்ணிய பூஜை  என்மகளுக்கு  கேலியாக இருந்தது.
அவளுக்கு நிறைய கேள்விகளும் எழுந்தன..!  “நான் நல்ல கணவன் கிடைக்க கடவுளிடம் ஏன் பிரார்த்தனை செய்யவேண்டும்?  ஆண்கள் ஏன் ஒரு நல்ல மனைவி அமைய பூஜை செய்வதில்லை? இந்த பூஜை செய்த அனைவருக்கும் நல்ல கணவனை கடவுள் கொடுத்தாரா? “   போன்ற பல நியாயமான கேள்விகள்.
எதற்கும் என்னிடம் பதிலில்லை. நம் தலைமுறை கேள்வி கேட்கவில்லை. கொஞ்சம் யோசித்து கேள்விகள் கேட்டாலும் "பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்.  எதிர்த்து பேசக்கூடாது" எனும் ஒரே பதில் தான் கிடைத்தது. இது சரியா தவறா என்ற விவாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
அவை மூடநம்பிக்கைகள் என்றே கொண்டாலும், குடும்பத்தில் ஒரு பந்தமும், பாசமும், கொண்டாட்டமும் அந்த பண்டிகைகள் நமக்கு தந்து கொண்டிருந்தது என்பதை ஒருகாலும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது.
இந்தியாவில் எப்படியோ வெளிநாட்டில் வாழும் என் போன்ற ஒவ்வொருவரும் பண்டிகைகளையும் அது தரும் மகிழ்ச்சியையும் பல காரணங்களால் இழந்து கொண்டிருக்கிறோம்.
அந்த இனிமையான நாட்களும்  அன்புநிறை என் அம்மாவும் மீண்டும் வரப்போவதே இல்லை.
---0---


No comments: