புதன் போற்றுதும் ( கன்பரா யோகன்)


ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம் மத சார்புத்தன்மை
இல்லாத இலக்கியம் என்று சொல்லப்படுகிறது.
இறைவணக்கம் என்று வழமையான ஆரம்பம் இல்லாமல் இயற்கையை வாழ்த்தும் பாடல் முதலில் வருகிறது.
திங்களைப் போற்றுதும்  என்றும்  ஞாயிறு போற்றுதும் என்றும் தொடங்கும் கவிதை வரிகளுடன் சிலப்பதிகாரம் ஆரம்பிக்கிறது.  நிலவையும் , சூரியனையும் போற்றி பிறகு மழையையும் மறந்து விடாமல் வாழ்த்தி விட்டுத்தான்  சிலம்பின் கதையை இளங்கோவடிகள் சொல்லத் தொடங்குகிறார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அங்கண் உலகளித்த லான் 


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
                                 (சிலப்பதிகாரம்:1: 1-9)

               (இளங்கோவடிகள்)


ஞாயிறும், திங்களும் இயற்கையின் இன்றியமையாத இயந்திரங்கள்.  போற்றுதலுக்கு  உகந்தவைதான். ஆனால்  வேலைக்கு செல்லும் பலருக்கு கிழமை நாட்களில்  ஞாயிறு அல்லது திங்கள் கிழமை வந்தாலே கதை வேறு. வார இறுதி விடுமுறையில் இரண்டு நாட்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு  முடித்து,  ஞாயிறு மாலை மங்கியதும் நாளை விடிய மீண்டும் பழைய குருடிக் கதை போல தொடங்க வேண்டுமே என்ற ஆதங்கம் பலருக்கும் வருவதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் அலுவலகத்தில் உயரதிகாரியாக பணிபுரிந்தார். தனக்கு ஞாயிறு வந்தாலே வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி விடும் என்பார். திங்கட் கிழமைகளில் பல கூட்டங்கள் இருக்கும்.
அவற்றில் எல்லாம் போன வாரத்தில் செய்த வேலைகளை ஒப்புவிக்க வேண்டுமே என்ற அங்கலாய்ப்பு.
ஆனால்  எப்படியோ எல்லாருக்கும் திங்கள் என்னும் திரை மூட , செவ்வாய் செட்டை விரித்துப்  பறந்ததும்  அடுத்து வரும் புதன் ஒரு புத்துயிர்ப்பு தருகிறது.
கிழமைகளில் புதன் நடுவில் வருகிறது. பாதி கிழமை போய்விட்டது இன்னும் பாதிதானே மீதி என்ற ஒரு நப்பாசை. ஆதலால் புதனைப் போற்றுகிறோம்.

வியாழன் விசுக்கென்று போய்விட பிறகு விடி வெள்ளியாய் வந்து சேரும் வெள்ளி. இதுதான் வார விடுமுறையை கோலாகலமாக திறந்து வைக்கும் சாவி.

இதெல்லாம் சில மாதங்களுக்கு முன்னர்  சரியாக இருந்திருக்கும். இப்போது பல மாற்றங்கள். வார நாளேது, வார விடுமுறை நாளெது என்றே தெரியாமல் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஒழுங்குகள் வந்துள்ளன.  வீட்டில் நின்று வேலை செய்வதில் லாபம் கம்பனிகளுக்கென்றும் சொல்லப்படுகிறது. கட்டிட வாடகை, மின்சாரம், மற்றும் வசதிகள் இல்லாமலே , வீட்டிலிருந்தே அதே அளவு வேலை, அல்லது இன்னும் அதிகளவான வேலை பெற முடியுமென்றால் லாபம் அல்லவா?

வேலை இழந்தும் பலர் இருக்கிறார்கள். கேள்விக்குறிகளுடன் பலர் எதிர்காலத்தினை காண்கிறார்கள். பொருளாதாரத்தின் சரிவு, பல காலம் அதன் தாக்கம், மீள்வதற்கான பொறி முறைகள் பற்றியெல்லாம் கேள்விகள்! கேள்விக்கு மேல் கேள்விகள்!.

ஆயினும் பனியும், புகாரும் மறைத்த போதிலும்  தவறாது எழுகிறான் சூரியன்.! உலகே இருண்டு கிடந்த போதிலும் வானில் வாராது போனதா நிலவு.?  கொடுங் கோடையின் நெருப்பும் , புகையும் சூழ்ந்த போதும் வந்ததுதானே மழை .

திங்களைப் போற்றுதும் !   ஞாயிறு போற்றுதும் ! மாமழை போற்றுதும்!  என்பது எப்போதும் பொருத்தமானதே.




No comments: