வானவில்லின் கீழே - 'கிறிஸ் மகஸ்டா' என்ற சிம்பாப்வே நாட்டுக் கவிஞரின் கவிதை

.
மழைபெய்த ஈரம் மறையாத பொழுதொன்றில்
அல்பேட் பூங்காவின் டஃபடில் மலர்களில்
வைரங்கள் ஜொலிப்பதாய் இன்னமும் தூங்கும் மழைத்துளிகள்,.

வானவில்லின் கீழே
விளையாட வந்தனர் குழந்தைகள்.
கையோடு கைகோர்த்து
இதமாகச்சிரிக்கும் இளஞ்சூரியனின் கீழே...
பழுத்த கோதுமைக் கதிர்களாய் அசைந்தாடும் தலைமுடிகள்

சிவந்த கன்னக் கதுப்புகளுடன் சிறகு விரிக்கும் சின்னத் தேவதைகள்,
துள்ளித்துவளும் ஆட்டுக்குட்டிகளாய்
தேவைகள் ஏதுமற்ற திருப்தியுடன் விளையாடும்,
வசந்தகாலச் சூரியனின் கீழே.

அருகே நின்ற ஒரு குழந்தையிடம்
ஏனைய குழந்தைகள் கேட்டனர்.
" கதையொன்று சொல்லேன்?
ம்..... ஆ..உனது மண்ணில் கறுப்பின மக்களுக்கு
'அவர்கள்' இழைத்த கொடுமையின் கதையைச்சொல்லேன்.
அந்த விறுவிறுப்பான கதையை எங்களுக்குச் சொல்லேன்?"

அந்தக் குழந்தையின் முகம் இருண்டு போயிற்று.
சின்ன முகத்தில் ஜொலித்த பரவசம் தொலைந்து போயிற்று.
தீவிரமான தேடலில் கண்கள் படபடவென இடம்மாறின.
அங்கு யாருமே இருக்கவில்லை.
சலனமற்று உறைந்துபோன சாம்பல் நிற நிழல்கள்
மட்டுமே இருந்தன


குழந்தையின் உதடுகள் துடித்தன.
வெறுமையை நோக்கிக்
குரலெடுத்துக் கூவியது
"இதோ மீண்டும் ஒருமுறை
என்னைக் கதை சொல் என்கிறீர்கள்.
தடவிப்பார்ப்பதற்கும்
அதைச் செதுக்கிய கைகளை வியப்பதற்குமாய்
என் இதயந்திறந்து
அங்கு ஆழப்பதிந்த காயங்களைக்
காட்டுமாறு கேட்கிறீர்கள்.
என் இதயத்தின் அழகிய வடுக்களைப் பற்றி,
எங்கோ தொலைவில் நிகழ்ந்த வன்செயல் ஒன்றினால் உருவான
இந்தக் கலைப்படைப்பினைப் பற்றி
இனி நீங்கள் ஒருவருக்கொருவர்
உணர்ச்சிப்பெருக்குடன் பேசுவீர்கள்.
என் துயரின் பாடலால் பரவசமானவராய்,
தழும்புகள் அற்ற இதயங்கள் கிட்டியதற்கு
இறைவனுக்கு நன்றி கூடக் கூற மறந்து
கையோடு கை கோர்த்துப்
புல்வெளிப் பூக்களூடே
தென்றலின் மெல்லிய வருடலூடே
ஆனந்தமாய்த் துள்ளியபடி
சென்று மறைவீர்கள்

இரவு கவியும் வேளை
உங்கள் அன்னையர் கரங்களின் அணைப்பினுள்
கிறங்கிக் கிடப்பீர்.
"குட்டிச் சாம்போக் கறுப்பன்'# இன் கதையை  அம்மாக்கள் வாசிக்க,
'கோலிவாக்'# பொம்மை'யை அணைத்தபடி
மெதுவாய் உறங்கிப் போவீர்கள்.
இருள் என்னுடைய கதையை சுவடேயின்றி
ஒற்றியெடுத்துச் சென்றுவிடும்.

காலையில் பனிமூட்டம் உங்கள் ஞாபகங்களை
சுத்தமாய் துடைத்துவிடும்
தொலைதூர இருண்ட நிலமொன்றில்
இருந்துவரும் மெல்லிய சலனமாய் எனது கதை..............
நீங்களோ சூரிய ஒளி உங்கள் மீது சுடர்வது குறித்து
நன்றி கூறவும் மறந்து......


வானவில்லின் இருள் சூழ்ந்த மறுபுறத்தில்
எனது கதையோடு
நான் மட்டும் தன்னந்தனியனாய்
இன்னமும் இருக்கிறேன்,
கைவிடப்பட்டவனாக.........(1971)


குறிப்புகள்:
'வானவில்லின் கீழே' என்ற இந்தக் கவிதை 1971இல் நியூசிலாந்தில் எழுதப்பட்டது.இதன் மூலப்பிரதியில் 'தென் ஆபிரிக்காவிற்குப் பயணஞ்செய்து  அங்கு இன ஒடுக்குமுறையெதனையும் தான் காணவில்லை எனக் கூறிய நியூசிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினரைக் கௌரவிக்கும்  முகமாக' என உபதலைப்பிடப்பட்டிருந்தது.
#'குட்டிச் சாம்போக் கறுப்பன்' குழந்தைகளுக்கான கதைநூல்
#'கோலிவாக் ' பொம்மை-கறுப்பின ஆணின் அவலட்சணமானகேலிச்சித்திரத்தை வைத்து வடிவமைக்கப்பட்ட பொம்மைNo comments: