இலங்கைச் செய்திகள்


இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதியிடம் கையளிப்பு

அமைச்சுப் பதவி எனும் எண்ணமோ கொள்கையோ TNAயிடம் இல்லை

24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்

நாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன

நான் பெற்றுக்காடுத்த சமாதானச் சூழலில் எனக்கெதிராகவே கொக்கரிக்கும் கோடீஸ்வரன்



இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதியிடம் கையளிப்பு




உயர்தர வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு 
உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் உருவாக்கிய இணைப்பற்ற இதயத்துடிப்புமானி (stethoscope) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி (13) கண்டி தலதா மாளிகைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் வெனுர விஜேசேகர என்ற உயர்தர மாணவன் தமது கண்டுபிடிப்பு தொடர்பாக ஜனாதிபதியை தெளிவுபடுத்தினார்.  
உபகரணத்தை பரீட்சித்த ஜனாதிபதி, மாணவனின் திறமையை பாராட்டினார். வெனுர விஜேசேகர கண்டி திருத்துவக் கல்லூரியில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.  
அவர் உருவாக்கிய இதயத்துடிப்புமானியை (stethoscope) இணைப்பின்றி பயன்படுத்த முடியும். அதன் மூலம் தனிநபர் இடைவெளியை பேணி நோயாளியை பரிசோதிப்பதற்கு வைத்தியருக்கு முடியும்.  மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.    நன்றி தினகரன்     










அமைச்சுப் பதவி எனும் எண்ணமோ கொள்கையோ TNAயிடம் இல்லை






சுமந்திரனின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி
புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லையென்றும் தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி குறித்து பேச  வேண்டிய அவசியமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 09ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது, அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென கூற முடியாதென்றும் அந்த இடைப்பட்ட காலத்தில் தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை என்றும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், எவ்விதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச தமக்குப் பலம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தக் கருத்து அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு, இந்தக் கருத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன.
இந்த நிலையிலேயே, புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே தம்மிடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 












24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்






24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்-Vice Admiral Nishantha Ulugetenna Appointed as 24th Navy Commander
இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து, புதிய கடற்படைத்தளபதி  தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985ஆம் ஆண்டில் கடற்படை கெடேட் அதிகாரியாக இணைந்த நிஷாந்த உலுகேதென்ன, 1987இல் பிரதி லெப்டினெனாக நியமிக்கப்பட்டதோடு, 2015 இல் ரியர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.
24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுக்தென்ன நியமனம்-Vice Admiral Nishantha Ulugetenna Appointed as 24th Navy Commander
கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் பிரதானியாக பணியாற்றியிருந்தார். அவர் கடற்படையின் பிரதி பிரதானியாகவும், மேற்கு கடற்படை பிரிவின் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வீர விக்ரம, ரணசூர, விஷிஷ்ட சேவா விபூஷண, சிறந்த சேவை ஆகியவற்றிற்கான பல பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 23ஆவது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் பியல் டி சில்வா, இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 












நாட்டில் வேறெங்கும் இல்லாத தேர்தல் சட்ட மீறல்கள் வடக்கில் பதிவாகியுள்ளன





மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு
தேர்தல் கடமைகளில் இராணுவத்தினரோ, முப்படையினரோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மேலும் பொது மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வாக்குகளை அளிப்பதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று  விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர், பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
கலந்துரையாடலின் பின்னர், நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பல விடயங்கள் கிடைக்கப்பட்டுள் ளன. பொதுப் பாதைகள் மீது வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை புகைப்படங்கள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உண்மையில், இலங்கையில் வேறு எங்கும் காணப்படாத தேர்தல் சட்ட மீறல்களாகும். இது தண்டனைக்குரிய குற்றம். இது தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவிற்கும், பொலிஸாருக்கும் அறிவுறுத்தவுள்ளோம்.
பொதுப் பாதைகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் பொறிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பொது மக்களின் வீடுகளிற்கு முன்னால், சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை காட்சிப்படுத்த வேண்டாம்.
அவ்வாறு வேட்பாளர்களினால் காட்சிப்படுத்தபடுவதை பொது மக்கள் தபால் அட்டைகள் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம். பாதை திறப்பு விழாக்களை பயன்படுத்தி  அரசாங்கத்தின் நிதியைப் செலவிட்டு, தமது கட்சியை அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
அதன்போது, அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்காணிக்க உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக தவிர்க்குமாறும், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்குரிய முழு ஆதாரங்களையும் சேகரிக்கக் கோரியுள்ளோம்.
முக்கியமாக இந்த தேர்தல் ஏனைய தேர்தல்களை விட, கொவிட் -19 என்ற வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேர்தலாக இருக்கின்றது. இங்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கிருமித் தொற்று நீக்குதல், இவை அனைத்து இடங்களிலும் அடிக்கடி நடத்த வேண்டி இருப்பதனால், இதனை முழுமையாகப் பின்பற்றுமாறு, தேர்தல்கள் அலுவலகர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்குரிய பூரண ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும், இந்த தேர்தலை நடத்துவதென்பதில் முழு ஈடுபாட்டில் இருக்கின்றோம்.
ஏனெனில், இந்த நாட்டிற்கு ஒரு பாராளுமன்றம் தேவை. ஜனநாயகம் இந்த நாட்டில் வேண்டுமாக இருந்தால், இங்கு ஒரு பாராளுமன்றம் இருக்க வேண்டும். பாராளுமன்றம் இருக்க வேண்டியதன் அவசியம் காரணமாக, எதிர்வரும் தேர்தலை குறித்த தினத்தில் நடத்துவதற்கான, ஏற்பாடுகள் மற்றும் முஸ்தீபு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - நன்றி தினகரன்










நான் பெற்றுக்காடுத்த சமாதானச் சூழலில் எனக்கெதிராகவே கொக்கரிக்கும் கோடீஸ்வரன்




வரலாறு தெரியாத கூட்டமைப்பு என கருணா அம்மான் சீற்றம்
அம்பாறை மாவட்டத்தில் கொக்கரிக்கின்ற கோடிஸ்வரன் ஏன் தமது மாவட்டத்தின் மக்களை கண் திறந்து பார்க்க முடியாமல் உள்ளார்? அவருக்கு நான் இன்று பெற்றுக்கொடுத்துள்ள சமாதானத்தினால்த் தான் இந்தளவு மேடைகளில் நின்று குரல்கொடுக்கக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு அல்லாமல் இருந்தால் அவர்களுக்கு கத்துவதற்கு குரல் இல்லாமல் இருந்திருக்கும். வரலாறுகளை மறந்து பேசுவதை கூட்டமைப்பு நிறுத்த வேண்டுமென கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் அம்பாறையில் தமிழ் வாக்குகளை சிதறடிக்கவைப்பதற்காகவே இங்குவந்து போட்டியிடுகின்றார் என்றும் தனது வாக்கை தனக்கு அளிக்கமுடியாத கருணா அம்மான் என்று எல்லாம் விமர்சனங்கள் வருகின்றன. இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் மக்களின் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்தும்முன்னெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு இருந்துவந்த 42 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் தற்போது அழிக்கப்பட்டு தடயங்களுடன் நிலம் மாத்திரம் காட்சியளிக்கின்றது. அது போன்று பழமைமிகு 22 கிராமங்கள் வேறுகிராமங்களுடன் உள்வாங்கப்பட்டு வருவதும் தன்னால் அவதானிக்கப்பட்டதன் பின்னர்தான் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவை எடுத்துக்கொண்டேன் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.
ஆலயங்கள் அளிக்கப்படுவதும் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவதுமாக நிலங்கள் அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் இயற்கை நீர்நிலைகளை நிறப்பி கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பது போன்ற நிகழ்ச்சி நிரல் தங்குதடையின்றி இடம்பெற்றுவருவது இந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. மாறாக மரக்கடத்தல்களும் மர ஆலைகளையும் அமைத்துக்கொண்டு தங்களின் பைகளை நிரப்புகின்றனர். இவர்கள் என்னை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.
என்னுடைய வாழ்க்கையில் நான் என்னை விமர்சிப்பவர்கள் போன்று உல்லாசமாக வீடுகளில், ஏசி அறைகளில் வாழவில்லை இளமைக் காலத்தில் தமிழ் மக்களுக்காக போராட்டத்தின் போது காடுகளிலும் மலைகளிலும் வெயிலிலும் மழையிலும் தூக்கமின்றி என்னுடைய இளமைக்ககாலத்தை கழித்தவன். என்னுடைய சுயநலனைப் பாத்திருந்தால் நானும் மற்றவர்களை போன்று ஏசி அறையிலும் மின்விசிறிக்கு கீழும் தூங்கியிருப்பேன்.
என்னைப்பற்றி நான் சிந்திக்கும் போது வாழ்க்கையில் நான் சாதனை படைக்கவேண்டியவன். ஒரு வைத்தியராக மக்களுக்கு பணியாற்றியிருக்கவேண்டிய நான் இன்று காலத்தின் கட்டாயத்தால் இவ்வாறு அரசியலில் நிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானேன் என்றும் கருணா அம்மான் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன அபிவிருத்தியை செய்திருக்கின்றனர்? நல்லாட்சி அரசாங்கத்தின் சலுகைக்காக அவர்களின் கருத்துக்களுக்கு கையசைத்துக்கொண்டு சலுகையைப் பெற்றுக்கொண்டு மக்களின் நலன் பால் அக்கறை காட்டாதவர்கள் தான் இந் கூட்டமைப்பினர். இம்முறை சம்பந்தன் ஐயா 20 ஆசனங்களை பெறப்போவதாக கூவுகின்றார். ஆனால் மக்களின் தீர்ப்பு இம்முறை 13ஆசனங்களுக்கு மேல் பெறமுடியாது என்பதை நான் இந்தத் தேர்தல் காலத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
நான் வேறுமனே வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றுபவன் அல்ல. தேர்தல்காலங்களில் உணர்வுள்ள தமிழன் போன்று உணச்சியை கக்கித் திரியும் கூட்டமுமல்ல. மக்களுக்கு சொல்வதை செய்வதற்கான ஆணையை மக்கள் தருவார்களாயின் நான் மக்களின் தேவையுணர்ந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.  நன்றி தினகரன் 





No comments: