சிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்



தி. திருநந்தகுமார், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்

நி.ச.வே. தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு வெளியிடும் தமிழ்ப் பாடநூல்கள்  வரிசையில் தமிழ் ஆறு பாடநூல், சென்ற 23.02.13 மாலை 6.30 மணிக்கு கிரவீன் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு எளிமையான வைபவத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடநூற்குழுவின் ஆலோகர்களில் ஒருவரான வானொலி மாமா மகேசன், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாடநூல் குழுவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலவகைப்பட்டோர் குழுமியிருந்த அவையில் கூட்டமைப்பின் தலைவர் திரு ஜெ.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்க, அறிமுக உரைகள் இடம்பெற்றன.


முதலில் ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலையின் உயர் வகுப்பு மாணவிகளான செல்விகள் சரண்யா தியாகராஜா, கவிஜா விக்னேஸ்வரன், ஜனனி ஜகன்மோகன் ஆகியோர் உரையாடல் வடிவில் தமது அறிமுக உரையை நிகழ்த்தினர். ஒவ்வொரு பாடத்தினதும் அமைப்பு, அவற்றில் இருந்த முக்கியமான கருத்துகளில் தம்மைக் கவர்ந்தவை, நூலில் இடம்பெற்ற படங்கள், நூலின் அமைப்பு மற்றும் பாடம் தொடர்பான தமது அனுபவங்கள் என்பன கலந்த சுவையான கலவையாக அவர்கள் உரையாடல் அமைந்திருந்தது. மாணவிகளைத் தொடர்ந்து வென்வேர்த்வில் தமிழ்க் கல்வி நிலைய ஆசிரியை திருமதி மேளின் யேசுரட்ணம் அவர்கள் தனது பாணியில் நூலில் தம்மைக் கவர்ந்த அம்சங்களையும் தன்னால் உடன்படமுடியாத ஒரிரு அம்சங்களையும் தொட்டுக்காட்டி, சுவைபட தமது விமர்சனத்தை அமைத்திருந்தார்.
மொத்தம் பத்துப் பாடங்கள் அடங்கிய இப்பாடநூலில் 21 படங்கள் உள்ளன. அவற்றில் பத்துப் படங்களை செல்வி அஸ்வினி உதயகுமார் வரைந்துள்ளார். இவர் ஏற்கனவே வென்வேர்த்வில் தமிழ்க் கல்வி நிலையம் வெளியிட்ட ஆரம்ப வகுப்புப் பாடநூலில் படங்களை வரைந்து பலரின் பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடநூற்குழுவின் உறுப்பினர்களான திரு தேவராசா நான்கு பாடங்களையும், திரு அன்பு ஜெயா இரண்டு பாடங்களையும், கலாநிதி பாலா விக்னேஸ்வரன், திருமதி ராணி கணேசன், திரு மணிமாறன், திரு சிவசுப்பிரமணியம் ஆகியோர் தலா ஒரு பாடத்தையும் எழுதியிருந்தனர். இவர்களோடு பாடநூல் குழுவில் இணைந்து திரு அண்ணா சுந்தரம் அவர்களும், பாடங்களை ஆராய்ந்து இறுதிசெய்வதில் பங்களித்துள்ளார்.
வானொலி மாமா மகேசன், வென்வேற்த்வில் கல்வி நிலையத்தலைவர் திரு இராஜேஸ்வரன், பாலர் மலர் கல்விக் கழகத்தின் தலைவர் திரு விவேக் நாகராஜன், மவுண்ட் ருயிட் கல்வி நிலைய அதிபர் திரு குமணன், ஈஸ்ட்வூட் கல்வி நிலைய அதிபர் திருமதி அமலன், ஓபன் தமிழாலயத் தலைவர் திரு சசீந்திரன், ஹோம்புஸ் கல்வி நிலையத் தலைவர் கலாநிதி அனுசியா கண்ணன் ஆகியோர் பாடநூல் குழு அங்கத்தவர்களுக்குப் பரிசில்களை வழங்கினர்.


முன்னதாக, பாடநூலாக்கக் குழுவின் இணைப்பாளர் என்ற வகையில்  பாடநூல் உருவான வரலாற்றையும் அதில் அடங்கியுள்ள உழைப்பையும் சுருக்கமாகக் கூறியிருந்தேன். நி.ச.வே மாநிலத்தில் உள்ள மொழிகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவான தமிழ்ப் பாடத்தில் குறிப்பிடப்பட்ட அடைவுகளுக்கும், பாடப் பரப்புகளுக்கும் அடங்கவே இப்பாடநூல் எழுதப்பட்டுள்ளது. பதினான்கு மாதங்கள் எண்மரின் உழைப்பில் இந்நூல் மலர்ந்துள்ளது. இப்பாடநூலை வகுப்பறையில் பரீட்சார்த்தக் கற்பித்தலுக்காக மூன்று தொகுதிகளாக வெளியிடவும், திருத்தங்களைக் கணினியில் செய்துகொள்ளவும் கலாநிதி அனுசியா கண்ணன் அவர்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும் விபரிக்கமுடியாதவை. அதேபோல் அச்சுப் பிரதியை குறுகிய கால அவகாசத்தில் பிழைதிருத்தி உதவிசெய்த திரு தேவராஜா அவர்களுக்கும் அச்சேற்றிய வேளையில் இருந்து நூல் வெளியிடப்படும் வேளைவரை ஊன் உறக்கமின்றித் தன் உழைபை நல்கிய திரு குமணன் அவர்களுக்கும் நன்றி கூற வார்த்தைகள் இல்லை.


நூலை அறிமுகம் செய்ய அழைக்கப்பட்ட மாணவிகள் புலம்பெயர் தேசத்தில் பிறந்து, தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்று, தற்போது பதிரோராம் ஆண்டில் கல்வி பயில்கின்றனர். இம்மாணவிகள் ஒரு நாள் அவகாசத்தில் ஒரு பாடநூலினை ஆசிரியர்களின் துணையின்றித் தயாரித்து, சுவைபட ஆய்வு செய்தமை சபையோரைப் பிரமிக்க வைத்தது எனலாம். அவர்கள் முன்னைய ஆண்டுகளில் பெற்ற தமிழ்க் கல்வியின் தரத்தை அவர்களின் உரையாடல் பிரதிபலிப்பதாக அமைந்தது. இதற்காக அவர்களின் பெற்றோரும், தமிழ் ஆசிரியர்களும் பெருமைப்படலாம். இப்பாடநூலின் பயன் இவ்வருட இறுதியில் தான் தெரியவரும். பாடநூலின் உள்ளடக்கம் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பின்னூட்டல்களை பாடநூல் குழு ஆவலோடு எதிர்பார்க்கின்றது. பின்னூட்டல்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் என்ற நம்பிக்கை பாடநூல் குழுவிற்கு இருக்கின்றது.
தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்புடனோ அல்லது பாடநூற்குழுவுடனோ தொடர்பு கொள்ள: nswfts@gmail.com

No comments: