இலங்கைச் செய்திகள்

.
கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்

ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்

கல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்: ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும்: எலியோட்

வடக்கின் போர் ஆரம்பம்
  
மத, கலாசார உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் "வக்கிரம்'



===============================================================

கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்

12/03/2013 ‘சிங்களக் குரல்’என்ற புதிய அமைப்பின் பெயரில் கண்டி நகரில் இன்று சில புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் சித்திரை வருடப்பிறப்பை அடிப்டையாக வைத்து இவை ஒட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அச் சுவரொட்டியில் ‘வருவது ஹலால் புது வருடமன்று, அது சிங்களப் புதுவருடம்.’, ‘ஹலாலை சமயலறைக்கும் புத்தாண்டு உணவு மேசைக்கும் சேர்த்துக் கொள்ளவேண்டாம்’, ‘சிங்கள வர்த்தகர்களே நுகர்வோரை மதிக்கவும். உங்கள் ஊழியர்களுக்கு உபதேசம் செய்யவும்’, ‘இம்முறை புத்தாண்டை எமதாக்கிக் கொள்வோம். சிங்களவர் கடைகளுக்கு மட்டும் அடியெடுத்துவைப்போம்’. போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.




நன்றி வீரகேசரி









ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்

12/03/2013 ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை. பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் ஹலாலுக்கு எதிராக செயற்பட்டுவரும். பௌத்தர்களும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார்.
ஹலாலை நிறுத்துவதாக ஜம்இய்யதுல் உலமா சபை நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தது. ஆனால் அது பொய்யாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுபல சேனாவின தலைமையகமான சம்புத்தத்வ ஜெயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியால் நியமித்த அமைச்சரவை உப குழு தனது முடிவினை அறிவிக்க முன்னர் ஜம்இய்யதுல் உலமா சபை ஏன் இந்த முடிவுக்கு வரவேண்டும்? இன்று நாட்டில் பௌத்த மதத்துக்கு எதிராக சிலர் செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட போன்றவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பணத்தை பெற்றுக்கொண்டு பௌத்த மதத்துக்கு எதராக முன்னின்று செயற்படுகிறார்கள். அதில் ஒரு சில தேரர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள்.
ஜம்இய்யதுல் உலமாவின் நேற்றைய முடிவின் படி உள்நாட்டில் ஹலால் இல்லை. எனினும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியாயின் உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை மாத்திரம் இருக்காது. ஏனைய சகல ஹலால் நடைமுறைகளும் உள்ளடக்கப்படும். ஹலால் சான்றிதழ் என்பது ஹலால் விடயத்தில் உள்ள இறுதிப்படிமுறையாகும்.
நாம் வேண்டிக்கொள்வது ஹலால் சான்றிதழை மட்டும் விலக்கிக் கொள்வதையல்ல. சகல ஹலால் படிமுறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் சூட்சுமமான முறையில் ஹலால் சான்றிதழை மாத்திரம் விலக்கிக்கொண்டு பௌத்தர்களுக்கு ஹலால் உணவுகளை உட்கொள்ள சதி செய்கிறார்கள்.
இந்தநாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஹலால் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதுபற்றி தெளிவுபடுத்தியது பொதுபல சேனா அமைப்புதான். ஆனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் உலமா சபை சில பிக்குகளை அழைத்துச்சென்று முன்னிலைபடுத்தி தமது முடிவுகளை வெளியிட்டது.
இதேவேளை, அந்த பிக்குகள் சொல்கிறார்கள் 'எடுத்திருக்கும் முடிவு நாட்டுக்கு கிடைத்த வெற்றியென்று'. ஹலாலுக்கு எதிராக அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த தேரர்களை கொண்டு முன்னிலைப்படுத்துவதற்கு உலமா சபைக்கு எவ்வாறு அதிகாரம் வந்தது. உலமா சபை மேலும் ஆடினால் அதனுடைய கொட்டத்தை எவ்வாறு அடக்குவது என்பது பற்றி எமக்கு நன்கு தெரியும் என்றார்.

(படம்:ஜே.சுஜீவகுமார்)










நன்றி வீரகேசரி








கல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


13/03/2013 பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் அனைத்து மாணவர்களையும் உள்வாங்கும் வகையில் புதிய திட்டமொன்றை அமைப்பதுடன் சுதந்திர கல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் இருந்து 6 வீதத்தை ஒதுக்குமாறு வலியுறுத்தி இன்று உயர் கல்வி அமைச்சுக்கு முன்பதாக இளமையின் குரல் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் 'உயர்தரம் சித்திபெற்ற அனைவருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கு" , 'புதிதாக அரச பல்கலைக்கழகங்களை ஆரம்பி" , 'கல்வித் துறைக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்கு" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

(படம்:ஜே.சுஜீவகுமார்)









நன்றி வீரகேசரி







மாணவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்: ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு

14/03/2013 புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது போர்குற்ற விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி 3 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
மேலும், மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்புகளை வெளியிட்டனர். இதனால் இப் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டதோடு பாதுகாப்பு கருதி பொலிஸார் குவிக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.



நன்றி வீரகேசரி








இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும்: எலியோட்

14/03/2013 இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர்.

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு, எலியோட் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த தயக்கம் காட்டி வருவதாகவும், பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கோர வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வரும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப் முனைப்புக்கள் பாராட்டுக்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், யுத்தம் ஏற்படுவதற்கான ஏதுக்களுக்கு இதுவரையில் காத்திரமான தீர்வுகள் முன்வைக்கப்படாமை வருத்தமளிப்பதாக எலியோட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எலியோட் என்கில் அமெரிக்க காங்கிரஸ் சபையின் முக்கிய சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி







வடக்கின் போர் ஆரம்பம்

14/03/2013 யாழ்.மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான சென். ஜோன்ஸ் மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான 107 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று சற்றுமுன் ஆரம்பமாகியது.
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான இத்தொடர் பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் இம்முறை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றது.
இரு கல்லூரிகளுக்குமிடையே கடந்த 7 ஆம் திகதி சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த இப்போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இரு அணிகளுக்குமிடையே இது வரை நடைபெற்று முடிந்த 106 போட்டிகளில் 33 போட்டடிகளை சென். ஜோன்ஸ் கல்லூரியும் 27 போட்டிகளை யாழ். மத்திய கல்லூரியும் வெற்றி கொண்டுள்ளன. 38 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மேலும் 7 போட்டிகள் பற்றி தரவுகள் பதிவாகவில்லை.

இந்நிலையில் இம்முறை ஜே. அமிதயான் தலைமையில் களமிறங்கும் சென்.ஜோன்ஸ் அணிக்கும் பீ. டார்வின் தலைமையில் களமிறங்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையே 3 நாள் கொண்ட இப்போட்டியில் கடும் சவாலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
எனவே இரு கல்லூரி அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த வடக்கின் சமரில் வெற்றியை தனதாக்கிக் கொள்ளப்போகும் அணி எது என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி வீரகேசரி



 மத, கலாசார உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் "வக்கிரம்'

13/03/2013  இலங்கை வாழ் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அதிகளவுக்கு  நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டியிருப்பதாக சர்வதேச சமூகம் இடித்துரைப்பது அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிர்மாறான திசையில் பயணிப்பதற்கு தூண்டும் சக்திகளுக்கு இடமளிக்கும் செயற்பாடுகளே தீவிரமடைந்து வருவதாகத் தென்படுகிறது. நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் அரசியல் தீர்வை முன்வைத்து தமிழ் மக்களை சமவுரிமைகளை அனுபவிக்கும் சம பிரஜைகளாக நடத்துமாறு உலக நாடுகள் சாம, தான, பேத, தண்டம் என்ற நால்வகை உபாயங்களையும் பிரயோகித்து வருவதாகத் தென்படும் நிலையில், தமிழ் பேசும் மற்றொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மக்களின் மத, கலாசார, உணர்வுகளைப் புண்படுத்தும் செயற்பாடுகள் மிகமோசமாக அதிகரித்துவருவதைக் காண முடிகிறது.

கடந்த சில மாதங்களாக ஹலால் சான்றிதழ் விவகாரத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒருவாறு சுமுகமான தீர்வு காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும்  தருணத்தில் இப்போது  முஸ்லிம் மக்களின் கலாசார விழுமியங்களில் ஒன்றான அபாயாவிற்கு எதிராக பொது பலசேனா  என்ற அமைப்பு கடுமையான விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது. முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா தொடர்பாக "விஷத்தை'க் கக்கும் பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.

"நம்பிக்கை கொண்ட பெண்கள் தளர்வான ஆடையை அணிவதன் மூலம் அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது' என்பது  புனித குர்ஆன் 33.59 (2) இல் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு உட்பட இஸ்லாமிய நாடுகளில் அபாயா அணிவது முஸ்லிம் மக்களின் மத, கலாசாரத்துடன் ஒன்றிணைந்ததாக விளங்குகிறது. இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் மக்கள் வாழும் நாடுகளிலும் இந்த பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரபு மொழியில்"அபாயா' எனவும் உருது மொழியில் "பர்ஹா' எனவும் பாரசீக மொழியில் "பர்தா' என்றும் அழைக்கப்படும் இந்த ஆடைக்கு  எதிராகவே பொது பலசேனா தனது பிந்திய விமர்சனத் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் அபாயாவுக்கு எதிரான பிரசாரப் போராட்டத்தை பொதுபலசேனா ஆரம்பிக்குமென கூறப்படுகிறது. ஏற்கெனவே இதற்கு எதிரான சுவரொட்டிப் பிரசாரங்கள் நாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எந்த மதத்தவர்களாயினும் அவர்களின் மத, கலாசார, விழுமியங்களுக்கு மதிப்பளித்து கௌரவிப்பதே செழிப்பான மனித நாகரிகமாக அமைய முடியும். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமூகமான சிங்கள பௌத்த மக்களுடன் முஸ்லிம் மக்கள் நெடுங்காலமாக மிகஅந்நியோன்யமாக வாழ்ந்து வருபவர்கள், 1915 கலவரம் போன்ற ஓரிரு கசப்பான விடயங்களைத் தவிர வரலாற்று ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்களென முஸ்லிம் தலைவர்கள் அடிக்கடி பெருமையாக நினைவுகூர்ந்து வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில் அண்மைக் காலமாக முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்,  பின்னர் ஹலால் சான்றிதழ் சர்ச்சை, இப்போது அபாயா விவகாரம் என்பன ஏன் தீவிரமடைந்துள்ளன என்பது விளங்கிக்கொள்வதற்கு கடினமான புதிராகக் காணப்படுகிறது.

சமூகங்கள் மத்தியிலான சக வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதும் இனங்கள் மத்தியிலான பிளவுகளை அதிகரிப்பதுமான நியாயமற்ற இந்த விமர்சனங்களை  முளையிலேயே கிள்ளி எறிந்து விட அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறான எண்ணப்பாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அனுகூலம் பெறுவதற்கான சக்திகளை அரசாங்கம் அடையாளம் கண்டு துரிதமாக செயற்படாமல் இருப்பது விரிசல்களை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும்.

பல்லின, பல்மத, பல் கலாசாரத்தின் வேற்றுமைகளில் ஒற்றுமையைக் கண்டு அதற்கு வலுவூட்டுவதே உண்மையான ஜனநாயகம் மட்டுமன்றி நாட்டின் சுபிட்சத்துக்கும் வழிவகுக்கும் என்பது புதியதொரு கண்டுபிடிப்பு அல்ல.
நன்றி தினக்குரல் 


No comments: