தமிழ் வளர்த்த சான்றோர் விழாதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013  நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள்    ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித்தது 

சிட்னியிலே பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 9ஆம் திகதி சனிக்கிழமை மாலை விழா ஆரம்பத்திலேயே துர்க்கை அம்மன் கலாசார மண்டபம் தமிழ் அன்பர்களால் நிரம்பியது  கண்கொள்ளாக் காட்சியாக எல்லோரையும் பரவசப்படுத்தியது. எமது பாரம்பரியத்திற்கு அமைய வெங்கடேஸ்வரா ஆலய பரிபாலன சபையின் முன்னாள் தலைவர் வைத்தியகலாநிதி பாலசுப்பிரமணியம் --   கற்பகவிநாயகர் ஆலய தர்மகர்த்தா சிவத்திரு வித்யாதர சர்மா --  வைத்தியகலாநிதி மனமோகன் --  கலாநிதி கணேசலிங்கம்  ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிச் சிறப்புச் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையத்தின் மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினையும் அவுஸ்திரேலிய தேசிய கீதத்தினையும் இசைத்தார்கள். சைவசமயப் பாடசாலை மாணவர்கள் பண்ணுடன் தேவார திருவாசகத்தைப் பக்தியுடன் ஓதினார்கள். 

பெருமைசேர் நவாலியம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவத்திரு நிர்மலேஸ்வரக் குருக்கள் தனது வழமையான கம்பீரத் தொனியில் வழங்கிய ஆசி உரை அவையினருக்குப் புத்துணர்வை ஊட்டுவதாக இருந்தது. 

ஆசியுரையை அடுத்துத் திருமதி தமயந்தி பால்ராஜ் அவர்களின் மாணவர்கள் புஷ்ப அஞ்சலி நடனத்தை மிகவும் அற்புதமாக ஆடினார்கள். முதலில் விநாயக துதி நடனத்தை மிகவும் நுண்ணிய முக பாவங்களின் வெளிப்பாட்டுடன் பொறுப்புணர்ந்து பாட்டின் பொருளுணர்ந்து மாணவர்கள் ஆடியமை அவர்களின் நடனத்தை நெறியாள்கை செய்தவரான திருமதி தமயந்தியின் கற்பனைத்திறனையும் அனுபவ முதிர்ச்சியையும் வெளிப்படுத்தின. தொடர்ந்து ஆடிய அலாரிப்பும் நன்றாகவே அமைந்திருந்தது மாணவர்களின் உடை அலங்காரம் மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.


புஷ்ப அஞ்சலி நடனத்தைத் தொடர்ந்து விழா இணைப்பாளர் பல் வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் விழாவிற்குத் திரளாக வருகை தந்திருந்த தமிழ் அன்பர்களை மனமகிழ்வுடன் வரவேற்றார். நாவலர் பெருமானின் திருவுருவத்தை வர்ணித்த பின்னர் அவர் தனது உரையில்  “நாவலர் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களாற் கூட நாவலரின் கல்விப்பசியைப் போக்க முடியவில்லை. ஏடும் எழுத்தாணியும் கொண்டு குரு சீடர் முறையில் திண்ணைப்பள்ளி மூலம் கல்விகற்றுவந்த அந்தக் காலத்தில் ஏட்டுச் சுவடிகளாக இருந்த பல நூல்களைச் சேகரித்துத் தாமாகவே பொருள்விளங்கிக் கற்றுத் தேர்ந்தவர் நாவலர். ‘நாவலர் பெருமான் பிறந்திரலேல் சொல்லு தமிழெங்கே? சுருதி எங்கே? சிவாகமங்கள் எங்கே? ஏத்தும் புராணங்கள் எங்கே? பிரசங்கங்கள் எங்கே? ஆத்தனறிவு எங்கே?’ என்று நாவலர் வழிஓம்பி நலஞ்செய்து வாழ்ந்த 
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் மெய்யுருகிப் பாடியுள்ளார்கள். சீரிய சைவசித்தாந்தத்திலும் செந்தமிழ் அறிவிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிக் கல்வி கேள்விகளில் மேன்மையுற்று விளங்கினார் நாவலர். வேற்று மதங்களுக்கு மதிப்பளித்துவந்த அதேவேளை அரச ஆதிக்கத்தோடு பல உத்திகளைக் கையாண்டு சைவப் பெருமக்களை மதமாற்றம் செய்துவந்தோரையும் அவர்களின் மதம் பரப்பும் கீழ்த்தரக் கொள்கைகளையுமே வன்மையாகக் கண்டித்துச் சைவமும் தமிழும் தழைக்க மறுமலர்ச்சி செய்தவர் நாவலர். இன்று யாழ்ப்பாணம்   சைவத்திற்கும் செந்தமிழுக்கும் சிறப்புறு நாடாக மிளிர்வது நாவலர் பெருமான் நித்திய பிரமச்சாரியாக இருந்து அல்லும் பகலும் அயராது ஆற்றிய தொண்டினால் என்பது சரித்திரம் கூறும் உண்மை. சைவத்திற்கு ஆற்றிய தொண்டுபோல நாவலர் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்.  ஏட்டுப் பிரதிகளாக இருந்த எழுபதுக்கும் மேற்பட்ட அரிய பழந்தமிழ் நூல்களுக்கு முதன்முதலில் அச்சு வடிவம் கொடுத்துப் பாதுகாத்த பெருமை நாவலரையே சாரும். ஆங்கில மொழியைச் சிறப்பிக்கும் குறியீட்டு இலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்த நாவலர் பொருள் தெளிவுண்டாவதற்கும் படிப்பவர்களுக்கு ஆர்வம் உண்டாவதற்குமாகத் தமிழிலே குறியீட்டிலக்கணத்தை முதன்முதலில் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. 
இலக்கண வழுவின்றித் தூய எளிய நடையைக் கையாண்டு   வந்தமையால் ‘வைதாலும் வழுவின்றி வையாரே நாவலனார் எனப் போற்றப்பட்டு வந்தவர் நாவலனார். செய்யுள் நடையே வழக்கமாக இருந்த நிலையை மாற்றி முதன்முதலாக இலகுவான உரைநடையைப் புகுத்தியமை  நாவலரின் புகழைக் குன்றின்மேல் இட்ட தீபம்போல உயர்த்தியது அன்றோ?.” இப்படி நாவலர் பெருமானாரைப்பற்றி சிறு அறிமுகத்தைத் தந்த பாரதி அவர்கள் அவரது பேரனாராகிய சோமசுந்தரப் புலவரைப் பற்றிக் கூறுகையில் “நாவலர் காட்டிய நல்வழியிலேயே நன்னகர் நவாலியிலே பிறந்து ஆயிரமாயிரம் செந்தமிழ்ப் பாக்களை இயற்றி ஈழமணித் திருநாட்டில் புலவர் பரம்பரையை இலங்கச் செய்து புகழாரஞ் சூட்டிய தனிப்பெருமை ‘தங்கத் தாத்தா’ என்று தமிழறிஞர்களால் அழைக்கப்பட்டுவரும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரையே சாரும்…….இயற்கையிலேயே இன்றமிழ்க் கவி புனையும் கொடையைக் கைவரப்பெற்ற புலவர் பன்Áற் பயிற்சியும் பழுத்த தமிழ்ப் புலமையும் பரந்த உலகியல் அறிவும் நிறைந்த பண்பும் கொண்டவராகத் திகழ்ந்தவர். தனது 15ஆம் வயதிலிருந்தே சொல்நயம், பொருள் நயம், சந்த இன்பம், ஓசைநயம் உவமையணி, கற்பனை வளம் போன்ற சிறப்பு அம்சங்கள் விஞ்சும் வண்ணம் செந்தமிழ்ப் பாக்களை யாத்து அறிவுக் கதிர்மணி ஆரமாக்கித் தமிழ் அன்னைக்கு அணிசெய்து அழகு பார்த்தவர் புலவர். ……. சுருங்கச் சொல்லின் அவர் கல்வியோ எழுமையும் பயன்தரும் பழுதறு கல்வி.! அவர் ஈட்டிய செல்வமோ இருமையும் உதவிடும் பெருநிதிச் செல்வம்! அவர் சிந்தனைத் தேடலோ விழுமிய சிவநெறி மெய்ப்பொருள் உணர்வு! அவரின் அமைதி உள்ளமோ அரனின் விரைமலர்ச் சேவடி கருதிடும் உள்ளம்! ……….. செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருள் கூட்டிச் சீரிய கூரிய செழுந்தமிழ்ச் சொற்களால்  வல்லென்ற பண்டிதரும் வாêறி மதுரிக்க யாக்கப் பெற்றவை அவரின் படைப்புகள்………….  “சொல்லென்ற மலரிலே பொருளென்ற புது மது சொட்டிச் சுரக்கும்  அமுத சுரபியாய் ஒலிக்கின்ற சோமசுந்தர நாம சுகிர்தனைத் துதி செய்வோமே!’ என்று மனமுருகிப் பாடி மகிழ்ந்தவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள். புலவரின் சிறந்த மாணாக்கரான அமரர் வித்துவான் வேந்தனார் அவர்களோ                          ‘மூன்று குறியும் பொட்டும் மூக்கிற்கண்ணாடியும் பால் போன்ற மைந்த தாடிப் பொலிவழகும் - தோன்றுகலை அன்புசொரி கண்ணும் அருட்சோம சுந்தரனை இன்பநினை ëட்டும் எமக்கு’ என்று பாடி மகிழ்ந்தார். இவ்வண்ணம் செந்தமிழுக்கும் சீரிய சைவத்திற்கும் பெரும்பணி இயற்றிய இவ்விரு சான்றோரையும் நினைவுகூரும் இந்தப் பெருவிழாவிற்கு அரங்கு நிரம்பிய அவையோரை வாழ்த்தி வணங்கி இருகரம் கூப்பி கலாநிதி பாரதி வரவேற்றார். 

புலம்பெயர்ந்த மண்ணிலே தனது செந்தமிழ்பேச்சினூலும் சைவசித்தாந்த விளக்கங்கங்களாலும் எல்லோரையும் கவர்ந்துவரும் திருமதி பாலம் லஷ்மணன் அவர்கள் ‘பத்தராய்ப் பணிவோர்கள் அடியார்க்கும் அடியேன்….’ என்று ஆரம்பிக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரத்தைத் தன் இனிமையான குரலில் இசைத்தபின் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிற்கு வருகைதந்தோரை வணங்கி வாழ்த்தியபின் வாழ்த்துரையை ஆரம்பித்தார். சான்றோர் என்றால் யார்? என்பதற்கு  சங்ககாலப் பாடல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்ட செய்தியொன்றைக் கூறிச் ‘சான்றோர் என்பவர் சால்பையே குணமாகக் கொண்டு தமது உன்னத இலக்கை அடையவதையே இலட்சியமாக்கி வாழ்பவர்கள்’ என்பதை அழகுற விளக்கினார். மேலும் ‘நாவலர் வாழ்ந்ததோ ஒரு அரை நூற்றாண்டு. நல்லது செய்வதையே தனது உன்னத கடமையாகக்கொண்டும் தீர்க்க தரிசனமான கொள்கைகளைப் பரப்பியும் சமயோசிதமான நடவடிக்கைகளை செயலிற்காட்டியும் வாழ்ந்துயர்ந்த நாவலரின் அரும்பெரும் பங்களிப்பினை நினைவுகூருவதில் பெருமையடைவதாகக் கூறினார். அத்துடன் பதவியில் உயர்ந்து செல்வம் பெருக்க எத்தனையோ வாய்ப்புகளும் அதற்கேற்ற வசதிகளும் அவரைத் தேடி வந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல சூழலும் அமைந்திருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவரோ சைவத்தையும் தமிழழையும் எமது மக்களிடம் நிலைபெறச்செய்து அவற்றை வளர்க்கவேண்டும் - அவற்றின் பெருமைகளையெல்லாம்  எம்மவர் அறியும்படி செய்ய வேண்டும் என்ற துரநோக்குப் பார்வையுடன் தனிமனிதனாக நின்று செயற்பட்டார் எனபதை விபரித்துத் திறம்பட உரையாற்றினார். மேலும் அந்தச் சான்றோர் பரம்பரை--- கந்தபுராணக் கலாசாரம் உணர்த்தும் அந்தப் பாரம்பரியம் மிக்க பரம்பரை – நாவலர் பரம்பரை தொடர்கிறது …புலம்பெயர் நாடுகளிலும்  தொடர்ந்து வளர்கிறது என்பதை மிகவும் உருக்கமாகப் பதிவுசெய்தார். நாவலர் அச்சு யந்திரத்தை தமிழகத்திலிருந்து கொண்டுவந்து முதன்முதலாக யாழ்நகரிலே  தாபித்துச் செயலாற்றியமை பற்றியும் பாடசாலைகள் அமைத்தமை பற்றியும் கோயில்களில் சமயத்தையும் சைவத்தையும் வளர்த்தமை பற்றியும் அழகுற விபரித்து தனது அமைதியாக சொற்பொழிவினால் எல்லோரின் சிந்தைக்கும் விருந்தளித்தார்-  

தமிழ்வளர்த்த சான்றோர் விழாவிற்குத் தலைமையுரை வழங்குகையில் தமிழ் ஆர்வலர் திரு அருச்சுனமணி அவர்கள் தமிழரை வழிப்படுத்திய வள்ளுவரினதும் நெறிப்படுத்திய திருஞானசம்பந்தரினதும் கழல்தொழுது இந்தத் விழாவை ஏற்பாடுசெய்தவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள்’ என்று விழா அமைப்பாளர்களை வாழ்த்தித் தனது உரையை ஆரம்பித்தார். கடந்த காலத்தைத் Àக்கிப்பார்ப்பதற்காக அல்லாமல் வருங்காலத்தை வளம்படுத்தவே இவ்விழா அமைப்பாளர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஆணித்தரமாகக் கூறினார். ‘நாவலர் வாழ்ந்திருந்த காலகட்டத்தை  நினைவுபடுத்திய திரு அருச்சுனமணி  சைவமும் தமிழும் பிரிக்கமுடியாது இணைந்திருப்பது பற்றியும் நாவலர் அந்தக் காலகட்டத்தில் அந்நியர் மேற்கொண்ட தமிழ் அழிப்பையும் பிறமதத் திணிப்பையும் தனிமனிதனாக நின்று எதிர்த்தமைபற்றியும் விபரித்தார். தான் சைவத்தைப்பற்றிய ஆழ்ந்த விளக்கத்தையும் கருத்துகளையும் தெரிந்துகொண்டது ஆறுமுகநாவலரின் நூல்ககைப் படித்தபின்னரே என்பதையும் இங்கும் ஆறுமுகநாவலர் போல் சைவநிந்தனை செய்பவர்களுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்பவும் சிலர் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்தார். தமிழகத்திலே சமயத்தையும் தமிழையும் பலர் மறந்து வருவதுபற்றிக் கவலை தெரிவித்த அவர் ஈழநாட்டிலே தமிழைப் படிக்கத் துடிக்கம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. 

தலைமை உரையை அடுத்துக் ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையத்தின் அதிபர் திரு திருநந்த குமார் அவர்கள் நல்லை நகர் தந்த நாவலனாரின் நற்பணிகள் பற்றி நயம்பட  உரை நிகழ்த்தினார். 400 ஆண்டுகள் அந்நியரின் அடக்குமுறை….. வீட்டிலே பேசமுடியாது வெளியிலே வணங்கமுடியாது.……..நமிழையும் சைவத்தையும் அந்நியர் அழித்து வந்த காலம்… ஏதோ நாம் செய்த தவம். நாவலரின் பெற்றோர் அவருக்குத் தமிழையும் சைவத்தையும் பயிற்றுவித்தமை நாம் செய்த தவம். கூட்டில் அடைத்துவைத்து விட்டுத் தமிழரைக்  கொடூரமாகக் கொலை செய்துவரும் கொடுங்கோலாட்சி நடைபெறும் இன்றைய காலகட்டத்தில் நாவலர் தோன்றியிருப்பின் அவர் ஒரு போராளியாகவே இருந்திருப்பார். ஏனென்றால் அவரினது இயல்பு அப்படியானது . எங்கு அநியாயம் நடக்கிறதோ எங்கு அக்கிரமம் நடக்கிறதோ எங்கு ஆக்கிரமிப்பு நடைபெறுகிறதோ ---- மொழியாக இருந்தால் என்ன மதமாக இருந்தால் என்ன பண்பாடாய் இருந்தால் என்ன? --- அநீதி எந்தவடிவில் வெளிப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடத் தானாக  எழுந்த கொழுந்து அவர்’ என்றும் --- அங்கெல்லாம் கண்டனக்குரல்கொடுத்து நியாயத்திற்குப் போராடாமல் அவரால் இருக்கமுடியாது என்பதையும் அழகாகவும் ஆணித்தரமாகவும் இயம்பினார். ஈழத்தில் போரின் விளைவால் அவதியுறும் பிள்ளைகள் கழிப்பறை எதுவும் இன்றியும் கல்விகற்க இடம் இன்றியும் மர நிழல்களில் மிகுந்த சிரமப்பட்டுப் படித்துவரும் அதேவேளை பல கோவில்களில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டிக் கொட்டிக் கும்பாவிடேகம் செய்கிறார்களே! இதைத் தட்டிக் கேட்க ஆள் இல்லையா? என்ற தனது உள்ளக் குமுறலைக் கேட்பவர் மனங்களில் உறைக்கும் வண்ணம் வெளிக்காட்டவும் தவறவில்லை. அற்புதமான Àரநோக்குச் சிந்தனையோடு செயலாற்றிய நாவலர் பெருமான் தமிழையும் சைவத்தையும் நிலைநிறுத்த நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலைகளை நினைவுபடுத்தி நாவலரின் பெருமைகளைச் சித்தரித்தார்.  எதைச் செய் எதைச் செய்யாதே என்று அன்றைய காலகட்டத்தில் நாவலர் எடுத்த நடவடிக்கைகளையும் திறம்பட உரைத்தார். 


மிர்னாலினி ஜெயமோகன் அவர்களின் மாணவர்களின் கண்கவர் நடனங்கள்  எல்லோரின் நெஞ்சங்களிலும் நாட்டுப் பற்றையும் விடுதலை உணர்வையும் ஊட்டுவதாக அமைந்த திரு திருநந்தகுமாரின் உணர்ச்சிமிக்க உரையைத்  தொடர்ந்து தங்கத் தாத்தா இயற்றிய இரு பாடல்களுக்கு அபிநயம்பிடித்து அபினாலயா மாணவர்கள் வெகு அழகாக ஆடினார்கள். இந்த நடனம் திருமதி மிர்னாலினி ஜெயமோகன் அவர்களின் தரமான நெறியாள்கையில் அரங்கேறியது.  விழாவன்று வெளியிடப்பட்ட நாமகள் புகழ்மாலை என்ற நூலிலிருந்து ‘விந்துநாத மீதிருப்பாள் செந்தமிழ்ச் செல்வி வெண்கமல மீதிருப்பாள் செந்தமிழ்ச் செல்வி  என்ற  பாடலுக்கு நன்றாக ஆடி அவையோரை மகிழ்வித்தார்கள். நாமகளைப் பாவனைப்படுத்தி ஒரு பிள்ளையை நடுவில் அமர்த்திவிட்டுச் சுற்றிநின்று பிள்ளைகள் சிலர் இப்பாடலுக்கு அபிநயம்பிடித்து  ஆடுவதாகக் காண்பித்திருந்தால் மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கும் என்பதைச் கூறக்கேட்டேன். இதையடுத்து புலவர் இயற்றிய “வன்ன மயில்கள் நடனமாட வண்டு கீதம் பாடவே மலர்கள் குறிய முறுவல் புரிய வந்து பந்தடித்துமே மன்னர் மன்னன் வாழ்க வென்று வந்து பந்தடித்துமே மதலை மார்பன் வாழி யென்று வந்து பந்தடித்துமே” என்ற நான்கு கந்துகவரிப் பாடல்களுக்கும் நடனம் நன்றாக அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து போரின் பின்னர் முள்ளிவாய்க்காலிலும் அதை அடுத்த வட்டாரங்களிலும் ஈழத் தமிழ் மக்கள் படுந்துயரை நீக்க முருகப் பெருமானிடம் வேண்டுதல் செய்வதாக அமைந்த இப்பாடலுக்கு ஒரு பிள்ளை அற்புதமாக ஆடி எல்லோரையும் ஈழத்திற்கு அழைத்துவிட்டார் என்றே கூறலாம்.   


எல்லோரையும் கவர்ந்த பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்களின் சொற்பொழிவு ---  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக 21 வருடங்கள்  தமிழ்ப் பேராசிரியராகவும் கலைத்துறைக்குத் தலைவராகவும் பணியாற்றி ஈழத்தமிழருக்குப் பெருமைசேர்த்த முதல் ஈழப்பெண்மணியான திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள் “தங்கத் தாத்தா தந்த தமிழமுதம்” என்னும்  பொருள்பற்றிச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர் பேசுகையில் “ஈழத்தமிழ்நாட்டில் 19ஆம் -------- 20ஆம் நூற்றாண்டுகளில் தமிழன்னையின் தவப்புதல்வர்களாகத் திகழ்ந்தவர்கள் யாழ்ப்பாணம் நல்லைநகர் தந்த ஆறுமுகநாவலர் பெருமானும் யாழ்ப்பாணம் நவாலியூர் தந்த சோமசுந்தரப் புலவரும் என்று சொல்ல நான் பெருமையடைகிறேன் பெருமிதம்கொள்கிறேன். இவ்விரு பெருமகனார்களுக்கும் இன்று இவ்வளவு கோலாகலமாக இந்த விழாவினை ஏற்படுத்திய எனது அன்புக்கினிய சோமசுந்தரபாரதி இளமுருகனார் (எமது டாக்டர் பாரதி) அவர்களும் அவரோடு தோளுக்குத் தோள்நின்ற அன்பர்களுக்கும் எனது மனம்நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.என்று முன்னுரை பகர்ந்தபின்  ‘ஓரு சிலரை மட்டுமே காலம் கடந்தும் நாம் நன்றி உணர்போடு நினைவுகூருகிறோம். மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக உயர்ந்த குறிக்கோள்களை இலக்காகக்கொண்டு அவற்றைநோக்கிச் செயற்பட்டுத் தம் குறிக்கோள்களை அடைந்தவர்களை நாம் மாமனிதர்களாகப் போற்றி நினைவு கூருகிறோம். தமிழன்னை நிலைகுலைந்து தலைகுனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த  கால கட்டத்திலே தமிழுக்கும் சைவத்திற்கும் மறுமலர்ச்சி செய்யத் தோன்றியவர்களே ஆறுமுக நாவலரும் சோமசுந்தரப் புலவர் அவர்களும். எல்லோரும் விளங்கக் கூடியவகையில் எளிமையான வண்ணம் தமிழன்னைக்குப் புத்துயிர் கொடுத்தவரகள் தமிழ்நாட்டிலே சுப்பிரமணிய பாரதியாரும் ஈழத்திலே சோமசுந்தரப் புலவரும் அன்றோ?. சோமசுந்தரப் புலவர் இயற்றிய சிறுவர் செந்தமிழ், செந்தமிழ் அமுதம் போன்ற நூல்கள் எளிமையானவை. இலகுவில் எவரும் விளங்கிப படிக்கக் கூடியவை. அவருடைய காலத்திலே தமிழ்நாட்டிpல் வாழ்ந்த மறைமலை அடிகள் பேராசிரியர் அருணாசலம்பிள்ளை திரு வி.க போன்ற தமிழறிஞர்கள் பலரும் ஈழத்து  நவநீதகிருஸ்ணபாரதியார் பெரியதம்பிப்புலவர் வித்துவான் கணேசையர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றோரும் இவர் ஆக்கங்ளைப் பாராட்டி ஊக்கமளித்து வந்துள்ளார்கள.; சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாணிக்கவாசகப் பெருமான் இயற்றிய திருவாசகம் போன்று சோமசுந்தரப் புலவரும் தமிழன்னையாகிய நாமகளைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு நாமகள் புகழ்மாலை என்னும் அருமையான நூலை இயற்றி அருளியவர். புலவர் உள்ளத்தின்   உண்மையும் நேர்மையும்தான் உயிரோட்டமுள்ள கவிதைகளை உலகிற்கு அளித்தது. வறுமையும் தொய்வு நோயும் புலவரை மிகவும் வருத்தியதை நாமகளிடம் சொல்லி முறைப்பட்ட புலவர் தனது துன்பங்களையெல்லாம் தாங்குவேன்   தாங்கி   உன்னை வாயாரப் பாடி உன்னை வாழவைப்பேன் இதற்கு அருள்தா என்று உளமுருகிப் பாடியவற்றையெல்லாம் மிகவும் அருமையாக விளக்கிய பேராசிரியர் ‘தமிழன்னை தளர்வுற்றிருந்த தக்க நேரத்தில் தமிழன்னையின் கண்ணீரைத் துடைத்தவர் சோமசுந்தரப்புலவர’; என்று பாராட்டியதுடன் புலவர் இயற்றிய அன்றைய வெளியீட்டு  நூலான நாமகள் புகழ்மாலை என்றும் நூலையும் வெளியிட்டுவைத்துத் தனது உரையை நிறைவுசெய்தார். 


நாமகள் புகழ்மாலை புத்தகத்தின் முதற்பிரதியை வெங்கடேஸ்வர கோயில் பரிபாலன சபைத் தலைவர் வைத்தியகலாநிதி பாஸ்கா அவர்கள் பல்வைத்திய கலாநிதி இளமுருகனாரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விரும்பிய அன்பர்கள் பிரதிககைப் பெற்றனர். 

புத்தக வெளியீட்டை அடுத்து 20 நிமிட இடைவேளை விடப்பட்டது. அடுத்துச் செல்வி மைத்திரேஜி சங்கரதாஸ் அவர்கள் தனது இனிமையான குரலில் நன்றியுரையை வழங்கினார். இதைத் தொடர்ந்து தங்கப் பதக்கம்  பெற்ற மாணவர்கள் நால்வருடைய பங்களிப்பு எல்லோரையும் புல்லரிக்கவைத்தது. அடுத்த நிகழ்ச்சியாக உலக சைவப் பேரவை ஆஸ்தானக் கவிஞர் கலாநிதி கணேசலிங்கம் அவர்கள் உரை நிகழ்தினார். “தன்னலமற்ற பணிகளால் தமிழையும் சைவத்தையும் அழியாமற் காத்தவர் தவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள். அன்னிய ஆட்சியில் மிசனறிமார்களின் மதமாற்ற முயற்சிகளைத் தடுக்கவும் தமிழைக் காத்து வளர்க்கவும் அவர் மேற்கொண்ட பணிகள் தமிழ்ப்பணி, எழுத்துப்பணி,சமுதாயப்பணி, கல்விப்பணி, பதிப்புப் பணி என்று பலவாறு விரிந்தன. அவரின் ஆற்றல் மிக்க பேச்சும் எழுத்தும் பிறமதக் கண்டனங்களும் மக்களைக் கவர்ந்தது. நாவலர் காட்டிய நல்வழியில் நவாலிêர் சோமசுந்தரப் புலவரும் தமிழுக்கும் சைவத்திற்கும் அளப்பரிய பணிபுரிந்தவர். நாவலரைத் தொடர்ந்து ஒரு ஞானபரம்பரை உண்டாகிச் சோமசுந்தரப் புலவர்வரை பணி செய்து வந்துள்ளது” என்று இரு சான்றோர் செய்த பணிகளையும் மிகவும் தெளிவாக விளக்கினார்.  “உண்ட செந்தமிழ்ச் சைவÁலமு தோங்க நல்லைவந் தருளு நாவலன் கண்ட னப்பிரசங்க மாமெனக் கதிரை மாமலை அருவி பாயுமே”. என்றும் “திருவளர் தெய்வத் தமிழ்வளர் நாடு செய்த தவப் பயனே” என்றும் புலவர் நாவலரை வாழ்த்திய விதங்களையெல்லாம் கூறித் தன் உரையை நிறைவுசெய்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் பரிசளிப்பு நடைபெற்றது. 

பேச்சு மற்றும் கவிதை மனனப் போட்டிகள் -  நல்லைநகர் ஆறுமுகநாவலர் நவாலியூர்; தங்கத்தாத்தா ஆகியோரின் நினைவாகத் தமிழ்க் கல்வி நிலையங்களிற்; பயிலும் மாணவர்களுக் கிடையில் மேற்பிரிவு - கீழ்ப்பிரிவு என இரு பிரிவுகளாக நடாத்தப்பட்ட கவிதை ஒப்புவித்தல் மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் பங்களிப்பு நடைபெற்றது. மிகவும் திறம்படத் தங்கள் தங்கள் கவிதைகள் மற்றும் பேச்சுகளை ஒப்புவித்து அவையோரின் பாராட்டுகளைப் பெற்றனர்.   துர்க்கை அம்மன் கோயில் கலை – கலாசாரப் பிரிவுடன் இணைந்து நடாத்தப்பட்ட இப்போட்டிகள் மார்ச் மாதம் 3ஆம் திகதி ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலையித் நடைபெற்றன. இப் போட்டிகளில் எல்லாத் தமிழ்க் கல்வி நிலையங்களிலும் இருந்து விழாக்குழு எதிர்பார்த்ததற்கும் அதிகமானோர்  பங்குபற்றினார்கள் எனத் தெரியவந்தது..  அனுபவம்மிக்க திரு கருணாசலதேவா அவர்களும் கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்களும் இந்த நான்கு போட்டிகளையும் வெகு சிறப்பாக அனுபவம் மிக்க நடுவர்களின் உதவியொடு நடத்தியிருந்தார்கள். போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலாம் இடத்தைப் பெற்ற நால்வருக்குமுரிய தங்கப்பதக்கங்களை Professional & Accounting Servicesநிறுவனத்தினர், ஏiஅ வுநஉh நிறுவனத்தினர், நுஒஉநடடநவெ துநறநடடநசள நிறுவனத்தினர் மற்றும் பிரபல சட்டத்தரணி செந்தில் ராஜன் ஆகியோர் அன்பளிப்புச் செய்திருந்தனர்.
இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்குப் பரிசில்களைப் Professional & Accounting Services    உரிமையாளர் திரு பாபு அவர்கள்  விழாவில் வழங்கினார்கள்

மூன்றாம் இடத்தைப் பெற்றவர்களுக்கு ஓபன் தமிழர் கழகத்தைச் சார்ந்த திரு வசந்தராஜா(தலைவர்) திரு கணேசராஜா(முன்னாள் தலைவர்) திரு பஞ்சாட்சரம்(செயலாளர்) ஆகியோர் பரிசில்களை வழங்கினார்கள்.
போட்டிகளில் பங்கேற்றுச் சிறப்பாகச் செய்து விழாவிற்கு வருகைதந்திருந்த எல்லோருக்கும் ஆறுதற் பரிசாகத் தங்கத் தாத்தா இயற்றிய ‘சிறுவர் செந்தமிழ்’ புத்தகமும் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. அன்று விழாவிற்குச் சமூகம் அளிக்காதோருக்கு அவர்களின் சான்றிதழ்கள் அவர்கள் பயிலும் தமிழ்க் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  பரிசளிப்பு வைபவத்துடன் தமிழ் வளர்த்த சான்றோர் விழா இனிதே நிறைவுற்றது. 


போட்டிகளைச் சிறப்புற நடதத்திய துர்க்கை அம்மன் கலை-கலாசாரப் பிரிவுப் பொறுப்பாளர் திரு கருணாசலதேவா அவர்களொடு ‘தங்கத் தாத்தா’ நினைவுக் கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற செல்லி ரஞ்சித் அஞ்சலா (வென்ற் வேத்வில்) கவிதை சொல்வதை கீழே உள்ள படத்தில் காணலாம் )  


ஆறுமுகநாவலர் நினைவுக் கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற செல்லி  கோணேஸ்வரன் மாதுமை --- பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற  செல்வி இரவீந்திரராஜா டேனிக்கா. 
 இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களான செல்வி வர்ஷா  ரகுனாநந்தன்- செல்வன் பிரபாகரன் பிரணவன் - செல்வி சதீஸ்ராஜா சர்வினி – செல்வி கோணேஸ்வரன் மாதுமை ஆகியோருக்குத் திரு பாபு அவர்கள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கினார்.    மூன்றாம் இடத்தைப் பெற்றவர்களான செல்வி வர்ஷினி கேதீஸ்வரன் - செல்வன் இரவீந்திரராஜா குருசஞ்சீவ் - செல்வி சதீசன் மது –  செல்வி  இரவீந்திரராஜா தர்சனா ஆகியோருக்கு ஓபன் தமிழர் கழகத்தைச் சார்ந்த திரு வசந்தராஜா(தலைவர்) திரு கணேசராஜா(முன்னாள் தலைவர்) திரு பஞ்சாட்சரம்(செயலாளர்) ஆகியோர் பரிசில்களை வழங்கினார்கள். 

சான்றிதழ்களையும் ஆறுதற்பரிசில்களையும் பெற்ற மாணவர்கள்.திரு ஞானசேகரம் (Gnanam Arts Creations)அவர்கள்    விழாச் சிறப்புற அமையத் தனது அன்பளிப்பாகத் திரை அரங்கை அலங்கரிக்கும் ஒரு பெரிய Banner ஐ வரைந்து தந்துதவியவர் திரு ஞானம் அவர்கள். அவரின் தன்னலமற்ற பொதுநல சேவை பாராட்டுதற்குரியது என விழா அமைப்பாளர் பாரதி கூறினார். 

விழாவிற்கு தோளோடு தோள்நின்று உதவிய பெரியோர்களைக் Gnanam Arts Creations)  ; திரு கருணாசலதேவா--  தமிழ்முரசு மின்பத்திரிகை நிர்வாகசபையோர் - ஓபன் கழகம் - TSS Money Transfer    நிறுவனத்தின் உரிமையாளர் திரு பிரதீபன் - Professional & Accountants Services  உரிமையாளர் திரு பாபு – Vim Tech 
குறிப்பிடமுடியுமா என்று நான் வினவியதற்கு உதவியவர்களில் குறிப்படவேண்டியவர்கள் சைவமன்றத் தலைவர் திரு தில்லைநடேசன் அவர்கள்   வைத்தியகலாநிதி மனமோகன் - பல்வைத்திய கலாநிதி திருமதி பாலசுப்பிரமணியம்(கன்பரா) - திரு க.தங்கராசா – கலாநிதி பாலன் அவர்கள் (ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலை) ---சட்டத்தரணி திரு செந்தில்ராஜன் அவர்கள் -  திரு  ஞானசேகரம்  திரு ரங்கன்(
நிறுவனத்தின் உரிமையாளர் திரு விமல் - Excellent Jewellers நிறுவனத்தின் உரிமையாளர் திரு  சௌந்தரராஜன் - Pyramid Videos & Spices நிறுவனத்தின் உரிமையாளர் திரு லிங்கம்  -- RAMS உரிமையாளர் திரு சிவா -- அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ---இன்பத்தமிழ் ஒலி  ஆகியோர் என அவர்களுக்கு நன்றி கூறியதுடன் விழா நடத்துனராக அருமையாக தன்து இனிமையான குரல் வளத்தாலும் தமிழ்ப் புலமையினாலும் விழாவைச் சிறப்பித்த சௌந்தரி சிவானந்தன் அவர்களுக்கும்  தனது உளங்கனிந்த நன்றியையும் தெரிவித்தார். இவர்களுடன் விழாக் குழுவில் அங்கம்வகித்து அரும்பணி ஆற்றிய திருமதி பாலம் லட்சுமணன் - திரு அருச்சுனமணி – திரு திருநந்தகுமார் - திரு கருணாசலதேவா திரு ஈழலிங்கம் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். முழுக்க முழுக்க உள்ளுர்ப் பேச்சாளர்களுடனும் உள்ளுர்க் கலைஞர்களுடனும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இலக்கிய விழாவிற்கு அரங்கு நிறைந்த தமிழன்பர்கள்  சமூகம் அளித்து விழாவினைச் சிறப்பித்தமை போற்றப்பட வேண்டியதே!                       
 ( விழாபற்றிய வர்ணனை -- ராஜா )   No comments: