இராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்

 .


கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.03.2013 இராகசங்கமம் நிகழ்ச்சி 6.00 மணிக்கு துர்க்ககை அம்மன் ஆலயத்தில் இடம் பெறவிருந்ததால் 5.50 மணிக்கே சென்றுவிட்டேன். சண் குமாரலிங்கம் சப்தஸ்வரா பாலாவுடன் சேர்ந்து அம்மன் ஆலயத்திற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தென்னிந்திய இசையமைப்பாளர் சதீஸ் வர்சனின் இசையில் உள்ளுர்கலைஞர்களும் இணைந்துகொள்ள இங்குள்ள இசை அறிவுள்ளவர்கள் இராகங்களோடு பாடும் பாடல் போட்டிதான் இந்த இராகசங்கமம்.


6.30 மணிதாண்டி விட்டது நமக்கு பொறுமையும் சற்றுக்குறைந்து கொண்டு போக தொடங்கியது. 6.35 மணிக்கு சண் குமாரலிங்கம் சபையினருக்கு வணக்கம் சொல்லி நிகழ்வை ஆரம்பித்துவைப்பதற்காக மங்கல விளக்கேற்றுவதற்கு துர்க்கையம்மன் ஆலயத் தலைவர் திரு ரட்ணம் மகேந்திரன் அவர்களை அழைக்க அவர் வந்து விளக்கேற்றினார் நான் மண்டபத்தை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன் மக்கள் வந்து அமர்ந்து மண்டபம் நிறைந்து காணப்பட்டது.


 அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை இசையாக மிதக்க விட்டபோது திரை விலகியது. ஒருபாதி திரை திறந்துகொள்ள மறுபாதி நகர மறுத்துவிட்டது. பலரின் போராட்டத்திற்குபின்பு திரை விலத்தப்பட மக்கள் கரவொலி எழுப்ப இசைக்கலைஞர்கள் சிரித்தவாறே இசையை மீட்ட ஒரு  குதூ கலமான ஆரம்பமாகவே இருந்தது.

பலமேடைகளில் அறிவிப்பாளராக நாம் பார்க்கும் மகேஸ்வரன் பிரபாகரன் தனது கணீரென்ற குரலில் அறிவித்தலை ஆரம்பித்தார்.முதல்பாடலாக சதீஸ் வர்சன் கல்யாணிராகத்தில் ஜனனி ஜனனி என்ற பாடலை அற்புதமாக ஆரம்பித்ததைக் கேட்டோம் அதன்பின் எதையும் கேட்கமுடியவில்லை தொழில்நுட்பவியலாளர்கள் ஓடித்திரிந்தார்கள் அவர்கள் முயற்சியின் பலனாக ஒரு சில வினாடிகளில் மீண்டும் ஒலி கேட்கத்தொடங்க சதீஸ் முதலில் இருந்து ஆரம்பித்தார் அருமையாக பாடினார் அத்தோடு கலாநிதி முரளியும் பவிதாவும் கண்மணியும் இந்தபாடலோடு இணைந்து கொண்டார்கள்  இசை மிக கட்டுக்கோப்பாக அமைதியான நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளுர் கலைஞர்களின் திறமை அங்கு தெரிந்தது. நல்ல ஆரம்பமாக இருந்தது.

அறிவிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன் போட்டி விதிகளைக்கூறி  நான்கு பிவுகளில் பலர் பாடி அதிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று மூன்றுபேர்கள் இந்த மேடையில் பாடவருகின்றார்கள் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் அவர்களில் சிறந்த பாடகர் ஒருவரை தெரிவு செய்யவேண்டியதே உங்கள் கடமை 60 புள்ளிகளை நடுவர்களும் 40 புள்ளிகளை சபையோரும் வழங்குவார்கள் எனக்கூறினார். நடுவர்களாக மூவர் வந்திருந்தார்கள் ஸ்ரீமதி கேமலதா கணேசன்  ஸ்ரீமதி அருணா பார்த்திபன் ஸ்ரீ சியாமளங்கன் ஆகியோரே அவர்கள்.

Judges 
12 வயதிற்கு உட்பட்டவர்களின் போட்டி ஆரம்பமானது முதலில் ராகங்களோடு விளையாடவந்த டினேஸ் மோகனராஜா காப்பி ராகத்தில் அமைந்த தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற பாடலை மிக அருமையாகப் பாடினார் அடுத்த போட்டியாளர் சாயினி பாலகிறிஸ்ணன் மோகன கல்யாணி ராகத்தில் ஆறுமுகமானபொருள் என்ற பாடலை மிக நன்றாக பாடினார் இந்தப்பிரிவின் கடைசிப்போட்டியாளரான வர்சினி கேதீஸ்வரன் கல்யாணி   ராகத்தில் காற்றில் வரும் கீதமே என்றபாடலை பாடியபோது இதமான காற்று தழுவிச் சென்றதுபோல் இருந்தது. இசைக்குழுவினருக்கு பலத்த கரவொலிகள்.

அடுத்த போட்டிக் குழுவினர் வருவதற்கிடையில் வந்த டாக்டர் கௌரிபாலன் அவர்கள் சாருகேசி ராகத்தில் அமைந்த வசந்தமுல்லை போலேவந்து அசைந்து ஆடி அருமையான அந்த பழைய பாடல்மூலம் சபையினரை அசைந்தாட வைத்தார்.அடுத்ததாக 13 இல்இருந்து 21 வயதுக்குட்பட்ட போட்டியாளர்கள் பாடவந்தார்கள். முதலில் கங்கைக்கரைத் தோட்டம் வழியே காப்பிராகத்தோடு உலாவந்தவர் அபினயா பிரபாகர் மிக அற்புதமாக பாடினார் உச்சஸதானில் அவர் பாடியதும் பாடலை நிறைவுசெய்த முறையும் மிக மிக அருமையாக இருந்தது. சபையோரின் கரகோசம் மண்டபத்தை அதிர வைத்தது.
அடுத்தபோட்டியாளராக  கோபிராம் ஜயர் சாருகேசிராகத்தில் அமைந்த ஆடல்கலையே தேவன்தந்தது என்ற ஜேசுதாசின் பாடலோடு வந்தார் சோதனை பாடகருக்கா அல்லது இசைக்குழுவினருக்கா என்கின்ற வகையில் பாடலும் இசையும் போட்டிபோட்டது பாடல் முடிந்தபோது மழைபெய்து ஓய்ததுபோல்  இருந்தது மீண்டும் கரகோசம் மழையாய் பொழிந்து மகிழ்வித்தது. அற்புதமாக பாடியிருந்தார் இளம் பிள்ளைகளினுடைய அதுவும் புலம்பெயர்ந்தநாட்டில் வளரும் பிள்ளைகளுக்கு இத்தனை திறமையா? பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


அடுத்தபாடகர் கேசிகா அமிர்தலிங்கம் பல மேடைகளில் பார்த்த முகம் இன்று சல்லாப ராகம் உட்பட மூன்று ராகங்களை கலந்தும் இரண்டு பாடகிகளான பி சுசீலா எஸ் ஜானகி ஆகியோர் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய பாடலான இசையரசி எல்லாமும் நானே என்றபாடலை அற்புதமாக பாடினார் இசையில் சபையைக் கட்டிப்போட்டதுபோல் இருந்தது. ரகுராமின் மிருதங்கம் பேசியது என்றுதான் கூறவேண்டும் அவ்வளவு அற்புதமாக இருந்தது. மோர்சிங்கை ஜெய்ராம் ஜெகதீசன் வாசித்துக்கொண்டிருந்தார் சரியாகக் கேட்கவில்லை தொழில் நுட்ப வல்லுனர்கள் முயற்சித்தபின் சற்று கேட்கக்கூடியதாக இருந்தது. பாடல் நிறைவுறும்போது அம்மா அம்மா என்று உருகி உருகி கேசிகா பாடியபோது உண்மையிலேயே உருகக்கூடியதாக இருந்தது குரலில் அவ்வளவு உருக்கம் ஒரு சபாஸ் போடலாம் பாடகருக்கு மட்டுமல்ல இசைக்கலைஞர்களுக்கும்தான்.
இந்த வேளையில் மகேஸ்வரன் பிரபாகரனும் ஜெய்ராம் ஜெகதீசனும் இசைக்குழுவினரை அறிமுகம் செய்துவைத்தார்கள்.
ஓக்ரோபாட் ஜெய்ராம் ஜெகதீசன் கீபோட் தமிழகத்திலிருந்து வந்த இசையமைப்பானளர் சதீஸ்வர்சன், 2வது கீபோட் ரவிச்சந்திரன் சுப்பிரமணியம் ,கிற்ரார் ஜோஸ்மதியூ ,லீட் கிரார் அன்ரன் , புல்லாங்குழல் வெங்கடேஸ் சிறீதரன் , டோலக் கிறிஸ்ணா ருபதாஸ்,  ஸ்ரீதாஸ் நாராயணதாஸ் தபேலா,  பல்லவராஜர் நாகேஸ்வரன் மிருதங்கம் , டாக்டர் ரகுராம் சிவசுப்பிரமணியம் மிருதங்கம் தபேலா, ஜங்கரன் கந்தராசா தபேலா உண்மையிலேயே அற்புதமான கலைஞர்கள் நம்நாட்டிலேயே வளர்ந்துவரும் இவர்களுக்கு என்பாராட்டுக்கள். நீணட ஆயுளோடு நிறைய செய்யவேண்டும்.

அடுத்த போட்டிக்கு முன்பாக பபிதா செல்வநாதன் பாடவந்தார் இவரைப்பற்றி சொல்லவே தேவையில்லை சிட்னியின் சின்னக்குயில் என்று கூறலாம் வைத்திய நெறியை கற்றுக்கொண்டிருப்பவர் வேதம் அனுதினம் ஒருநாதம் என்றபாடலை பாடினார் அருமையான பாடல் அற்புதமாக பாடினார் ஆனால் வாத்திய இசைக்கருவிகளின் சத்தம் (Volume ) சற்று அதிகமாக இருந்ததுபோல் இருந்தது.
அடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த திரு சண் குமாரலிங்கத்தை துர்க்ககை அம்மன் ஆலய நிர்வாகத் தலைவர் திரு மகேந்திரன் கௌரவிப்பதாக அறிவித்து இசையமைப்பாளர் திரு சதீஸ்வர்சன் சண் குமாரலிங்கத்தை பொன்னாடை போர்தி கௌரவிப்பார் என்றதும் சதீஸ்வர்சனால் பொன்னாடை போர்த்தப்பட்டது பின் இசையமைபபாளர் சதீசை சண் குமாலிங்கம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

 சகீஸ் வர்சன் திரைப்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருப்பவர்  வெள்ளைக் காகிதம் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் இதில் எஸ் ஜானகி அவர்கள் பல வருட இடைவெளியின்பின்பு பாடியுள்ளார்.மௌனி என்ற படத்திற்கு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் உரையாற்றும்போது இங்கேஉள்ள இசைக்கலைஞர்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்கள் இவர்களோடு வேலைசெய்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது என்னை இங்கே முதன்முதலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அழைத்தது ஈழத்தமிழர் கழகம்தான்.; ஈழத்தமிழர்கள்தான் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்து கௌரவிக்கின்றார்கள் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்றார். திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஒரு திறமைவாய்ந்த இசையமைப்பாளர் எந்த பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இந்த நிகழ்வில் இருந்து இசையமைத்து நடாத்தியதற்கு அவரை மனதார பாராட்டுகிறோம்.

Add captionஅடுத்த போட்டி வயதெல்லை அற்ற தனிநபர்களுக்கான பாடல் முதலில் வந்தவர் பலமேடைகளில் பார்த்த ரேகா ஜயர் அவர்கள் இவர் ஜானகிக்கு பெருமைதேடிக்கொடுத்த ஆபேரி ராகத்தில அமைந்த பாடலான சிங்காரவேலனே தேவா என்ற பாடலை; பாடினார் இந்தபாடலுக்கு காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வர இசையை வழங்கியிருந்தார். எஸ் எம் சுப்பையாயா நாயுடு இசையமைத்தபாடல். இந்தபாடலை ஆரம்பித்தபோது தவிலும் நாதஸ்வரமும் மேடையில் இருக்கவில்லை ஆனால் அற்புதமான நாதஸ்வர இசையை சதீஸ் கீபோட்டிலும் தவில் இசையை ஜெய்ராம் ஒக்ரோபாட்டிலும் கொடுத்தபோது ரசிகர்கள் அதிர்தே போனார்கள் என்றால் அது மிகையாகாது அப்படி ஒரு அருமையான இசையை தந்தார்கள். போட்டியாக ஜங்கரன் கந்தராசா தபேலாவில் தன் திறமைகளை காட்டி வெழுத்துவாங்கினார் சரியான போட்டியாக இசையும் பாடலும் அமைந்திருந்தது. சபை பாடல் முடியும்வரை கட்டுண்டு கிடந்தது.


அடுத்து வந்தவர் சாலினி ஹரிகேஸ் பாடறியேன் படிப்பறியேன் என்று பாடலைப்பாடி நெஞ்சை நெகிழவைத்தார் . இந்தநிகழ்வை பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்திய தொலைக்காட்சிகளில் வரும் குத்துப்பாட்டுக்களும் தேவையற்ற ஆட்டங்களையும் பார்த்துப்பார்த்து அலுத்த நமக்கு சிட்னியில் இப்படி ஒருநிகழ்வா என்று எண்ணத்தோன்றியது. அருமையான ராகங்களோடும் அருமையான இசையோடும் நடக்கின்ற இந்த ராகசங்கமம் நம் நெஞ்சைவிட்டு அகலாது என்று எண்ணத்தோன்றியது. ஒரு வாரங்களுக்கு முன்பு ATBC வானொலியில் இந்த நிகழ்ச்சிபற்றி கலந்துரையாடல் ஒன்றை சண் குமாலிங்கத்தோடும் திரு பாவலனோடும் செய்துகொண்டிருந்தேன் அப்போது சண் குறிப்பிட்டார் முதல் முறையாக ராகங்களோடு சேர்ந்த பாடல்போட்டியை தொடங்கிஇருக்கிறோம் 50 வருடங்கள் இதை தொடரவேண்டும் நாம் இருப்போமோ தெரியாது என்று குறிப்பிட்டார் நான் குறிப்பிட்டேன் சண் ஆரம்பித்துவிட்டீர்கள் இளைய சமுதாயத்தின் கையில் கொடுங்கள் அது நீங்கள் விரும்பியதுபோல் 50  ஆண்கள் தொடர்ந்து கொண்டுபோகும் என்று. இன்று பங்குபற்றியவர்களையும் இசை வழங்கியவர்களையும் பார்த்தபோது நிட்சயம் இராக சங்கமம் பல்லாண்டுகள் தொடரும். எங்கோ சென்றுவிட்டேன் போல் தெரிகிறது.


இந்தப்பாடலை பாடியபோது ஒவ்வொருவரும் நன்றாகப்பாடுகின்றார்கள் ஒருவரைஒருவர் விட்டுக்கொடுக்காமல் பாடுகின்றார்கள் யாருக்கு நமது வாக்கை அளிப்பது என்ற தடுமாற்றம் கூட ஏற்பட்டது. இதில் வயலின் அற்புதமாக விளையாடியது.
அடுத்த பாடகராக செந்தூரன் சத்தியநாதன் பாட்டும் நானே பாவமும் நானே என்று பாடியது மிகமிக அருமையாக இருந்தது. ஒரு பாகவதரைப்போலவே ஆலாபனைகள் செய்தார் மீண்டும் இந்தப்பாடலில் மோர்சிங்கை இசைத்த ஜெய்ராம் ஜெகதீசன் மனதைத் தொட்டுவிட்டார் அதேபோல் ரகுராம் கடத்தை உருட்டி நம்மனத்தையும் உருட்டிவிட்டார் மிருதங்கத்தை அம்முறைவாசித்த பல்லவராஜர் புல்லாங்குழல் சிறி இவர்களும் மிக அருமையாக செய்தார்கள். குறிப்பாக புல்லாங்குழல் இசைத்த அந்த சின்னனஞ்சிறு இளைஞனான வெங்கடேஸ் என்ன நாதம் பாராட்டுக்கள்.
அடுத்த போட்டி தொடங்குவதற்குமுன்பு கண்மணி ஜெகேந்திரன் பாடவந்தார் கீரவாணி ராகத்தில் காற்றில் எந்தன் கீதம் என்றபாடலை இசைத்தது அது எம் காதில் கீதத்தை பாச்சியது.அடுத்த போட்டிநிகழ்வாக இரட்டையர் பாடலுக்காக இருபெண்கள் சுவர்ணா நடராஜா மீரா பிரகாஷ் ஆகியோர் வந்தார்கள் கிந்தோள ராகத்தில் ஓம் நமசிவாயா என்ற பாடலை மிக அழகாகப் பாடினார்கள் ரகுராமின் மிருதங்க இசை மிக அற்புதமாக இருந்தது. அடுத்த போட்’டியாளர்களாக சௌமியா கஸ்தூரிரங்கன் சந்தனா அச்சுதன்னா ஆகியோர் வந்து மல்லிகையே மல்லிகையே என்ற பாடலை நன்றாகப்பாடினார்கள் இந்தப்பாடலுக்கும் இசைக்கருவிகளின் சத்தம் சற்றுக் கூடி இருந்ததுபோல் இருந்தது. அடுத்த போட்டியாளர்கள் சேதுமாதவன், சந்தீப் கோபால கிறிஸ்ணன்  ஆகியோர் பிருந்தாவன சாரகாவில் பெண்ணொன்று கண்டேன் என்ற பாடலை பாடினார்கள் அவர்கள் மேடையில் நின்றதும் பாடியதும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இதற்கான இசையும் அமைதியாக தெளிந்த ஓடைபோல் ஓடிக்கொண்டிருந்தது.


அடுத்து செந்தூரனும் பிரியா ஞானகுமாரனும் வந்தார்கள் நாதத்தில் வினோதம் செய்ய வந்தவர்கள்போல் ராகமாலிகா வசந்தா ஸ்ரீரஞ்சனி ராகங்களில் அமைந்த நாதவினோதங்கள் என்றபாடலை மிக அற்புதமாகப் பாடினார்கள். இசைக்குழுவினருக்கு மீண்டும் ஒரு பாராட்டு என்ன வினோதங்கள் புரிகின்றார்கள் சிட்னி இசைக்கலைஞர்கள்.

அடுத்து மீண்டும் கலாநிதி முரளி வந்து கே ஜே ஜேசுதாசின் அதிசயராகம் ஆனந்தராகம் என்றபாடலை பாடியது இதுவரை நடந்த போட்டிகளில் பாடியது அத்தனையும் அதிசயராகங்கள்தான் என்பது போல் இருந்தது. கே ஜே ஜேசுதாசே பாடுவதுபோல் இருந்தது. எங்கிருந்தையா வந்தீர்கள் என்று கேட்கவேண்டும் போல் தோன்றியது மகேஸ்வரன் பிபாகரன் வந்து மெல்பனில் இருந்து வந்திருக்கின்றார் இனி சிட்னியில்தான் இருப்பார் சிட்னி மேடைகளில் இனி இந்தக் குரலைக் கேட்கலாம் என்றதும் உண்மையில் மகிழ்வாக இருந்தது.தொடர்ந்து நன்றியுரை சண் குமாரலிங்கம் கூறினார் அதைத் தொடர்ந்து சிட்னியில் நன்கு அறிமுகமான பாடகர் பாவலன் அவர்கள் வந்து என்நாதமே என்ற பாடலை ஆரம்பித்தபோது சபையினர் கரகோசம் செய்தார்கள் என்ன ஆழுமை எத்தனை சங்கதிகள் எத்தனை கமகங்கள்  அசைவுகள் என்று எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு இராக மழையையே பொழிந்து விட்டார் இசைக்கலைஞர்கள் ஒருபுறம் சோனாவாரியாக இசைமழையை பொழிந்தார்கள் குறிப்பாக மீண்டும் ஒருமுறை ஜெய்ராம் ஜெகதீசனுக்கு பாராட்டுக்கள். ( இவரென்ன அவருக்கு மட்டும் தனியாக பாராட்டு என்று சிலர் யோசிக்கலாம்) உண்மையில் அத்தனை திறமைகளையும் இந்த இளம் கலைஞன் அந்தமேடையில் காட்டியிருந்தான் என்பதுதான் உண்மை வாழ்க பல்லாண்டு. இது கடைசிப்பாடலாக இருக்கும் போல் இருக்கிறது உயிர்மூச்சைக் கொடுத்து எல்லோரும் செய்கிறார்கள் என்று நினைத்தேன் அதற்கு மாறாக சதீஸ் வரசன் வீட்டிற்கு வீட்டிற்கு வாசற்படி வேண்டும் என்று பாடி ஒவ்வொரு வீட்டிற்கும் இசைக்கலைஞர்கள் இருக்கவேண்டும் என்று சபையோருக்கு கூறியதுபோல் இருந்தது. அருமையாக அந்தப் பாடல் நிறைவடைந்தது.இப்போது தேர்வுசெய்யப்பட்டவர்களை அறிவிக்கும் நேரம் மகேஸ்வரன் பிரபாகரன் தேர்தல் அதிகாரி செந்திலை அழைக்க அவர் ஒவ்வொரு சீட்டாக கொடுக்கிறார் மியூசிக் என்றதும் ஜெய்ராம் இதயம் அடிக்கும் இதய ஒலியை எழுப்புகின்றார் உண்மையிலேயே பார்வையாளர்கள் இதயம் அந்த சந்தந்திற்கு ஏற்றவாறு அடித்துக்கொண்டுதான்இருக்கிறது. 
அறிவிக்கின்றார் 
12 வயதுக்குட்பட்வர்கள்   வர்சினி கேதீஸ்வரன் 
13 இலிருந்து 21                     கோபிராம் ஜயர்
தனிநபர் பாடல்                    செந்தூரன் சத்தியநாதன்
இரட்டையர்கள் பாடல்    பிரியா ஞானகுமாரன் செந்தூரன் சத்தியநாதன் சபையின் கரவொலி வானைப்பிளக்க பரிசில்கள் வழங்கப்படுகின்றது.இராகசங்கமம் 1 அற்புதமான இசை நிகழ்வாக நிறைவுறுகிறது. அடுத்த இராகசங்கமத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று மனம் ஒரு கணக்குப்போட்டுக்கொள்கிறது. 
குறைகள் எதுவும் இல்லையா என்று நினைக்கலாம் அவ்வப்போது சில குறைகளையும் கூறிவிட்டேன் இன்னும் ஒன்றிரண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அடுத்த நாள் காலையிலேயே தொலைபேசியில் குறிப்பிட்டேன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள் அடுத்தமுறை திருத்திக்கொள்வதாக சொன்னார்கள். உண்மையில் நிறைவுதான் அதிகம் மனமும் நிறைந்த ஒருமாலைப்பொழுது மகேஸ்வரன் பிரபாகரன் 10.30 மணிக்கு சரியாக நிறைவு செய்தார் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கும் சப்தஸ்வரா இசைக்குழுவிற்கும் நன்றி சொல்லி மனநிறைவோடு நானும் நிறைவு செய்கிறேன்.

2 comments:

Anonymous said...

You Gave a good commentory Baskar

Rangan

கௌரி விமலேந்திரன் said...

நிகழ்ச்சி பற்றிய விமர்சனமும், புகைப்படங்களும்
மிகச் சிறப்பாக இருக்கின்றன. பங்குபற்றிய அனைத்து
கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.