நல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)

.

Photos by Paskaran 


16. 3. 2013 சனிக்கிழமை அன்று சிட்னி சில்வவாட்டரில் அமைந்துள்ள பஹாய் அரங்கில் நடைபெற்ற நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசருடைய நடனக் கல்லூரி மாணவிகளுடைய நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். வழமையான நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பார்க்க இந்த நிகழ்ச்சியில் பல புதுமைகளைக் காணக்கூடியதாக இருந்துது. முதலில் அவற்றைப் பட்டியல் இட்டபின் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன்.

1.    பெரும் பணச்செலவில் நிகழ்ச்சி நிரல்களைக் கவர்ச்சியாக அடித்து நிகழ்ச்சி முடிந்தபின் அவற்றில் சில அங்குமிங்கும் கிடந்து கால்களில் உளக்குப் படாமல் இருந்தது.
2.    பங்கு பற்றிய மாணவிகளின் பெயர்களைச் சொல்லி நேரத்தை வீணாக்காது கலை கலைக்காகவே பெயருக்காக அல்ல என்பதை வெளிப்படுத்தியது. இதற்குப் பெற்றோர் ஒத்துழைத்தது.
3.    பங்குபற்றிய மாணவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னும் முடிந்த பின்பு
ம் மேடைக்கு வெளியே ஆடை அலங்காரங்களுடன் வந்து காட்சி தராமல் இருந்தது.
4.    எல்லாத் தனித் தனி ஆடல்களும் தங்குதடையில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து
முழு ஆடல்களும் 3 மணி நேரத்துக்கு உள்ளாகவே நிறைவுற்றது.
5.    நடனங்களை நீட்டிப் பார்வையாளருடைய முது
குகள் நோவெடுக்கா வண்ணம் பார்த்துக் கொண்டது.

6.    மாணவர்களும் பெற்றோரும் ஒழுங்கையும் அமைதியையும் பேணியமை.
7.    அந்த நிதிக்காக இந்த நிதிக்காக என்று சொல்லி ஆதரவு தேடாமல் நிகழ்ச்சியை இலவசமாகவே வழங்கியது.












இனி நிகழ்ச்சியைப் பற்றிப் பார்ப்போம். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய முப்பது மாணவாகள் பங்கு கொண்டார்கள் என்பது என் கணிப்பு.  சரிபாதி சிறுவர்களும் மீதியானோர் வளர்ந்த பெண்களுமாக இருந்தனர். மொத்தம் 31 தனித்தனி ஆடல்கள் இடம்பெற்றன. ஒரு முறை திறக்கப்பட்ட திரை எல்லா ஆடல்களும் நிறைவுற்ற பின்னாதான் மூடப்பட்டது. (இடைவேளையைத் தவிர)

நடன நிகழ்வுகளுக்குப் பக்கவாத்திய இசை ஒலிப்பதிவு மூலம் வழங்கப்பட்டது. கடைசியில் ஒரு சிறு தடங்கலைத் தவிர மற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் பக்கவாத்திய இசை தங்குதடை இன்றிச் சென்று கொண்டிருந்தது. பாடல்களின் தெரிவும் பொருத்தமான ஆடை அலங்காரங்களும நிறச் சேர்க்கைகளும் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தன. நான் நினைக்கிறேன் இரண்டொரு மாணவாகள்தான் ஆடைமாற்றம் செய்திருப்பார்கள். ஆனால் அதற்கு நேரம் எடுத்ததாகத் தெரியவில்லை.






பஞ்சபூத வணக்கத்தைத் தொடர்ந்து ஆனந்தக் கணபதி வணக்க ஆடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. இளங்கோ அடிகளாருடைய “திங்களைப் போற்றுதும்” என்ற வரிகள் என் நினைவுக்கு வந்தன. இந்த நிகழ்ச்சியில் ஏழு வகையான சிறுவர் நடனங்கள் இடம்பெற்றன.
3 கண்ணன் பாடல்களும் 1 முருகன் பாடலும் 1 கலியாணக் காட்சிச் பாடலும் 1 பொலிவூட் பாடலும; 1 போர் வீரப் பாடலும் வந்தன. இவற்றில் பங்கு பற்றிய சிறுவர்கள் அருமையான முறையில் ஆடினார்கள். அவர்கள் ஆட்டத்தில் தக்க பயிற்சியையும் தெளிவையும் கண்டேன்.
மாப்பிள்ளை பெண்ணாக வந்து மாலையிட்டது எம்மவர்கள் கலியாணங்களை இப்படியும் சுருக்கலாம் என்பது போலிருந்தது. போர் வீரப்பாட்டும் வாளும் கேடயமும் ஆட்டமும் “வானமே சாட்சி வீரமே சாட்சி” என்று பாடி ஆடியது சிந்தனையை எங்கோ கொண்டுபோய் விட்டு விட்டது. புறநாநூற்று வீரத்தையும் நினைவுபடுத்தியது. இந்த மாணவாகளுக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்கமுடியாது







வயதுவந்த பெண்கள் ஆடிய ஆடல்கள் பலவிதம். சிவன் பார்வதிப் பாடல்கள் கண்ணன் கோபியர் பாடல்கள் குச்சுப்பிடி நடனம் சிவ பார்வதி நடனம் பரதநாட்டியத் தாளக் கோர்வை ஆட்டங்கள் தலைவன் தலைவி ஆடலும் ஊடலும் எனப் பல தரப்பட்ட் பாடல்ளுக்கு அபிநயமும் ஆடலும் இடம்பெற்றன. ஓரிரு பொலிவூட் நடனங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஒன்றை ஒன்று விஞ்சியதாக இருந்தது. குறிப்பாகக் குச்சப்பிடியில் சத்தியபாமா வும் மற்றத் தட்டக் கரக ஆடலும் வெகுவாக சபையோரின் கைதட்டலைப் பெற்றன. “ஆடிக்கொண்டார் இந்த வேடிக்கை” என்ற பாடலுக்கு அபிநயமும் நடராஜர்  
தோற்றப் பாவனையும் முகபாவங்களும் மிகுந்த சிறப்பாக அமைந்தன. புன்னாகவராளி ராகமும் பாம்பாட்டமும் அருமையாக அமைந்திருந்தன. அந்த இசை வழமையான மாதிரி இல்லாமல் புதுமையாக இருந்தது.  இறுதியாகக் குறிப்பிடவேண்டியது “கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே” என்ற பாடலுக்கு ஆடிய ஆட்டம். பழைய சினிமாப் பாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆடிய மாணவிகள் இருவரும் பாடலை உணர்ந்து ஆடினார்கள். லலிதா பத்மினி ஆட்டம்போல் இருந்தது. 






ஒட்டு மொத்தமாக இந்த நிகழ்ச்சியைத் தந்த மாணவிகளையும் அவர்களைப் பயிற்றி எடுத்த நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரையும் பாராட்டவேண்டியது எமது கடமை. கார்த்திகா இன்றும் அன்றும் புதுமை புகுத்துகினற ஒரு உன்னதப் படைப்பாளி. பாத்திரங்களை அழகுறத் தெரிந்தெடுத்து ஆடை அலங்காரங்ககளைப் பிரமிக்கத் தக்க வகையில் வழிநடத்தி எல்லா மாணவர்களையும் பெற்றோரையும் திருப்திப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியைத் தயாரித்துக் காலத்தின் தேவை அறிந்து நிகழ்ச்சியை வழங்கும் வித்தகி. அவரும் அவரது நடனக் கல்லூரியும் வாழ்க! வளர்க! என வாழ்த்துகிறேன்.
















No comments: