அமைதி - தவமணி தவராஜா

.
எவ்வளவு அழகான சொல், ஆனந்தமயமான சொல், செலவே செய்யாமல் அனுபவிக்கக்கூடிய சொல். அற்புதமான சொல். ஆனால் அதை எங்கே வாழவிடுகறார்கள்? நிம்மதியாக. அதைச் சிதைப்பதே தம் தலையாய கடன் என்று அரசியல்வாதிகளும், பணம் புரட்டும் முதலைகளும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் எத்தனை பேர் கண்ணீரும், கம்பலையுமாய் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் தத்தளிக்கின்றார்கள், சீரளிக்கப்படுகிறார்கள். சின்னாபின்னப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதேயில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். காலம் ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம். அமைதியை அடுத்தவரை அழிப்பதற்குப் பயன்படுத்த வேண்டாமே.
எல்லோரும் இன்புற்றிருந்தால் அறிவு, மன, ஆன்ம வளம் எல்லோருக்கும் குறைவற இயங்கி அமைதிமயமாகவும், ஆனந்தமயமாகவும் வாழமுடியும். அமைதி தேடி எங்கேயும் அலையத்தேவையே இல்லை. அது ஆற்றலின்றி நமக்குள்ளேயே அமுங்கிக் கிடக்கிறது. இங்கே பாருங்கள்! உலகில் ஓரிடத்தில் புதுமை, புதுமை என்று ஆடம்பரப்பிரியர்களாக வாழும் ஒரு வகை மனிதர்கள் இன்று அணிந்த உடை நாளை கழிக்கப்படவேண்டியது என்பது அவர்களுடைய நிலையான எண்ணம் வந்து கொண்டிருப்பது, வரப்போவது இவைகளைத் தேடி காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கும் சுயநலமிகள். ஒரு புறம் வாழ வளியற்று உண்ண உணவின்றி, மாற்றுடையின்றி அவல வாழ்வு வாழும் வகையற்ற மனிதர்கள். இதனால் குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அன்பையும், அறத்தையும் உணவுடன் ஊட்டி வளர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் உயர்ந்த பண்பாளர்கள் என்பதும், தாழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் ஊழல் மலிந்தவனும், தாழ்ந்த இடத்தில் உயர் குணம் படைத்தவனும் இருக்க முடியும். அதனால்தான் பாரதியார் தப்புத்தப்பாய் வேதம் ஓதும் பிராமணனை விட ஓழுங்காகச் சிரைப்பவன் உயர்ந்தவன் என்றாராம்.
கன்பியூசியஸ் ஒரு முறை தன் சீடர்களை அழைத்து, இந்தமக்கள் எதைச் சொன்னபோதிலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்! இனிமேல் மக்களுக்கு எந்தவிதமான நல் உபதேசங்களும் செய்வதில்லை. இனி வாழ் நாள் முழுவதும் மௌனம் சாதிக்கலாம் என்றிருக்கிறேன், என்று கூறினாராம். இதைக் கேட்டுத் திடுக்கிட்ட சீடன், ‘குருவே நீங்கள் மௌனமாகி விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று கவலையுடன் கேட்டனராம். அதற்கு அவர் சீடனே நான் பேசாவிட்டால் அதனால் பெரிய நஷ்டம் ஓன்றுமில்லை. இந்த எல்லையற்ற ஆகாயம் பேசுகிறதா? ஆனாலும் அதனுடைய பருவகாலம் தவறாமல் வந்து போய் கொண்டுதானிருக்கிறது. அதேவானத்தில் என்னென்ன விசித்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றன என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே! ஆனாலும் வானம் பேசியதுண்டா? ஆரவாரத்திலும், ஆடம்பரங்களிலும் சாதிக்க முடியாத ஓன்றை அமைதி சாதித்து விடும் என்பதைப் புரிந்துகொள்! என்றாராம்.
ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்பீனிடம், இவர் காலம், இடம், பொதுத் தொடர்பு என்ற தத்துவத்தைக் கண்டறிந்தவர். அவருடைய நண்பர் “வாழ்க்கையின் வெற்றிக்கான சூத்திரம் என்ன? என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன் “ஏ” என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கிறது. எக்ஸ், ஒய், இஸெட் இவை மூன்றும் சேரும்போது “ஏ” உண்டாகிறது. “எக்ஸ்” என்பது உழைப்பு, “ஒய்” என்பது விழையாட்டு, என்று கூறி நிறுத்தினாராம். இஸெட் எதைக் குறிக்கிறது என்று கேட்டாராம் நண்பர். “பேசாமல் உமது வாயை மூடிக்கொண்டிரும் என்பதைக் குறிக்கிறது” என்றாராம் ஐன்ஸ்டீன் சட்டென்று. பார்த்தீர்களா? அமைதி எவ்வளவு ஆற்றலுள்ளது என்பதை. ஆகையால் எல்லோரும் அமைதி காத்து ஆற்றலுள்ள மகத்தான மனிதர்களாக முயலுவோம்.
நன்றி.

No comments: