ஒரு காரின் கதை - எஸ். கிருஷ்ணமூர்த்தி


அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யபபட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமில்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார்.  அந்தச் சீட்டில் ஒரு கார் படம் ஒன்று. வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, இரவு பகலாய் கார்க் கனவு. அந்த அதிஸ்டலாபச்சீட்டின் முடிவு வெளிவந்த போது பலரைப் போல் எனது கனவும் கனவாகிப் போய்விட்டது. ஆனால் கார் வைத்திருக்கும் ஆசைமட்டும் விட்டுவிட்டு போகவில்லை.

நான் அவுஸ்திரேலியா வந்த  ஆரம்பகாலத்தில் மெல்பேணில் பொதுப்போக்குவரத்து மிக மோசம். இப்போது மிக மோசமில்லை. இரயில், றாம், பஸ் என பல பொது போக்குவரத்துக்கு இருந்தன. ஆனால் இதில் இரயில்கள் எப்போதும் எல்லாத் திசைகளிலிருந்தும் மெல்பேண் நகரை நோக்கியே செல்லும், அதேபோல் திரும்பவும் மெல்பேண் நகரில் இருந்தே ஏனைய இடங்களுக்குப் போகும். மெல்பேண் நகரைத் தவிர்த்து எந்த இரயிலும் குறுக்காக ஒரு இடத்தையும் இன்னோரு இடத்தை இணைக்காது. பஸ் நீண்ட இடைவெளி விட்டு வந்து போகும். ஒருவரிடம் கார் இல்லாவிட்டால் கால் இல்லாதமாதிரி இருக்கும். இதனால்  எல்லா வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கும்.

ஆரம்பத்தில் நானும் வேலை கிடைத்த பின் கார் வாங்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் வேலை தேடும் போது புரிந்துகொண்டேன், கார் இருந்தால்தான் வேலை கிடைக்குமென்று. எனவே கார் ஓட்டும் கலையை படிப்பதற்கு முடிவெடுத்தேன். கார் ஓட்டப் பழகுவதற்கு முன் தெரிந்த ஒருவரிடம் அவரது அனுபவத்தைக் கேட்டேன். அவர் தனது அனுபவத்தைப்பகிர்ந்தார்.

தெரிந்த அந்த நபர் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முடிவெடுத்ததும். ஒரு பயிற்ச்சியாளரை கொணடு பயிற்சியை ஆரம்பித்தார். சனி இரவில் கிளப்புகள், பாட்டிகள் என அவுஸ்ரேலியன்கள் இருப்பதால், ஞாயிறு காலையில் வீதியில் ஊரடங்குச்சட்டம் போட்டது போல ஒரு சனநடமாட்டமும் இருக்காது. ஆகவே ஞாயிறு காலை கார் ஓடக் கற்றுக் கொள்வதற் கொள்வதற்கான சுப நேரமாக அவருக்குப்பட்டது. ஒரு ஞயிறு காலை பயிற்றுனர் வந்து இவரை அழைத்து கார் ஓட்டுவதற்கான அடிப்படை விளக்கங்களை சொல்லிவிட்டு காரின் முன்புறமும் பின்புறமும் மஞ்சல் நிறஅட்டையில் கறுப்பு நிறத்தில் ‘எல்’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட அட்டையை இணைத்து விட்டு அவரை றைவர் ஆசனத்தில் அமரவைத்தார். அவரும் பிரச்சனையில்லாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். வேகம் ஆமை வேகத்தைவிடக் கூடத்தான். வீதியில் ஒரு கார் போக்கு வரத்தும் இல்லை,  இருந்தும், கார் ஏதும் வந்தாலும் என்ற  ஒரு பாதுகாப்பு கருதி வீதியின் ஓரமாகக் காரை செலுத்திக் கொண்டிருந்தார்.  எல்லாம் ஒழுங்காத்தான் போய்க் கொண்டிருந்தது. பிதான வீதியிலிருந்து சிறு தெருவிற்கு காரை செலுத்தக் கட்டளையிட்டார் பயிற்றுனர். சிறுது தூரத்தில் பார்த்தால் சில கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக நின்னு கொண்டிருந்தது. என்ன இந்த நேரத்தில் திடீரென இவ்வளவு கார்கள் என நினைத்தபடி கார்களின் பின்னால் நிறுத்தினார். பயிற்சியாளர் அவரை ஒரு பார்வை பார்த்தார். பின்னர் ஏன் காரை நிற்பாட்டினாய் எனக் கேட்டார். அவரோ என்ன விசர் கேள்வி என மனதிற்குள்  பயிற்றுனரைத் திட்டியபடி ;முன்னால் நிக்கிற காரை எடுத்தால்தானே நான் கார் எடுக்கலாம்’ என்றார். அந்தக் கார்கள் இப்போதைக்குப் போகாது, அந்தக் கார்கள் எல்லாம் வீதியேபரத்தில் பார்க் செய்யப்பட்டு உள்ளது. வீதியில் எவ்வளவு இடமிருக்கு நீ பார்க் செய்த காருக்குப் பின்னால் நிற்கிறாய் என்றான் பயிற்றுனர். இப்படியான அனுபவசாலியின் அனுபவங்களை பாடமாகக் கொண்டு கார் ஓட்டும் பரீட்சையில் பாஸாகிவிட்டேன்.

கையில் கார் ஓட்டும் அனுமதிப்பத்திரம் கிடைத்துவிட்டது. இனி என்ன கார்வாங்க வேண்டியதுதான். இங்கு கார் வாங்குவது சுலபம் கையில் காசு இருந்தால். அவுஸ்திரேலியா வந்த புதிசு, வேலையில்லை, அரசாங்கம் வேலையில்லாதவர்களுக்குக் கொடுக்கும் பணத்தில் காலம் ஓட்டிக் கொண்டிருந்தேன். சேமிப்பைப்பற்றி  யாழ்பாணத்தானுக்குச் சொல்லியா கொடுக்க வேணும். ஒருமாதிரி அரசாங்கம் கொடுத்த காசில் மிச்சம் பிடித்து ஐந்நூறு வெள்ளிக்கு ஒரு கார் வாங்கியாச்சு. எழுபத்தி ஏழாம் ஆண்டு செய்யப்பட்ட டக்சன் கார்.  ஊரிலை  அந்தகாலத்தில் ஏ போட்டி, மெறிஸ் மைனர் வைத்திருந்தவர்களெல்லாம் கலக்கிக் கொண்டிருந்தார்கள். அவற்றை விட டக்சன் மேல் என எண.ணிக.கொண்டேன். ஆனால், டக்சன் கொம்பனி செய்த கடைசி கார் இதுவாகத்தான் இருக்க வேணும்.  அது தனித்து கார் செய்வதை விட்டு விட்டது. அதற்க்குப் பின் நிசான் கொம்பனியுடன் இணைந்து சில வருடம் கார் செய்தது. பிறகு அந்தக் கொம்பனியே காணாமல் போட்டுது.

   எனக்கு நாலுசில்லும் ஒரு ஸ்ரேறிங்கும் இருந்தால் கார்தான். அந்தளவுதான் எனக்கு காரைப் பற்றிய அறிவு இருந்தது. இனி காரை எனது பெயருக்கு பதியவேண்டும.; ஊரில் வேலை நேர்முகப் பரீட்சைக்கு போகும் போது விதானையாரட்டை நற்றசான்றிதல் வாங்கிக் கொண்டு போவது போலை, இங்கே காரும் குளப்படியில்லாதது என ஓரு சேட்டிவிக்கேற் எடுக்கவேணும். பல நண்பர்கள் காரை சோதனை செய்துவிட்டு, எஞ்சின் பறுவாயில்லை, காரின் உடம்புதான்(டீழுனுலு) சரியில்லை என்றார்கள். சில இடங்களில் துரப்பிடித்தும், சிலவற்றில் ஓட்டைகளும் இருந்தன. இவற்றை திருத்தினால்தான்  சேட்டிவிக்கேட் கிடைக்கும் என்றார்கள். நண்பர்களுடன் நீண்ட விவாதத்தின் பின்னர் இன்னொரு கார் வாங்கி என முடிவெடுக்கப்பட்டது. பத்திகையை துளாவிப் பார்த்த போது  அதே மொடல்,எஞ்சின் இல்லாத கார் ஒன்று அகப்பட்டது. ஊரிலை என்றால் பேரீட்சம் பழத்துக்கு அந்தக்கார் கிடைத்திருக்கும். இங்கை இருநாறு வெள்ளியை புடுங்கிவிட்டான் அரபுக்காரன். அதைகொண்டுவர இன்னொரு ஐம்பது வெள்ளிகள்.  நல்லவேளை இரண்டு காரும் நீலக்கலர். மாற்றிப் பொருத்தினாலும் வித்தியாசம் தெரியாது என சந்தேசப்பட்டேன். சந்தேசம் கனநேரம் நீடிக்கவில்லை. கார் வந்து இறங்கி முடியத்தான் தெரிந்தது, முதல் கார் கடும் நீலம் மற்றக் கார் வெளிர் நீலம். வேறு வழி இரண்டு கலரில் ஒரு கார் ஓடவேண்டியதுதான். நண்பர்களின் உதவியுடன் ஓரு காரிலிருந்து இன்னொரு காருக்கு உதிரிப்பாகங்கள் இடம்மாறியது. பின்னர் எமது மாநில வீதித் திணைக்க்கழகத்திடம் அந்தக் காரை எனது பெயரில் பதிவு செய்தேன். பிறகென்ன நான் ஒரு காருக்குச் சொந்தக்காரனாகிவிட்டேன். 

கார் வாங்கின கையோடு வேலையும் கிடைத்தது, வேலைக்கு போனதும் அங்கு வேலைசெய்யும் அப்கானிஸ்தான் ஒருதன், என்னையும் காரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, இப்பவோ கார் வாங்கினாய் எனக் கேட்டுவிட்டு விருந்து வைத்தாயா எனக் கேட்டான். நான் ஒன்றும் புரியாமல் திரு திரு என முழிக்க, தொடர்ந்தான்  அப்கானிஸ்தானில் ஒருவர் கார் வாங்கினால் ஆடு வெட்டி விருந்து கொண்டாடுவது வழக்கம். எனவே, அவனும் இங்கே கார் வாங்கியதும் உற்றார்,உறவினர்,நண்பர்களை அழைத்து ஆடு வெட்டி விருந்து கொண்டாடினான். ஆனால், இதில் சோகம் என்னவென்றால்,  அவனது காரின் விலையோ ஆயிரம் வெள்ளிகள். ஆட்டுக்கும் விருந்தும் செலவழிந்ததோ ஆயிரம் வெள்ளிக்கு மேல். 

எங்களுடைய நாட்டில் எல்லாம் அப்படியில்லை, கோயிலுக்கு காரைக் கொண்டு போய் சுவாமியை வழிபட்டுட்டு கார் சில்லுகளுக்கு முன்னால் தேசிக்காயை வைத்து விட்டு காரை ஓட வேண்டியதுதான். தேசிக்காய் நசிபடும். விசயம் சரி என்றேன். அப்ப, உங்ஙடை விருந்துக்கு ஒரு வெள்ளி போதும் என்றான். இங்கே அப்படியில்லை, கோயிலுக்கு காரை கொண்டு போய், கார்த் திறப்பை பூசாரியாரிடம் கொடுக்க, பூசாரியார். பூசை செய்து விட்டு திறப்பைத் திருப்பித் தருவார். கையோடு நூறு வெள்ளிளை புடுங்கிவிடுவார் என்றேன்.  என்றாலும் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். என்றான் அவன். அவன் விருந்துக்கு வாங்கிய கடன் இன்னும் கட்டி முடியவில்லை என அவனது பெருமூச்சுச் சொன்னது.

இந்த விசயத்தை தெரியாத்தனமாக எனது பெண்டாடடியிடம் உளறிவிட்டேன்.  கட்டாயம் காரை கோயிலுக்குக் கொண்டு போகவேணும் என்றார். இதில் பல சிக்கல் இருந்தது. ஒன்று நூறு வெள்ளிக்கு வேட்டு, மற்றது கோயில் ஒருமணி நேர கார் ஓட்டத் தூரம். மெல்பேண் வீதிகளும் எனக்குப் புதிசு, கார் ஓட்டுவதும் புதிசு, இந்த எனது பலவீனங்களையெல்லாம் எனது புதுப் பெண்டாட்டியிடம் சொல்ல முடியுமா?.

மெல்பேண் வரைபடப் புத்தகத்தை எடுத்து, வேறு ஒருகாகிதத்தில் கோயிலுக்குப் போகிற வீதிகளை வரைந்து குறிப்பாக திரும்பிற இடங்களை இடதுபக்கத் திருப்பம் வலதுபக்கத் திருப்பம் எனக் குறித்துக்கொண்டு மனைவியுடன் கிளப்பிவிட்டேன். மனைவியிடம் வரைபடத்தையும் குறிப் பெடுத்த காகிதத்தையும் கொடுத்து, இதைப்பார்த்து இடதுபக்கத் திருப்பம் வலப்பக்கத் திருப்பம என்று சொல்லச் சொன்னேன். எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருந்தது. ஓரே ஒரு தடவை மட்டும் இடப்பக்கத் திருப்பத்துக்குப் பதிலாக வலப்பக்கம் திருமபச் சொன்னார். பிறகு எல்லாம் சரியாகத்தான் சொன்னார். நானும் காரை ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினேன். சிறுது நேரத்தில் நிமிர்ந்து பார்த்தால், அந்த இடங்களெல்லாம் எனக்குப்பழக்கமான இடமாகத் தெரிந்தது. கண்ணைக் கசக்கி விட்டு திரும்பவும் பார்த்தேன். எனது இருப்பிடத்திற்கு அருகாமையில்தான் நின்றேன். அப்பதான் விசயம் வெளிச்சது. பிறகென்ன, பக்கத்தில் இருந்த மைக்டோனாசில் இரண்டு  சீஸ்பேகரை வாங்கிச் சாப்பிட்டோம். கோயிலுக்குப் போயிருந்தால் நூறு வெள்ளி போயிருக்கும். இப்ப பத்து வெள்ளியோடை விசயம் முடிந்து விட்டது என மனதுக்குள் சந்தேசப்பட்டேன்.    

No comments: