தமிழ் சினிமா

சில்லுன்னு ஒரு சந்திப்பு 

பள்ளி பருவத்தில் வரும் காதல் எல்லாம் சும்மா இனக்கவர்ச்சிதான் என்றும் மன முதிர்ச்சி பெற்ற பிறகு வரும் காதலே நல்ல காதல் என்று சொல்வதே இப்படத்தின் கதை.`
"களவாணி" விமலும், ஓவியாவும் ஊட்டி கான்வெண்ட்டில் ஒரே பள்ளியில் ப்ளஸ்-டூ படிக்கின்றனர். படிக்கும்பொழுதே இருவருக்குமிடையே காதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஓவியாவின் அரசாங்க அதிகாரி அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றம் வருகிறது.
இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து வைக்க கோரி பொலிசாரை நாடும்பொழுது உங்கள் இருவருக்கும் அதற்கான வயது இன்னும் வரவில்லை, வந்ததும் உங்களிடையே இதே காதல் இருந்தால் திருமணம் செய்து வைக்க நான் தயார்.
அதுவரை உங்கள் தாய், தந்தையாருடன் வாழுங்கள் என்று இருவரது அப்பா-அம்மாவிடமும் ஒப்பந்தம் போட்டு அனுப்புகிறார் ஊட்டி பொலிஸ்காரர்.
பின்னர் விமல், அமெரிக்காவில் கைநிறைய சம்பாதித்து ஊர் திரும்பியதும் தன் அண்ணியின் தங்கையான தீபாஷாவை காதல்செய்கிறார்.
அவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகும் தருவாயில் விமலின் பழைய காதல் தீபாஷாவிற்கு தெரிய வருகிறது.
அதனால் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் விமல் மீண்டும் அமெரிக்கா திரும்பும்வேளையில் எதிர்பாராமல் ஓவியாவை சந்திக்கிறார்.
இதன்பின் என்ன நடப்பது என்பது தான் "சில்லுன்னு ஒரு சந்திப்பு" கதை களமாகும்.
விமல், ஓவியா, தீபாஷா, சாருஹாசன், அஸ்வின், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் ஓவியா மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார்.
படத்தில் நகைச்சுவையை மனோபாலா மட்டுமே தாங்கி நிற்கிறார். இவருடைய காட்சிகள் வரும்போதெல்லாம் வசனத்திலேயே வயிரை பதம் பார்க்கின்றன.
படம் முழுக்க ஏகப்பட்ட இரட்டை அரத்த வசனங்கள் இடம்பெறுகின்றன. குடும்பத்துடன் ரசிப்பது சற்று கடினம்தான்.
பைசல் இசையில் பாடல்கள் பார்க்கும்போது ஓரளவிற்கு பிடித்தாலும், வெளியில் வந்தால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ராஜேஷ் யாதவ், ஆரோ ஒளிப்பதிவு பளிச் ரகம்.
நாயகிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். விமல் இனியும் சிட்டி ‌சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தாமல், களவாணி, வாகை சூடவா போன்ற கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.
மொத்தத்தில் சில்லுன்னு ஒரு சந்திப்பு சில்லுன்னு இல்லை





ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்
[ Sunday, 03 March 2013, 02:07.33 PM GMT +05:30 ]
இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்த நடன இயக்குனர் நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில் நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்"
மும்பையில் நண்பர்களான கே.கே மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
மும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் கே.கே மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று கே.கே மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.
இதனால் மனமுடைந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் பிரபுதேவா மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார்.
இந்நிலையில் கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா.
தன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை தொடங்குகிறார்கள்.
இதற்காக இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.
இந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.
நடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நட்பு, நம்பிக்கை, துரோகம் என்று சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார்.
ஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.
குறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் தனி(solo) நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது.
பிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
பிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.
கெட்ட நண்பராக வரும் கே.கே மேனன் வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக வெளிப்படுத்திருக்கிறார்.
இறுதி காட்சியில், நடனப்போட்டியில் தனது குழு நடனத்தின் கரு (கான்செப்ட்) களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம்.
இதுபோல், எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.
சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி, பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன.
மொத்தத்தில் ‘ஏபிசிடி’ ரசிக்கலாம் பாய்ஸ்.
நன்றி விடுப்பு

No comments: