அன்பாலயம் என்ற அமைப்பினால் மார்ச் மாதம் 2ம்திகதி (02/03/2013) Bowman Hall, Blacktown ல் நடாத்திய “இளம் தென்றல் 2013” க்கு போய்க் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு மண்டபத்துக்கள் நுழையும் பொழுதே எனக்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் நேர்த்தியைக் காணக் கூடியதாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்று இசை, வாத்தியம், நடனப்போட்டிகளுக்கான தராதர அட்டைகளையும் (voting card) அன்பாலய இதழையும் அன்புடன் வழங்கினர்.
நிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்
நிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்
ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதமும் தொடர்ந்தது. நிகழ்ச்சி நெறியாளர் திரு மகேஸ்வரன் பிரபாகரன் “அந்தப் பார்த்தனின் கீதையுடன்” தொடங்கியது ஒரு பளிச். மகேஸ்வரன் பிரபாவைப் போல அவரது குரலும் கம்பீரம் தான்.
முதல் நிகழ்ச்சியாக “கீதாஞ்சலி” இசைக்குழுவின் பின்னணியுடன் செல்வி அபிஸாயினி பத்மஸ்ரீ யின் வசீகரக் குரலில் “அடி நீ எங்கே” தாஜ்மஹால் பாடலுடன் தொடங்கியது.
பாவலனின் “செந்தமிழ் தேன்மொழியாள்” பாடலின் விருத்தத்திற்கு விசிலும், கரவொலியும் அரங்கத்தை அதிரச் செய்தது. “பாவலா நீர் பாடவல்லவர்” வாழ்க
அத்துடன் என்னை மிகக் கவர்ந்தவர்கள் அந்த அண்ணா, தங்கை “சேயோன், மாயி ராகவன்” குழந்தைகள். என்ன சுட்டித்தனமும், பாசமும். மாயிக்கு அவளது அண்ணாவுடன் அப்படி ஒரு குஷி, இந்தக் குழந்தைகளுக்கு சுற்றி போடவேண்டும்.
இந்த இளம் பாடகர்களுக்கு பாடல்கள் பாடும் போது அப்படி ஒரு பாவம். கோபிராம் ஸ்ரீரங்கநாத ஐயர் பாடிய “ஒரு தெய்வம் தந்த பூவே” கன்னத்தில் முத்தமிட்டால் பாடிய போது எனது கண்ணீர் பனித்தன.
கண்மணி “நீ ஒரு கண்ணின் மணிதான்” மிகவும் கவர்ச்சியான குரல். எந்தப் பாடலை பாடினாலும் சலிக்காமல் கேட்கலாம்.
மகேஸ்வரன் பிரபா! நீத்து சுரேஷ்பாபுடன் மலையாளத்தில் “பறைஞ்சது” ரொம்ப அழகு” நீத்துவுக்கு தமிழ்ப்பாடல்கள் பல அத்துப்படி.
நான் கட்டாயம் இந்த இசைக்குழுவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். 90 வீதம் பல்கலைக்கழக, பள்ளிக்கூடக் குழந்தைகள். அப்படி ஒரு பொறுப்பும் பொறுமையும் தெரிந்தது. இதை நெறிப்படுத்திய சாருவுக்கு சபாஸ்.
மிகவும் நீண்ட இசை நிகழ்ச்சிக்கு அப்புறம் இரண்டு பேச்சுக்களும் திருமதி ராணி பாலாவின் கவிதையும் இடம் பெற்றது.
திருமதி ராணி பாலாவின் கவிதைக்கு பார்வையாளர்கள் கண்கலங்கியது புரிந்தது. அத்துடன் செல்வி ரஞ்சிதா சிவஞானசுந்தரத்தின் பேச்சில், அந்தக் குழந்தையின் தவிப்பு புரிந்தது. அவளின் குரலில் எங்களுடைய மழலைகள் படும் கஷ்டம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டதை என்னால் உணரமுடிந்தது.
தொடர்ந்து வைத்தியக்கலாநிதி ஜெயமோகனின் பேச்சில் அப்படி ஒரு கனம். எப்போதும் அவர் ஒரு கருத்தைச் சொல்லும் போது, யதார்த்தத்தை, வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை எமது குழந்தைகளின் தேவைகளை மிகவும் இலகுவான முறையுடன் இணைத்து சொல்லும் அழகே தனி. எம்மவர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பொறுப்புகளை அன்புடன் முன்வைத்தார். நன்றிகள்.
இதன் பின்பு எல்லோருக்கும் பிடித்த இடைவேளை. சுவையான சிற்றுண்டி, கோபி, தேநீர் அத்துடன் மதுரா அக்காவின் special masala tea ஆஹா ஓஹோ என்று ரசித்துக் குடித்தேன்.
இடைவேளைக்குப் பின்னர் ஒரு “குட்டீஸ்” நடனம். என்ன கொள்ளை அழகு. அவர்கள் செய்யும் அடவுகள் சரியோ தப்போ, அப்படி ஒரு பொறுப்பு தெரியுமா? மற்றவர்களைப் பார்த்து தங்களுக்கேற்ற அபிநயத்துடன் ஒரு பூந்தோட்டத்தில் பறந்த வண்ணத்திப்பூச்சி கூட்டம் தான். அவர்கள் எல்லோரையும் கட்டியணைக்க வேண்டும் போல இருந்தது.
அடுத்தபடியாக இயல், இசை, வாத்தியப்போட்டி. எல்லோருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தனர்.
சிறுவன் தினேஷ் கண்முன்னே “ஸ்ரீரங்க நாதரைக்” மஹாநதியில் கொணர்ந்தான். கையில் தாளம் போட்டு பெரிய பாகவதர் மாதிரி பாடினான். பாடிய குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்க.
வாத்தியப் போட்டியும், நன்றாக இருந்தது. என்றாலும் ஏனோ அவர்கள் முகத்தில் பயம் தெரிந்தது. செல்வங்களே இது பரீட்சை இல்லை. பயம் வேண்டாமே.
நடனப்போட்டி! எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது. இரண்டு பிரபுதேவாக்கள் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு கதிரை விளிம்பில் உட்கார்ந்து இருக்க, இசை தொடங்க ஆடிய ஆட்டத்தில் நான் கதிரை நுனிக்கு வந்து விட்டேன். என்ன ஆட்டம்! எல்லா நடனங்களுமே மனதைக்கவர்ந்தது.
சரி நிகழ்ச்சியின் நிறைகளைப் பற்றிக கூறினாலும் சிறிய குறைகளைப்பற்றிக் கூறவும் கடப்பாடு இருக்கிறது. இந்தக்கருத்துக்கள் சில முணுமுணுப்பக்கிடையில் தெரிந்து கொண்டேன். நிகழ்ச்சியின் முன்பாதி கொஞ்சம் நீண்டுவிட்டால் இடைவேளை பிந்திவிடும். இடைவேளை பிந்தினால் “சுகர்” விளையாடும் குழந்தைகள் பெற்றோரின் பொறுமையை ஒரு வழி பண்ணுவார்கள்.
சரி, நல்ல நிகழ்ச்சி பார்த்தால் அது எதற்கு நடப்பது என்று எண்ணவோ தெரி யவோ வேண்டாமா? ஓவ்வொரு வெள்ளியும் எமது குழந்தைகளின் பிரகாசமான வாழ்வுக்குத்தான். தயவுசெய்து அந்த அன்பாலயம் சஞ்சிகையை வாசித்துப்பாருங்கள்.
2 comments:
இந்த நிகழ்ச்சியின் சிறப்பே குறிப்பிட்டதைப் போல் சரியாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தது. இதனை மறுநாள் வானலைகளில் பலர் பகிர்ந்து கொண்டார்கள். இதனை எழுதியவர் தவறாக எழுதி விட்டார் போலும். தமிழ்முரசு ஆசிரியர் இதனை அவரிடம் விசாரித்து அதனை திருத்தி பிரசுரித்தால் நன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.
தொகுத்து வழங்கியவர் நிகழ்ச்சி தொடங்கும் போதே "இப்பொது சரியாக நேரம் ஆறு மணி" எனக் கூறியே ஆரம்பித்தார்.
வதனா
The program commenced at 6 sharp, there was no delay.
Abisaini sang 'Chotta Chotta' from Taj Mahal, Gopiram Iyer sang 'Vellai Pookal' from Kannathil Mutthamittal. Thank You.
Post a Comment