பாலாவின் பரதேசி

.

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்
நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,


தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல அவலங்களுடன், கண்ணீருடன் நிஜமாக சித்தரிப்பு செய்திருப்பதே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்
சாளுர் என்ற எளிய, சிறிய கிராமம், அந்த கிராம வாழ்க்கைக்குள் தான் எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிகள், ஒட்டுபொறுக்கி எனும் ராசா கதாபாத்திரமாக அதர்வா வாழ்ந்திருக்கிறார், அடிபட்டு கால் நரம்பு துண்டிக்கபட்டு, எல்லாவற்றையும் இழந்து குழந்தையுடன் வெறுமை தோய்ந்த கண்களுடன் அவர் திரும்பி பார்க்கும் ஒரு பார்வை போதும் அவருக்குத் தான் இந்த ஆண்டின் தேசிய விருது என்பதற்கு, அதர்வா உங்கள் சினிமா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொண்டீர்கள்,
வாழ்க்கைக்கு உண்மையாக உள்ள கலை எப்படி இருக்கும் என்பதற்கு பரதேசி ஒரு உதாரணம், டேனியலின் எரியும்பனிக்காடு நாவலின் உந்துதலில் உருவாக்கபட்டிருக்கும் இப்படம் உலகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது,
சாலூர் என்ற சிறிய கிராமத்தில் துவங்கி பச்சைமலையின் மொட்டை பாறை ஒன்றில் கைவிடப்பட்டவனாக உட்கார்ந்து கொண்டு நியாயமாரே என்று அலறும் அதர்வாவின் குரல் இதுவரையான வணிகரீதியான தமிழ்சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக கூடியது,
அதர்வாவின் ஆகச்சிறந்த நடிப்பு , தன்ஷிகா, வேதிகா இருவரின் உணர்ச்சிமயமான தேர்ந்த நடிப்பு, கங்காணியாக வரும் ஜெரி, ராசாவின் பாட்டி, கிராமத்து குடிகார கதாபாத்திரமாக நடித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கிராமத்து திருமண நிகழ்வு, கங்காணி ஊர் மக்களை நைச்சியம் பேசி அழைத்துப்போவது, 48 நாட்கள் நடந்து செல்லும் மக்களின் வழித்துயரம், கங்காணி தனது கல்லாபெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கணக்கு முடிக்கும் காட்சி, விஷக்காய்ச்சலில் கொத்து கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் என்று இதுவரை தமிழ்சினிமா பார்த்தறியாத காட்சிகள் படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன, மனதை துவளச்செய்கின்றன
முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் என்று அந்த வாழ்வின் யதார்த்தத்தை தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்புறச்செய்திருக்கிறார் செழியன், அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டிற்குரியது,  கேமிரா எளிய மக்களின் கூடவே நகர்ந்து பார்வையாளனை இன்னொரு உலகிற்கு அழைத்துப் போகிறது, கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு, ஜிவிபிரகாஷின் சிறந்த பின்னணி இசை, இரண்டும் படத்திற்கு தனிப்பெரும் பலம்,
இயக்குனர் பாலா பஞ்சம் பிழைக்கப் போய் அகதியான மக்களின் வாழ்க்கையில் புதையுண்டு கிடந்த  உண்மையான, துணிச்சலுடன், அசாத்தியமான கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார்
பச்சைமலைக்கு மட்டுமில்லை, இலங்கைக்கும் தேயிலை தோட்டவேலைக்கு தென்தமிழக மக்கள் சென்றார்கள், இது போல சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள் என்ற சமகால உண்மை படத்தை மேலும் வலியுடையதாக்குகிறது
கிரேட் வொர்க் .பாலா சார்
தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய நாயகர் நீங்கள்

நன்றி:sramakrishnan.com

No comments: