தஸ்லீமா நஷ்ரீன்-----------சௌந்தரி


.
நான் விரும்பி வாசித்த கவிதைகளிவை. விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமானது எனது எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் ஒத்துப் போகின்றவையாக இருப்பது. அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஒரு ஆளுமை மிக்க பெண்ணின் எழுத்துக்கள் இவை.

தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் மிகவும் புலமை வாய்ந்தவை என்று சொல்வதைவிட வாசிப்பவர்களை மீண்டும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் கொண்டவை என்றே கூறத்தோன்றுகின்றது.வெகு சாதாரணமாக தனது உணர்வுகளையும் வலிகளின் ஓசைகளையும் அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் சோகத்தின் இழைகளையும் அவரது எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.


அடக்குமுறை

மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால் அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்கக்கூடாதா?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ

நீங்கள் தாளமுடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா?

விழிப்பதும் தூங்குதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்

நான் இக்கணமே இறந்து போனால்
அவர்கள் சொல்வார்கள்
நீ வாழ வேண்டும்

நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்துத் தொலை

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காக அவர்கள் விரும்பும் வகையில் செயல்பட முயற்சித்தாலும் எல்லோரையும் எல்லா சந்தர்ப்பத்திலும் திருப்திப்படுத்த முடியாது என்பதை அழகாக உணர வைக்கின்றது அந்தக் கவிதை. எதைச் செய்தாலும் குற்றம் கூறுபவர்களுக்கு மத்தியிலும் வேண்டா வெறுப்பாக தனது வாழ்க்கையை வாழ விரும்பாது அதீதமான பயத்திற்கு மத்தியிலும் ரகசியமாக தனக்குள்ளே தனக்காக தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.
1962 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வங்காள தேசத்தில் பிறந்த தஸ்லீமா நஷ்ரீன் ஒரு குழந்தைப்பேறு நிபுணராக இருந்தபோதும் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் கவிதைகள்இ கதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருந்தார்.

அவரது பெயரைக்கொண்டே அவரது மதம் என்ன என்பதை கண்டுபிடித்துவிட முடியும். ஆம்இ மிகவும் கட்டுப்பாடு மிக்க முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர்தான் தஸ்லீமா.

பெண்களிற்கெதிரான அடக்குமுறைகள்இ மதம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்இ பெண்களின் உடல்சார்ந்த வன்முறைகள் போன்றவற்றை கருப்பொருளாக வைத்து கடுமையாகவும் ஆழமாகவும் தர்க்கபூர்வமாகவும் எழுதிவந்தார்.

உலகம் முழுவதும் இவரது எழுத்துக்கள் பேசப்பட்டு பலவிருதுகளைப் பெற்றுக் கொண்டபோதும் அவரது சொந்த நாட்டிலும் இஸ்லாமிய மதவாதிகள் மத்தியிலும் அவரது எழுத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகினஇ சிலர் விரும்பினார்கள் பலர் வெறுத்தார்கள்.

முஸ்லீம் பெண்ணாக இருந்தும் தனது இனத்தையும் மதத்தையும் விமர்சித்த இவரது எழுத்துக்களால் எழுச்சியுற்ற அமைப்புக்கள் இவர்மீது வழக்குக்கள் தொடர்ந்தன. பலதடவைகள் இவரை பொது இடங்களில் வைத்து தாக்கியிருந்தன. அது மட்டுமல்ல இவரது உயிருக்கே விலை பேசியதால் பல நாடுகளிலும் தலைமறைவாக ஓர் நாடோடி போன்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மதத்தைவிட மனிதத்தை விரும்பிய இந்தப் பெண்ணுக்கு இன்றுவரை எதிர்ப்புக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.


மதம்

கோபுரங்களைத் தரைமட்டமாக்குங்கள்
கோயில்களின்
மசூதிகளின்
குருத்துவாராக்களின்
சர்ச்சுக்களின் கட்டிடங்கள்
கொழுந்துவிடும் தீயில் எரியட்டும்

அந்த அழிவிலிருந்து
நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு
அழகான மலர்த் தோட்டங்கள் எழட்டும்
குழந்தைப்பள்ளிகளும்
படிப்பகங்களும் அதிலிருந்து எழட்டும்

மனிதகுல நலனின் பொருட்டு
பிரார்த்தனை மண்டபங்கள்
மருத்துவமனைகள் அனாதை விடுதிகள்
பள்ளிக்கூடங்கள் பல்கலைக்கழகங்கள் ஆக்கப்படட்டும்

கலைக்கூடங்களாக
கண்காட்சி மையங்களாக
விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களாக
பிரார்த்தனை மண்டபங்கள்
அதிகாலைப் பிரகாசத்தில்
பொன்னரிசி விளையும் வயல்களாக ஆகட்டும்

திறந்தவெளிகளாக நதிகளாக
ஆரவாரிக்கும் அமைதியற்ற சமுத்திரங்களாக

இன்றுமுதல்
மதத்தின் மறுபெயர்
மனிதம் என்றாகட்டும்
ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

மதத்தைப்பற்றி எழுதினாலோ பேசினாலோ சூழுரைத்துக்கொண்டு சண்டைபோடவென்றே  ஒரு கூட்டம் வந்துவிடும். ஆரோக்கியமான விமர்சனங்களை கருத்தில் கொண்டு மதச் சடங்குகளையோ கொள்கைகளையோ மறுஆய்வு செய்வதற்கு யாருமே தயாராக இல்லை. சொல்லப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் உண்மையானவற்றை அதன் பொருட்கூற்றை மேற்கோள் காட்டி விளக்கம் கொடுப்பதற்கு யாரும் முன்வருவதுமில்லை.

மதத்தின் பேரில் எதைச் செய்தாலும் அது சரியானதே என்ற நம்பிக்கையால் பல ஆண்டுகளுக்கு முன்பாக எமது சந்ததியினர்  கற்றுத்தந்த சடங்குகளும் உட்புகுத்திய முறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூக சீர்திருத்த கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் சாட்டையடி கொடுப்பது எந்த விதத்தில் ஞாயமாகும்.

தனது சமூகத்தையும் மதத்தையும் தஸ்லீமா ஆழமாக நேசித்தார். தான் சார்ந்த சமூகத்தோடுதான் தனது தொடர்புகளும் உறவுகளும் வளரவேண்டுமென்ற ஆர்வத்தோடு தான் துரத்தியடிக்கப்பட்டபோதும் மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கியே சென்றார். அதற்காக தனக்கு ஒவ்வாத கருத்துக்கள் தோன்றுகின்றபோது மௌனிக்கவோ ஒத்தகருத்து என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவோ அவரால் முடியவில்லை.

நடத்தை

நீ ஒரு பெண்
இதை நீ ஒருபோதும் மறவாதே
உனது வீட்டின் நிலைப்படியை நீ தாண்டினால்
ஆண்கள் உடனடியாக உன்னைக் கவனிப்பர்

தெருவில் நீ நடக்கத் தொடங்கினால்
ஆண்கள்
உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்
தெருமுனை தாண்டிப்
பிரதான சாலையில் நீ அடியெடுத்து வைக்கும்போது
ஆண்கள்
உன்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்

நடத்தை சரியில்லாதவள் என்பார்கள்

உனக்கு ஆளுமை இல்லையென்றால்
நீ திரும்பிப் பார்ப்பாய்

அப்படியில்லையெனில் நீ
தொடர்ந்து போய்க்கொண்டேயிருப்பாய்
இப்போது போய்கொண்டிருப்பதைப்போல

ஒரு எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் கண்ணாடி என்பதன் உண்மையை தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் பறைசாற்றும். இவருடைய கவிதைகளை வாசிக்கும் போது எனக்குள்ளும் இதே கேள்விகள் இருக்கின்றதே என்று நினைக்கத் தோன்றும். ஆக பலருக்கு பதிலாக தஸ்லீமா நஷ்ரீன் பேசுகின்றார்.

தஸ்லீமா ஒருபோதும் தனது மதத்தை இழிவு செய்யவில்லை. விமர்சனம்தான் செய்தார். ஆழமாக சென்று ஆராய்ச்சி செய்து மதத்தின் கோட்பாடுகளை அவர் விமர்சிக்கவில்லை. மதம் என்ற போர்வையில் சமூகத்தில் நடைபெறுகின்ற அடக்கு முறைகள் வேண்டாம் என்று கூர்மையாக எழுதினார். ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இவரது எழுத்துக்கள் ஆத்திரத்தைக் கிளம்புகின்றது. பதிலளிக்கத் தெரியாதபோது அநாகரீகமாக அவதூறு கிளப்பிவிட்டு தப்பித்துச் செல்கின்றார்கள்.

இவரது கவிதைகளில் சமூக அனுபவங்களுடன் தனது அனுபவங்களும் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும்.

மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதமோ சமூகமோ அவமதிப்பது தவறுஇ பெண்களை அடிமைப்படுத்தும் கொள்கைகளை பரப்புவது தவறுஇ அறியாமை என்னும் மாயைக்குள் மனிதர்களை கட்டி வைத்திருப்பது தவறு என்பதைப் பற்றித்தான் இவர் அதிகமாக எழுதியிருக்கின்றார்.

ஒரு தனி மனிதனின் நிம்மதியையும் சுதந்திரத்தையும் சிந்தனையையும் குலைக்கும் எவருடனும் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. தங்களது அதிகாரம் பறிபோய்விடும் என்கின்ற பயத்தினாலும் தாம் காணாமலே போய்விடுவோம் என்ற பயத்தினாலும் சீர்திருத்தவாதிகளை சாடிக்கொள்வது புதியவிடயமல்ல.

எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை மக்களை சிந்திக்க வைக்கும் காலத்தால் போற்றப்படும்.

6 comments:

kirrukan said...

[quote]அதற்காக தனக்கு ஒவ்வாத கருத்துக்கள் தோன்றுகின்றபோது மௌனிக்கவோ ஒத்தகருத்து என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவோ அவரால் முடியவில்லை.[/quote]

அவரால் முடிகிறது ஆனால் எம்மால் மெளனிக்கவும் ,ஒதுங்கவும் தான் முடிகிறது

Anonymous said...

உண்மையை பேசும் கிறுக்கன் மௌனிப்பது என்று சொல்வதை ஏற்க முடியவில்லை

kirukkan said...

[quote]Anonymous said...
உண்மையை பேசும் கிறுக்கன் மௌனிப்பது என்று சொல்வதை ஏற்க முடியவில்லை [/quote]

அட நம்மட கருத்துக்களையும் மக்கள் வாசிக்கினம்

Anonymous said...

தனியொரு மரம் தோப்பாகுமா?

Karuppy said...

Be the change that you want to see in the world

Anonymous said...

Yes I agree with you too

we have the ability to change ourselves, and only we can do it to us.

Change is essential to living. If we dont change, If we dont learn to adapt then we can not progress as a human.

One more thing change can be both good and bad, even if it is bad nothing wrong one day that will brings a sense of renewal.