இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வியடையும் அபாயம்

.
கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ளார்.

ஒபாமா அமெரிக்க பாராளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் உரையாற்றினார். ஒரு மணி நேரம் அவர் பேசிய போது அவர் 3 முறை இந்தியாவை பற்றி குறிப்பிட்டார்.இந்தியாவுடன் புதிய பங்குதாரராக அமெரிக்கா சேர்ந்து உள்ளது. புதிய நட்பு பாலத்தை என் நிர்வாகம் கட்டி உள்ளத. உலகில் அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்துவதற்காக என் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த புதிய நட்பு பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்றாகவும் மிக சீக்கிரமாகவும், நீண்ட காலத்துக்கும் படிக்க வைக்கிறார்கள். அத்தோடு அவர்கள் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அதிக முதலீடு செய்து வருகின்றன.

இவற்றுக்கு மாறாக அமெரிக்காவின் கணிதம், அறிவியல் ஆகிய படிப்புகளின் தரம் மிகக்குறைவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் பள்ளிக் கல்வி பின்தங்கி உள்ளது. பள்ளிக்கல்வியை பொறுத்தவரையில் அமெரிக்கா 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. உலகம் மாறிவிட்டது. வேலைக்கான போட்டி அதிகரித்து விட்டது. ஆனால் இது நம்மை மனம் தளரச் செய்து விடாது.

நம் நாட்டு தொழிலாளர்களை விட மற்றவர்கள் அதிகம் உற்பத்தி செய்வது இல்லை. நம் நாட்டில் தான் வெற்றிகரமான தொழில்கள் அதிகம் இருக்கின்றன.

அதிகமான கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் தான் பதிவாகி உள்ளன. உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில் தான் இருக்கின்றன. மற்ற நாடுகளைவிட நம் நாட்டுக்கு தான் அதிக மாணவர்கள் வருகிறார்கள். இவ்வளவு இருந்தும் நாம் தோல்வி அடைய நேருமானால் அதற்கு காரணம் நம் பள்ளிக் கல்வி தான். அது மிகவும் பின்தங்கி உள்ளது. அது சீர் திருத்தப்பட வேண்டும் என்றார்.


நன்றி தினகரன்

No comments: