.
சமய அடிப்படையில் உபந்நியாசம் செய்பவர்களை விட்டு-விடலாம். வருடத்தில் சில நாட்களே சென்னையில் தங்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறு, ஏழு பிரசங்கங்கள் செய்வார். புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், ஆலமரத்தடியில். ஒரு மணி நேரத்துக்குள்ளாகத்தான். பிரசங்கம் ஆரம்பித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் கேட்க வந்தவர்களில் பெரும்பாலோருடைய மனம் எங்கெல்லாமோ அலைய ஆரம்பிக்கும். கிருஷ்ணமூர்த்தி கைகூப்பிப் பிரசங்கம் முடிந்துவிட்டதென்று தெரிவிக்கும்போது எல்லோரும் பெரிய இக்கட்டு விலகியது போன்ற விடுதலை உணர்ச்சியோடு வெளியே விரைவார்கள்.
வருடத்தில் என்றோ ஒரு நாள் ஒரு மணி நேர தத்துவப் பேச்சு இப்படிச் செய்யக் கூடுமானால் பொழுது விடிந்து மறுபொழுது விடியும் வரை குடித்தனம் நடத்தச் சம்பாதிக்காமல், குழந்தைகளைக் கவனிக்காமல், ஓயாமல் தத்துவப் பேச்சும் கேள்விகளுமாகவே பேசிப் பேசி, ஊரார் – அரசாங்கத்தார் துவேஷத்தையும் பெருக்கிக்கொள்ளும் சாக்ரடீஸுடன் ஜாந்திபி எப்படிப்பட்ட மீளாத வேதனை அனுபவித்திருப்பாள்? அவள் என்றாவது ஒரு நாள் இரைந்திருப்பது பெருந்தவறில்லை. ஆனால் அவளைப் பற்றி ‘இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது’ என்கிற கதைதான் நிலைத்திருக்கிறது.
சாக்ரடீஸின் வீட்டைக் கவனித்துக்கொண்டு, அவருக்கு உணவு ஆக்கிப் போட்டு, நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு உற்ற துணையாகக் கடைசி நாள் வரை ஜாந்திபி இருந்திருக்கிறாள். மாக்ஸ்வெல் ஆஸ்டர்ஸன் எழுதிய ‘ஏதென்ஸில் வெறுங்காலோடு’ என்கிற நாடகம் இக்கோணத்தை எடுத்துக் காட்டுகிறது.
மிகவும் எளிய நிலைமையில் ஒரு சின்ன ஊரில் வாழ்க்கை நடத்திய லிங்கன் தம்பதிகள் திடீரென்று வாஷிங்டனில் குடியேற வேண்டியிருந்தது. அநேக பரம்பரைப் பணக்காரர்கள், சமூக வாழ்க்கையில் பெரும் செல்வாக்கு பெற்றவர்கள், அரசியல்வாதிகள், இவர்களின் நவநாகரிகமான, ஜம்பமான, படாடோபமான – ஆனால் போலியான உலகின் மத்தியில் லிங்கனின் மனைவி மேரி, நாட்டின் தலைமைச் சீமாட்டி என்கிற பெயரில் அநேக வைபவங்களில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. பலவற்றை அவளே தலைமை தாங்கி நடத்த வேண்டியிருந்தது. அமெரிக்க அரசியலில் மிகவும் கொந்தளிப்பு மிகுந்த காலம் அது. பல இடங்களில் லிங்கனைக் கொடும்பாவி கட்டி எரித்தார்கள். அருவருக்கத்தக்கச் சித்திரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். ‘கொலை செய்துவிடுவேன்’ என்று ஏராளமான பயமுறுத்தல்கள். உள்நாட்டு யுத்தம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேரி சில சந்தர்ப்பங்களில் நிதானம் தவறியது ஆச்சரியமில்லை. ஆனால் லிங்கனின் வாழ்க்கையையே குலைக்க வந்தவள் என்றுதான் லிங்கன் வாழ்க்கை வரலாறு எழுதியவர்கள் அனைவரும் அவளைப் பற்றி எழுதினார்கள்.
சுற்றிலும் ஏளனப் பார்வை, குற்றம் காணும் கண்கள், பொறாமை, அமைதியற்ற குடும்பநிலை, ஆசை மகனின் மரணம், இதற்கெல்லாம் சிகரம் போல் கணவனின் படுகொலை – பிற்காலத்தில் மேரி லிங்கன் தன் மகனாலேயே பைத்தியக்காரர் விடுதியில் சேர்ப்பிக்கப்பட்டாள். எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக உள்ள குறைபாடுகளுடன் ஓர் அசாதாரணச் சூழ்நிலையில் அவதிக்குட்பட வேண்டியிருந்த மேரி லிங்கன் பற்றிப் பதினைந்து ஆண்டுகள் முன்புதான் ஒரு பரிவான, கண்ணியமான வாழ்க்கை வரலாறு வெளிவந்தது. (ரூத் ராண்டால் எழுதிய ‘மேரி லிங்கன்’).
டால்ஸ்டாய் திடீரென்று நினைத்துக்கொண்டு காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளாகப் பொழிவார். ஆத்மிகச் சுத்திகரிப்பு வேகம் வந்து யார் யாரிடமோ எது எதையெல்லாமோ உளறிக் கொட்டுவார். காலத்துக்கும் மனித இயல்புக்கும் ஒவ்வாத திட்டங்களை வகுத்துக் கொண்டு ‘தான் எளியனிலும் எளியன்’ என்று சொல்லிக்கொண்டு, தன்னைச் சுற்றி அண்டியிருப்பவர்கள் அனைவரையும் ஒரு சர்வாதிகாரிக்குரிய கடுமையுடன் அத்திட்டங்களை நிறைவேற்ற வற்புறுத்துவார்.
அவருக்கு அத்யந்த சிஷ்யர்கள் என்று ஏராளமான பேர் அவரைச் சுற்றி எப்போதும் கூட்டம் போட்டவண்ணம் இருந்தார்கள். அவருடைய வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, அவருடைய புகழ், செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய வாழ்நாளிலேயே அவர் வீட்டின் அந்தரங்கங்களைத் திரித்து அவரைப் பற்றி ஏச்சுப் பிரசாரம் செய்தார்கள். டால்ஸ்டாயின் கொள்கைகளின் நுட்பங்களை எல்லோரும் எளிதில் அறிய முடியாது. அவருடைய ஆத்மிக வேகத்தையும் சுய சுத்திகரிப்பு வாக்குமூலங்களின் தன்மையையும் கற்றறிந்தவர்கள்கூட பொருத்தமான விளக்கங்களின் உதவியில்லாமல் புரிந்து கொள்வது கடினம். ‘போலிச் சாமியார் டால்ஸ்டாய்’, ‘ஊரை ஏய்க்கும் ஆஷாடபூதி’ என்றெல்லாம் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்களே பிரசாரம் செய்ததன் பலன் ஒரு சமையற்காரன் ‘அந்த மதத் துரோகி டால்ஸ்டாயை மட்டும் நான் வெந்நீரில் முக்கி வேகவைக்க முடியுமானால்…’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
முடித்திருத்தம் செய்பவர் ஒருவர் டால்ஸ்டாயைப் பற்றி மிக அருவருப்பான புத்தகம் ஒன்று எழுத, புனித விரதங்கள் மேற்கொண்ட உள்ளூர்ப் பாதிரியார், ‘இந்தப் புத்தகம் என் பூரண சம்மதம் பெற்றது’ என்று பகிரங்கமான அறிவித்தார்!
முடித்திருத்தம் செய்பவர் ஒருவர் டால்ஸ்டாயைப் பற்றி மிக அருவருப்பான புத்தகம் ஒன்று எழுத, புனித விரதங்கள் மேற்கொண்ட உள்ளூர்ப் பாதிரியார், ‘இந்தப் புத்தகம் என் பூரண சம்மதம் பெற்றது’ என்று பகிரங்கமான அறிவித்தார்!
உலக வாழ்க்கையில் பரவியிருக்கும் மிகச் சாதாரணமான கயமையைக் கூடக் கண்டுகொள்ள இயலாத ‘அசடு’ டால்ஸ்டாயுடன் ஐம்பதாண்டுகள் குடித்தனம் நடத்தி, நிறையப் பிள்ளை பெண்கள் பெற்றெடுத்து, வீட்டு அதிகாரத்தில் ஒரு நிலையான இடம் இல்லாததாலும் என்றைக்கும் ஏராளமான மூன்றாவது மனிதர்கள் தலையீட்டின் மத்தியிலேயே பெரிய பண்ணையின் பொறுப்புகளையும், தன் குடும்ப வருவாய் செலவுக் கணக்குகளையும் பார்த்து வரவேண்டிய டால்ஸ்டாயின் மனைவியை இகழாதாரும் அவமானப்படுத்தாதவரும் கிடையாது. ‘இல்லம் துரத்தல்’ என்று 1910-ல் டால்ஸ்டாய் தனியே வெளியே போகாமல் இருந்தால் அந்த ஆண்டிலேயே அவர் மறைவு ஏற்பட்டிருக்காது என்றும் கூறுகிறார்கள். அவர் மரணப் படுக்கையில் இருக்கும்போதுகூட அவருடைய மனைவி வந்து பார்க்க அவருடைய ‘நண்பர்கள்’ அனுமதிக்கவில்லை!
டால்ஸ்டாயின் பெருமை பேச வேண்டுமானால் கூடவே அவர் மனைவியைத் தூற்ற வேண்டும் என்ற நிலைமை இருந்தபோது ஓர் எழுத்தாளர் மட்டும் அவளுக்காக அனுதாபக் குரல் எழுப்பினார். அவர் மாக்சிம் கார்க்கி.
மாக்சிம் கார்க்கிக்கு டால்ஸ்டாயின் மனைவி மீது பரிவுகொள்ளத் தனிக் காரணங்களே இல்லை. அவருடைய பிறப்பு, இளமைப் பருவம் கழிக்க நேர்ந்த வட்டாரம், அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும் பளுவாக இருந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் – இவையே, வர்க்கத்துக்கு வர்க்கம், டால்ஸ்டாய் போன்றோரை கார்க்கி ஓர் ஆழ்ந்த வெறுப்புடன் நினைக்கத் தூண்ட வைக்கும். ஆனால் கார்க்கிக்கு ஏனோ அம்மாதிரி தோன்றியதே இல்லை. அவர் பெயரில் கசப்பை வைத்துக் கொண்டாரே தவிர எழுத்திலும் வாழ்க்கை நோக்கிலும் கசப்பையும் வெறுப்பையும் வைத்திருக்கவில்லை. உற்சாகத்தை எவ்வளவு ஒடுங்க வைக்கக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் எல்லாவற்றையும் மீறிப் பல ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவதே அவருடைய தனிச் சிறப்பாக இருந்திருக்கிறது.
அநேக சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டாலும் கார்க்கிக்குப் பிரபல பத்திரிகைகளின் பிரபல அறிமுகம் ஏற்பட உதவிய கொரலங்கோவின் தூண்டுதலின் பேரிலும் சிபாரிசினாலும் கார்க்கி ‘சமரா கெஜட்’ என்னும் பத்திரிகையில் உத்தியோகம் புரிய சமரா சென்றார். அவருடைய மணவாழ்க்கை அங்கேதான் ஆரம்பித்தது. ‘கெஜட்’டில் புரூப் திருத்துபவராக இருந்த காடரீனா வால்ழீனாவை கார்க்கி 1896-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். கார்க்கியின் ஒரே குழந்தையான மாக்சிம் பிறந்தான். கார்க்கியின் எழுத்து உள்ளூர் நிர்வாக ஊழல்களை வெளிப்படுத்த, கார்க்கி ‘கெஜட்’டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த நாட்களிலேயே கார்க்கியின் படைப்புகள் தணிக்கையாளரால் மிகவும் வெட்டப்பட்டன. அப்படி இருந்தும் 1898-ல் அவருடைய ‘கவிதைகளும் கட்டுரைகளும்’ வெளியானபோது பொதுஜனங்கள் அளித்த வரவேற்பு மகத்தானது. படித்தவர்கள், மேல் தரப்பிலுள்ளவர்கள் கார்க்கியின் இலக்கிய வேகத்தையும் உயிர்த் துடிப்பையும் பாராட்ட, வசதியற்றோர், ஏழை எளியவர்கள் கார்க்கியை அவர்களுடைய அந்தரங்கமான பிரதிநிதியாகக் கொண்டாடினார்கள். அவருடைய அமோகமான பொதுஜன மதிப்பு, அரசைக் கடுமையான நடவடிக்கை ஒன்றும் எடுத்துவிடாதபடி தடுத்தது. ‘அதல பாதாளம்’ என்கிற கார்க்கியின் நாடகம் அதி கவனமான தணிக்கைக்கு உட்பட்டு, ‘இனி இதை அடக்கி வைத்தாலும் வெளியிட்டாலும் ஒன்றுதான்’ என்று தீர்மானித்த பிறகுதான் மேடைக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த எழுபதாண்டு காலத்தில் அபரிமிதமான வெற்றி பெற்ற முதல் பத்து உலக நாடகங்களில் அதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கார்க்கியின் புகழ் உலகில் பரவாத இடமில்லை.
ரஷ்யாவின் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்டவென கார்க்கி 1906-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். அதற்குள் அவருடைய மண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுவிட்டது. ஆண்டிரியீனா என்கிற நடிகைதான் கார்க்கியுடன் சென்றிருந்தாள். அவளைத்தான் அமெரிக்காவில் திருமதி கார்க்கி என்று அழைத்தார்கள். மார்க் ட்வெய்ன், எச்.ஜி.வெல்ஸ், ஆர்தர் பிரிஸ்பேன், வில்லியம் ஹாவெல்ஸ் போன்றோர் கூடி, கார்க்கிக்கு அமெரிக்காவில் மகத்தான வரவேற்பு கொடுத்தார்கள். பத்திரிகைகள் புகழாரம் சூட்டிய வண்ணம் இருந்தன. கார்க்கியின் அமெரிக்க விஜயப் பட்டியலில் ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட்டின் ‘வெள்ளை மாளிகை’ வரவேற்பு விருந்து முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஷ்யாவின் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்டவென கார்க்கி 1906-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். அதற்குள் அவருடைய மண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுவிட்டது. ஆண்டிரியீனா என்கிற நடிகைதான் கார்க்கியுடன் சென்றிருந்தாள். அவளைத்தான் அமெரிக்காவில் திருமதி கார்க்கி என்று அழைத்தார்கள். மார்க் ட்வெய்ன், எச்.ஜி.வெல்ஸ், ஆர்தர் பிரிஸ்பேன், வில்லியம் ஹாவெல்ஸ் போன்றோர் கூடி, கார்க்கிக்கு அமெரிக்காவில் மகத்தான வரவேற்பு கொடுத்தார்கள். பத்திரிகைகள் புகழாரம் சூட்டிய வண்ணம் இருந்தன. கார்க்கியின் அமெரிக்க விஜயப் பட்டியலில் ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட்டின் ‘வெள்ளை மாளிகை’ வரவேற்பு விருந்து முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘ஒரு கலவரக்காரன்’ என்கிற பெயரில் கார்க்கியை மட்டந்தட்ட ரஷ்யத் தூதரகம் அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் அதைவிட இன்னமும் சக்திவாய்ந்த ஆயுதமொன்றை அது உபயோகித்தது.
வில்லியம் ஹேவுட் என்பவர் அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர். அவரும் மொயர் என்கிற இன்னொரு தலைவரும் கார்க்கியின் விஜயத்தின்போது சிறையிலிடப்பட்டிருந்தார்கள். கார்க்கி அவர்களுக்கென்று ஒரு விசேஷச் செய்தி விடுத்தார்.
அதே சமயத்தில்தான் ‘சட்டபூர்வமாக மணம் செய்து கொள்ளாதவளை மனைவி என்று இழுத்து வந்திருக்கிறானே, இவனுக்கா இந்த ஆர்ப்பாட்ட வரவேற்பு அளிக்கிறீர்கள்?’ என்று ரஷ்யத் தூதரகம் எல்லா பத்திரிகைகளுக்கும் குறிப்பு அனுப்பியது. அத்துடன் ‘இதோ இருக்கிறாள் ரஷ்யாவில், இந்தக் கார்க்கியுடன் சேர்ந்து வாழ இயலாது என்று விலகிய அவனுடைய மனைவி’ என்று காடரீனாவின் புகைப்படப் பிரதிகளையும் தந்து உதவியது. நடு இரவில் கார்க்கி தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். அது மட்டுமல்ல. அந்த நேரத்திலேயே அவரும் அவர் குழுவினரும் அந்த ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஏகமாகப் புகழ்ந்த பத்திரிகைகள் ‘துன்மார்க்கன், இல்லறத் துரோகி’ என்றெல்லாம் கார்க்கி மீது வசைமாரி பொழிந்தன. பிரமுகர்களும் பத்திரிகைகளும் சேர்ந்து தமது ‘தங்கும் விடுதிகளின் புனிதத் தன்மையைக் காப்பாற்ற வேண்டும்’ என்று ஓர் அறப்போர் தொடுத்து கார்க்கிக்கு அமெரிக்காவில் தங்க இடம் இல்லாமல் செய்தார்கள். ரூஸ்வெல்ட் கார்க்கிக்குத் தான் அளிக்கவிருந்த வரவேற்பை ரத்து செய்தார்.
கார்க்கியின் சிறுகதைகளில் ‘வெட்ட வெளிச்சம்’ என்றொரு மிகச் சிறிய கதை இருக்கிறது. அது 1895-ல் எழுதப்பட்டது. இருபது வயதுகூட அடையாத ஓர் இளம் மனைவி நடத்தை கெட்டவளென்று நடுத்தெருவில் சித்திரவதைக்குட்பட்டு உடலெல்லாம் ரத்தமொழுக இழுத்துச் செல்லப்படும் கொடுமை பற்றியது அது. அந்தக் காட்சியை 1891 ஜூலை 15-ம் தேதியன்று தான் நேரில் கண்டு அப்படியே எழுதியதாக கார்க்கி கூறியிருக்கிறார். மிகவும் அடக்கமாக எழுதப்பட்ட கதை இது. ஓரிடத்தில்கூட படிப்போரை வெறி கொள்ளச் செய்ய முயற்சிக்கவில்லை. இப்படித்தான் முடித்திருக்கிறார்: “இம்மாதிரி கொடூரங்கள் இரக்கமற்ற, கற்றறியா மக்கள் தார்மீக வெறியின் பேரில் புரியக்கூடும் என்று இன்று கண்கூடாகப் பார்த்து விட்டேன்… மனிதர் விலங்குகளாக மாறுவதை நேரில் பார்த்து விட்டேன்…”
ஒரு ரஷ்யக் குக்கிராமத்தில் சிறிது நேரம் தாண்டவமாடிய ‘தார்மீக’ வேகத்தின் இன்னொரு பரிமாணத்தை கார்க்கி தன் சொந்த வாழ்க்கையில் அயல் நாடாகிய அமெரிக்காவில் அனுபவித்து விட்டார்.
எந்தத் தனி மனிதனையும் இழிவுபடுத்தும் வகையில் கார்க்கி தீர்ப்பளித்ததில்லை. ‘மனிதன்! எத்துணை உயர்வாக இச்சொல் ஒலிக்கிறது!’ என்றுதான் இறுதி நாள் வரை அவர் கூறிக் கொண்டிருந்தார். “அஞ்ஞானக் குப்பையைப் புறம் தள்ளி, தன் தவறுகள் தனக்கிடும் பனித் திரையை விலக்கிக் கொண்டு, பழைமையைப் போக்கி பெரும் புதிராயிருக்கும் தன் எதிர்காலத்தை நோக்கி மனிதன் கம்பீரமாகவும் சுயேச்சையாகவும் மெல்ல முன்னேறிக் கொண்டே இருக்கிறான். அவன் பயணத்தில் கணக்கில்லாத இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவன் முன்னேறிக் கொண்டே இருக்கிறான்.”
அதனால்தான் கார்க்கிக்கு கிராமத்துப் பேதைமீது கருணை காட்ட முடிந்தது. டால்ஸ்டாய் சீமாட்டி மீதும் பரிவு கொள்ள முடிந்தது.
(1968ல் எழுதப்பட்ட கட்டுரை. அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.)
Nanri: tamilpaper.net
Posted in நல்ல எழுத்து3 Comments
1 comment:
[quote]மனிதன்! எத்துணை உயர்வாக இச்சொல் ஒலிக்கிறது!’ என்றுதான் இறுதி நாள் வரை அவர் கூறிக் கொண்டிருந்தார். “அஞ்ஞானக் குப்பையைப் புறம் தள்ளி, தன் தவறுகள் தனக்கிடும் பனித் திரையை விலக்கிக் கொண்டு, பழைமையைப் போக்கி பெரும் புதிராயிருக்கும் தன் எதிர்காலத்தை நோக்கி மனிதன் கம்பீரமாகவும் சுயேச்சையாகவும் மெல்ல முன்னேறிக் கொண்டே இருக்கிறான். அவன் பயணத்தில் கணக்கில்லாத இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவன் முன்னேறிக் கொண்டே இருக்கிறான்.”[/quote]
தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் இப்படி கூறியுள்ளார்: மனித அபிலாசைகளின் பரிமாணம் அகன்றது.சுதந்திரமாக வாழ வேண்டும் என்றவிடுதலை வேற்கையும்,வாழ்நிலையை மேம்பாடு செய்து முன்னேற வேண்டும் என்ற அபிலாசையுமே மானிடத்தின் பிரதான உந்து சக்தியாக விளங்குகின்றது
இணைப்புக்கு நன்றிகள்
Post a Comment