எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.

இந்தக் கட்டுரை இவ்வாரம் இடம் பெறவில்லை என்பதை அறியத் தருகின்றோம். 9ம் பகுதி அடுத்த வாரம் தொடரும்

எனது இலங்கைப் பயணம் - பகுதி 8

மடுவிற்கு செல்வதற்கு வவுனியாவில் இருந்து நல்ல வீதி இருப்பதால் நாங்கள் வவுனியாவால் செல்கின்றோம். வவுனியாவின் நகரப் பகுதியில் கம்பீரமாக பண்டார வன்னியனின் சிலையுள்ளது அதையும் எமது கமராவில் அடக்கிக் கொள்கிறேன். மடுவீதியின் ஒருபகுதி மிக நன்றாக போடப்பட்டிருக்கிறது. செல்லுகின்ற பாதைகளில் உடைந்த கட்டிடங்களும் கூரையில்லா வீடுகளும் தற்போது குடியேறியவர்களின் சின்னஞ்சிறு கொட்டகைகளும்தான் தெரிகிறது.





இந்த வீதியிலும் மற்றைய இடங்களைப் போலவே பாதையோரமாக இராணுவம் நிற்கிறது. அந்த வீதியில் பெரிய பெரிய பிளாஸ்டிக் பீப்பாக்களில் தண்ணீர் வைக்கப்பட்டு குடிதண்ணீர் என்று எழுதப்பட்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்கு கப்பும் வைக்கப்பட்டிருந்தது. கடைகள் அதிகம் காணப்படவில்லை அதனால்தான் இப்படி வைத்துள்ளார்களோ என்று நினைத்துக்கொண்டேன்.


இருமருங்கும் வயல்கள் விதைக்கப்பட்டு பச்சைப் பசேல் என்று காணபட்டது மனதை குளிரச் செய்தது.
வவுனியாவில் இருந்து செல்லும் வீதியும் மதவாச்சியில் இருந்து மடு செல்லும் வீதியும் சந்திக்கும் இடத்தில் வீதிதிருத்த வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வீதி மிக அகலமான வீதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.





போகின்ற பாதையில் கட்டுக்குளத்தை இறங்கிப் பார்க்கின்றோம். கிளிநொச்சி மன்னார் பிரதேசத்திற்கான விஸ்தீரணமான அந்தக் குளத்தைப் பார்க்கும்போது அதன் மறுகரையை பார்க்கமுடியாத அளவுக்கு நீண்டு பரந்து கிடக்கின்றது. நமது பிரதேசங்களுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாது விவசாயத்திற்கு நீர்ப்பாச்சும் அந்தக் குளங்களைப் பார்க்கின்றபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. அங்கிருந்து புறப்பட்டு மடுவை அடையும்போது மிகப்பெரிய வீதி வளைவு கட்டப்பட்டு மடு புனித நகரம் வரவேற்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதில் இரானுவ தடை நிலையம் உள்ளது சாரதி இறங்கி பதிந்து கொள்கின்றார். இரண்டு இரானுவத்தினர் வானத்தின் உள்ளே பார்க்கின்றார்கள். தலையை அசைத்துவிட்டு செல்ல நாங்கள் செல்கின்றோம்.அந்த இடத்திலிருந்து வீதியின் இருமருங்கும் பூக்கன்றுகள் பூத்துக் குலுங்குகின்றது. வெள்ளை நீல வர்ணங்களால் தெரு விளக்குக் கம்பங்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதை பார்கின்றபோது இந்தியாவில் அன்னை வேளாங்கன்னி கோவிலின் அழகு இங்கும் தெரிந்தது.



மாதா கோவிலில் பெரிதாக ஆட்கள் இல்லை அது பூசை நேரமும் இல்லாத காரணமாக இருக்கலாம். நின்ற சிலருடன் பேச்சுக் கொடுக்கிறேன். இந்தப்பகுதியில் முன்பும் ஆட்கள் இல்லையென்றும் பெரிய பண்டி விரிச்சானில்தான் ஆட்கள் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் வந்து குடியேறி விட்டோம் எல்லோருமே வந்துவிட்டார்கள் என்று கூறினார்கள். நேரமின்மையால் அங்கு செல்லமுடியவில்லை.


அங்கிருந்து திருக்கேதீஸ்வரம் சென்றோம் “பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தார் எலும்பணியும் திருக் கேதீஸ்வரப் பெருமான் ஆலயம் கம்பீரமாக தோற்றம் அளித்தது. மான்களும் மயில்களும் சந்தேமாசமாக உலாவித்திரிந்தது. கோவிலும் தீர்த்தங்குளமும் அந்த வெண்மணல் வீதிகளும் உண்மையிலேயே நாங்கள் பலவற்றையும் இளந்து விட்டு இங்கு வாழ்க்கை நடத்துவதான எண்ணம் மனதில் எழுந்தது. பாலாவிக் கரைவரை வீதிகள் போடப்பட்டு இரண்டு மண்டபங்கள் புதிதாக கட்டப்பட்டு வர்ணம் பூசிக்கொண்டிருந்தார்கள். பாலாவி தண்ணீர் வற்றி கொஞ்சமாக காணப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடிக்கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து புறப்பட்டு மன்னார் சென்று கடைகளை பார்த்துக்கொண்டு சென்றோம் கலகலப்பாக இருந்தது. நேரமும் இருட்டிவிட்டகாரணத்தால் வவுனியா நோக்கி பயணத்தை மேற்கொண்டோம். ஏங்கும் அழிவுகளின் அடையாளங்கள் நிறைந்தே காணப்பட்டது. இந்த இரவிலும் பலர் சைக்கிள் களில் அந்த வீதியில் சென்று கொண்டிருந்தார்கள் அதைப் பார்த்தபோது சற்று ஆச்சரியமாகவும் இருந்தது.


இந்தக் கட்டுரையின் 8 வது  பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். 

2 comments:

kirrukan said...

[quote] வவுனியாவின் நகரப் பகுதியில் கம்பீரமாக பண்டார வன்னியனின் சிலையுள்ளது [/quote]

வெள்ளையனின் பயங்கரவாதியான பண்டார வன்னியனுக்கு சிலை வைக்க சிங்களம் அனுமதி
சிங்களவனின் பயங்கரவாதியான புலி வீரர்களின் கல்லறைகளை கூட சிங்களம் அழித்தது


பண்டார வன்னியன் கம்பீரமாக நிற்பது பெரிய விடயம் அல்ல......

வன்னிமக்கள் கம்பீரமாக நிற்க அரசியல் மன்னர்கள் எதாவது செய்ய வேணும்

ரமேஸ் said...

கட்டுக் குளத்தைப் பற்றி செ.பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. பஞ்சமில்லாமல் வாழ்வதற்கு அந்த குளமே காணும். கண்டவற்றை மட்டுமல்லாமல் அந்த மக்களோடு கதைத்து கேட்டு வந்திருப்பது ஒரு துணிவுதான். எனக்கும் போக விருப்பம் ஆனா போகப்பயம்.