சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசியுங்கள்


.

சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசியுங்கள் அதனைப் படிக்காதவர்கள் கவிஞனாக இருக்க முடியாது

திருகோணமலை நிருபர் : சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசிக்காதவர்கள் கவிஞனாக முடியாது என்று அகில இலங்கை இளங்கோ கலைக் கழகத்தின் தலைவர் பெரிய ஐங்கரன் "ரசவாதம்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தலைமை வகித்துப் பேசும்போது குறிப்பிட்டார்.
மூதூரைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் தில்லைநாதன் பவித்ரனின் "ரசவாதம்' கவி நூல் வெளியீடு கடந்த சனிக்கிழமை மாலை திருகோணமலை நகரமண்டபத்தில் நடைபெற்றபோது;


சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசியுங்கள், ஆண்டாள், மாணிக்கவாசகர், கம்பன், சேக்கிழார் வரிசையில் பாரதியார், பாரதிதாசன் என்று கவித்துறை வளர்ச்சி கண்டு வருகிறது. இன்று கவிதைப் பன்மைத்துவத்தின் ஊடாக செறிந்து வாழ்ந்து வருகிறது. இன்றைய கவிஞனின் படைப்புக்களில் சொல்சிக்கனம் தெரிகிறது. நவீன கவிதைக்கும் புதுக் கவிதைகளுக்கும் வேறுபாடு இல்லையென்றும் பெரியஐங்கரன் கூறினார்.
2008 இல் திருகோணமலைக்கு வந்த பின்னரே நூலாசிரியர் மாணவனாக அறிமுகமானார். இன்று அறிந்த கவிஞனாக அடையாளங் காணப்பட்டுள்ளார். கலை, இலக்கிய ஒன்றியத்தின் உதவிச் செயலாளருமான ஆ.ஜெகஜோதி பேசும்போது;
கவிஞன் சமுதாயத்தின் சிற்பி ஆவான். சிற்பி செதுக்குவதற்கு முன்பு அவனின் மனதிற்குள்ளே உருவத்தை வரைந்து விடுவான். எனவே கவிஞனின் மனதுக்குள்ளே தெளிவான மற்றும் ஆரோக்கியமான பார்வை இருக்க வேண்டும். சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அவை அமையவேண்டும். அத்தனையும் கொண்ட கவிஞனாக நூலாசிரியர் பவித்ரன் எம்முன் நிற்கின்றார். கவிஞன் ஆரோக்கியமான கனவு காண்பவனாகவும் சமுதாயத்திற்கு பயன்படும் கருத்துகளைக் கொண்டவனாகவும் இருக்கவேண்டும். 1921 இல் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று பாரதியார் கண்ட கனவு அவரின் மறைவின் பின்னரே நனவானது. கவிஞனின் ஆக்கங்கள் வாசகனை உற்சாகப்படுத்துபவையாக அமையவேண்டும் என்றார்.
முதன்மை அதிதியான ஓய்வு பெற்ற அதிபரும் திருகோணமலை மாவட்டக் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவருமான திருமலை நவம் பேசும்போது;
கவிதை அனுபவப் படிப்பினையாக அமையவேண்டும். கவிஞர் பவித்ரனின் கவிதைகளில் இந்த அனுபவம் படிமங்களை பதிவுகளைக் காணமுடிகிறது. கவிதைகள் காலத்தின் கண்ணாடியாக ஆவணங்களாக அமைகின்றன. மண்ணின் வரலாறுகளை அவலங்களை வாழ்வியல் போராட்டங்களை எடுத்துக் கூறும் படைப்புகள் திருகோணமலையிலிருந்து வெளிவருவது குறைவாகும். அக்குறையை நிவர்த்திப்பதாக சின்னஞ் சிறுவயதில் கவிஞர் பவித்ரனின் படைப்பு அமைந்துள்ளது என்றார்.
நூலாசிரியரான கவிஞர் பவித்ரன் தனது உரையில்;
மொழி அடிமையாக்கப்பட்டுள்ளது. அதனைக் காப்பாற்றப் புதிய வளவாளர்கள் தேவை. செம்மொழியான தமிழ் இன்று மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டது. பெயர்ப்பலகைகளில் இது தெரிகிறது என்றார். தமிழர் வாழ்வு இலக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. அன்று தொடக்கம் இன்று வரை மொழியின் ஊடாக இனமும் இனத்தின் ஊடாக மொழியும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அடுத்த நூற்றாண்டுக்கு எமது மொழியைக் கொண்டுபோவது எமது கடமையாகும். எமக்கு கற்றுத்தாருங்கள், நாளை எமது தம்பி, தங்கைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம். எமது மொழியின் வீரியத்தை, பாரம்பரியத்தை அவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கிறோம். எனது ஆசான்கள் எனக்குச் சொல்லித்தந்த வித்தையும் சிந்தனையும் வீணாகவில்லை என்பதற்கு"ரசவாதம்' உதாரணமாக அமைகிறது. மத, பிரதேச, வயது வாதங்களைத் தூக்கி எறிந்து விட்டு எமது மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும். முட்டும் வானும் உடையட்டும், முகிலும் பகையும் விலகட்டும், தட்டும் கைகள் எல்லாமே நாளை நம் தமிழின் ஓசையை எழுப்பட்டும் என்று தெரிவித்தார்.
Nanri: thinakural

No comments: