.
இருபதாவது ஆண்டாகத் தைத்திருநாளுக்கு விழா எடுக்கிறது விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம்
சாந்தினி புவனேந்திரராஜா

தை முதல் நாள்தைத்திருநாள் –  தமிழ்ப் புத்தாண்டு நாள்தமிழருக்குத் தனிப்பெருந் திருநாள். இயற்கையை வழிபட்டு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைத் தமிழரின் பண்பாட்டுப் பெருமை மிக்கது தைத்திருநாள்.தைமாதப்பிறப்பைத் தமிழரின் ஆண்டுப் பிறப்பாகத் தரை குளிர்ந்த கறவைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்.  
புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கிப் புத்தாண்டை வரவேற்றிருக்கிறான் பண்டைத்தமிழன்


காலஓட்டத்தில், ஆரிய ஆதிக்கத்தில்  தைமுதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பது மறைந்து, தைப்பொங்கல் என்று மட்டும் ஆகிவிட்டது. சித்திரை மாதப்பிறப்புத் தான் தமிழரின் ஆண்டுப்பிறப்பாகவும் மாறிவிட்ட்து.
அந்த வகையில் தைத்திருநாளைப் பொங்கல் விழாவாகவே கொண்டாடி வந்த விரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகத்தினால் 2007ஆம் ஆண்டுப் பொங்கல் விழாவில்தைமுதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - தைத்திருநாளே தமிழர் திருநாள்என்ற உறுதிமொழி பிரகடனம் செய்யப்பட்டு, அன்றிலிருந்து இத்திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப் பட்டு வருவது தமிழர்களாகிய எம்மையெல்லாம் பெருமைப்பட வைக்கிறது அல்லவா?
கடந்த 19 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் தைத்திருநாளைக் கொண்டாடி வருகின்ற விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம், இந்த ஆண்டு, எதிர்வரும் தைமுதல் நாள்15-01-2011 அன்று 20ஆவது ஆண்டாக இவ்விழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.
சித்திரை மாதப்பிறப்புத் தான் தமிழருக்கு ஆண்டுப் பிறப்பென்று இன்றும், இன்னமும் விடாப்பிடியாக நிற்கின்ற எம்மவரில் சிலரையும் சிந்திக்க வைக்கும் விதத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகத்தினால் கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது.

நாம் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடொன்றில், பல்லினக் கலாச்சாரத்தில் எமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடுகள் தொலைந்து போய் விடாமலும், எமது அடையாளம் அழிந்து போய் விடாமலும் பாதுகாக்கப் படுவதற்கு வழிகோலும் வகையில் ஆண்டு தோறும் தமிழுக்குத், தமிழ் ஆண்டுப் பிறப்பில் எடுக்கப்படுகின்ற இந்த விழா  சங்கே முழங்கு! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றாரம்பிக்கும், பாவேந்தர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க பாடலுடன், வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, இயல் இசை நாடகம் - இவை மூன்றும் ஒருங்கிணைந்த முத்தமிழ்த் திருநாளாக மட்டுமல்லாமல்., விக்ரோறிய மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்புப் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற, மற்றும் இப்பரீட்சையில்  தமிழ் மொழியில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி அவர்கள் கௌரவிக்கப்பட்டு  ஊக்கிவிக்கப்படுவது எமது இளைய சமுதாயத்தினர் கல்வியிலும், தாய்மொழியைக் கற்பதிலும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது என்றால் அது மிகையாகாது.
அத்துடன் தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் சேவை ஆற்றிய, சேவை ஆற்றிக் கொண்டிருக்கும் பலரும் ஆண்டு தோறும், தைத்திருநாளில் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்படுவதும் இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.
இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற தைத்திருநாள், இங்குள்ள தமிழரை ஒன்றிணைத்து முத்தமிழ் அமுதூட்டும் இத்திருநாள்  இனிவரும் ஆண்டுகளிலும் இனிதாகத் தொடரட்டும்.

வாழ்க தமிழ்
வளர்க விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம்

1 comment:

Yal. S. Baskar said...

இருபதாவது ஆண்டாக பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறது விக்ரோறிய கலாசாரக்கழகம் என்ற இந்தச் சிறுகட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி விக்ரோறிய தமிழ் கலாசாரக் கழகத்தினரால் இவ்வருடம் கொண்டாடப்படுவது இருபதாவது பொங்கல்விழா அல்ல. உண்மையில் அது 18 ஆவதாகும்.
விக்ரோறிய தமிழ்கலாசாரக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே 1993 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேதான். 1994 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக அந்தக் கழகத்தினரால் பொங்கல்விழா ஆரம்பிக்கப்பட்டிருக்க முடியும். எனவே இவ்வாண்டு நடைபெறுவது 18 ஆவது பொங்கல்விழாவே. கட்டுரையாளர் இருபதாவது பொங்கல்விழா என்று பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் எழுதுவது தவறானது மட்டுமல்ல குறிப்பிட்ட கழகத்தினரின் வரலாற்றையும் திரிபுபடுத்துவதுமாகும்.
மெல்பேணில் பொங்கல்விழா ஆரம்பிக்கப்பட்டமை பற்றிய உண்மையான சில தகவல்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
மெல்பேணில் முதன்முதல் பொங்கல்விழாவை நடாத்தியவர்கள் இளம்தென்றல் கலை மன்றத்தினர். 1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆண்டுவரை மூன்று வருடங்கள் மிகவும் சிறப்பாகவும், பிரமாண்டமான அளவிலும் அந்த விழாக்கள் நடாத்தப்பட்டன. மூராபின் என்னும் நகரிலும் அதனை அண்டிய இடங்களிலும் தமிழ் இளைஞர்கள் பலர் அப்போது தங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இளம்தென்றல் கலைமன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பினால் 1991 ஆம் ஆண்டு கொலிங்வூட் நகரமண்டபத்தில் முதன்முதலாக பொங்கல்விழா நடாத்தப்பட்டது. “பண்டாரவன்னியன்”; என்ற வரலாற்று நாடகமும், இசைநிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் இடம்பெற்றன.
இரண்டாவது பொங்கல்விழா 1992 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. அதுவும் கொலிங்வூட் நகர மண்டபத்திலேயே நடைபெற்றது. அதில், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நெறியாழ்கையில், “மாவீரன் எல்லாளன்” என்ற வரலாற்று நாடகமும், “மெல்பேண் கந்தையா” என்ற நகைச்சுவை நாடகமும் அரங்கேறின. மற்றும் மிகப்பெரிய அளவில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. “இருபதாவது பொங்கல்விழா” என்ற கட்டுரையை எழுதியவரின் பிள்ளைகளின் நடனம் ஒன்றும், மாவீரன் எல்லாளன் நாடகத்தின் அரசவைக் காட்சியில் இடம்பெற்றிருந்தமையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அடுத்த வருடம் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நெறியாழ்கையில் பிரபல எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் “வலை” என்ற நாடகம் அரங்கேறியது. மெல்லிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இளம் தென்றல் கலை மன்றத்தினரின் பொங்கல் விழாக்களிலே இடம்பெற்ற நாடகங்களில் முல்லை சிவா, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, நான் (யாழ். எஸ். பாஸ்கர்). கிருஸ்ணமூர்த்தி, வசந்தன், வித்தியானந்தன், கணேசர், கிங்ஸ்லி, அன்ரன் ஞானசீலன், செல்வராஜா, தமிழரசன், ஜெயரெத்தினம், திருமதி. தியாகராஜா, நளாயினி, கணபதிப்பிள்ளை, ரமேஸ் முதலிய பலர் நடித்திருந்தனர்.
இசைநிகழ்ச்சிகளில் பிரபல மிருதங்கக் கலைஞர் திரு. யோகன் கந்தசாமி திருமதி. சுமதி சத்தியமூர்த்தி, வைத்திய கலாநிதி. ரமா ராவ், நகுலேஸ், நித்தியா, சகாயநாதன், வித்தியானந்தன், ஆஸா, இன்னும் பலர் பங்குபற்றியிருந்தனர்.
பல்வேறு காரணங்களால் 1994 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவை இளம்தென்றல் கலைமன்றத்தினால் நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போனதைக் கேள்விப்பட்ட விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழக உறுப்பினர் ஒருவர் 1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எம்மைத் தொடர்புகொண்டு அதுபற்றிக் கேட்டார். நாங்கள் நடாத்தவில்லையென்றால் அப்போதுதான் புதிதாகத் தொடங்கப்பட்ட தமது கழகத்தின் சார்பில் தாங்கள் அதனை நடாத்தப்போவதாகத் தெரிவித்தார். எங்களுக்கு நடாத்தும் உத்தேசம் இல்லையென்றும், அவர்கள் நடாத்தலாம் என்றும் நாங்கள் கூறினோம். அதன்படி, அவர்கள் 1994 ஆம் ஆண்டு முதல் பொங்கல் விழாவைத் வருடாவருடம் தொடர்ந்து நடாத்திவருகிறார்கள்.
எனவே, இந்தவருடம் நடைபெறுவது 20 ஆவது விழாவாக இருந்தால் முதலாவது விழா 1992 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 1993 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்தான் கழகமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவுகள் தவறாகக்கூடாது என்பதனாலேயே இந்த விபரங்களை அறியத்தருகின்றேன்.

யாழ். எஸ்.பாஸ்கர்