.
இந்த உலகிற்கு ஒரு பெருமை இருக்கின்றது. அது என்ன பெருமை? நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பது இந்த உலகத்திற்குப் பெருமை என்கிறார் வள்ளுவர்.
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு.
சர்விகா விஜயகுமாரன் எனும் இளமயில் தனது வாழ்வை இளமையில் முடித்துக்கொண்டபோது இக்குறளைத் தான் நினைக்க முடிந்தது. அறிவிக்குப் புரிந்த இத்தத்துவம் என் உணர்வுக்குப் புரியாமையினாலேயே இதனை எழுதுகின்றேன். எனது பதவிக்காலத்தின் நிறைவுக்கட்டத்தில் ஒரு அழகிய தமிழ் மகளுக்கு அஞ்சலியைச் செய்யவேண்டியிருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை.
எமது சமூகம் அவ்வப்போது பல துயரங்களைச் சந்தித்தே வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்தபோது அக்குடும்பம் படும் துயரை வர்ணிக்க வார்த்தைகள் கிடைப்பதில்லை. அத்துயரம் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கே பெரும்பாலும் பொருந்துவதாக இருக்கும். எனினும் சில துயரங்கள், குடும்பத்தவர்க்கு மட்டுமன்றி அக்குடும்பம் சார்ந்த சமூகத்திற்கும், எளிதில் ஆற்றமுடியாதவையாக அமைந்துவிடுகின்றன.
சர்விகா இயற்கை எய்திய செய்தி கேட்டு எமது சமூகம் துடித்துப்போய்விட்டது என்பதுவே உண்மை. சர்வமும் அடங்கிப்போனதோர் உணர்வு உண்டாயிற்று. அவரின் பூத உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த கிரான்வில் லிபேர்ட்டி மலர்ச்சாலையில் ஞாயிறு மாலை நீண்டவரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தியமையே இதற்கு தக்க சான்றாகும்.
கொடிய புற்றுநோயின் தாக்கத்தினால் துவண்டுகொண்டிருந்தபோதும், மருத்துவமனையில் சிகிச்சை நிறைவுபெற்ற வேளையில் இனி நான் குடும்பத்தவரோடும் நண்பரோடும் மீதம் உள்ள நாட்களைக் கழிக்கப்போகின்றேன் என்று உறுதிபடத் தெரிவித்த சர்விகா தன் இறுதிக்காலத்தை எப்படிக்கழித்தார் என்பதை அவர் குடும்ப உறவினர்களிடம் இருந்தும் நண்பரிகளிடம் இருந்தும் அறிந்துகொண்டேனாயினும் அவரின் தீரத்தையும், திடசங்கற்பத்தையும் விபரிக்க எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. வாயில் வரை வந்து காத்திருக்கும் மரணதேவனைப் பற்றி சிறிதும் அஞ்சாது தனது வீட்டு வாயில் நாடி வந்த நெருங்கிய உறவுகளையும் நண்பர்களையும் வழக்கம்போலவே வார்த்தைகளால் உபசரித்த உன்னதமான இப்பெண்ணிற்கு கிடைத்த ஞானத்தை எண்ணி நான் வியப்புற்றேன். தனது இறுதிக்காலத்தில் கொடிய புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகிய எனது நண்பர் வேந்தனார் இளங்கோ அவர்களின் இறுதி நாட்களில் மூன்று தடவைகள் அவரை சந்தித்து தனியே உரையாடியிருக்கிறேன். அறிவிலும் அனுபவத்திலும் தூரநோக்கிலும் சிறப்புற்றிருந்த இளங்கோ அவர்களைப் போன்றே சர்விகாவும் தனது அனுபவ அறிவினால், அறிவின் தெளிவினால், தெளிந்த ஞானத்தினால் பெற்றோரையும் உற்றோரையும் ஆறுதல் செய்தார் என்றால் சர்விகாவின் மனோபலம் எத்தகையது என எண்ணிப்பார்க்கிறேன்.
1991 நவம்பரில் பிறந்த சர்விகா ஆரம்பப்பாடசாலையில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தவர். தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பரீட்சையில் மிகச்சிறந்த சித்திபெற்று சிட்னி நகரில் புகழ்பெற்ற பெண்கள் பாடசாலையில் இரண்டாம் நிலைக்கல்வியைப் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது வாழ்க்கை எனும் அஞ்சல் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் அவர் ஓடிக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலம் தாழ்த்தியே உணர்ந்துகொண்டோம்.
சர்விகாவின் தாயார் மாலா விஜயகுமாரன் சிட்னியில் புகழ்பெற்ற வயலின் ஆசிரியர். அவரின் வழிகாட்டலில் சர்விகாவும் நன்றாகவே வயலின் இசைப்பார். முன்னர், சனிக்கிழமைகளில் ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையத்தில் தமிழ்க் கல்வி பயின்று வந்தார். தமிழில் சரளமாக உரையாடும் வல்லமை பெற்ற சர்விகா ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலையில் வருடாந்தம் நடக்கும் வாணீ விழா மற்றும் நத்தார் விழா ஆகிய இரு விழாக்களுக்கு தனது தாயாருடன் வருகைதருவதும் நிகழ்ச்சிகளை வழங்குவதும் வழக்கமாகியிருந்தது. இந்த வருடம் சர்விகா எங்கே என்று கண்கள் தேடியபோதும் யாரையும் கேட்க முடியவில்லை. அடுத்த இரு வாரங்களிலேயே எல்லாம் தெரிந்துபோனது. அப்போது எல்லாமே முடிந்தது போலிருந்தது. ஆயினும் சரிவிகா தனது தளரா முயற்சியினால் மற்றவரை ஆறுதல் செய்துகொண்டிருந்தார்.
புத்திர சோகத்தை இளமைக்காலத்தில் கம்பராமாயணக் கதையில் நான் படித்திருக்கிறேன். இந்திரசித்தன் இறந்தபோது இராவணனும் மண்டோதரியும் புலம்பும் பாடல்களை உணர்ந்து உணர்ந்து பேசியிருக்கிறேன். எனினும் எனது முதல் குழந்தைச்செல்வத்தை பதினாறு மாதங்களில் பறிகொடுத்தபோதுதான் அந்தப் பாடல்களில் மூழ்க முடிந்தது. எக்காலத்திலும் ஆற்றமுடியாத சோகம் எனில் அது புத்திரசோகம் ஒன்றே. சர்விகாவை அழகும் இளமையும் கொழிக்கும் இருபது வயதில் இழந்து நிற்கும் சர்விகாவின் பெற்றோர்களைத் தேற்ற வார்த்தைகளே இல்லை.
எனினும் ஒரு நிறைந்த வாழ்வை சர்விகா வாழ்ந்து முடித்துச் சென்றிருக்கிறார். அவரின் இறுதிக்காலத்தில் மரணத்தைக் கண்டு அஞ்சிடாது அதனை வென்றவர் என்பதினாலேயே அவர் வாழ்க்கை நிறைந்த வாழ்க்கையாகிறது. உலகில் பலர் உயிரோடு இருப்பார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வதில்லை. உண்மையில் அவர்கள் நடைப்பிணங்களே! சிலரின் வாழ்வு மட்டுமே அர்த்தம் நிறைந்ததாக அமைந்துவிடுகின்றது. அலகிலா விளையாட்டுடைய தலைவனான பரம்பொருள் பாதை வகுத்துவிட்டான். சர்விகா தொடங்கிய பயணம் முடிந்துவிட்டது.
யாழ். இந்துக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் நாடாத்திய கீதவாணி விருதுகள் முதலாவது நிகழ்ச்சியில் சர்விகாவும் ஒரு போட்டியாளராக இருந்தார். கலைஞராகவும் விளங்கிய சர்விகா ஒரு நல்ல பாடகராகவும் இருந்தது ஒன்றும் ஆச்சரியமில்லைத் தான். அந்தப் போட்டியில் சர்விகா கணீர் குரலில் பாடி முடித்ததும், எனது வாக்கு உனக்கே உனக்குத் தான் என சொல்லிக்கொண்டே வாக்குச்சீட்டில் இலக்கமிட்டேன். கடவுள் மட்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தியிருந்தால், கீதவாணியில் வெற்றிபெறவேண்டும் என வாக்கு இட்ட உன் இரசிகர்கள் போல இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் நீ இன்னும் வாழவேண்டும் என வாக்களித்திருப்ப்பார்கள். ஆனாலும் நீ வென்றுவிட்டாயம்மா! உன் சமூகத்து மனங்களை வென்றுவிட்டாய். உன் பூத உடலை நீத்து புகழ் உடல் எய்திவிட்டாய். வயலின் இசைக்கருவி உன் கரங்களில் பட்டு எழுப்பிய இசை இக்காற்று மண்டலமெங்கும் பரந்து விரிந்து கலந்தது போல, கீத வாணியில் உன் கணீர்க்குரல் இரசிகர்கள் நுகரும் தேன் துளிகளாக உள்நுழைந்து அவர் நெஞ்சமெல்லாம் நிறைந்தது போல, உன் இறுதி நாட்களில் உன் அறிவின் ஆழத்தினால், பிறர் நலம் பேணும் பண்பினால் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தது போல, உன் பூத உடல் அக்கினியில் சங்கமமாகி இப்பஞ்ச பூதங்களில் கலந்து நிற்கும்போது, உன் புகழ் உடல் என்றும் நிலையாக இருக்குமம்மா!
நாம் எல்லோரும், ஒரு பயணத்தின் அங்கமாக, இவ்வுலகில் வந்து பிறந்திருக்கிறோம். நல்வினை, தீவினை எனப்படும் வினைப்பயன்களை அனுபவிப்பதற்கே இவ்வுலகில் வந்துள்ளோம். சிலர் மட்டும் தமது கடமையை சீக்கிரமே செய்துவிட்டு சிட்டுக்குருவி பறப்பது போல், சட்டென மறைந்துவிடுகின்றனர். சர்விகா எனும் ஞான நங்கையும் தனது கடன்களை முடித்துக்கொண்டு இருபது வருடங்களுக்குள் வானவில்லைப்போல தோன்றி, சட்டென மறைந்துவிட்டார். அவர் வாழ்க்கைப் பயணம் முடிந்துவிட்டது. அந்த விளக்கு இவ்வுலகை விட்டு மறைந்தபோதும், அணையாத சுடராக என்றும் பிரகாசிக்கும் என நம்புவோம்.
சர்விகா! உன்னை வணங்குதல் அன்றி வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது.
வாயுரைக்க வருகுதில்லை வாழி நிந்தன் மேன்மையெல்லாம்.
தூயசுடர் வானமுதே! கட்டியமுதே! சர்விகா
திரு திருநந்தகுமார்
தலைவர்
ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலையம்
10.01.11
1 comment:
Very well written.
I will miss you very much Sharvika.
Post a Comment