2011: சர்வதேச வன வள ஆண்டாக ஐ.நா. அறிவிப்பு

.
Last Updated :
  வன வள பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சர்வதேச, தேசிய, மாநில அளவில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு, ஆய்வரங்குகள் நடத்த அனைத்து நாடுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. உலகில் 160 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக வனப்பகுதிகளை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு அம்சத்தின் அடிப்படையில் மறைமுகமாக வனங்களைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர் என சர்வதேச அமைப்புகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

   தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால் மழை அளவு படிப்படியாக குறைவதுடன் உலகின் நீர்வளமும் குன்றி வருகிறது. இது மனிதனின் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில் பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன், பல்வேறு பிரச்னைகளையும் உருவாக்குகிறது. 

இதன் காரணமாக வனவளத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 21.02 சதவீதத்தை வனப்பகுதிகளாக கொண்டுள்ளது. இந்தியாவில் வனவளப் பாதுகாப்புக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் வனப்பகுதிகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. யானைகள், புலிகள், உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க அவை வாழும் பகுதிகளை சரணாலயங்களாவும், பாதுகாப்பு பகுதிகளைகவும் அறிவித்து வருகிறது. 2011-ம் ஆண்டில், மேலும் சில புதிய பகுதிகளை சரணாலயங்களாக அறிவிப்பதற்கான திட்டங்களை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி செய்து வருகிறது.

  தமிழகத்தில்: மொத்த நிலப்பரப்பில் 22,877 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வனப்பகுதிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில், 2011-ல் மேலும் சில பகுதிகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 37-வது அகில இந்திய சுற்றுலா பொருள்காட்சி பல்லின உயிர்வளத்தை மையக்கருத்தாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயமாக இருந்த சத்தியமங்கலம் வனப்பகுதி தமிழக அரசின் ஒத்துழைப்பால் புலிகள் காப்பகமாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு எருமைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் கொடைக்கானல் அருகில் உள்ள மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளைக் காட்டு எருமைகளுக்கான சரணாலயமாக அறிவிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன
[நன்றி: தினமணி]

No comments: