எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
எனது இலங்கைப் பயணம் -6

கீரிமலையில் இருந்து புறப்பட்டுப் பார்த்துக்கொண்டு செல்வச் சன்னிதியை அடைந்தோம் அந்தணர் இல்லாத கோவில் என்பது பலருக்கும் தெரியும். அங்கு அந்தணர் இல்லாதவர் வாய் கட்டிக்கொண்டு பூசை செய்கின்றார். அங்குசென்றபோதுதான் பலர் உதவிகேட்டு வந்தார்கள். இடம் பெயர்ந்து வந்துள்ளதாக கூறினார்கள் முடிந்த உதவிகளை செய்துவிட்டு நின்ற போது கோவிலுடன் தொடர்புள்ள ஒருவருடன் உரையாடினேன் ஆமி பெரியவன் இந்த கோவிலில் மிகவும் நம்பிக்கை கொண்டவன் என்றும் அடிக்கடி வந்து கோவிலுக்கு உள்ளே வந்து கும்பிட்டு செல்வான் என்றும் கூறினார்.




தவிலுக்கு பதிலாக இந்த கோவிலில் பறை அடிக்கப்படுகின்றது. பறை அடிப்பவரின் பறையின் நாதம் மாறியிருக்கிறது அவர்கள் தோற்றம் வறுமை என்பன மாறாமலே உள்ளது போல் தெரிகின்றது.

வருகின்ற பக்தர்களுக்கு இரண்டு மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக அந்த அன்னதானம் அருந்த முடியாது போய்விட்டது சற்று வருத்தமாக இருந்தாலும் வந்து பார்த்ததிருப்தியோடு திரும்பினேன்.

தொடர்ந்து வல்லிபுரக் கோவிலுக்கு சென்றேன். கோவிலும் தேர் முட்டியும் வெண் மணலும் திருச்செந்தூரை ஞாபகத்தில் கொண்டு வந்தது. என்ன கடல்தான் இல்லாத குறை.




 இவையெல்லாம் இந்தக்கிராமங்களையும் அங்குள்ள மக்களையும் வீடுகளின் கோலங்களையும் பார்க்கும் முயற்சியாகவே இடம் பெற்றது. எந்தப்பகுதியிலும் ஆமிக்காரர்கள் இருக்கின்றார்கள். மக்களும் அது இயல்பு வாழ்க்கைபோல் பழகிக் கொண்டார்கள். வீதிகள் திருத்தப்படாமலேயே கிடக்கின்றது.



அத்தோடு அன்றய பொழுதும் சாய்ந்து விட்டது. நாமும் கூட்டை நோக்கி செல்லும் பறவைகள் போன்று வீட்டை நோக்கி சென்றோம். யாழ்ப்பாணத்தில் இரவு பன்னிரெண்டு ஒரு மணிவரையும் திரிந்தேன். உணவகங்களில் உணவருந்திவிட்டு வந்தேன். குறிப்பாக ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகே உள்ள கொசி உணவகத்தை குறிப்பிடலாம். நல்ல உணவு நிறைய பேர் வந்து போகின்றார்கள் இரவு நீண்ட நேரம் திறந்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் யாழ்நகரப் பகுதியில் அடுத்தடுத்து சில கொலைகள் நடந்ததை அறியக்கூடியதாக இருக்கின்றது மாநகரசபை எலெக்சன் வருவதன் காரணமாக இருக்கலாம் என்று என் மனம் எண்ணிக்கொள்கிறது. பதவிக்காக எவரும் எதையும் செய்வார்கள் என்பதை நான் முன்பும் குறிப்பிட்டது சரி என்பது போல் தெரிகிறது.

யாழ்நகரை சுற்றிப்பார்த்தேன் நல்லூர்க்கந்தன் ஆலயம் முன்பை விட வீதிகள் பெருப்பிக்கப்பட்டு கடைவீதி கலகலக்க காட்சியளிக்கின்றது. யாழ் நகரத்தின் மறக்கமுடியாத பூபாலசிங்கம் புத்தகசாலை யாழ் பஸ்நிலையம் ஆஸ்பத்திரி எல்லாமே பழைய நினைவுகளோடு பின்னிப் பிணைந்த நிகழ்வுகளை மீட்டித்தந்தது. காலத்தின் சுழற்சியில் நாங்கள் நின்று கதைத்த இடங்களில் இப்போது வேறு இளைஞர்கள் நின்று கதைத்துக்கொண்டு நிற்கிறார்கள். சின்ன மாற்றம் மட்டும் தெரிகிறது கையில் மொபையில் போண் போக்குவரத்திற்கு மோட்டார் சைக்கிள். மற்றப்படி எல்லாமே அதே காட்சி போலவே தெரிகிறது. இளம் பெண் பிள்ளைகள் ஸ்கூட்டி என்று அழைக்கின்ற மோட்டார் சைக்கிள்களில் டபிள்ஸ் போகின்றார்கள். மனது ஒரு முறை பழைய நினைவுகளில் சென்று வந்தது.
மறு நாள் எமது பயணம் மன்னாரை நோக்கியதாகும் கிளிநொச்சியிலிருந்து  மன்னார் செல்லும் பாதை இன்னும் புணரமைக்கப் படாமையால் வவுனியாவால் செல்ல வேண்டிய நிலையே உள்ளது.


 மீண்டும் ஆனையிறவும் அதன் அண்டிய பகுதிகளில் மொட்டைப் பனைமரங்களும் நெஞ்சை உறுத்தும் காட்கிகளாக இருந்தாலும் புதிய வடலிகள் பனைகளுக்கு கீழ் பசுமையாக எழுந்து வருவது எத்தனை இடர் வந்தாலும் நம்முயற்சியால் மீண்டும் உயருவோம் என்று பறைசாற்றுவது போல் தெரிகின்றது.


ஆனையிறவில் ஒரு பக்கம் இலங்கையை கையில் தாங்கிய வண்ணம் ஆமிக்காரர்கள் நிற்பதுவும் அதன் மறுபக்கம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புலிகளின் ராங்கர் ஒன்றும் காணப்படுகின்றது.















சிங்கள பயணிகள் சிலர் அதற்கு மலர் வைத்து வணங்கிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது. ஏன் புலிகளின் ராங்கரை வணங்குகிறார்கள் என்ற கேள்விக்கு நண்பர் கூறினார் வேகமாக பெரும் தாக்குதல் தொடுத்த அந்த ராங்கரின் உள்ளே மனித வெடிகுண்டாக பாய்ந்து ஒரு இராணுவத்தினன் மரணித்து தன் சகாக்களை காப்பாற்றியதாகவும் அதனால் அவன் நினைவுத் தூபியாக அது உள்ளதென்றும் கூறப்படுகிறது. விரும்பியவர்கள் இறங்கி பார்க்கலாம் இறங்காமலும் செல்லலாம் அது பிரயாணிகளின் விருப்பம். கண்கள் உப்பளத்தை தேடியபோதும் உப்பளத்தின் சுவடே தெரியாமல் உப்புக்காற்று வீசும் கடல் மட்டுமே பரந்து கிடப்பதை காணக்கூடியதாக இருந்தது.


கிளிநொச்சியை அடைந்தபோது எல்லோரது கவனத்தையும் கவர்வது நிமிர்ந்து நின்று கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தண்ணித் தாங்கி புலிகளால் தகர்க்கப்பட்டு ராட்சத உருவத்துடன் வீழ்ந்து கிடக்கும் காட்சியாகும். இதைப் பார்த்தபோது எனக்கு யாழ் வீரசிங்கம் மண்டபம் எண்பத்தி நான்காம் ஆண்டு புலிகளால் தகர்க்கப்பட்டது ஞாபகத்தில் வந்தது.


அங்கிருந்து அநாதை சிறுவர்களை பராமரிக்கும் இல்லத்திற்கு சென்றோம் தாயை இழந்த குழந்தைகள் தந்தையை இழந்த குழந்தைகள் தாய்தந்தையர இருவரையுமே இழந்த குழந்தைகள் என்று ஏறக்குறைய 200 பிள்ளைகள் வரை பராமரிக்கப்படும் கிளிநொச்சி சிறுவர் இல்லம் மற்றும் ஸ்ரீ பரமானந்த மகளிர் இல்லம் என்று அழைக்கப்படும் மகாதேவ ஆச்சிரமம் என்பவற்றை அடைந்தோம்.



இவை கிளிநொச்சி நகரை அண்டிய ஜெயந்திநகரில் அமைந்திருக்கின்றது. ஆண் குழந்தைகளுக்கு வேறாகவும் பெண் குழந்தைகளுக்கு வேறாகவும் ஆச்சிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் பல அமைப்புக்கள் உதவி புரிகின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பிள்ளைகள் பகலில் படிப்பதற்கு அண்மையில் உள்ள அரச பாடசாலைக்கு சென்று விடுகின்றார்கள். சுகயீனமான ஒரு சில பிள்ளைகள் மாத்திரம் இருப்பார்கள். பிள்ளைகளில் அரைவாசிப்பேர் வரையில் கட்டில்களில் படுக்கின்றார்கள் ஏனையவர்கள் பாயில் படுக்கின்றார்கள்.

வசதிக் குறைவுகள் நிறையவே இருக்கின்றது. படுப்பதும் படிப்பதும் ஒரே இடத்திலேயே நடை பெறுகின்றது. பெண்கள் முகாமில் கட்டிட குறைபாடும் உள்ளது. படிப்பதற்கான மண்டபம் ஒன்று போட்டால் நல்லது என்றார் என்னை அழைத்துச் சென்றவர். ஆண்பிள்ளைகள் படுக்கும் பாய்கள் போர்வைகள் என்பவை மாற்றப்பட வேண்டிய தேவையிருந்தது.


அவைகளை மாற்றுவதற்கான சிறு உதவியை செய்து விட்டு ஒஸ்ரேலியாவில் உள்ள உறவுகள் மூலம் முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து விடை பெற்றேன். எங்குசென்றாலும் தேவைகள் அதிகம் உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கான வழிவகைகள் கண்டுபிடிக்கபடாமல் இருக்கின்றது. மிக வேதனையாக இருந்தது.



அங்கிருந்து கோணாவில் என்ற இடத்திற்கு அண்மையில் உள்ள ஊத்துப்புலம் தமிழ்ப்பாடசாலைக்கு சென்றேன். யாராலும் கண்டுகொள்ளப்படாத பிரதேசமாக உள்ள ஒரு கிராமம். கண்ணி வெடிகள் றோட்டுக்கரையிலேயே இன்னும் அகற்றப்படாமல் எச்சரிக்கைப் பலகை போடப்பட்டிருக்கிறது.
சாதாரண வாகனங்களில் செல்ல முடியாத பாதைகள் குண்டும் குளியுமாக கிடக்கிறது. பல மைல் தூரம் நடந்து செல்லவேண்டியிருந்தது. இடையில் திரும்பி விடுவோமா என்று கூட எண்ணினேன் என்னை அழைத்துச் சென்ற அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரின் சளைக்காத ஊக்கத்தால் தொடர்ந்து அங்கு செல்லத்தான் வேண்டும் என்று தொடர்ந்து செனந்தப் பாடசாலையை அடைந்தபோது கண்ணி வெடிப் பிரதேசத்தின் மத்தியிலே பள்ளிச் சிறுவர்கள் படித்துக்கொண்டிருக்கும் அந்த பாடசாலையைக்கண்டேன். ஆச்சரியமான விடயங்கள் அங்கே இருந்தது.
 அதை அடுத்தவாரம் பார்ப்போம்

இந்தக் கட்டுரையின் ஆறாவது பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.

5 comments:

Ramesh said...

இலங்கைப்பயணம் சுவையாகவும் சுருக்கமாகவும் நகர்கின்றது. படங்களோடு தகவலையும் தருவதற்கு நன்றி. தயவு செய்து இடையில இந்தவாரம் இல்லை எண்டு சொல்லாமல் தொடர்ந்து எழுதுங்கோ. எழுதிமுடிச்சுப்போட்டு லீவெடுக்கலாம் என்ன சரியோ?

மீனா said...

ஊருக்கு போவதற்கு ஆசை இருந்தாலும் போகமுடியால் இருக்கிறது. அங்குள்ள கோயில்கள் எல்லாத்தையும் வடிவா தருகிற பாஸ்க்கரனுக்கு நன்றி. கோயில்களுக்கு போய்வந்தது மாதிரி உள்ளது.

kirrukan said...

[quote]எனக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக அந்த அன்னதானம் அருந்த முடியாது போய்விட்டது சற்று வருத்தமாக இருந்தாலும் வந்து பார்த்ததிருப்தியோடு [/quote]

சிட்னி முருகன் கோவில் அன்னதானத்திற்கு பழக்கப்பட்ட வயிறு ஆனபடியால் ,சன்னிதிமுருகனின் அன்னதானத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை போலும்....

தொடரட்டும் உங்கள் அரசியல்கலந்த பயணக்கட்டுரை

kirrukan said...

கட்டுரையாளர் கருத்து...

உரும்பிராயில் கோயில்கள் திருத்திஅமைக்கப்பட்டு கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் போதாதென்று இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வந்து சிற்பங்கள் பொம்மைகள் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். யாரோ லண்டனில் இருக்கும் புண்ணியவான் பணத்தை இறைப்பதாக கேள்விப்படுகின்றேன். இவர்களுக்கு

யாரும் வன்னியில் உள்ள பாடசாலைக் கட்டடங்களைக் காட்டினால் நல்லதென்று எண்ணினேன்.




வாசகர் கருத்து...
ஊருக்கு போவதற்கு ஆசை இருந்தாலும் போகமுடியால் இருக்கிறது. அங்குள்ள கோயில்கள் எல்லாத்தையும் வடிவா தருகிற பாஸ்க்கரனுக்கு நன்றி. கோயில்களுக்கு போய்வந்தது மாதிரி உள்ளது.

என்னடா உலகம் இது.....

kalai said...

கிளிநொச்சியை அடைந்தபோது எல்லோரது கவனத்தையும் கவர்வது நிமிர்ந்து நின்று கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தண்ணித் தாங்கி புலிகளால் தகர்க்கப்பட்டு ராட்சத உருவத்துடன் வீழ்ந்து கிடக்கும் காட்சியாகும். இதைப் பார்த்தபோது எனக்கு யாழ் வீரசிங்கம் மண்டபம் எண்பத்தி நான்காம் ஆண்டு புலிகளால் தகர்க்கப்பட்டது ஞாபகத்தில் வந்தது.
-------------------
பக்கத்தில ஆமி குண்டு போட்டு அழிச்ச கட்டிடங்கள் ஒன்றும் இல்லையா?