பணத்தைவிட மதிப்புள்ளவன் மனிதன் - சிறுகதை

.             டாக்டர் பதைபதைத்துப் போனார். பலவிதப்பட்ட நோய்களையும்இ எத்தனையோ வகையான மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன அந்த மனிதர்இ தன்னுடைய மனைவி இரத்த வாந்தி எடுத்தாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தோல் பையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் காரில் ஏறினார்.

நோயாளிகள் பரிதாபமாக அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். சிலருக்கு ஊசி போட வேண்டும். சிலருக்கு மருந்து எழுதித் தரப்பட வேண்டும். சிலருக்கு நோய்களைப் பற்றி டாக்டர் கூற வேண்டும். எல்லாரையும் நிராகரித்து விட்டுஇ யாருடைய உடல் நலத்தையும் உயிரையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவர் தோல் பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறிவிட்டார்.யாரும் எதுவும் பேசவில்லை. என்ன பேசுவது? தங்களின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் மதிப்பு இருக்கிறது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால்இ டாக்டர் தன்னுடைய மனைவியின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் அதிக மதிப்பைத் தரும்போதுஇ அவர்களால் என்ன செய்ய முடியும்? என்ன கூற முடியும்?

அது ஒரு சிறிய நகரம். ஏராளமான நோயாளிகள் வரக்கூடிய சிறிய மருத்துவமனை அது. அந்தச் சிறிய நகரத்தில் சொந்தமாக கார் வைத்திருக்கும் வேலை பார்க்கும் ஒரே மனிதர் அந்த டாக்டர்தான். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு புதிய பணக்காரர் ஒரு பழைய காரை வாங்கினார். அது எப்போதாவதுதான் ஓடும். டாக்டரின் புதிய கார் அந்த ஊருக்கு புதுமையான ஒரு விஷயமாக இருந்தது.

அவருடைய வீடு ஐந்து மைல் தூரத்தில் இருந்தது. ஒரு மலையின் உச்சியில் விரிந்து படர்ந்த மரங்கள் அடர்ந்த ஒரு நிலத்தின் நடுவில்இ நவநாகரீக முறையில் கட்டப்பட்டிருந்த வீடு அது. நோயாளியான அவருடைய மனைவியின் உடல் நலத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் வீட்டைக் கட்டினார். சொந்தத்தில் காரும் டிரைவரும் இருந்ததால்இ வீட்டுக்கும் மருத்துவமனைக்கு மிடையில் இருந்த தூரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை அன்று நின்றிவிட்டிருந்தாலும்இ காற்று பலமாக அடித்துக்கொண்டு தானிருந்தது. காலையில் டாக்டர் வீட்டிலிருந்து மருத்துவமனைக் குச் சென்றபோதுஇ சாலையின் இடது பக்கமிருந்த வயல் நிறைந்துஇ சாலையில் நீர் ஓடிக் கொண்டிருந்தது.

பதிவாளர் அலுவலகத்தையும்இ பள்ளிக்கூடத்தையும்இ காவல் நிலையத்தையும் கடந்து டாக்டரின் கார் படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. குண்டிலும் குழியிலும் விழுந்தும் எழுந்தும் சாய்ந்தும் சரிந்தும் போய்க் கொண்டிருந்த கார் இரண்டு முறைகள் விபத்துகளைச் சந்திக்க நேர்ந்தாலும்இ ஓட்டுநரின் திறமையால் ஒன்றும் நேராமல் தப்பித்துவிட்டது.

""வேகமா போ!'' மனதிற்குள் பரபரப்புடன் இருந்த டாக்டர் கட்டளையிட்டார்.

கார் முன்பு இருந்ததைவிட வேகமாக ஓடியது.

""அய்யோ!'' ஒரு உரத்த குரல்.

கார் சாலையோரத்திலிருந்த குழிக்குள் இறங்கியது. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் உண்டான குழி அது. வயலில் நிறைந்த நீர் சாலையின் எதிர்பக்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. சாலையில் பிளவு ஏற்பட்டு குழி விழுந்திருந்தது. ஓட்டுநருக்கு அது தெரியவில்லை. அப்படி நடக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.

டாக்டருக்கு காயமெதுவும் உண்டாகவில்லை. காருக்குள் நீர் வந்ததால் ஆடைகளும் தோல் பையும் நனைந்துவிட்டன. ஓட்டுநருக்கு இரண்டு மூன்று இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவன் வேகமாக கீழே இறங்கினான். டாக்டரைப் பிடித்து வெளியில் வரச் செய்தான். நான்கு திசைகளிலிருந்தும் ஆட்கள் வந்து கூடினார்கள்.

கார் சிதைந்துஇ சாய்த்தவாறு அந்த நீர் நிறைந்த குழிக்குள் கிடந்தது. மனதில் கலக்கத்துடனும்இ நனைந்த ஆடைகளுடனும் டாக்டர் சாலையில் நின்றிருந்தார். அவர் அங்கு கூடியிருந்த ஆட்களிடம் கேட்டார்:

""இங்கே யார்கிட்டயாவது கார் இருக்கா? ஒரு கார் கிடைக்குமா? என்னை வீட்டுல கொண்டு போய்விட்டால்இ எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்.''

அங்கு யாரிடமும் கார் இல்லை என்ற விஷயம் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால்இ அந்த இக்கட்டான சூழ்நிலையில் அப்படி கேட்பதைத் தவிரஇ அவர் வேறு என்ன செய்ய முடியும்?

யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை. டாக்டர் தான் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டார்:

""எங்கேயிருந்தாவது ஒரு கார் கொண்டு வர முடியுமா?''

அருகில் நின்றிருந்த ஒருவன் சொன்னான்:

""இங்கே ஒரே ஒரு கார்தான் இருக்கு. அது இந்த தண்ணிக்குள்ளே விழுந்து கிடக்குது.''

""நான் இப்போ என் வீட்டுக்குப் போகணுமே!''

""ஒரு குதிரை வண்டி போதுமா?'' இன்னொரு ஆள் கேட்டான்.

""போதும்... போதும்... எங்கேயிருக்கு? சீக்கிரமா கொண்டு வா. என்ன வேணும்னாலும் தர்றேன்.'' டாக்டர் ஆர்வத்துடன் சொன்னார்.

சிறிது தூரத்தில் சாலையோரத்தில் டாக்டரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாச்சன் அலட்சியமாகக் கேட்டான்:

""என்ன தருவீங்க?''

""என்ன வேணும்னாலும் தர்றேன். வண்டியைக் கொண்டு வா.''

""அப்படிச் சொன்னால் போதாது. என்ன தருவீங்கன்னு சொல்லணும். பணம் செலவழிச்சுத்தான் வண்டியையும் குதிரையையும் வாங்கியிருக்கேன்.''

""என்ன தரணும்னு சொல்லு.''

""எவ்வளவு தூரம் இருக்கும்?''

""இங்கேயிருந்து குத்து மதிப்பா நாலு மைல் இருக்கும்.''

""இருபது ரூபா தாங்க.''

""தர்றேன். வண்டியைக் கொண்டு வா. முன்கூட்டியே பணம் வேணுமா?''

""ஆமா...''

டாக்டர் தன் பர்ஸைத் திறந்து பணத்தை எடுத்து பாச்சனிடம் நீட்டினார். பாச்சன் பணத்தை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டு நடந்து கொண்டே சொன்னான்:

""இதோ வண்டியைக் கொண்டு வர்றேன்.''

சாலைக்கு அருகிலிருந்த ஒரு சிறிய வீட்டுக்குள் அவன் நுழைந்தான். இரண்டு சிறிய அறைகளையும்இ சமையலறையையும் மட்டும் கொண்டிருந்த மண்ணால் ஆன ஒரு சிறிய வீடு அது. அவனும் அவனுடைய மனைவியும் வசிப்பதற்காக அந்த வீடு உண்டாக்கப்பட்டிருந்தது. ஆனால்இ இப்போது அவன் மட்டுமே அங்கு இருக்கிறான். அவனுடைய மனைவி பிரசவ சமயத்தில் இறந்துவிட்டாள்.

இருபது மைல்களைத் தாண்டி இருக்கும் பெரிய நகரத்தில் குதிரை வண்டிக்காரனாக இருந்தான் பாச்சன். அங்கு பலரும் சொந்தத்தில் கார் வாங்கவும்இ வாடகைக் கார்கள் எளிதாகக் கிடைக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டானவுடன்இ பாச்சனின் குதிரை வண்டியைத் தேடுவதற்கு ஆட்கள் இல்லாமற் போனார்கள். அதனால்இ அவன் குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்து விட்டான்.

அம்மிணியைத் திருமணம் செய்துஇ அவர்கள் அந்த வீட்டில் வசித்தார்கள். அது ஒரு காதல் திருமணமாக இல்லையென்றாலும்இ திருமணத்திற்குப் பிறகு அவர்களின் இதயங்கள் ஒன்றோடொன்று விரும்பிச் சேர்ந்தன. அம்மிணி பாச்சனின் உயிராக ஆனாள். அந்தச் சிறிய நகரத்தில் குதிரை வண்டியைத் தேடக்கூடிய ஆட்கள் இருந்ததால்இ எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் அந்த புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தார்கள். வாழ்க்கை அப்படி ஓடிக்கொண்டி ருக்கும்போதுஇ அம்மிணி கர்ப்பம் தரித்தாள்.

மாதங்கள் பூர்த்தியாயின. அம்மிணிக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. ஒரு நாள் கடந்த பிறகும் பிரசவம் ஆகாமல் இருந்ததால்இ பாச்சன் மிகுந்த பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டான். பிரசவம் பார்க்கும் பெண் என்னவெல்லாமோ செய்தாள். அது எல்லாமே அம்மிணியை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லவே பயன்பட்டது. அம்மிணியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் சொன்னார் கள் என்பதற்காக மந்திரவாதம்கூட அவன் செய்து பார்த்தான். அதற்குப் பிறகும் அவள் பிரசவம் ஆகவில்லை.

மூன்றாவது நாள் இரவு வந்தபோதுஇ பாச்சன் பைத்தியம் பிடித்தவனைப் போல ஆகிவிட்டான். டாக்டரை அழைத்துக் கொண்டு வருவது நல்லது என்று சிலர் சொன்னார்கள். அதே நேரத்தில் சொத்தை விற்காமல் டாக்டரை அழைத்து வருவது என்பது நடக்கக்கூடிய விஷயமல்ல என்றும் சிலர் கூறினார்கள். பாச்சன் யாரிடமும் எதுவும் பேசாமல்இ சாலையில் போய் நின்றான்.

இரவு எட்டுமணி ஆனபோதுஇ வழக்கம்போல டாக்டரின் கார் அந்த வழியே வந்தது. பாச்சன் சாலையின் நடுவில் போய் நின்றிருந்தான். கார் நின்றது. பாச்சன் டாக்டரிடம் தன்னுடைய வீட்டுக்கு வரும்படி கெஞ்சினான். பதைபதைப்பான குரலில் அவன் சொன்னான்:

""ஒரு தாயையும் ஒரு குழந்தையையும்... ஐயா நீங்கதான் காப்பாத்தணும்.''

மனமே இல்லாமல் டாக்டர் காரை விட்டு இறங்கி பாச்சனின் வீட்டை நோக்கி நடந்தார். வெளியே நின்றவாறு உள்ளே எட்டிப் பார்த்தார். ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டார். கடைசியில் சொன்னார்:

""நாளைக்கு மருத்துவமனைக்குக் கொண்டு வா. பார்க்கலாம்.''

அவர் சாலையை நோக்கி நடந்தார். பாச்சன் அவருக்குப் பின்னால் ஓடினான்.

""அய்யாஇ காப்பாத்துங்க.''

""நாளைக்கு மருத்துவமனைக்கு வா.'' டாக்டர் அலட்சியமாக சொன்னார்.

""நாளைக்கு...'' முழுமையாகக் கூறி முடிப்பதற்குள் பாச்சன் தேம்பித் தேம்பி அழுதான்.

""இறக்கலைன்னாஇ அங்கே கொண்டு வா.'' அவர் காரில் ஏறினார்.

""அய்யாஇ காப்பாத்துங்க. நாங்க ஏழைங்க...''

""நான் பணம் செலவழிச்சு படிச்சிருக்கேன்.'' நகர்ந்து கொண்டிருந்த காரில் இருந்தவாறு டாக்டர் சொன்னார்.

""அய்யா... பணத்தைவிட மனிதன் மதிப்புள்ளவன் இல்லியா?'' பாச்சன் சொன்னான்.

டாக்டரின் காதில் அது விழுந்ததோ என்னவோ! கார் வேகமாகப் பாய்ந்தோடியது.

மறுநாள் காலையில் தன்னுடைய கார் அந்த வழியே வந்தபோதுஇ பாச்சனின் வீட்டுக்கு முன்னால் சோகத்துடன் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை டாக்டர் பார்த்தார். ஓட்டுநர் சொன்னான்.

""இறந்துட்டா போல இருக்கு...''

""ம்...'' டாக்டர் அலட்சியமாக முனகினார்.

ஐந்தாறு மாதங்கள் கடந்தன. டாக்டர் தினமும்இ நான்கு முறை அந்த வழியே பயணம் செய்வார். அவர் அந்த மண் வீட்டைப் பார்ப்பதேயில்லை. அதைப் பற்றி அவர் நினைப்பதுமில்லை. ஆனால்இ அந்தக் கார் அந்த வழியே போகும்போதெல்லாம் அந்த மண் வீட்டிலிருந்த இரண்டு கண்கள் அந்தக் காரை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும்.

அன்று அந்த கார் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்தவுடன்இ பாச்சனும் அங்கு ஓடி வந்தான். நனைந்து போய்இ பதைபதைப்பு குடிகொள்ளஇ தோல் பையைக் கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த டாக்டரையே அவன் உற்றுப் பார்த்தான். முன் பணமாக இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு அவன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று அம்மிணி படுத்து இறந்த கட்டிலையே பார்த்தவாறு நின்றான். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவன் வெளியே வந்தான். தெற்குப் பக்கம் இருந்த குதிரைத் தொழுவத் திற்குள் நுழைந்தான். அவன் குதிரையின் முதுகைத் தட்டிவிட்டுஇ அதன் முகத்தை வருடியவாறு மெதுவான குரலில் அழைத்தான்.

""குட்டாஇ மகனே!''

குதிரை தலையை ஆட்டி அவன் அழைப்பதைக் கேட்டது. அவன் குதிரையை அவிழ்த்துக் கொண்டு வந்து வண்டியில் பூட்டினான். சாலையிலிருந்த டாக்டரின் பரபரப்பு கலந்த குரல் கேட்டது.

""சீக்கிரம்... சீக்கிரம்...''

பாச்சன் அதைக் கேட்டது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அருகிலிருந்த பலா மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டுஇ அவன் பீடியை இழுத்தான்.

""என்ன இவ்வளவு தாமதம்?''

""ம்...?'' பாச்சன் முனகியவாறு கேட்டான். அவன் டாக்டரை ஓரக் கண்ணால் பார்த்தான். அந்த கண்ணோரத்தில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது.

""பணம் குறைவுன்னு நினைச்சு தயங்குறியா? அஞ்சு ரூபா அதிகமா தர்றேன். சீக்கிரமா வண்டியை எடுத்துட்டு வா...''

""ம்...'' பாச்சன் பற்களைக் கடித்தான். அவன் குதிரையைப் பிடித்துக்கொண்டு சாலைக்கு வந்தான்.

டாக்டர் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை அவனிடம் நீட்டினார். அவன் அதையும் வாங்கி தன்னுடைய இடுப்பில் சொருகிக் கொண்டான்.

டாக்டர் தோல் பையைக் கையில் எடுத்துக் கொண்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார். பாச்சன் வண்டியின் முன் பக்கம் இருந்த பெட்டிமீது போய் உட்கார்ந்தான்.

""சீக்கிரம்... சீக்கிரமா போகணும்.'' டாக்டர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு முன்னால் பார்த்துச் சொன்னார்.

பாச்சன் ஓரக் கண்ணால் டாக்டரைப் பார்த்தான். அப்போதும் அந்த ஓரக் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டுதானிருந்தது. அவன் கடிவாளத்தைக் கையிலெடுத்தான். குதிரை மெதுவாக நடக்க ஆரம்பித்தது.

""பறக்கட்டும்... குதிரை வேகமா பறக்கட்டும்...'' டாக்டர் முன்னால் பார்த்து படபடத்தார்.

""அப்படி என்ன அவசரம் அய்யா? யாராவது சாகுற நிலைமையில் இருக்காங்களா என்ன?''

""என் மனைவியோட நிலைமை ரொம்பவும் ஆபத்தா இருக்கு.''

""அய்யாஇ உங்க மனைவியா?'' பாச்சன் தன்னுடைய உதட்டில் தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

""ரெண்டு முறை ரத்த வாந்தி எடுத்தாச்சு. எனக்கு அந்த விஷயம் தெரிஞ்சு ஒரு மணி நேரமாச்சு. அதற்குப் பிறகும் ரத்த வாந்தி எடுத்திருப்பா!''

""அப்படின்னா நிலைமை ரொம்பவும் மோசமாயிருக்குமே அய்யா?'' அதற்குப் பிறகும் தோன்றிய சிரிப்பை அடக்கியவாறு அவன் கேட்டான்:

""நீங்கதான் அம்மாவுக்கு மருத்துவம் பார்க்குறீங்களா அய்யா?''

""பிறகு யாரு?'' டாக்டருக்கு கோபம் வந்தது. முன் பக்கமாகப் பார்த்துக் கொண்டு அவர் கேட்டார்:
""நான் ஒரு டாக்டர்ன்ற விஷயம் உனக்குத் தெரியாதா?''

""தெரியுமே! அதனாலதான் கேட்டேன். நீங்க மருத்துவம் பார்த்தா அம்மா அதுக்கு பணம் தருவாங்களா!''

""திமிர்த்தனமா பேசாதடா!''

""அய்யாஇ நீங்க பணம் தந்துதானே படிச்சிருக்கீங்க? நிலைமை அப்படி இருக்குறப்போ சும்மா மருத்துவம் பார்க்க முடியுமா?''

""அந்த விஷயத்தை நான் பார்த்துக்குவேன். நீ குதிரையை வேகமா ஓட்ட வழி பார்த்தா போதும்.''

""அய்யாஇ உங்களை மாதிரிதான் இந்தக் குதிரையும். சாகுற நிலைமையில ஆள் இருக்காங்கன்னு சொன்னாகூட இது ஓடாது!'

""உன் கையில சாட்டை இல்லியா?''

""நான் தீவனம் போட்டு வளர்க்குற குதிரை இது. இதை என்னால் அடிக்க முடியாது அய்யா!''

""அப்படின்னா இப்படியே மெதுவா போய்க் கொண்டிருந்தா எப்படி?''

""இப்படிப் போனாஇ எப்போ போய்ச் சேர முடியுமோஇ அப்போ போய்ச் சேருவோம்.''

டாக்டருக்கு அதைக் கேட்டு கோபம் வந்தது. அவர் கத்தினார்.

""டேய்இ என் மனைவி ஆபத்தான நிலைமையில படுத்திருக்கா. நீ வண்டியை வேகமாக ஓட்டுறியா? இல்லியா?''

""பேசாம உட்காருங்கஇ அய்யா. என் பொண்டாட்டிக்கும் இதே மாதிரி ஆபத்து உண்டாச்சு. அப்போ ஒரு டாக்டர் வந்து பார்த்துட்டு சொன்னாரு- அவர் பணம் தந்து படிச்சதா. என் பொண்டாட்டி இறந்துட்டா. நான் இப்பவும் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன்.''

தலையில் அடி விழுந்ததைப் போல டாக்டர் சிலையென உட்கார்ந்திருந்தார். அந்த இரவில் ஒரு மனிதன் சாலையின் மத்தியில் நின்று கொண்டு தன்னுடைய காரை நிறுத்தியதையும்இ தான் அந்த மண்ணால் ஆன வீட்டுக்குச் சென்று செயலற்ற நிலையில் படுத்திருந்த நோயாளியைப் பார்த்தையும் அவர் அப்போது மனதில் நினைத்துப் பார்த்தார். அன்று தேம்பித் தேம்பி அழுது கொண்டு காப்பாற்றும்படி கெஞ்சிய அந்தக் கணவன்தான் இப்போது கடிவாளத்தையும் சாட்டையையும் கையில் பிடித்துக்கொண்டு தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறான் என்பதை அவர் தெரிந்து கொண்டார். அவன் அவரை பழிக்குப் பழி வாங்குகிறானா என்ன? அப்படியென்றால்... அப்படியென்றால்...

ஒவ்வொரு நிமிடமும் ஒரு பிரச்சினையாக நகர்ந்து கொண்டிருந்தது. அவருடைய மனைவியின் வாழ்வுஇ மரணம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. அவர் கலக்கத்துடன் சொன்னார்.

""வண்டியை வேகமா ஓட்டினாஇ உனக்கு நான் பத்து ரூபா அதிகமா தர்றேன்.'' அவர் தன் பர்ஸைத் திறந்து நோட்டை எடுத்தார்.

பாச்சன் அந்த ரூபாய் நோட்டையும் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டான். அவன் கடிவாளத்தைச் சிலுப்பினான். குதிரை இரண்டு மூன்று முறை குதித்தது. வண்டி எங்கே கீழே விழுந்து விடுமோ என்பது மாதிரி இருந்தது. பாச்சன் சொன்னான்:

""சொன்னபடி கேட்காத குதிரை இது.''

""என்னைக் காப்பாத்து.'' டாக்டர் ஒரு தவறு செய்த மனிதனைப் போல கெஞ்சினார். அவருடைய கண்கள் நீரால் நிறைந்தது. தடுமாறிய குரலில் அவர் சொன்னார்:

""அவ செத்துப் போயிட்டா என் வாழ்க்கையே அவ்வளவுதான். நாலு பிள்ளைகளோட தாய் அவள். அவள் இறந்துட்டா...'' அதற்கு மேல் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப்போல அவர் தவியாய்த் தவித்தார்.

பாச்சன் சிறிது நேரம் தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தான். அவன் டாக்டருக்குத் தெரியாமல் தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டுஇ தலையை உயர்த்தினான். அடுத்த நிமிடம் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தான். சாட்டையை வீசினான். குதிரை ஓட ஆரம்பித்தது.

மிகப் பெரியஇ மரங்களடர்ந்த அந்த மலையின் மீது குதிரை வேகமாக ஓடியது. அந்த பெரிய வீட்டுக்கு முன்னால் அது திடீரென்று நின்றது. டாக்டர் தோல் பையை எடுத்துக்கொண்டு வண்டியிலிருந்து குதித்து இறங்கினார். அவர் வீட்டுக்குள் வேகமாக ஓடினார்.

பாச்சன் வண்டியை விட்டு இறங்கினான். குதிரையின் முதுகை அவன் தட்டிக் கொடுத்தான். அதன் முகத்தைக் கையால் தடவினான்.

""குட்டாஇ மகனே!''

குதிரை மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு தலையை ஆட்டியது. பாச்சன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அவன் அந்தப் பெரிய வீட்டின் விசாலமான வராந்தாவில் போய் உட்கார்ந்தான்.

உள்ளே சத்தமும் பேச்சும் கட்டளைகளும் கேட்டன. சிறிது நேரத்தில் படு அமைதி நிலவியது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த ஒரு வேலைக்காரனிடம் பாச்சன் கேட்டான்:

""எப்படி இருக்காங்க?''

""ஊசி போட்டிருக்கு. இப்போ பரவாயில்லைன்னு அய்யா சொன்னாரு.''

உள்ளே டாக்டரின் உரத்த குரல் கேட்டது.

""இந்த அறையில யாரும் இருக்க வேண்டாம். தூங்கட்டும்.''

பாச்சன் இடுப்பில் சொருகியிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தான். அவன் அவற்றை விரித்துஇ எண்ணினான். அவற்றை வராந்தாவில் வைத்தான். முற்றத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுக்கு மேலே வைத்தான். அடுத்த நிமிடம் அவன் ஓடிச் சென்று வேகமாக வண்டியில் ஏறினான். கடிவாளத்தைக் கையில் எடுத்தான். சாட்டையை வீசினான்.

குதிரை தான் வந்த வழியில் திரும்பவும் ஓட ஆரம்பித்தது. டாக்டர் வராந்தாவிற்கு வந்தார். அவர் கேட்டார்:

""அந்த வண்டிக்காரன் போயிட்டானா?''

""அந்த ரூபாய் நோட்டுகளை அங்கேயே வச்சிட்டு அந்த ஆளு வண்டியில ஏறி போயிட்டான்.'' வேலைக்காரன் சொன்னான்.

ரூபாய் நோட்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டு டாக்டர் வண்டிக்குப் பின்னால் ஓடினார்.

""நில்லு... நில்லு... இந்த பணத்தை எடுத்துட்டுப் போ...''

பாச்சன் திரும்பிப் பார்த்தான். அவன் உரத்த குரலில் சொன்னான்:

""பணத்தைவிட மதிப்புள்ளவன் மனிதன்.'' மலைச் சரிவில் விரிந்து கிடந்த வயலிலிருந்து மரங்களை வருடிக்கொண்டு வந்த காற்றில் அந்த வார்த்தைகள் பரவி எதிரொலித்தன

nanri nakkheeran.in

No comments: