பழைய புகைப்படம் - அ.முத்துலிங்கம்

.
அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான் திடுக்கிட்டு நின்றேன். என் மனைவி கன்னத்தை மேசையில் வைத்து படுத்துக் கொண்டிருந்தார். முதல் பார்வையில் அழுகிறார் என்று நினைத்தேன். அன்று காலை எழும்பியதிலிருந்து நான் ஒரு குற்றமும் செய்யத் தொடங்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பதறியபடி 'என்னஇ என்ன?' என்றேன். 'ஒன்றுமில்லை. கம்புயூட்டர் திரையை பார்க்கிறேன்' என்றார். 'அதை ஏன் படுத்திருந்து பார்க்கிறீர்?' என்று கேட்டேன். இங்கிலாந்திலிருந்து அவருடைய அண்ணன் ஒரு பழைய புகைப்படம் அனுப்பியிருந்தார். அது தலைகீழாக வந்திருந்தது. அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
அது என் மனைவியின் சின்ன வயதுப் புகைப்படம். அவரும் அவருடைய அண்ணனும் மட்டுமே நிற்கும் படம். என் மனைவிக்கு அப்போது நாலு வயதிருக்கும். கையிலிருந்த எதையோ யாரோ பறித்துவிட்டதுபோல கோபமும் சோகமும் கலந்த முகம். கண்ணீர் எந்த நேரமும் வெடித்து வரலாம். அதற்கு முன்னர் புகைப்படக்காரர் தந்திரமாக படம் பிடித்துவிட்டார். யாரும் ஒன்றையும் பறிக்கவில்லை. புகைப்படக்காரர் கறுப்பு துணிக்குள் புகுந்தபோது தான் பயந்து போய்விட்டதாக மனைவி கூறினார். அதை நம்பலாம் என்று முடிவெடுத்தேன்.
என்னுடைய சின்ன வயதுப் படம் என்னிடம் ஒன்றுகூட இல்லை. எங்கள் ஊரில் மற்றைய வீட்டுச் சுவர்களில் புகைப்படங்கள் தொங்குவதைப் பார்த்திருக்கிறேன். புகைப்படம் என்ற பொருளே எங்கள் வீட்டில் கிடையாது. என்னைச் சிறுவயதில் எடுத்த படம் ஒன்று இருந்தது. ஆனால் அது எங்கேயோ எப்போதோ தொலைந்துபோய்விட்டது என்றார்கள். வீட்டுச் சுவரில் காலண்டரில் வந்த முருகன்இ பிள்ளையார் படங்கள் தொங்கும். தேதிகள் கிழிந்த பிறகும் வீட்டில் படங்கள் அகற்றப்படுவதில்லை. நேருஇ காந்திஇ சுபாஷ் சந்திரபோஸ் படங்களும் இருந்தன. இவர்களுக்கு சமமாக சாந்தா ஆப்தே என்ற ஒரு நடிகையின் படமும் சுவரில் தொங்கியது. இது எப்படி அங்கே வந்து சேர்ந்தது என்பது தெரியாது. சாய்ந்துபோய் அழகாக இருப்பார். பின்னாளில் இவர்தான் முதன்முதல் தமிழ் படத்தில் நடித்த ஹிந்தி நடிகை என்பதை அறிந்து கொண்டேன். சாவித்திரி படத்தில் இவர் சாவித்திரியாக நடிக்க எம்.எஸ்.சுப்புலட்சுமி நாரதராக நடித்தாராம். மற்றப் படங்கள் போனபின்னரும் இந்தப் படம் மட்டும் வெகுகாலமாக அதே சுவரில் அதே ஆணியில் தொங்கியது.
ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது. என்னுடைய மனைவியின் சின்ன வயதுப் படம் அகப்பட்டதுபோல என்னுடையதும் ஒன்று கிடைத்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்தேன். நான் பள்ளியில் படித்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு நாடகம் போட்டார்கள். அதில் நடித்தபோது எனக்கு எட்டு வயது இருக்கும். நான் படித்த காலத்தில் மேலே கூரையும் கீழே மணலும் பக்கத்தில் வேலியுமாக வகுப்பு அறை இருந்தது. நாங்கள் நாடகத்தை கொழும்புஇ கண்டிஇ மாத்தளை ஆகிய இடங்களில் மேடையேற்றி நிதி சேகரித்தோம். அந்தக் காசில்தான் பள்ளிக்கூட புதுக் கட்டிடம் எழும்பியது.  நாடகக் குழுவை அப்போது ஒரு படம் பிடித்திருந்தார்கள். ஆனால் அந்தப் படத்தை யாரும் எனக்கு காட்டியது கிடையாது.
நான் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் நேரத்துக்கு அம்மா வாசலில் காத்து நிற்பார். கொஞ்சம் பிந்தினாலும் துடித்துப் போய்விடுவார். தூரத்தில் அம்மாவை கண்டதும் ஓடத்துவங்குவேன். அம்மாவை கட்டிப்பிடித்ததும் நான் அப்பொழுதுதான் பிறந்ததுபோல அவர் என் உடம்பு முழுவதையும் தடவிப் பார்ப்பார். அவர் கேட்கும் முதல் கேள்வி 'ஆராவது அடித்தார்களா?' என்பதுதான். அந்தக் காலத்தில் பள்ளிக்கு போய்வந்தால் வீட்டுக்கு ஏதாவது காயத்துடன் திரும்பி வருவதுதான் வழக்கம். வாத்தியார்மார் அடிப்பார்கள். அல்லது கூடப்படிக்கும் பெடியன்கள் என்னைப்போட்டு மிதிப்பார்கள். இது இரண்டும் நடக்காவிட்டால் நானாகவே விழுந்து முழங்காலையோஇ முழங்கையையோ உடைத்துவிடுவேன். ஒருநாள் நான் பிந்தி வந்தபோது அம்மா பாதி தூரம் ஓடிவந்துவிட்டார். அன்றைக்குத்தான் என்னை நாடகக் குழுவுக்கு தேர்வு செய்திருந்தார்கள். அந்த செய்தியை சொன்னதும் அம்மா தானே தெரிவு செய்யப்பட்டதுபோல எனக்காக மகிழ்ந்தார்.
நாடகக் குழுவை புகைப்படம் எடுத்த அன்று நான் பட்ட அவதியும் மறக்க முடியாதது. இரவிரவாக நித்திரை வரவில்லை. வெள்ளைக் கால்சட்டையை தலையணையின் கீழ் மடித்து வைத்து படுத்திருந்தேன். அரைக் கை வெள்ளைச் சட்டை வெள்ளாவி வைத்து நீலம் போட்டு வெளுத்து சிரட்டைக்கரி ஸ்திரிப்பெட்டியால் தேய்த்து தயாராகவிருந்தது. கஞ்சிபோட்டு மொடமொடவென்று வாசனையோடு இருந்த சேர்ட்டை அம்மா பெட்டகத்துக்குள் இருந்து எடுத்து தந்தபோது பிரித்தேன். அது பேப்பர் கிழிவது போன்ற சத்தத்துடன் பிரிந்தது. கால்சட்டைக்குள்  சேர்ட்டை நுழைத்துஇ பொத்தான்களை ஒவ்வொன்றாகப் போட்டுஇ தயாரானேன். அம்மா கன்ன உச்சி பிரித்து தலைசீவி விட்டார். படம் எடுக்க வரச்சொன்ன நேரத்துக்கு ஒரு மணி முன்னதாகவே சென்று காத்திருந்தேன். முதல் வரிசையில் உயரமானவர்கள் நின்றார்கள். பின் வரிசையில் வாங்குபோட்டு ஏறி நின்றார்கள். நான் கடைசி வரிசை. மேசைபோட்டு அதற்குமேல் வாங்குபோட்டு அதன்மீது ஏறி நின்ற சிறுவர்களுடன் நானும் நின்றேன். எனக்கு பக்கத்தில் நின்றவன் 'மூச்சுவிடாதே' என்றான். ஒரு முட்டாளுக்கும் அவன் முட்டாள்தனத்துக்கும் இடையில் நான் குறுக்கிடவில்லை. இடது பக்கத்தில் முதலில் நின்றது நான்தான்.
மூன்றுகால் வைத்த காமிராப் பெட்டியால் கறுப்புத்துணி மூடிய ஓர் உருவம் எங்களை படம்பிடிக்க ஆயத்தம் செய்தது. நாங்கள் எல்லோரும் தயாராகி சிரித்த சமயத்தில் சூரியன் முகிலுக்குள் மறைந்துவிட்டான். இன்னுமொருமுறை சிரிக்கச் சொன்னார்கள். பலமுறை இப்படி ஆயத்தமாகிஇ சிரித்து படம் எடுக்கும் சமயம் சூரியன் முகிலுக்குள் புகுந்துவிடுவான். பல நிமிடம் காத்திருந்து பல தடவை சிரித்து அன்று ஒரு மாதிரி படம் எடுத்து முடிந்தது. அதில் என்னுடைய இரண்டு அண்ணைமாரும் வேஷம் போட்டுக்கொண்டு நின்றார்கள். எங்கள் குடும்பத்தில் இருந்த மூன்று பேருடன் இன்னும் 23 பேரும் அந்தப் படத்தில் இருந்தார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர்இ ரொறொன்ரோவில் நடந்த ஒரு விருந்தில் என்னைச் சிறுவயதில் படிப்பித்த சுகிர்தம் ரீச்சரை எதிர்பாராமல் சந்தித்தேன். அப்போது பள்ளிக்கூடத்தில் நாங்கள் போட்ட நாடகம் பற்றி பேச்சு வந்தது. நாடகத்தை இயக்கியவர்களில் இவர் முக்கியமானவர். கடந்த வாரம் என் வீட்டுக்கு முன்னறிவித்தல் ஏதும் இல்லாமல் ரீச்சர் வந்திருந்தார். வாசலில் இருந்த ஆறு படிகளையும் துள்ளிக் கடந்தார். இது நம்பக்கூடியதாக இல்லை. அவர் சொல்லியிருந்தால் நானே அவர் வீட்டுக்கு போயிருப்பேன். ஏனென்றால் சுகிர்தம் ரீச்சருக்கு  வயது 89. என்னை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.  என் ஆசிரியர்களில் இவரை எனக்கு பிடிக்கும். நான் அடிவாங்குவதற்கு தகுதியான பல காரியங்களைச் செய்திருந்தாலும் இவர் என்னை அடித்ததில்லை. இவர் வந்தபோது பெரிதாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் கொண்டுவந்து என்னிடம் தந்தார். பள்ளிக்கூட நாடகக் குழுவினருடன் நான் நிற்கும் படம். என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பின்னர் அந்தப் படம் என்னைத்தேடி வந்திருந்தது.
என்னுடைய ஆசிரியை படத்திலே இருந்தவர்களின் பெயர்களையும் அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள்இ எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்களையும் சொன்னார். அவருடைய ஞாபகசக்தி என்னை பயமுறுத்தியது. நடுவிலே ஓர் ஆறு வயதுச் சிறுமியும் நின்றாள். அவள்தான் 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடலுக்கு அபிநயம் பிடித்தவள். கொக்குவில் கிராமம் முழுக்க அன்று அதிசயமாக கண்டு களித்த நடனம் அது. இவளுக்கு பக்கத்தில் நின்ற சிறுமிக்கு 11-12 வயதிருக்கும். இப்பொழுது அவரைப் படத்தில் பார்த்தபோதும் எனக்கு நடுங்கியது. பல இரவுகள் இவரால் நித்திரை வராமல் தவித்திருக்கிறேன். இவர் ஒரு மாலையை எடுத்துக்கொண்டு வந்து என் கழுத்திலே சூட்டவேண்டும். நான்தான் காந்தி சிலை. குதிக்காலால் தரையை அடித்து அடித்து மேடையில் முன்னேறுவார். எனக்கு முது எலும்புக்குருத்து குளிரும். அடுத்தநாள் வகுப்பில் என்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு எப்படி முகம் கொடுப்பேன் என்று யோசனை ஓடும். நான் அந்த சமயம் அடைந்த கூச்சமும் பரிதவிப்பும் வேதனையும் இப்பவும் மறக்கமுடியாதது.
கறுப்புக்கரை வைத்து வெள்ளை சேலை உடுத்தியிருப்பவர்தான் என்னுடைய இரண்டாவது அண்ணை. அர்ஜுனனுடைய மனைவி சுபத்திரையாக நடித்தவர். இவருக்கு வேடம் போடுவதற்காக இரண்டுபேர்இ மூன்றுமணி நேரம் ஒரு முழு பவுடர் டின்னுடன் மினக்கெட்டார்கள். அர்ஜுன ராசாவின் மனைவி ஒரு ராணியாகத்தானே இருக்கவேண்டும். இவரிடம் ஓர் அரச லட்சண முகபாவம் வரவே இல்லை. எங்கள் வீட்டுக்கு தலையிலே கூடையை வைத்து கத்தரிக்காய் காவிக்கொண்டு வந்து விற்கும் மனுசிபோலவே தோற்றமளித்தார். என்னுடைய இரண்டாவது அண்ணைதான் சுந்தரி. அவர் இரவல் வாங்கிய பாவாடை சட்டையில்  நீண்ட பின்னலுடன் இருந்தார். கதையின் படி இவரை துரியோதனின் மகன் லக்குவனுக்கு நிச்சயம் செய்தாகிவிட்டது. ஆனால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுமேல் சுந்தரிக்கு காதல். அபிமன்யு இவரை திருமணத்துக்கு முன்னர் தந்திரமாக கடத்திப்போவதுதான் கதை. என்னுடைய அண்ணை பூமிசாஸ்திர பாடத்தில் பெயிலான  நாலாம் வகுப்பு  மாணவிபோல முகத்தை நீட்டி வைத்துக் கொண்டிருந்தார். ஓர் அரசகுமாரன் வந்து குதிரையில் தூக்கிக்கொண்டு போகப்போகிறானே என்று ஒருவித துள்ளலோ துடிப்போ மகிழ்ச்சியோ முகத்தில் இல்லை.
நாடக தினமன்று சுந்தரி பூங்காவனத்தில் சுழன்று சுழன்று ஆடியபடியே மேடைக்கு வரவேண்டும். ஆனால் மேடையில் தோன்றுவதற்கு சரியாக ஒரு நிமிடம் முன்பு அண்ணை மனதை மாற்றிவிட்டார். திரை இழுத்தபிறகுதான் இப்படி மனதை மாற்றவேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கிறது. அக்காவிடம் இருந்த அத்தனை நகைகளையும் அணிந்துஇ இரவல் ஒட்டியாணத்தை கட்டிக்கொண்டுஇ இடுப்பிலே கையை வைத்து அடிச்சொண்டை கடித்தபடி 'மாட்டேன்' என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார். கோபத்தில் கதவை சாத்துவதுபோல அமிர்தலிங்கம் மாஸ்ரர் கன்னத்தில் ஓர் அடி ஓங்கி விட்டார். வழக்கத்தில் இரண்டு தரம் சுழன்று மேடையில் தோன்றும் அண்ணை அன்று மூன்றுதரம் சுழன்றபடி மேடையில் தோன்றினார். நாடகம் குறைவில்லாமல் நடந்து முடிந்தது.
சுகிர்தம் ரீச்சர் என்வீட்டுக்கு கொண்டுவந்து தந்த அந்த பொக்கிஷமான படத்தை முதலில் என் மனைவியிடம் காட்டி என்னை கண்டுபிடிக்கச் சொன்னேன். இந்தியாவை கண்டுபிடிக்க வெளிக்கிட்ட மகெல்லனின் கப்பல்போல மனைவியின் விரல் படத்தில் ஊர்ந்து ஊர்ந்து என்னைத் தேடியது. திடீரென்று ஏதோ வெளிச்சம் வந்ததுபோல யோசிக்காமல் என் அண்ணையை தொட்டுக் காட்டி என்னை அவமதித்தார். நான் 'உம்முடைய சின்ன வயதுப் படத்தில் உம்மை டக்கென்று காட்டினேன்' என்று அவரிடம் சொன்னேன். அவர் பதிலுக்கு 'அதில் நின்றது இரண்டு பேர்தானே' என்றார். சரி என்று என் மகனிடம் கேட்டேன். அவனுக்காவது என் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறதா என்று பார்க்கலாம். அவன் முற்றிலுமே தொடர்பு இல்லாமல் பரத நாட்டிய உடுப்பு அணிந்துஇ உதட்டுச் சாயம் பூசி  நின்ற பெண்ணைக் காட்டினான். மிஞ்சியது என்மகள்தான். அவளாவது சரியாக கண்டுபிடிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வெள்ளைக் கால் சட்டையும்இ வெள்ளை சேர்ட்டும் அணிந்திருந்த பையனை சுட்டிக்காட்டினாள். அவன் எனக்கு பக்கத்தில் மூச்சு விடாமல் நின்றவன். அவன் நானில்லை.
பிறகு அது ஒரு விளையாட்டு ஆகியது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் அந்தப் படத்தில் நான் யார் எனச் சுட்டிக்காட்டச் சொல்வேன். சிலர் ஆண்வேடமிட்ட பெண்ணைச் சுட்டிக்காட்டினர். சிலர் பெண்வேடமிட்ட ஆணைச் சுட்டிக்காட்டினர். சிலர் பெண்வேடமிட்ட பெண்ணையே தொட்டுக்காட்டினர். ஒருவராவது என்னை சரியாக அடையாளம் காட்டவில்லை. எனக்கு துக்கமாகவிருந்தது. மகிழ்ச்சியும் வந்துபோனது. ஒருவர் 28வது முயற்சியில் என்னைக் கண்டுபிடித்தார். படத்தில் இருந்தது 26 பேர்தான்.
ஒருவரும் பக்கத்தில் இல்லாத நேரத்தில் நான் அந்தப் பழைய படத்தைப் பார்த்துக்கொண்டு வெகுநேரம் இருப்பேன். முதல் நாளிரவு தலையணையின் கீழ் மடித்துவைத்து அணிந்த வெள்ளைக் கால்சட்டை படத்தில் ஒரு துளியும் தெரியவில்லை. சிரட்டைக்கரியில் சூடான ஸ்திரிப்பெட்டியில் உரஞ்சி மடித்த வெள்ளை சேர்ட்டு கைமுனை வாள் போல கூராக நின்றது. அம்மா சீவிய கன்ன உச்சி கலையாமல் இருந்தது. கிராமத்து சூரியன் முகிலை விட்டு வெளியே வந்த கண நேரத்தில் புகைப்படக்காரர் படத்தை பிடித்திருந்தார். கடைசி நிரையில் மேசை வைத்துஇ அதற்குமேல் வாங்கு வைத்து ஏறி நின்ற அந்தச் சிறுவர்களை உற்றுப் பார்த்தேன். இடதுபக்க ஓரத்தில் நின்ற சிறுவனின் கண்களில் நிறைய கனவுகள் தெரிந்தன. அதில் பாதியாவது நிறைவேறியதோ என்னவோ
 Nanri: amuttu.com

No comments: