குப்பிழான் கிராமம்

.

                                 -கலாநிதி க. கணேசலிங்கம்

குப்பிழாய் செடி


அழகும் வளமும் மிகுந்த அமைதியான கிராமம் குப்பிழான். அதன் செம்மண் நிலமும் அதில் செழித்து வளர்ந்துள்ள மரஞ்செடிகளும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கும் தோட்டங்களும் காண்பவர் மனத்தைக் கவர்வன. இயற்கை எழில் கொஞ்சும் குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சியும் வரலாறும் தனிச்சிறப்புடையன.

குப்பிழான் என்னும் பெயர்
நீர் நிலைகளின் அருகிலும் ஈர நிலத்திலும் வளர்வது குப்புழாய் என்னும் செடி. இச்செடி மருத்துவக் குணம் கொண்டது. வெட்டுக் காயம், பொக்களம், எலும்பு முறிவு போன்றவற்றிற்கு இது பலனளிக்கும் என்பதை நாட்டு வைத்தியர் அறிந்திருந்தனர். மாடுகளின் தீனியாகப் பயன்படும் இதன் இலையை வறுத்து தேங்காய்த் துருவலுடன் கலந்து மனிதரும் உண்பது முன்னர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டது.

தாவரவியலில் (in Botany) குப்புழாய்ச் செடி Vernonia zeylanica என்று அழைக்கப்படுகிறது. இச்செடி வளர்ந்த ஊர் முன்னர் குப்புழான் எனப்பட்டது. பின்னர் இப்பெயர் திரிந்து குப்பிழான் என்றும் குப்பிளான் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னைய நிலை
பழம் கிராமமான குப்பிழான் செழிப்புள்ள தோட்ட நிலங்களுடன் வளம் மிக்கு தனிச்சிறப்புடன் விளங்கியது. ஆயினும் அது நீண்ட காலமாகத் தன் தனித் தன்மையைக் காட்டமுடியாத நிலையில் இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. தனக்கென்று தனிக் கிராமசேவகர் இன்றி, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மயிலிட்டி தெற்கு, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. காங்கேசன்துறை, கோப்பாய், உடுவில் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுள் கூறுபோடப்பட்டிருந்தது.

இத்தகைய நிலைமையால் பிற கிராமத்தவர் போல் குப்பிழான் மக்களால் பயனும் வசதியும் கூடிய வாழ்வைப் பெறமுடியவில்லை. சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாண முடியவில்லை. மற்றைய கிராமத்தவர் அனுபவிக்கும் சாதாரண வசதிகளும் வாய்ப்புக்களும கூட மக்களுக்குக் கிட்டவில்லை.

இவற்றை உணர்ந்த குப்பிழான் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், குப்பிழானைத் தனிக் கிராமமாக்கும் முயற்சியில் 1950-ம் ஆண்டளவில் ஈடுபட்டனர். இதனைக் காரணமாகக் கொண்டு குப்பிழான் வெளியூர் வாசிகள் சங்கம் போன்றவை தோன்றின.

கிராமோதயம்

1955-ல் குப்பிழான் மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு, குப்பிழான் தனிக்கிராமமாக வேண்டுமெனக் கோரும் விண்ணப்பத்தை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு. நடேசன், அரசாங்க அதிபர் ம. ஸ்ரீகாந்தா,

உள்நாட்டமைச்சர் இரத்நாயக்கா ஆகியோருக்கு அனுப்பினர். விண்ணப்பம் அனுப்பியதோடன்றி தொடர்புடைய அமைச்சர் முதல் கிராமசேவகர் வரை அனைவரையும் நேரில் கண்டு தமது கிராமம் தனிக் கிராமமாக வேண்டியதன் நியாயத்தை விளக்கினர். இங்ஙனம் விளக்கியவரில் பொ. சுந்தரசர்மா, கோ. வைத்திலிங்கம், ந. கந்தையா, த. தருமலிங்கம், க. சின்னப்பு, அ. நல்லையா, த. ஐயாத்துரை, அ. சங்கரப்பிள்ளை, கு. பொன்னம்பலம், சு. சொக்கலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

இவர்களின் முயற்சியால் 1956-ம் ஆண்டு குப்பிழான் கிராம முன்னேற்றச் சங்கம் அமைக்கப்பட்டது. குப்பிழான் தனிக்கிராமமாவதற்கு இச்சங்கம் மூலமும் ஆவன செய்ய முடிந்தது. குப்பிழான் கிராமப் படமும் தயாரிக்கப்பட்டது. இறுதியில் குப்பிழான் தனிக்கிராமமாகும் அறிவித்தலுடனான அரசின் கடிதம் 09-11-1961ல் வந்தது. ஆயினும் தனிக் கிராமசேவகரற்ற நிலை பின்னும் தொடர்ந்தது.

மேலும் முயற்சிகள் தொடர்ந்தன. இறுதியில் தனிக் கிராமசேவகரும் நியமிக்கப்பட்டார். இடையில் வந்த எத்தனையோ இடையூறுகளைத் தாண்டி இன்று குப்பிழான் தனிக்கிராமமாப் பொலிகிறது. இதற்கு உதவிய பெருமக்களில் தமிழர் தலைவர் செல்வநாயகமும் நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கமும் பெரும் பங்காற்றினர். இவர்களைக் குப்பிழான் மக்கள் என்றும் மறக்க முடியாது. குப்பிழான் தனிக்கிராமமாக உதிப்பதில் முன்னின்று உழைத்த ஊர்ப் பெருமக்கள் பலர். அவர்களில் முன்னிலை வகித்தவர் த. தருமலிங்கம் அவர்கள். கிராமத்தின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்து. அதன் வளர்ச்சியில் தனியிடம் பெறும் இப்பெருமகன் எம்முடன் இன்றும் வாழும் சான்றோன் ஆவர்.

வாழ்வும் கலையும்
குப்பிழான் மக்கள் பலர் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டவர்கள். உரிய காலத்தில் புகையிலை பயிரிடுதல் பரவலாக முன்னர் காணப்பட்டது. மின்சார வசதியற்ற நிலையில் துலாவைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து நீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். பொழுது புலரமுன்னரே துலாமிதிப்பவரும் பட்டை பிடித்து நீர் பாய்ச்சுபவரும் பயிருக்கு நீர் கட்டுபவரும் தமது பணிகளில் ஈடுபடத் தொடங்குவர். துலாமிதிப்பவர்கள் பாடிக்கொண்டே அதில் நடப்பார்கள். அவர்களின் பாடலில் தோய்ந்த இசை காற்றில் கலந்து பரவும்.

புகையிலைப் பயிர் விளையும் கிராமத்தில் புகையிலைச் சுருட்டுத் தொழில் குடிசைத்தொழிலாகத் திகழ்ந்தது. அத்தொழில் செய்வோர் குழுவிலிருக்கும் ஒருவர் விக்கிரமாதித்தன் கதை முதலிய கதைகளைப் படிக்க மற்றையோர் அதனைக் கேட்டுக்கொண்டே தொழிலில் ஈடுபடுவர். இப்படிப்பில் தனிச்சுவை இருக்கும்.

கோயில்கள் பல குப்பிழானில் உண்டு. குப்பிழானின் ஒரு பகுதியான கற்கரையில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம் பழைமையும் சிறப்பும் மிக்க பெருங்கோயில். திருவிழா நாட்களில் அயலூர் மக்களும் பெருந்திரளாக வந்து கூடிக் கும்பிடுவதைக் காணலாம். இராத் திருவிழாவின் பொழுது கதாப்பிரசங்கம் நடைபெறுதல் வழக்கம். ஐம்பது அறுபது ஆண்டுகளின் முன் இசை வல்லார் செல்லத்துரை என்பவர், இக்கோயிலில் கதாப்பிரசங்கம் செய்யக் கேட்டிருக்கிறேன். கணீரென்ற குரலில் பண்ணோடு பாடி அவர், ஆற்றும் காலாட்சேபம் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும்.

இக்கோயிலின் அருகிலிருக்கும் கோட்டார்பனை என்ற இடம் பனை மரங்களும் வடலியும் உள்ள குறிச்சி. இங்கே இரவு நேரங்களில் நாட்டுக்கூத்து, நாடகம் முதலியன நடைபெறும். சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, அரிச்சந்திரன், நல்லதங்காள் முதலியன புகழ்பெற்ற கூத்துகளாகவும் நாடகங்களாகவும் இடம்பெற்றன. இவற்றிலும் இசைவல்லார் செல்லத்துரை முக்கிய பங்கெடுப்பதுண்டு.

இசைவல்லார் செல்லத்துரை குப்பிழான் பெற்ற பெருமக்களில் ஒருவர். அந்தக் காலத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் இசை பயின்றார். புகழ் பெற்ற இசைமேதை தண்டபாணித்தேசிகருடன் படித்தவர் இவர்.

சித்தாந்த மேதை

குப்பிழானில் அறிஞர் பெருமக்களும் பலர் தோன்றினர். இவர்களில் முக்கியமானவர் செந்திநாதையர். தவத்திரு ஆறுமுகநாவலருக்கு உறுதுணையாக நின்று சைவத்தமிழ்ப்பணி செய்தவர் இவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். சைவம், சைவசித்தாந்தம் ஆகிய துறைகளில் இருபத்தைந்துக்கு மேல் அரிய நூல்களும், சைவத்துக்கு எதிரான அன்னிய மதத்தவரின் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து பல கண்டனங்களும் எழுதியவர். தமிழகத்தில் இருந்த காலங்களில் பாடசாலை ஆசிரியராகவும் பத்திரிகை நடத்தியும் அச்சுயந்திரம் நிறுவி நூல்கள் வெளியிட்டும் பல பணிகள் புரிந்தார்.

குப்பிழானில் பிறந்த செந்திநாதையர் பத்தாணடுகள் காசியில் இருந்து வேதாகம ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதனால் இவர் காசிவாசி செந்திநாதையர் என்று அழைக்கப்பட்டார். சைவசித்தாந்த மேதையாக விளங்கிய செந்திநாதையரைத் தமிழகம் கௌரவித்துப் போற்றியது.

காசிவாசி செந்திநாதையர் அவர்கள் 1848-ல் குப்பிழானில் பிறந்து, சைவத்துக்கும் தமிழுக்கும் அளப்பரிய பணிகளாற்றி, 'சைவசித்தாந்த ஞானபானு', 'சித்தாந்த சிகாமணி' போன்ற பட்டங்கள் பெற்று, 1924-ல் சிவபதமடைந்தார். கர்மயோகிபோல் பணிபுரிந்த செந்திநாதையர் 'செந்திநாதயோகி' என்றும் போற்றப்பட்டார்.

செந்திநாதையரைத் தமிழகம் அறிந்து போற்றிய அளவுக்கு அவர் பிறந்த மண் போற்றவில்லையென்றே கூறவேண்டும். இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 'செந்திநாதையர் ஞாபகார்த்த சபை' நிறுவப்பட்டு 1978-ல் 'காசிவாசி செந்திநாதையர்' என்ற மலரும் வெளியிடப்பட்டது. இச்சபையை நிறுவி ஆக்கபூர்வமான பணிகள் செய்வதில் முன்னின்று முனைப்புடன் செயல்புரிந்தவர் த. தருமலிங்கம் அவர்கள். அவரின் தூண்டுதலினால் ஞாபகார்த்த சபையின் செயலாளராகவும் மலர் ஆசிரியராகவும் நான் பணியாற்றினேன். ஞாபகார்த்த சபையினால் செந்திநாதையரின் உருவப்படம் ஒன்றை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கவும் முடிந்தது. இதற்கு முன்னரே ஒரு படம் மகாயனாக் கல்லூரியில் திரைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலை
பல ஆண்டுகள் தொடர்ந்த போரினால் குப்பிழான் கிராமமும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கிராமத்தின் கணிசமான பகுதி இன்னும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. சொந்த நிலத்திலேயே பலர் அனாதைகளாகியுள்ளனர். பலர் வெளிநாடுகளில் சிதறுண்டுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்தாலும் குப்பிழான் மக்கள் தமது கிராமத்தை மறக்காமல் வாழ்கிறார்கள். குப்பிழானில் முன்கண்ட வளமும் வனப்பும் இன்று சிதைந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆயினும் எங்கெங்கு வாழினும் மக்களின் சிந்தை கவரும் செம்மண் கிராமமாகவே குப்பிழான் இன்னமும் திகழ்கிறது.

No comments: