மருதடியான் கான நடனாஞ்சலி ஒரு பார்வை

.

                                               மதுரா மகாதேவ்


கடந்த ஆறு வருடங்களாக நிகழ்ந்து வரும் மருதடி பிள்ளையார் கோயில் புனர்நிர்மான திருப்பணிகளுக்காக 13 ஜூன் 2010௦ அன்று Ryde Civic Centre இல் 'மருதடியான் கான நடனாஞ்சலி" மாலை 6 மணிக்கு நடை பெற்றது. இன் நிகழ்ச்சி மானிப்பாய் மருதடி விநாயகர் மன்றம் சிட்னி குழுவினரால் நடாத்தப் பட்டது. இன் நிகழ்வில் திருமதி கேதீஸ்வரி பகீரதனின் மாணவ மாணவிகளின் கானாஞ்சலி, திருமதி சுகந்தி தயாசீலனின் மாணவ மாணவிகளின் நடனாஞ்சலி, தமிழ், ஹிந்தி, மலையாளம் புகழ் Newzealand ரவியின் இன்னிசை இரவும் நடை பெற்றன.நிகழ்ச்சியை நிர்மலேஸ்வரக் குருக்கள் குத்துவிளக்கேற்றி ஒரு  சிறு சொற்பொளிவுடன் ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியை மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் அவரது சொந்தப் பாணியில் வழமைபோல் மிகவும் அழகாக தொகுத்து வழங்கினார்.
முதலாவது நிகழ்ச்சியாக திருமதி கேதீஸ்வரி பகீரதனின் மாணவ மாணவிகளின் கானாஞ்சலி இடம் பெற்றது. இன் நிகழ்ச்சியில் பாடப் பட்ட பாடல்கள் அனைத்துமே பிள்ளையாரின் பாடல்களாகவே அமைந்தன. சின்னச் சிறு சிறார் முதல் இளையர் யுவதிகள் வரை வயதிற்கேற்ப குழுக்களாக கானமழை பொழிந்தனர் திருமதி பகீரதனின் மாணவ மாணவிகள். இவர்களுக்கு பக்க வாத்தியமாக கிருஷ்ணா சேகரம் மிருதங்கம், ஐங்கரன் காந்தராஜா தபேலா, நிறோஷனா மகேஸ்வரன் வயலின், கௌசல்யா செல்வகுமார் வீணாவும் வாசித்து மேலும் இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

அடுத்து திருமதி சுகந்தி தயாசீலனின் மாணவ மாணவிகளின் நடனாஞ்சலி இடம்பெற்றது. ஐந்து கரத்தனை எனும் தேவரத்துடன் ஆரம்பமான நடன நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக அமைந்தது.

தொடர்ந்து “அறிதிரு மருகனே விக்ன விநாயகா வினை கெட அருளிய கணபதி ஜெய ஜெய” எனும் விநாயக கவுத்துவம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பின்னல் கோலம் எனும் நடனம் இடம் பெற்றது. மற்றைய நடன நிகழ்சிகளில் இருந்து இந்த நிகழ்ச்சி வேறுபட்டதாக காணப்பெற்றது. வழமையாக நடன ஆசிரியர்கள் தங்கள் மாணவ மாணவிகளை மேடை ஏற்றும்போது ஜதீஸ்வரம், கவுத்துவம், மற்றும் பாடல்களுக்கு பதம் போன்ற வற்றையே கோர்வைகளாக வழங்குவார்கள். ஆனால் திருமதி சுகந்தி தயாசீலன் அவர்கள் சற்று வித்தியாசமாக பின்னல் கோலம் எனும் கோலாட்ட நடனத்தை மிகவும் அழகாக மேடையேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கொலு நடனம் என்னும் நடனத்தை தந்திருந்தார். இந்த நடனம் இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் பல பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகம் எனக்கு. நவராத்திரியின் போது  நாம் கொலு வைப்பது வழக்கம். இங்கேயும் ஒரு சிலர் இதனை செய்து வருகின்றார்கள். அந்த கொலுவில் நாம் வைக்கும் பொம்மைகள் எழுந்து ஆடினால் எப்படியிருக்கும் என யோசித்து பாருங்கள். அதே தான் கொலு நடனம். திருவிளக்கை  ஏற்றி  வைக்கும்   திருமகளே வருக எனும் பாடலுக்கு வீட்டை அலங்கரித்து பக்கத்து வீட்டு பெண்களை எல்லாம் கொலுவுக்கு அழைத்து உபசரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த கொலுவில் வைத்த பொம்மைகள் ஒவொன்றாக எழுந்து ஆடுவதே இந்த கொலு நடனம். மிகவும் வித்தியாசமாகவும் ரசிக்ககூடியதாகவும் இது  அமைந்தது. திருமதி சுகந்தி தயாசீலன்  கற்பனைத்  திறனை இங்கு பாராட்டியே தீரவேண்டும்.

இந்த நடனங்களுக்கு பக்க வாத்தியம் வாசித்து சிறப்பு சேர்த்தவர்கள் வாய்பாட்டு திருமதி லாவண்யா விதுசன். மிகவும் இனிமையான குரலில் நடனம் ஆடுபவர்களுக்கு இலகுவாக இருக்கும் படி பாடினார். அவர் பாடிய பாடல்களில் குறிப்பிடும் படியாக கூறவேண்டுமென்றால் குறத்தி பொம்மை எழுந்து ஆடும் பொழுது "குறத்தி வருகிறாள்  அம்மே குறி சொல்லுகிறாள்" , மற்றும் "ஆடாது அசங்காது வா கண்ணா" என கண்ணன் ஆடும் போது பாடிய பாடல், மீரா ஆடிய போது பாடிய "காற்றினிலே வரும் கீதம்" போன்ற பல பாடல்களை மிகவும் இனிமையாகப் பாடினார்.

மிருதங்கத்தில் திரு சிவசங்கர் சந்தான கிருஷ்ணன் , மோர் சிங் சிவகரன் கஜானந், வயலின் கிராந்தி கிரண் முடிகௌட, புல்லாங்குழல் மயூரன் ஜெகதீஸ்வரன் ஆகியோர் பக்க வாத்தியத்தை திறமையாக வாசித்து இன் நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். மொத்தத்தில் மிகவும் சிறந்த ஒரு நடனாஞ்சலியாக அமைந்தது.

தொடர்ந்து எமது அண்டை நாடான Newzealand இல் இருந்து இன் நிகழ்ச்சிக்காக வருகை தந்த Newzealand ரவியின் இன்னிசை இரவு நடைபெற்றது. மிகவும் இனிமையான குரல் வளம் கொண்ட ரவி பல பாடகர்களின் பழைய புதிய பாடல்களை மிகவும் இனிமையாக பாடி யாவரினதும் இதையங்களை கொள்ளை கொண்டார். இவருடன் இணைந்து சிட்னியைச் சேர்ந்த நான்கு மலையாள பாடகிகள் மிகவும் இனிமையாகப் பாடி இன் நிகழ்ச்சியை சிறப்படையச் செய்தார்கள். ரவியின் குரல் வளத்திற்கும் திறமைக்கும் சளைக்கதவர்களாக திகழ்ந்த இந்த பெண் மணிகள் எமது தமிழ் சமுதாயத்திற்கு புதியவர்களே.

மொத்தத்தில் ஒரு இனிய பொன் மாலையாக அமைந்தது இன் நிகழ்ச்சி.

2 comments:

kirrukan said...

எல்லாம் அந்த மருதடியான் செயல்,நிகழ்ச்சியை விபரமாகவிமர்சனம் செய்த மதுரா மாகாதேவுக்கு பாராட்டுக்கள்...


[quote]ரவியின் குரல் வளத்திற்கும் திறமைக்கும் சளைக்கதவர்களாக திகழ்ந்த இந்த பெண் மணிகள் எமது தமிழ் சமுதாயத்திற்கு புதியவர்களே[/quote]


இனி வரும் தமிழனின் நிகழ்ச்சிகளிள் அந்தபெண்மணிகள் மேடை ஏற்றினாள் போச்சு ...எந்த ஞான் பறைஞ்சது மனசிலாகியோ?

Anonymous said...

மனசிலாகி மனசிலாகி Mr Kirukkan