விமானத்தில் குழந்தை பெற்ற மாணவி





பெற்ற குழந்தையை வீசுகின்ற துர்ப்பாக்கிய சங்கதிகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். அப்படியொரு சம்பவம் துர்க்மேனிஸ்தான் விமானத்தில் இடம்பெற்றிருக்கிறது.

துர்க்மேனிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயில்கின்ற இந்திய மாணவி விடுமுறையில் இந்தியா திரும்பியபோதே விமானத்தில் மேற்படி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பஞ்சாப் மாநில ஹோசியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமன்தீப் கவுர் மான் என்ற மாணவி விமானத்தில் ஏறியதிலிருந்து அடிக்கடி கழிவறைக்கு செல்வதும் வருவதுமாக இருந்திருக்கிறார். அருகிலிருந்த பயணிகள் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டபோது மௌனமாகவே இருந்திருக்கிறார்.

விமானம், ராஜாசான்சி விமான நிலையத்தினை அடைந்ததும் அம்மாணவி முண்டியடித்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டிருக்கிறார். இதனால் இவர்மீது விமான சிப்பந்திகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்னர் சிப்பந்திகள் விமானத்தினை பரிசோதிக்கின்றபொழுது கழிவறையில் சிசுவொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்திருக்கிறது.

உடனடியாக விமானநிலைய அதிகாரிகளுக்கு சிப்பந்திகளால் தகவல் கொடுக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான மாணவியை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபொழுது அழுதுகொண்டே உண்மையைச் சொல்லியிருக்கிறார். குழந்தையினை தானே ஈன்றெடுத்து கழிவறையில் மறைத்து வைத்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தாயும் சிசுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

No comments: