ஆடியின் சிறப்பு ஆடிப் பிறப்பு

.

சாந்தினி புவனேந்திரராஜா

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, எதிர்வரும் சனிக்கிழமை ஜுன் 17ஆம் தேதி பிறக்கிறது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது – முதல் தேதி வருகிறது. அவை எல்லாவற்றையும் மாதப்பிறப்பென்று நாம் கொண்டாடுவதில்லையே. மாதப்பிறப்பில் ஒருசிலர், மிகச்சிலர் விரதம் இருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் ஆடிமாதப்பிறப்பை நாம் ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்? சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரணம் தான் என்ன?

தமிழன் இயற்கையோடு இணைந்து வாழ்பவன், அவனது கொண்டாட்டங்களும் இயற்கையோடு இணைந்தவையே. ஆடி முதல்நாளில் சூரியபகவான் தான் செல்லும் பாதையின் திசையை வடக்கில் இருந்து தெற்கிற்கு மாற்றிக் கொள்வதாக நம்பப் படுகிறது. அந்த ஆடி முதல் தேதியில் இருந்து மார்கழி 31ஆம் தேதி வரையான 6 மாதகாலம் தட்சாயண புண்ணிய காலம் என்றும், இந்த 6 மாத காலமும் தேவலோகத்தில் இரவாகவும், தைமாதப் பிறப்பான தை முதல் நாளில் அங்கே பகல் காலம் ஆரம்பமாகிறது என்றும், இது உத்தராயண புண்ணியகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. தேவலோகத்தில் இராக்காலம் ஆரம்பமாகின்ற ஆடி முதல் நாளைத்தான் நாம் இங்கு ஆடிப்பிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

எமது தாய்நாட்டில் ஆடிமாதத்தில் மழை பெய்ய ஆரம்பிப்பதால் விவசாயிகளுக்கு அது விதைக்கும் காலம். விவசாயிகள் எல்லாம் அப்போது மிகவும் உற்சாகமாகத் தமது வயல்களில் வேலையை ஆரம்பிக்கும் பொருட்டே ஆடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆடிப்பிறப்பில் நெல் விதைத்துத் தைப்பிறப்பில் அறுவடை. அறுவடையில் வந்த அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு, மீண்டும் திசை மாறி வரும் சூரியபகவானுக்கு வரவேற்பு. அன்றுதான் தமிழர்க்கு ஆண்டுப் பிறப்பு. எல்லாமே சரியாகப் பொருந்துகின்றன அல்லவா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆடிப் பிறப்பைத் தொடர்ந்து, ஆடிமாதம் ஆடி அசைந்து போகாமல், ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடிவேல், ஆடிஅமாவாசை என்று அத்தனை சிறப்புக்களுடன் ஆன்மீகச் சிந்தனைகளைத் தூண்டுகின்ற மாதமாக ஆகிவிட்டது ஆடிமாதம்.

இவற்றுக்கும் அப்பால் தமிழ்நாட்டில் ஆடித்தள்ளுபடியின் அமர்க்களமும் ஆடியில் தானே. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இங்கு அவுஸ்திரேலியாவிலும் கூட நிதி ஆண்டு ஆனியில் முடிவடைந்ததும் இந்த ஆடித்தள்ளுபடி நடைமுறையில் இருக்கிறதல்லவா!

இதுவெல்லாம் சரிதான்! ஆடிமாதம் சிறப்பானது தான். ஆனால் இத்தனை சிறப்பான ஆடியில் திருமணங்களுக்கு மட்டும் தடை. இது தமிழரின் வழமை. இந்த வழமைக்குக் காரணம்?

குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் இல்லாத அந்தக் காலத்தில், ஆடியில் திருமணம் செய்தால், அடுத்துவரும் சித்திரையில் குழந்தை பிறக்கும் சாத்தியம் அதிகமாக இருந்தது. சித்திரை மாதம் எமது நாட்டில் வெப்பம் கடுமையான காலம். பிறக்கின்ற பிஞ்சுக்குழந்தையால் இதனைத் தாங்கிக்கொள்ள முடியுமா? அதனால்தான் ஆடியில் திருமணத்துக்குத் தடை. சித்திரைப் பௌர்ணமியில் ஆண்குழந்தை பிறந்தால் குடும்பத்துக்குக் கூடாது (ஆண்குழந்தை என்று சொன்னால் தான் எம்மவர்கள் காதுகொடுப்பார்கள் என்பதால் தான் ஆண்குழந்தை என்றிருக்கிறார்கள் போலும்) என்று ஒரு பயத்தையும் காட்டி ஆடியில் திருமணத்துக்குத் தடை விதித்திருக்கிறார்கள். பயத்தைக் காட்டி எம்மைப் பக்குவப்படுத்துகின்ற இந்துமதக்கோட்பாடுகளில் ஒன்று தான் இதுவும்.

திரும்பவும் ஆடிப்பிறப்புக்கு வருவோம். ஆடிப்பிறப்பென்றவுடன் ஆடிக்கூழ், கொழுக்கட்டை எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா! அத்துடன் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!” என்றாரம்பிக்கும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா?

No comments: